விஜய – சித்திரை 60!

மேலே உள்ள பாடல்  ஸ்வாமி இராமானுசர் பற்றியது. ஸ்ரீ அன்னமாசார்யார் இயற்றியது. அந்தக் காணொளியில் ஓரிடத்தில் ஸ்வாமி  இராமானுஜரின் கையெழுத்து இருக்கிறது.
பாடலுடன் அதையும் கவனியுங்கள். எனக்கு மிகவும் பிடித்த அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல். நீங்களும் கேளுங்கள், ப்ளீஸ்!
 
 

பிறந்திருக்கும் தமிழ் வருடத்தின் பெயர் விஜய என்பது எல்லோருக்கும் தெரியும். தெரியாத ஒன்று: எனக்கும் இந்த விஜய வருடத்திற்கும் உள்ள பந்தம்!

ஒரு சின்ன துப்பு கொடுக்கிறேன் கண்டு பிடிக்க முடிகிறதா, பாருங்கள்.
இந்த விஜய வருடத்தை ஏற்கனவே நான் ஒரு முறை பார்த்திருக்கிறேன்.
 
 
‘நிகழும் விஜய வருடம் சித்திரைத் திங்கள் 30ஆம் நாள், (1953, 13 மே )சௌபாக்யவதி கமலத்திற்கு மத்தியானம் 2 மணிக்கு பெண் குழந்தை சுப ஜனனம்’ என்று என் மாமா எங்கள் உறவினர்களுக்கு 60 வருடங்களுக்கு முன் இதே விஜய வருடத்தில் ஓரங்களில் மஞ்சள் தடவிய கடிதங்கள் அனுப்பினார்.
 
 

கமலம் : என் அம்மா

பெண் குழந்தை நான்தான்!
 
 
 
இந்த விஜய வருடத்தில் சென்னை மாகாணத்தில் முதன்முதலாக மாடிப் பேருந்து இயக்கப்பட்டதாம். அப்போது   முதலமைச்சர் ஆக இருந்த திரு இராஜகோபாலாச்சாரி இந்த பேருந்துகளுக்கு விஜயா என்று பெயரிட்டாராம். பெயர் நன்றாக இருக்கிறது இல்லையா?
எனக்கு  ஏன் விஜயா என்று பெயரிடவில்லை என்று தெரியவில்லை. அதேபோல நான் பிறந்த மாதத்தின் பெயரையோ (சித்ரா) என் நட்சத்திரத்தின் பெயரையோ (கிருத்திகை) வைத்திருக்கலாம். (அப்பாடி..! எல்லா விவரமும் சொல்லியாச்சு!)
 
 
 
ஆனால் என் அப்பா எனக்கு ரஜனி என்று பெயரிட்டாராம். பள்ளியில் என்னைச் சேர்க்க வந்த  என் மாமா கொஞ்சம் மாற்றி ரஞ்சனி என்று கொடுத்துவிட்டார்.
வீட்டில் இப்போதும் ரஜனி தான்.
 
 
 
உண்மையில் என் மாமாவிற்கு இந்தப் பெயரை எனக்கு இட்டதற்காக நன்றி சொல்ல வேண்டும். என்றும்  இளமையாக, புதுமையாக ஒரு பெயரை வைத்தாரே!
 
 
 
என் தோழி சுகன்யாவின் மருமகள் முதல் தடவை என்னைப் பார்த்தபோது ‘ரஞ்சனி என்ற பெயரைக் கேட்டவுடன் ரொம்ப சின்ன பெண் என்று நினைத்தேன்…ஆன்டி!’ என்றாள்.
‘ஒருகாலத்தில் அப்படித்தானம்மா இருந்தேன்…இப்பவும் மனதளவில்….ஹி …ஹி …’ என்று சமாளித்தேன்.
 
 
 
எங்கள் வீட்டில் பெண்களுக்கு ஆயுசு ரொம்பவே அதிகம். எங்கள் பாட்டி 93 வயதுவரை இருந்தாள். என் அம்மாவிற்கு இப்போது 86. எனக்கும் இன்னும் 20/30 (பயமாயிருக்கு!) வருடம் நிச்சயம் என்று தோன்றுகிறது. அதுவரை யாரையும் படுத்தாமல், ஆரோக்கியமாக, மன நிறைவுடன், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீரங்கத்து திவ்ய தம்பதிகளைப் பிரார்த்திக்கிறேன்.
 
