Father's Day · Life

அப்பாவாகப் போறீங்களா?

happy father's day!

குழந்தை பிறக்கப் போகிறது என்றால் எல்லோருமே தாயாகப் போகும் பெண்களுத்தான் யோசனை சொல்வார்கள். தந்தையாகப் போகும் ஆண்களை யாரும் ‘கண்டு’ கொள்ளவே மாட்டார்கள். அவர்களும் ‘பாவம்’ தானே!

ஒரு பெண்ணுக்கு இருக்கக் கூடிய பயங்கள் எல்லாம் ஒரு ஆணுக்கும் இருக்கும். வெளியில் காட்டிக் கொள்வதில்லை அவ்வளவுதான்!

குடும்பத்தில் புதிதாக ஒரு நபர் வரப்போகிறார்; ஆணா, பெண்ணா தெரியாது; நல்லவரா கெட்டவரா தெரியாது. யாரைப்போல இருப்பார் தெரியாது; சாதுவாக இருப்பாரா, ரொம்பவும் demanding ஆக இருப்பாரா தெரியாது. தன்னைப் போல இருப்பாரா, தன் மனைவியைப் போல இருப்பாரா, தெரியாது.

இப்படி எதுவுமே தெரியாத ஒருவரை எதிர்பார்த்து 9 மாதங்கள் காத்திருக்க வேண்டும்! அப்பாவாகப் போகிறவர்களுக்கு என்ன ஒரு சோதனை!

பார்க்கிறவர்கள் எல்லோரும் ‘அப்பாவாகப் போறியாமே, வாழ்த்துக்கள்’ என்று கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு போய்விடுவார்கள். யாரிடம் தனது பயங்களைக் சொல்வது? முதலில் தான் பயப்படுவது சரியா? ஆண் என்றால் வாய்விட்டு அழக்கூடாது; அதேபோல பயப்படவும் கூடாது; ஆண் என்றால் வீரமாக இருக்க வேண்டும், இல்லையா? எல்லா ஆண்களுக்கும் இந்த பயங்கள்  இருக்குமா? மனைவியிடம் சொல்ல முடியாது. அவள் கருத்தரித்த நாளிலிருந்து ஒரு புதிய உலகத்தில் இருக்கிறாள். அவளும் அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் மட்டுமேயான ஒரு உலகம்! அதில் இனிமேல் தனக்கு இடம் உண்டா?

ஆண்களின் பயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்:

உறவு பற்றிய பயம்:

பிறக்கப் போகும் குழந்தை தனக்கும் தன் மனைவிக்கும் உள்ள உறவை பலப் படுத்துமா? இல்லை இடைவெளி உண்டு பண்ணுமா? இனி தன் மனைவி தன் மேல் முன் போலவே அக்கறை காட்டுவாளா? இல்லை குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்து தன்னை பின்னுக்குத் தள்ளி விடுவாளா? இத்தனை நாள் மனைவியுடன் தான் அனுபவித்து வந்த உறவு என்னாகும்?

உண்மையில், குழந்தை உங்கள் இருவருக்கும் ஒரு பாலமாகத் தான் இருக்கும். உங்கள் உறவு இன்னும் பலப்படும். உங்கள் உறவில் புதிய பரிமாணம் உண்டாகும். இருவரும் சேர்ந்து குழந்தையை கவனிக்கும்போது உங்களிருவருக்கும் இடையே புதிய புரிதல் ஏற்படும்.

இரவு பகல் என்று குழந்தையை பார்த்துக் கொண்டாலும், உங்கள் மனைவி உங்களை இப்போது இன்னும் அதிகமாகக் காதலிக்கிறாள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களைவிட குழந்தைக்கு அவள் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனைவி என்ற நிலையிலிருந்து அம்மா என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறாள். அவளுக்கும் அந்த நிலை புதிது. அதற்கும் அவள் தயாராக வேண்டும். உங்கள் இருவரின் தேவையையும் அவள் பூர்த்தி செய்ய வேண்டும். குழந்தை 100% அவளைச் சார்ந்து இருக்கிறது. அதனால் அவள் தன் நேரத்தில் பெரும்பாலும் குழந்தையுடன் செலவழிக்க நேரலாம்.

