Food · Health and exercise · India · Life

கையால் சாப்பிட வாங்க!

eating with hand

திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் ‘சினேகிதி’ ஜூலை இதழில் வெளியான கட்டுரை.

 

இப்போது நாம் பின்பற்றும் மேற்கத்திய நாகரீகத்தில் கையால் சாப்பிடுவது பத்தாம்பசலித்தனம், பழங்கால வழக்கம், ஆரோக்கிய குறைச்சல், நாகரீகமில்லாத செயல் என்று கருதப் படுகிறது.

 

ஆனால் கையால் சாப்பிடும் பழக்கம் நம் உடலுக்கு மட்டுமில்லாமல் உள்ளத்திற்கும், ஆன்மாவிற்கும் வலுவூட்டும் என்கிறது ஒரு பழைய சொல்வழக்கு.

 

 

இப்போது பல வீடுகளில் கையால் சாப்பிடுவதைத் தவிர்த்து ஸ்பூனால் சாப்பிடுகிறார்கள்.

 

ஏன் நம் முந்தைய தலைமுறை கையால் சாப்பிட்டு வந்தார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆயுர்வேதத்திலிருந்து இந்தப் பழக்கம் ஆரம்பித்தது. வேத காலத்து மக்களுக்கு நம் கைகளில் இருக்கும் வல்லமை தெரிந்திருந்தது.

 

கைகளினால் பல்வேறு முத்திரைகள் காண்பிக்கும் பழக்கம் பரத நாட்டியத்தில் உண்டு. அதேபோல தியானம் செய்யும்போதும் விரல்களை மடக்கியும், நீட்டியும் வேறு வேறு விதமான முத்திரைகளுடன் அமருவது வழக்கம். இது போன்ற முத்திரைகளினால், அவற்றில் இருக்கும் நன்மைகளை கருத்தில் கொண்டு நம் முன்னோர்கள் கையினால் சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கலாம்.

 

நமது செயல்களுக்கு கைகள் தான் மிகச்சிறந்த உறுப்பு. வேதத்தில் வரும் ஒரு இறைவணக்கம் இதை சொல்லுகிறது. காலையில் எழுந்தவுடன் ‘கர தரிசனம்’ செய்ய வேண்டும். அப்போது கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.

 

‘கராக்ரே வசதே லக்ஷ்மி; கர மூலே சரஸ்வதி; கர மத்யே து கோவிந்த: ப்ரபாதே கர தர்சனம்’

 

‘நமது கைகளில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். கைகளின் மூலையில்  சரஸ்வதி தேவி; கைகளின் நடுவில் கோவிந்தன் இருக்கிறான். இதை ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் நமது உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டே சொல்ல வேண்டும்.

 

அன்றைய நாள் நல்லபடியாக இருக்கும் என்ற நம்பிக்கையை இந்த ஸ்லோகம் தருகிறது.

 

நம் கைகள், கால்களின் வழியாகத்தான் பஞ்சபூதங்களும் நம் உடம்பில் நுழைகின்றனவாம். ஒவ்வொரு விரலும் இந்த ஐம்பூதங்களின் நீட்சிகள் என்று ஆயுர்வேதம் சொல்லுகிறது.

 

நமது கட்டை விரல் அக்னி. சின்னக் குழந்தைகள் விரல் சூப்புவதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களால் உடல்ரீதியான செயல்கள் செய்ய முடியாத போது, உண்ட உணவு செரிக்க இயற்கை கட்டை விரலை சூப்புவதன் மூலம் அவர்களின் செரிமானத்திற்கு இப்படி உதவுகிறது.

 

ஆட்காட்டி விரல் வாயு. நடுவிரல் ஆகாசம். (இதையே ஈதர் என்கிறார்கள். அதாவது மனித உடலில் உள்ள செல்களின் நடுவில் இருக்கும் வெற்றிடங்கள்.) மோதிர விரல் ப்ருத்வி (பூமி). சுண்டு விரல் நீர்.

 

ஆக ஒவ்வொரு விரலும் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்ய உதவுகிறது. விரல்களிலேயே செரிமானம் ஆரம்பம் ஆகிவிடுகிறது. கையால் உணவை அள்ளி எடுக்கும்போது ஐம்பூதங்களின் ஆற்றலும் தூண்டப் படுகிறது. அக்னி செரிமான நொதிகளை சுரக்க உதவுகிறது.  செரிமானம் தூண்டப் படுவதுடன், உண்ணும் உணவின் சுவை, தன்மை, வாசனை முதலிய அம்சங்களும் அதிகரித்து  உணவை நன்கு அனுபவித்து ருசித்து உண்ணமுடிகிறது.