எனது மாமா திரு டி.எஸ். சுந்தர ராஜனின் கருத்துரை:
******************************************
உனக்கு ரஜனி என்று பேரிட்டது உன் அம்மா.
ரஜனி என்றால் இரவு, இருள் என்ற பொருள்
தருவதால், எனக்கு மனசு ஒப்பவில்லை.
ஆகவே தான் <ரஞ்சனி> என்று  ஒரு நல்ல
சமரசப் பேராகக் கிடைத்தது.
 
ஸம்ஸ்க்ருதத்தில் <ரம்> என்ற வேர்ச்சொல்லுக்கு 
மகிழ்தல் என்ற பொருள்.   ராம (ரமயதி ~ மகிழ்விப்பான்),
ரமா (அதுவே, பெண்பாலாக), ரங்கம் (ரஞ்ஜன்தி யத்ர ~
மகிழ்வான/மகிழும்/இன்புறும்  இடம்).   ஸ்ரீ: யத்ர ரஞ்சதி 
இதி ~ திரு ஆனவள் இன்புற்றிருக்கும் ஸ்ரீரங்கம்.    
ஆகவே உனக்கு ரஞ்சனி என்று
நல்ல பேராகவே அமைந்தது.    
 
*************
 
 

39 thoughts on “விஜய – சித்திரை 60!

    1. அன்புள்ள வெங்கடேசன்,
      உன்னிடமிருந்து வாழ்த்துச் செய்தி எதிர்பாராதது. ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. நன்றி!

  1. பார்த்தேன். படித்தேன்,. ரஸித்தேன். மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    60 ஆண்டுகளை எட்டியும், இன்றும் 6 வயது குழந்தை போல சுறுசுறுப்பாகவும், கலகலப்பாகவும் குழந்தை உள்ளத்துடன் உள்ள உங்களுக்கு என் அன்பான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    மேலும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்கவே!.

    1. கோபு சார்!
      உங்கள் ஆசிகள் ரொம்பவும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன
      நன்றி சார்!

  2. ஓ மூன்றாவது முறையாக எழுதுகிறேன். மனமார்ந்த ஆசிகள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், அன்புடன் சொல்லுகிறேன்

  3. விஜய வருடத்தில் மீண்டும் விஜயம் செய்த தாங்கள் ஆரோக்கியமாக,
    மன நிறைவுடன், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீரங்கத்து திவ்ய தம்பதிகளைப் பிரார்த்திக்கிறேன்.

  4. வாருங்கள் இராஜராஜேஸ்வரி!
    உங்கள் பிரார்த்தனைக்கு என் மனமார்ந்த நன்றி!

  5. தலைப்பைப் பார்த்தவுடனே நான் யூகித்து விட்டேன். ஷஷ்டியப்த பூர்த்தி கொண்டாடும், மங்கையா,அல்லது நங்கையா?எங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்களும், ஆசிகளும்.. நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் எல்லா வளங்களும் பெற்று வாழ கடவுளை வேண்டிக் கொள்கிறேன். அங்களின் ஸந்தோஷத்தில் நானும் பங்கு பெறுகிறேன்.. எழுதும் போதே உங்களின் ரிப்ளையும் கிடைத்தது. மீண்டும் ஆசிகள். அன்புடன்

    1. மறுபடியும் (மூன்று முறை!) வந்து வாழ்த்தியதற்கு மனமார்ந்த நன்றி!
      பதிவு உலகத்தின் மூலம் உங்கள் நட்பு கிடைத்தது என் பெரிய பாக்கியம்.