பணவசதி:

‘மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்று இருக்க முடியாது. வேலைக்குப் போகும் மனைவி என்றால், திருமணம் ஆனவுடன் இரட்டை வருமானம் என்று பழகி இருக்கும். இப்போது ஒருவரின் வருமானத்தில் இன்னும் ஒரு நபரையும் கவனித்துக் கொள்வது என்பது கொஞ்சம் சிரமமே. குழந்தை பெற்றுக் கொள்ளத் தீர்மானித்த அன்றிலிருந்து குழந்தைக்கு என்று இருவருமாக சேமியுங்கள். கருத்தரித்த நாளிலிருந்து மனைவிக்கும் செலவழிக்க வேண்டியிருக்கும். சாதாரண பிரசவத்திற்கே இப்போதெல்லாம் ஒரு ‘ல’ கரம் தேவைப்படுவதாக சொல்லுகிறார்கள். மனைவி வேலைக்கு செல்பவராக இருந்தால் கொஞ்சம் மூச்சு விட முடியும். பிரசவத்திற்கு முன் எத்தனை மாதங்கள் வரை அவரால் வேலைக்குப் போக முடியும், பிரசவித்த பின் எப்போது திரும்ப வேலையில் சேர முடியும் என்பதையெல்லாம் கருத்தரித்த உடனேயே சொல்ல முடியாது. அதனால் சேமிப்பு முதலிலிருந்தே ஆரம்பிப்பது மிக மிக அவசியம்.

பிரசவத்தின் போது மனைவியுடன் இருக்க வேண்டுமா / முடியுமா?

நம் நாட்டில் பிரசவத்தின் போது மனைவியுடன் கணவனும் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நிலை இன்னும் வரவில்லை. நம் மருத்துவர்களும்  கட்டாயப்படுத்துவது இல்லை. அதனால் பயம் தேவையில்லை. இங்கிருந்து வெளிநாடுகளுக்குப் போகும் இளைஞர்களுக்கு அங்கு போனவுடன் தைரியசாலிகளாகிவிடுகிறார்கள்.

மனைவி படும் வலியைத் தாங்குவதை விட, அந்தச் சமயத்தில் வெளியேறும் இரத்தத்தைப் பார்க்க அசாத்தியமான மனோதிடம் வேண்டும். உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் மறுத்து விடுங்கள்.

பிறக்கப் போகும் குழந்தைக்கோ மனைவிக்கோ ஏதாவது  நேர்ந்துவிடுமோ என்ற பயம்.

மனைவியின் ஆரோக்கியம், வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் இரண்டையும் பற்றி மருத்துவரிடம் சரியான முறையில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் மனைவியுடன் மருத்துவரைப் பார்க்க செல்லுங்கள். உங்களுக்கு வரும் எல்லா சந்தேகங்களையும் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

சிலருக்கு தனக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று கூட பயம் வரலாம். அனாவசிய பயங்கள் வேண்டாம்.

பெண் மருத்துவர், பெண் நோய்கள், பெண் மருந்துகள் பற்றிய பயம்

இந்த மாதிரியான பயங்களுக்கு முக்கிய காரணம் கருத்தரித்தல், பிரசவம், குழந்தை பிறத்தல் இவை பெண்களுக்கு மட்டுமே என்று நினைத்து பல ஆண்கள் ஒதுங்கி விடுவதுதான். அல்லது வீட்டிலிருப்பவர்கள் இதெல்லாம் ‘பொம்பளைங்க சமாச்சாரம்’ என்று சொல்லி கணவன்மார்களை ஒதுக்கிவிடுவார்கள்.

ஆனால் இன்றைய இளம் தந்தைமார்கள் இதைபோல ஒதுங்கி இருப்பதில்லை என்பது ஆறுதலான விஷயம்.

புதிதாக பெற்றோர் ஆகப்போகிறவர்களுக்காக  பயிற்சி முகாம்கள் சில மருத்துவ மனைகளில் நடத்துகிறார்கள். பிரசவம் என்பது என்ன, எப்படி குழந்தையை தூக்க வேண்டும், எப்படி உடை, டயபர் மாற்ற வேண்டும், எப்படி குழந்தையை தூங்கப் பண்ணுவது என்றெல்லாம் சொல்லித் தருகிறார்கள் இந்தப் பயிற்சி முகாம்களில். மனைவியை மட்டும் அனுப்பாமல், நீங்களும் சென்று எல்லாவற்றையும் பார்த்து வாருங்கள்.