 

நம் வீட்டில் அந்தக் காலத்துப் பெரியவர்கள்  உணவுப் பொருட்களை அளக்க ஆழாக்கு, கரண்டி அல்லது ஸ்பூன் பயன்படுத்த மாட்டார்கள். ‘ஒரு பிடி அரிசி, ஒரு சிட்டிகை உப்பு,  சின்ன கோலி அளவு புளி’ என்று கை விரல்களாலேயே அளவு காண்பிப்பார்கள். புட்டு மாவிற்கு பதம் சொல்லும்போது கையால் பிடித்தல் பிடிபடவேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும் என்பார்கள். வெல்லப்பாகுப் பதமும் இரண்டு விரல்களால் கரைந்த வெல்லத்தைத் தொட்டுப் பார்த்து ஒரு கம்பிப் பதம், இரண்டு கம்பிப் பதம் என்பார்கள்.

 

கெட்டியான உணவுப் பொருளோ, அல்லது திரவப் பொருட்களோ அவற்றை அளக்க, 6 விதமான கையளவுகள் இருக்கின்றன.

 

சின்ன வயதில் அம்மா கையால் கலந்து நம் கையில் சாதம் போடுவாள். அதில் சின்னதாக ஒரு குழி செய்து அதற்குள் குழம்பு விட்டுக் கொண்டு சாப்பிடுவோமே, அந்த ருசி இன்னும் நாவில் இனிப்பதற்குக் காரணம் அம்மாவின் கை ருசி தானே?

 

கோடை விடுமுறையில் பாட்டி வீட்டில் சாப்பிடுவோமே, நினைவிருக்கிறதா? கல்சட்டியில்  இரவு நீர் ஊற்றப்பட்ட சாதத்தில்  காலையில் உப்பு, மிளகாய், துளி பெருங்காயம்  நுணுக்கிப் போட்டு  நீர் மோர் ஊற்றி பாட்டி தரும் ஆரோக்கிய பானம் சாதேர்த்தம் (சாதமும் நீரும் கலந்த திரவம்) அது நமது உடலுக்கு மட்டுமில்லாமல் மனதையும் குளிரப் பண்ணுமே, அதற்குக் காரணம் உப்பு மிளகாய் பெருங்காயம் மட்டுமா? இல்லையே, பாட்டியின் கை மணமும் அதில் சேர்ந்திருப்பதால் தானே?

 

 

இட்லிக்கு அரைத்து வைக்கும்போது என்னதான் அரவை இயந்திரம் அரைத்தாலும் கடைசியில் நம் கைகளால் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கலந்து வைக்கிறோம், இல்லையா? அடுத்தநாள் காலையில் பொங்கி இருக்கும் மாவைப் பார்த்து நம் மனமும் பொங்கி, இன்றைக்கு மல்லிகைப் பூ போல இட்லி என்று பூரிக்கிறோமே!

 

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது நீரை சிறிது சிறிதாக கொட்டி, மாவை கைகளால் நன்றாக அளைந்து, உருட்டி  பிசையுங்கள். நீங்கள் அதிக  நேரம் பிசையப் பிசைய மிக மிக மிருதுவான சப்பாத்திகள் வரும். முக்கியமாக ஃபூல்கா சப்பாத்திக்கு கையால்தான் கலக்க வேண்டும். அப்போதுதான் நெருப்பில் நேரிடையாக சப்பாத்திகளைப் போடும்போது அவை உப்பும்.

 

பழைய விஷயங்கள் என்றாலே ஒரு மாதிரி பார்த்து ‘இப்போ இப்போ நிகழ்காலத்துக்கு வாங்க, யாராவது கைகளை பயன்படுத்தி ஏதாவது செய்கிறார்களா சொல்லுங்க’ என்பவர்களுக்கு:

 

6 விதமான கையளவுகள் பற்றி ஏதாவது குறிப்பு கிடைக்கிறதா என்று இணையத்தில் தேடியபோது ஒரு காணொளி கிடைத்தது.

