எங்கள் பாட்டி!

patti

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கோடை விடுமுறை என்றால் பாட்டி வீடுதான். மூன்று மாமாக்களும் பாட்டியும்  ஸ்ரீரங்கத்தில் இருந்தனர்  என் பெரியம்மாவின் மகன், மகள், என் அண்ணா,  என் அக்கா (சில வருடங்கள் ) ஸ்ரீரங்கத்தில் பாட்டியுடன் தங்கிப் படித்தவர்கள்.

 கோடைவிடுமுறை முழுக்க அங்குதான். பாட்டியின் கை சாப்பாடு, கொள்ளிடக் குளியல், மாலையில் கோவில், வெள்ளைக் கோபுரம் தாண்டி இருக்கும் மணல்வெளியில் வீடு கட்டி விளையாட்டு, சேஷராயர் மண்டபத்தில் கண்ணாமூச்சி விளையாட்டு – இவைதான் தினசரி பொழுது போக்கு.

தாத்தா மிகச் சிறிய வயதிலேயே (45 வயது) பரமபதித்துவிட்டார். கடைசி மாமாவுக்கு 1 1/2 வயதுதான் அப்போது. தாத்தாவிற்கு ஆசிரியர் வேலை – ஊர் ஊராக மாற்றல் ஆகும் வேலை. பாட்டிக்கு மொத்தம் 14 குழந்தைகள். எங்களுக்கு நினைவு தெரிந்து 6 பேர்தான் இருந்தனர். பெரிய பிள்ளைக்கும் பெரிய பெண்ணிற்கும் தாத்தா இருக்கும்போதே திருமணம்.

எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் பாட்டி எப்படி இத்தனை குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினாள்  என்பது இன்றுவரை புரியாத புதிர்தான்.

கணவரின் மறைவுக்குப் பிறகு இன்னொரு மகளுக்கு (என் அம்மா) திருமணம் செய்தாள் பாட்டி. இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 1944 இல் அன்றைய மதராசில் திருமணம். மகள்களுக்குத் திருமணம் செய்தபின் தொடர்ந்து அவர்களது பிரசவங்கள். பெரியம்மாவிற்கு நான்கு குழந்தைகள்; நாங்கள் நாலுபேர்கள்.

நாங்கள் கோடைவிடுமுறை க்குப் போகும்போது நல்ல வெயில் கொளுத்தும். ஆனாலும் பாட்டி வீடு தான் எங்களின் சொர்க்கம். வாசலிலேயே காய்கறி, பழங்கள் என்று வரும். மாம்பழங்கள் டஜன் கணக்கில் வாங்கி கூடத்தில் இருக்கும் உறியில் தொங்கவிடப்படும். இரவு எல்லோருக்கும் கட்டாயம் பால் உண்டு.

இத்தனை செலவுகளை பாட்டி எப்படி சமாளித்தாள்? தெரியாது. மூன்று வேளை  சாப்பாடு, மதியம் ஏதாவது நொறுக்குத் தீனி. எதற்குமே குறைவில்லை.

கோழியின் பின்னால் ஓடும் குஞ்சுகளைப் போல பாட்டி எங்கு போனாலும் – காவேரி வீட்டிற்கு பால் வாங்க (சரியாகத்தான் பெயர் வைத்தார்கள் உனக்கு – நீ கொடுக்கற பாலில்  காவேரிதான் இருக்கு,  என்று என் பாட்டி அவளைக் கடிந்து கொள்வாள்.) செக்கிற்குப் போய் எண்ணெய் வாங்க என்று பாட்டி எங்கு போனாலும் அவள் பின்னே  நாங்கள் – பாட்டி சொல்வாள் – ‘பட்டணத்துலேருந்து குழந்தைகள் வந்திருக்கா பால் இன்னும் கொஞ்சம் கொசுறு ஊற்று, மாம்பழம் குழந்தைகள் கையில் ஆளுக்கு ஒண்ணு கொடு’ என்று பாட்டியின் வியாபர தந்திரங்கள் எங்களுக்கு வேடிக்கையாய் இருக்கும்.