  6. சபாஷ் ரஞ்சனி இன்று காலை உங்களை வாழ்த்தியபோது நீங்கள் பார்க்கும் இரண்டாவது விஜய வருஷம் என சொல்ல நினைத்து மறந்து விட்டேன் இன்னொரு ஒற்றுமை என் அம்மா பெயரும் அங்குள்ள விஜயாவின் அம்மா பெயரும் கமலம் தான் என் அம்மாவும் திருவாருரில் தான் பிற்ந்தார். என்ன பொருத்தமான ஆருயிர் தோழிகள் நாம் பெருமையாக இருக்கிறது சஷ்டி அப்த பூர்த்தி பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    1. அட!! உங்கள் அம்மா பெயரும் கமலமா? என் அம்மாவும் திருவாரூரில் தான் பிறந்தார். அதனாலேயே எங்கள் தாத்தா என் அம்மாவிற்கு கமலம் என்று பெயர் வைத்தார்.
      தொலைபேசியிலும், கிரேடிங் கார்ட் மூலமும் இப்போது பதிவிலும் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி விஜயா!

  7. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்.
    60 ஆண்டுகள் என்று நினைக்கையிலேயே பிரமிப்பாக இருக்கிறது.

    வயதாகி விட்டது என வருத்தப்படாதீர்கள். பலருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதாக நினைவு.

    இன்னும் பல்லாண்டு வாழ்ந்து வழிகாட்டுவீர்கள் என நம்புகிறேன்.
    நன்றி.

    1. வாருங்கள் தமிழ்!
      வயதானதற்கு நிச்சயம் வருத்தமில்லை. தந்தை பெரியார் சொன்னது மிகவும் உண்மை.
      வாழ்த்துக்களுக்கு நன்றி!

    1. வாருங்கள் மஹா!
      மிஸ் பண்ணாமல் வந்து படித்து வாழ்த்தியதற்கு நன்றி!

  8. 60 ம் பிறந்த நாளில் வணங்குகிறேன் அம்மா! வாழ்த்திடுங்கள்! நீண்ட காலம் சௌக்கியமாக இருந்து எல்லோரையும் வழிநடத்த எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன்! நன்றி!

    1. வாருங்கள் சுரேஷ்!
      பிரார்த்தனைக்கு நன்றியும், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஆசிகளும்.

  9. Many many Happy Returns Ranjani!
    லேட்டாக வந்து வாழ்த்து தெரிவித்ததற்கு மன்னித்து விடுங்கள்.
    ஒரு வாரமாக கொஞ்சம் வேலை பளு. பதிவுலகம் பக்கம் வரவே முடியவேயில்லை.
    அதான் Belated Wishes!

    1. வாங்க ராஜி!
      தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு வேண்டாம். எனக்கும் சிலசமயம் இப்படி ஆகிவிடும். வாழ்த்துக்களுக்கு நன்றி!

  10. Just now mailed u the wished n reading it. Even in writing this u have a good senses of humor !
    மறுபடி வாழ்த்துகள் மாமி 🙂

    அன்புடன்,
    அ.ஓஜஸ்

    1. அன்பு ஓஜஸ்,
      உங்கள் மெயிலும் நீங்கள் அனுப்பிய பாடலும் கிடைக்கப்பெற்றேன்.
      வாழ்த்துக்களுக்கு நன்றி!

  11. oH! 6o years.!…Very happy b’day late wishes,.
    யாரையும் படுத்தாமல் வாழ இறையாசி தரட்டும்.
    சரி தானே வாழ்த்தியது.
    வேதா. இலங்காதிலகம்.

    1. வாருங்கள் வேதா!நான் விரும்பியபடியே வாழ்த்தியதற்கு நன்றி!
      வயதானால் யாரையாவது படுத்த வேண்டும் என்று தோன்றும் – பல வயதானவர்களிடம் இதைப் பார்த்திருக்கிறேன். அதனால்தான் இந்த மாதிரி ஒரு பிரார்த்தனை!

  12. ஒரு சின்ன துப்பு கொடுக்கிறேன் கண்டு பிடிக்க முடிகிறதா, பாருங்கள்___ உங்கள் பிறந்த நாளாகத்தான் இருக்கும் என்று கண்டுபிடிச்சாச்சு.பயம் வேண்டாம்.நல்ல ஆரோக்கியத்துடன் நீஈஈஈண்ட ஆயுளைக் கொடுக்க பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறோம்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    +2 ல் என்னுடைய கெமிஸ்ட்ரி ஆசிரியை பெயரும் ‘ரஞ்ஜனி’தான்.