பிரசவம் பற்றிய காணொளிகளை மனைவியுடன் உட்கார்ந்து கொண்டு பாருங்கள். அவள் சாப்பிடும் மருந்து, ஆகாரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  அவளுக்கு எல்லாவிதத்திலும் உதவுங்கள்.

மருத்துவ மணிக்குப் போகும் முன் என்னென்ன தேவை என்று நீங்களும் சேர்ந்து உட்கார்ந்து எல்லாவற்றையும் தயார் செய்யுங்கள்.

வெளியூரில் இருந்தால் விடுமுறை எடுத்துக் கொண்டு பிரசவ சமயத்தில் மனைவியுடன் இருந்து அவளை மருத்துவ மனைக்கு அழைத்துப் போகலாம்.

தாய் ஆவது எப்படி ஒரு பெண்ணுக்கு முழுமையை கொடுக்கிறதோ அதேபோலத்தான் தந்தை ஆவதும் ஆணுக்கு வாழ்வில் புதிய உறவினை அறிமுகப் படுத்துகிறது.

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!

 

ஒரு தந்தையின் எண்ணங்கள்: திரு நிக்கி ஜாக்சன் அவர்களின் உணர்வுகளைப் படியுங்கள்

Advertisements

37 thoughts on “அப்பாவாகப் போறீங்களா?

 1. //ஒரு பெண்ணுக்கு இருக்கக் கூடிய பயங்கள் எல்லாம் ஒரு ஆணுக்கும் இருக்கும். வெளியில் காட்டிக் கொள்வதில்லை அவ்வளவுதான்! //

  அழகாகச் சொல்லிட்டீங்க ! அருமையான பதிவு. பாராட்டுக்கள்,.

 2. மிகவும் சிறப்பான விளக்கத்துடன் தந்தையின் உறவினை உணர்த்தியுள்ளீர்கள். எனக்கு அம்மாவை விட அப்பாவையே மிகவும் பிடிக்கும் இன்று அவர் இல்லை என்றாலும் தினம் தினம் என் நினைவில் வாழுகிறார்.

  1. வாங்க சசிகலா!
   எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் அப்பாதான் ஹீரோ!
   எனக்கும் அப்படித்தான்.
   வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

 3. மனதில் என்னென்ன பயங்கள் தோன்றுமோ அதை அப்படியே சொல்லி விட்டீர்கள் அம்மா… ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் அனைத்தும் அருமை… இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்… நன்றி…

 4. உங்கப்பா எப்படி இருந்தார், அவரைப்போல நான் இருப்பேன் என்று நினைக்காதீர்கள்.. காலம் மாறிக்கொண்டு இருக்கிரது. உங்களுக்கும் அப்பா என்ற பொருப்பில் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்.
  சொல்லாமல் சொல்கிரார் ரஞ்ஜனி. ஸரியான கட்டுரை. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள். அன்புடன்
  சொ

  1. சரியாகச் சொன்னீர்கள் காமாக்ஷிமா!
   அந்த காலத்தில் அப்பா என்றால் கையை கட்டிக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் பேசவேண்டும். இப்போது காலம் மாறி வருகிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 5. ஒரு ஆணின் பார்வையிலிருந்து எழுதப் பட்டது போலவே இருக்கிறது உங்கள் பகிர்வு…..

  சிறப்பானதோர் பகிர்வு.

  தந்தையர் தினம் சமயத்தில் தந்தைகள் பற்றிய அழகான பகிர்வு.

  1. வாங்க வெங்கட்!
   காலம் மாறிவிட்டதே! அப்போதெல்லாம் அப்பாக்கள் குழந்தைகளை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். கொஞ்ச மாட்டார்கள். பயம், கண்டிப்பு இதுதான் அப்பா!
   இப்போது இளைய தலைமுறை மாறியிருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 6. //குடும்பத்தில் புதிதாக ஒரு நபர் வரப்போகிறார்; ஆணா, பெண்ணா தெரியாது; நல்லவரா கெட்டவரா தெரியாது. யாரைப்போல இருப்பார் தெரியாது; சாதுவாக இருப்பாரா, ரொம்பவும் demanding ஆக இருப்பாரா தெரியாது. தன்னைப் போல இருப்பாரா, தன் மனைவியைப் போல இருப்பாரா, தெரியாது.// ஹாஹா!! போட்டது தான் போட்டீங்க,
  ///நல்லவரா கெட்டவரா தெரியாது./// இது கொஞ்சம் டூ மச்சா இல்ல ரஞ்சனி மேடம்?! 😀 🙂
  நிச்சயம் நீங்க சொல்லியிருக்கும் சந்தேகங்கள், பயங்கள் ஆண்களுக்கும் வரும். அவர்களும் வாழ்க்கையில் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறாங்க தானே, பழகிவிடும் எல்லாம்! 🙂

  தந்தை ஆனவர்களுக்கும், ஆகப் போகிறவர்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!