பாட்டி காலையில் தீர்த்தாமாடிவிட்டு வந்து வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நெற்றிக்கு இட்டுக் கொள்வாள். மூக்கின் மேல் திருமண்; அதற்கு மேல்  சின்னதாக ஸ்ரீசூர்ணம். பாட்டியை நெற்றிக்கு இல்லாமல் பார்க்கவே முடியாது.

அக்கம்பக்கத்தில் இருக்கும் அத்தனை பேருடனும் சுமுக உறவு. பாட்டிக்கு எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உறவுதான் அம்மாஞ்சி (மாமாவின் பிள்ளை) அவரது மனைவி  அம்மாஞ்சி மன்னி, அத்தான் (அத்தையின் பிள்ளை) அத்தான் மன்னி (அத்தானின் மனைவி) அத்தங்கா (அத்தையின் பெண்) அத்தங்கா அத்திம்பேர் (அத்தங்காவின் கணவர்) என்று பல பல உறவுகள்.

இவர்களுடன் பாட்டி பேசும் ‘என்னங்காணும், ஏதுங்காணம் வாருங்காணம், சொல்லுங்காணம், சௌக்கியமாங்காணம்’ என்கிற பாஷை எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். நாங்களும் இப்படியே பேசிப் பார்ப்போம்.

பாட்டி கொஞ்சம் கனத்த சரீரம். லோ பிரஷர் வேறு. அவ்வப்போது தலை சுற்றுகிறது என்று உட்கார்ந்து கொள்வாள். ஓடிப் போய் சோடா வாங்கி வருவோம். ‘சோடா வேண்டுமென்றால் சொல்லேன். வாங்கித் தருகிறோம் அதற்கு ஏன் லோ பிரஷரைத்  துணைக்குக் கூப்பிடுகிறாய்’ என்று என் பெரிய அண்ணா கேலி செய்வான்.

அங்கிருக்கும் நாட்களில் கட்டாயம் குறைந்த பட்சம் இரண்டு சினிமா உண்டு. காலையிலிருந்தே நாங்கள் ஆரம்பித்து விடுவோம்: ‘பாட்டி சீக்கிரம் கிளம்பணும். லேட் பண்ணாத; எங்களுக்கு முதல் ஸீன் லேருந்து பார்க்கணும்’. ஸ்ரீரங்கத்தில் நான் பார்த்த எனக்கு நினைவில் இருக்கும் சினிமாக்கள்: வீரபாண்டிய கட்டபொம்மன், பார்த்தால் பசி தீரும்.

பாட்டி பட்சணம், தீர்த்தம் எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்புவதற்குள் நாங்கள் பரபரத்துப் போய்விடுவோம். மாட்டு வண்டி வேறு எங்கள் அவசரம் புரியாமல் நிதானமாக நடக்கும்.

பேரன்கள் முதலிலேயே போய்  (சேர் (chair) 8 அணா, தரை 4 அணா ) டிக்கட் வாங்கிவிடுவார்கள். பாட்டியுடன் போனால் தரை டிக்கட்டுதான். பாட்டிக்கு காலை நீட்டிக் கொண்டு உட்கார வேண்டும்.  பாட்டிக்கு அங்குதான் ஓய்வு கிடைத்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.

பாட்டி கையால் கட்டாயம் ஒரு முறை எல்லோருக்கும் விளக்கெண்ணெய்  கொடுக்கப்படும். பாட்டி அன்று பண்ணும் சீராமிளகு சாத்துமுதுவும், பருப்புத் தொகையலும் ஆஹா! ஓஹோ! தான்.

என்னுடன் ஒருமுறை வந்து இருந்தபோது எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பண்ணுவது சொல்லிக் கொடுத்தாள் பாட்டி. மோர்க்களி செய்து தளதளவென்று அப்படியே தட்டில் போட்டு மைசூர் பாகு மாதிரி துண்டம் போட்டுக் கொடுப்பது பாட்டியின் ஸ்பெஷாலிடி!