 

அதில் அரிசோனா மாநில பல்கலைகழக ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து துறையில் பணி புரியும்  திருமதி சிமின் லேவின்சன் என்ற பெண்மணி நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை ஒருவேளைக்கு எந்த அளவில் சாப்பிடுவது என்பதை நமது உள்ளங்கைகளை வைத்துக் கொண்டு விளக்கினார். ரொம்பவும் வியப்பாக இருந்தது.

 

மாவுப்பொருள்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும்? கை விரல்களை மடக்கிக் காட்டுகிறார்: ஒரு கைப்பிடி;

பழங்கள்: கையை விரித்து ஒரு கையளவு;

பச்சை காய்கறி, கீரைவகைகள் இரண்டு கைகளையும் விரித்து சேர்த்து வைத்து இரண்டு கையளவு;

கொழுப்பு: (வெண்ணை, நெய், எண்ணெய்) கட்டை விரலின் நுனியிலிருந்து கட்டைவிரலின் பாதி வரை;

சீஸ்: முழு கட்டைவிரலின் அளவு – ப்ரோடீன் இருப்பதால்.

திரவங்கள்: ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் விரித்து ஒரு டம்ளர் அளவு என்கிறார்.

 

காணொளி இணைப்பு: http://usatoday30.usatoday.com/video/measuring-food-with-the-palm-of-your-hand/2308102638001

 

பாருங்கள், இந்த விஷயங்களை நம் முன்னோர்கள் என்றைக்கோ செயல் படுத்தி இருக்கிறார்கள்.

 

பழைய விஷயங்கள் இவற்றில் என்ன இருக்கின்றன என நாம் ஒதுக்கும் பலவற்றில் நிறைய விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் மறைந்து இருக்கின்றன. இவற்றை அறிந்து கொண்டு நம் வாழ்வை சீராக அமைத்துக் கொள்வோம்.

 

இந்த காணொளியையும் காணுங்கள்.

இந்திய உணவை எப்படி கையால் எடுத்து சாப்பிடுவது என்று விளக்குகிறார்கள்!

Advertisements

41 thoughts on “கையால் சாப்பிட வாங்க!

 1. வீட்டில் ஸ்பூனால் யார் சாப்பிட்டாலும் திட்டு தான்… ஒவ்வொரு விரல் பற்றிய விளக்கம் + பயன்கள் அருமை…

  திருமதி சிமின் லேவின்சன் அவர்களின் விளக்கம் வியப்பு…!

  காணொளியையும் பார்க்கிறேன்… நன்றி…

  1. வாருங்கள் தனபாலன்,
   காணொளியைக் கட்டாயம் பாருங்கள். நாம் சுலபமாகச் செய்யும் வேலையை படிப்படியாக விளக்கியிருக்கிறார்கள்!
   வருகைக்கும், ரசிப்பிற்கும் நன்றி!

 2. காணொளியைப் பார்க்கணும். அருமையான கட்டுரை. நன்றி. விரல்களின் விளக்கம் ஏற்கெனவே படித்திருந்தாலும் அருமையானது. பகிர்வுக்கு நன்றி.

  1. வாருங்கள் கீதா!
   காணொளியை பாருங்கள். இந்திய உணவு ரொம்பவும் சிக்கலானது என்று ஆரம்பித்து எப்படி விரல்களினால் மட்டுமே சாப்பிடுவது என்று படத்துடன் போட்டிருக்கிறார்கள்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 3. ரஷியாவில் நம் முன்னாள் ஜனாதிபதி ஶ்ரீராதாகிருஷ்ணன் சொன்னது நினைவில் வருது. :))))) இது என் சொந்தக் கை, எவரும் பயன்படுத்த முடியாது. பிறர் பயன்படுத்திய ஸ்பூன்களில் சாப்பிடுவதை விட இது மிகச் சிறந்ததுனு சொன்னார்னு சொல்லுவாங்க.

 4. எந்தவிதத்தில்,எப்படிப்பட்ட கலவை,எது வேண்டுமோ அதைக் கை செய்யும்.
  அம்மா கை சாப்பாடு,பாட்டிகைச் சாப்பாடு என்று வழக்கு மொழியும் கைதான்.
  கைதான் சாப்பாட்டைச்ஸ ரியாகக் கைது செய்து உள்ளே அனுப்பும்..பேச்சு வழக்கும் கைமமணதான்..