  1. வாங்க மகி!
   தமாஷுக்காக எழுதியது மகி. சீரியஸ் -ஆக எடுத்துக் கொள்ளாதீர்கள், ப்ளீஸ்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 7. தந்தையர் தினத்திற்கு ஏற்ற பதிவு.தந்தைகள் மனதைப் படம் பிடித்து காட்டி விட்டீர்கள் ரஞ்சனி .அவர்கள் சந்தேகங்களை அழகாக தெளிவு படுத்தியுள்ளீர்கள்.

 8. அப்பாவிற்கு எப்போதுமே பெண் குழந்தைகள் என்றால்தான் விருப்பம் அதிகம் இருக்கும் நானும் அப்பா பெண்தான் சின்ன வயதிலேயே அவரை நான் இழந்துவிட்டாலும் என் எண்ணங்களில் வாழ்கிறார் அன்பு கலந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்

  1. வாங்க விஜயா!
   எல்லாப் பெண்குழந்தைகளும் அப்பாவை விரும்பும். அப்பாக்களுக்கும் பெண்ணென்றால் மிகவும் பிடிக்கும். உலக வழக்கம் தான் இது. நானும் அப்பா செல்லம் தான்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 9. ஏ ரு இசட் அத்தனையும் கூறிவிட்டீர்கள்.
  மிக அருமை!!!!!
  ஆண்கள் வாசித்து மன அமைதி பெறட்டும். பயனடையட்டும்.
  இனிய நல் வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

 10. முதலில் குழந்தை வளர்ச்சியின் தொடர்ச்சியோ என நினைத்தேன். அதனுடன் தொடர்புள்ள மாதிரியே கொண்டு சென்று தந்தையர் தினத்தை சிறப்பா கொண்டாடிட்டீங்க.முன்பின் தெரியாத ஒருவருக்காக மொத்த குடும்பமே தயாராவ‌து மகிழச்சியான தருணங்கள்தான்.

  ‘நல்லவரா கெட்டவரா’____ரசித்தேன்.அப்பாக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

  1. வாங்க சித்ரா!
   ‘நல்லவரா கெட்டவரா’ ரசிச்சீங்களா? மகி முதலில் கோவிச்சுகிட்டாங்க,அப்புறமா just kidding அப்படீன்னுட்டாங்க!

   1. அருமை அருமை.
    இன்னேரம் நான் ஒரு அரசியல் கட்சித்தலைவராக இருந்தால் ஒரு லாரி நிறைய ஆட்கள் ஏற்றி வந்து கை தட்டச் சொல்லியிருப்பேன். நன்றி நன்றி

 11. உண்மையிலேயே ஒரு மருத்துவர் எழுதிய கட்டுரை போல அமர்க்களமாக உள்ளது அப்பாக்களின் தினத்தில் அப்பாக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.வாழ்த்துகள்.

 12. சிறப்பான பதிவு அதிகம் எழுத மறக்கப்பட்ட பதிவு. இப்படி ஒரு உண்மை இருப்பது நிறையபேரால் புரிந்து கொள்ளவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாமல் இன்னும் அப்படியே மழுங்கடிகாப்பட்ட விஷயம் நேர்த்தியாக எழுதி உள்ளீர்கள். இது போன்ற ஒன்று நானும் கிறுக்கி இருக்கிறேன்

  http://varaikodugal.wordpress.com/2013/03/26/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9/

 13. இப்போதுதான் உங்கள் பதிவைப் படித்துப் பின்னூட்டமிட்டு வந்தேன். மிகவும் இயற்கையாக ஒரு தந்தையின் எண்ணங்களைப் பகிர்ந்து இருக்கிறீர்கள். என் பதிவிலேயே உங்கள் பதிவையும் இணைத்திருக்கிறேன். ஒரு தந்தையின் எண்ணங்கள் என்ற பெயரில்.

  அது கிறுக்கல் அல்ல; உள்ள பூர்வமான உணர்ச்சிகளின் குவியல்!

  பாராட்டுக்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s