    1. வாங்க சித்ரா!
      ஓ! கண்டுபிடிச்சுடீங்களா?
      ஆரோக்கியம் இருக்கட்டும். நீஈஈஈஈண்ட ஆயுள் வேண்டாம். வாழ்த்துக்களுக்கு நன்றி!
      உங்க கெமிஸ்ட்ரி டீச்சரும் என்னைபோல அழகா இருப்பாங்களா?

  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஞ்சனி மேடம்! நீங்கள் இன்னும் பலவருடங்கள் சந்தோஷமாக, நல்ல உடல்நலத்துடன், இன்னும் பலபதிவுகளை எழுதி எங்களை உற்சாகப்படுத்தவேண்டும். நமஸ்காரங்கள்!

  14. வணக்கம்
    அம்மா

    எனது வாழ்த்துமடல் பிந்திவிட்டது (அம்மா)
    இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா இன்னும் பல்லாண்டு காலம் வாழ
    இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    1. வாருங்கள் ரூபன்!
      வாழ்த்துக்களுக்கும் உங்கள் பிரார்த்தனைகளுக்கும் நன்றி!

  15. Better late than never..many more happy returns of the day!
    எவ்வளவு அழகா எழுதி இருக்கேள்! எங்கம்மாவுக்குக் கூட கிட்டத்தட்ட உங்க வயசுதான் ஆகிறது. பல வருடங்கள் பாரதி, கௌரி, இப்படி பல பெயர்களில் எழுதி வந்திருக்கிறார். இப்போது அதிகம் எழுதுவதில்லை. பல முறை அவர்கிட்ட வலைப்பூ ஆரம்பிக்கச் சொல்லி இருக்கேன். ஆனா இன்னிக்கு வரைக்கும் வேளை வரவில்லை. அதனாலே உங்க படைப்புகளை வாசிக்கும் போது அம்மாவோட எழுத்தைப் பார்க்கிறார்போல் இருக்கு. உங்க வலைப்பூவை அம்மாவிற்கு அனுப்பி இருக்கேன். 🙂 தொடர்ந்து எழுதுங்கள்!
    என்றும் அன்புடன் மாலினி.

    1. வாருங்கள் மாலினி!
      முதலில் பிறந்தநாள் வாழ்த்திற்கு நன்றி!
      இந்த ப்ளாக் எழுதுவது என்பது மனதிற்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கு என்று உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள். யாருக்காகவும் இல்லாமல் நமக்காக மட்டும் எழுதலாம். உங்கள் தாயார் ஏற்கனவே எழுதியிருக்கிறார். அதனால் நிச்சயம் மறுபடி எழுத ஆரம்பிக்கலாம்.

      என் வலைப்பூவை உங்கள் அம்மாவிற்கு அனுப்பியது எனக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுக்கிறது. என் விசிறிகள் எண்ணிக்கை ஒன்று கூடியிருக்கிறதே!

      நன்றி மாலினி உங்கள் உற்சாகமான மடலுக்கு!
      நீங்களும் தமிழில் நிறைய எழுதுங்களேன்! உங்கள் வலைதளத்தை நான் பின் தொடருகிறேன், தெரியுமோ உங்களுக்கு?

      1. 🙂 எனக்கும் தமிழில் நிறைய எழுத ஆசைதான். ஆனால் நான் முக்கியமாக எழுதுவது என் பிரயாணங்களைப் பற்றி. அது பலருக்கும் போய் சேர வேண்டிய விஷயம் என்று நினைப்பதாலேயே ஆங்கிலத்தில் எழுத விழைகிறேன். அத்துடன் இரு மொழிகளுமே எனக்கு ஒரே அளவில் பிடிக்கிறதே, என்ன செய்ய? ஆங்கிலம் அப்பா தந்தது, தமிழ்ப் பற்று அம்மா தந்தது! ஆனால் கவிதை எழுத வேண்டும் என்று நினைத்தால் முதலில் வருவது எப்போதுமே தாய்மொழிதான்!
        தாங்கள் கொடுத்த ஊக்கத்திற்காகவே கூடிய விரைவிலேயே தமிழில் ஒரு பதிவு செய்கிறேன். என் வலைப்பூவைத் தொடர்வதற்கு மிக்க நன்றி!

Leave a reply to ஓஜஸ் Cancel reply