  1. //கைதான் சாப்பாட்டை சரியாக கைது செய்து உள்ளே அனுப்பும்// ரொம்ப அழகாக சொல்லியிருக்கிறீர்கள், காமாக்ஷிமா!

   வருகைக்கும், அருமையான கருத்துரைக்கும் நன்றி!

 5. விரல்களின் பெருமை அருமை. அம்மா சமையலில் எப்போதும் அன்பின் ருசி அதிகம். பழைய கல்சட்டி பழஞ்சோறு பற்றியெல்லாம் நினைவு படுத்தி விட்டீர்கள். எனக்கும் கைகளில் குழித்து வாங்கி, சாதா நடுவில் துளி வெந்தயக் குழம்பு விட்டு இரவு நேரங்களில் வீட்டில் சாப்பிட்ட நினைவு வருகிறது!

  1. வாங்க ஸ்ரீராம்!
   ஆக, பழைய கல்சட்டி, பழைய சாதம் என்று பழைய நினைவுகள், வெந்தயக் குழம்புடன் கமகமவென்று வந்ததா?
   வருகைக்கும், கமகம கருத்துரைக்கும் நன்றி!

 6. குழம்பு கொதிக்கும் போது கைகளில் ஊற்றி சுவை பார்ப்பதற்கும், கரண்டியில் சுவை பார்ப்பதற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது.

  1. வாங்க கோவை ஆவி!
   குழம்பு கொதிக்கும்போது எங்க வீட்டுல கைல விட்டு ருசி பார்க்க முடியாது – கரண்டியிலும் விட்டு சுவை பார்க்க முடியாது. பெருமாளுக்கு கண்டருளப் பண்ணாமல் எதுவும் வாயில் போடக்கூடாது. ஆனால் அதற்குப் பிறகு நீங்கள் சொல்வதுபோல செய்யலாம். உங்கள் கூற்றை அப்படியே ஒத்துக் கொள்ளுகிறேன்.

   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாருங்கள் கண்ணதாசன்! கொஞ்சம் நாம் முயன்றால் இந்த நிலையை மாற்றலாம்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 7. அத்தைப் பாட்டி கல்சட்டியில் சாதம் பிசைந்து இருக்கும் எல்லா குழந்தைகளையும் உட்காரவைத்து ஒவ்வொரு உருண்டையாக கையில் கொடுத்து நடுவே குழி செய்து கொஞ்சமாக குழம்பையும் ஊற்றித் தருவார். எவ்வளவு சாப்பிட்ட்டொம் என்ற அளவே தெரியாது சாப்பிட்டு எழுந்திருக்கும்போது தடுமாறுவோம்! கையால் சாப்பிடுவதில் உள்ள சுகம் ஸ்பூனில் இருப்பதில்லை. ஆனாலும் அவசரத்திற்கு ஸ்பூன் சாப்பாடே பழகி விட்டது!

  நல்ல பகிர்வும்மா….

  1. நான் எழுத நினைத்து வந்த விஷயத்தை இங்கே கீதா மேடம் பகிர்ந்துட்டாங்க. கர்ர்ர்! கைகளால் சாப்பிடுவதற்குப் பின்னே இத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பதை இப்போது நன்றாக உணர முடிகிறது. மிக அருமையான படைப்பு்ம்மா!

   1. அட நீங்க எழுத நினைச்சதை கீதாம்மா எழுதிட்டாங்களா…. கிர்ர்ர்ர்ர்ர்…. 🙂

   2. haahaahaaஇனிமேல் கிர்ர்ரினால் ராயல்டி உண்டு. :))) ஏற்கெனவே வாங்கிட்டிருந்தேன். நடுவிலே நின்னு போச்சு. இப்போ என்னடான்னா எல்லாரும் ஆரம்பிச்சுட்டாங்க! :))))))

  2. வாருங்கள் வெங்கட்!
   தவிர்க்க முடியாத சமயங்களில் ஸ்பூன் பயன்படுத்துவதில் தவறில்லை. சின்னக் குழந்தைகளுக்கு இந்தக் கால அம்மாக்கள் ஸ்பூனில் தான் உணவு ஊட்டுகிறார்கள். கைருசி தெரியவேண்டாமா என்று தோன்றும்.
   வருகைக்கும், உங்கள் அத்தைப்பாட்டி பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்ததற்கும் நன்றி!

   1. @கீதா இப்போதுதான் தெரிந்தது கிர்ர்ர்…க்குக் கூட ராயல்டி கொடுக்கணும்னு.
    எல்லோரும் ஆரம்பிச்சுட்டங்கன்னா விடாதீங்க…கட்டாயம் வாங்குங்க!

 8. உணவு உண்டுமுடித்தபின், கைவிரல்களைச் சூப்ப வேண்டும். அதிலிருந்து உணவைச் செரிக்க உதவும் திரவம் வரும். மீந்த குழம்பு/பதார்த்தங்களை கொதிக்க வைத்தபின் கைபோட்டால் கெட்டுவிடும். இதுவே அதற்குச் சாட்சி.

  ஆனால், நாகரீகம்(!!!) கருதி இதை யாருமே செய்வதுமில்லை; செய்பவர்களையும் அருவருப்பாகப் பார்ப்பதுண்டு. :-(((

  1. வாருங்கள் ஹூஸைனம்மா!
   உங்களது கருத்துரை எனது பதிவிற்கு சுவை கூட்டுகிறது.
   வருகைக்கும், அருமையான கருத்துரைக்கும் நன்றி!

 9. கைகளால் சாப்டும் பழக்கம் நம்மைவிட்டு காணமல் போய்விடும் அச்சம் எழுகிறது.
  Time tested அக நிறைய விஷயங்கள் நம் கலாசாரத்தோடு ஒன்றி விட்டன.
  அதை அழகாய் நினைவு படுத்தும் பதிவு இது.

  1. வாருங்கள் ராஜி!
   இன்னும் நம்மைப் போன்றவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறோம். இளைய தலைமுறைக்கும் சொல்லிக் கொடுக்கலாம்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 10. “கோடை விடுமுறையில் பாட்டி வீட்டில் சாப்பிடுவோமே, நினைவிருக்கிறதா? கல்சட்டியில் இரவு நீர் ஊற்றப்பட்ட சாதத்தில் காலையில் உப்பு, மிளகாய், துளி பெருங்காயம் நுணுக்கிப் போட்டு நீர் மோர் ஊற்றி பாட்டி தரும் ஆரோக்கிய பானம் சாதேர்த்தம் (சாதமும் நீரும் கலந்த திரவம்) அது நமது உடலுக்கு மட்டுமில்லாமல் மனதையும் குளிரப் பண்ணுமே, அதற்குக் காரணம் உப்பு மிளகாய் பெருங்காயம் மட்டுமா? இல்லையே, பாட்டியின் கை மணமும் அதில் சேர்ந்திருப்பதால் தானே?”

  ஆம்…
  முத்திரைப் பதிவு. அழகு

 11. விரல்களின் மகிமையை உங்கள் விரல்களால் எழுதி புரிய வைத்துள்ளீர்கள் ரஞ்சனி பாராட்டுக்கள் கையால் எடுத்து சாப்பிடும் ருசியே தனி விளக்கங்கள் அருமை

 12. கைகளின் பயன்களை தெளிவாக சொல்லியுள்ளீர்கள். காணொளியையும் பார்த்தேன்.

  சாதேர்த்தத்தின் பயனைப் பற்றி அப்பா தான் எப்பவும் சொல்லிக் கொண்டிருப்பார். பல வருடங்களுக்கு பின் அந்த வார்த்தையை படித்து விட்டு அப்பாவை நினைத்துக் கொண்டேன்….:)

  1. வாருங்கள் ஆதி? நலமா?
   அந்தக்கால மனிதர்களுக்குத் தான் அதன் அருமை புரியும்.
   வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி!

 13. கட்டுரை அருமை ரஞ்சனி. நம் சமையலில் நம் கைமணம் தெரியும் என்பார்கள் பெரியவர்கள். அதை அனுபவித்து நம்மால் உணர முடியும். கைகளினால் உணவை சாப்பிடும்போது அதன் ருசி தனிதான்! நான் எந்த நாட்டிற்கு சென்றாலும் கையால் சாப்பிடுவதே வழக்கம். இட்லி மாவை யும், துவையலையும் கைகளால் அரைத்து சாப்பிட்டால் அதன் சுவை கூடும் என்பது நூறு சதவீதம் உண்மை!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s