இத்தனை வேலை செய்து ஓய்வு ஒழிச்சல் இல்லாத போதும் பாட்டி கைவேலைகளிலும் ஆர்வம் மிகுந்தவள். வண்ண  வண்ண உல்லன்  நூலில் ரோஜாப்  பூ போடுவாள். 10, 15       ரோஜாப்பூக்கள் பின்னியதும் அவற்றிற்கு பொருத்தமான நூலில் அவற்றை வைத்துப் பின்னி ரோஜாப்பூ சவுக்கம் (டவல்) தயார் செய்வாள். பாட்டி பின்னிய கைப்பைகள் சதுரம் வட்டம்,அறுகோணம் என்று எல்லா வடிவங்களிலும் இருக்கும். அவற்றிக்கு உள்ளே தடிமனான அட்டை வைத்து ஜிப் வைத்துத் தைப்பது என் அம்மாவின் கைவேலை.

பாசிமணி எனப்படும் சின்னச்சின்ன மணிகளில் பொம்மைகள் செய்து, அந்த மணிகளிலேயே செடி, கொடி, மரம் செய்து இந்தப் பொம்மைகளை அவற்றின்மேல் உட்கார வைத்து அவற்றை ஒரு பாட்டிலுக்குள் நுழைத்து செய்யும் கைவேலையும் பாட்டி செய்வாள். ‘பாட்டிலுக்குள் இதெல்லாம் எப்படி போச்சு?’ என்ற எங்கள் கேள்விகளுக்கு ‘நான் உள்ள போ அப்படின்னு சொன்னேன் போயிடுத்து’ என்பாள்  பாட்டி!

பாட்டிக்குக் கோவமே வராது. சாப்பிடும் நேரம் யாராவது முதலில் சாப்பிட்டுவிட்டு  ‘எனக்கு, எனக்கு’ என்றால் பாட்டி சொல்வாள்: ‘முதல் பசி ஆறித்தா? கொஞ்சம் சும்மா இரு!’

இன்றும் நாங்கள் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் எங்கள் குழந்தைகளிடத்தில் – தற்சமயம் பேரன் பேத்திகளிடத்தில்.

பாட்டி எங்கள் அம்மாவிற்குக் கொடுத்து எங்கள் அம்மா எங்களுக்கு கொடுத்தது என்று வெள்ளிப் பாத்திரங்கள் இன்றும் எங்களிடம் உள்ளன. ஒரு சின்ன துரும்பைக் கூட வீணாக்காமல் பாட்டி அன்று நடத்திய குடும்பம்தான் இன்று எங்களிடம் வெள்ளிச் சாமான்களாக இருக்கின்றன.

பாட்டி நிறைய துக்கப் பட்டிருக்கிறாள். கணவனை இழந்த பாட்டியின் வாழ்க்கையில் எனது பெரிய மாமா அதே 45 வயதில் பரமபதித்தது பெரிய துக்கம். பாட்டி ரொம்பவும் ஒடுங்கிப் போனது இந்த  ஈடுகட்ட முடியாத இழப்பிற்குப் பிறகுதான்.

ஒரு கோடைவிடுமுறையில் சித்திரை த் தேர் எங்கள் வீட்டு வாசலைத் தாண்டியபின் மாமாவின் இழப்புச் செய்தி வந்தது. ‘ராமாஞ்ஜம் …!’ என்று கதறியபடியே பாட்டி நிலைகுலைந்து போனது இன்னும் எனக்கு நினைவில் நீங்காமல் இருக்கிறது.

அதேபோல பாட்டியுடன் கூடவே இருந்து ஸ்ரீரங்கத்தில் படித்து IPS ஆபிசர் ஆன  எங்கள் பெரியம்மாவின் மகன் இளம்வயதில் இறைவனடி சேர்ந்தது, என் அக்காவின் கணவர் மறைந்தது என்று என் பாட்டி பல இழப்புகளைப் பார்த்து மனம் நொந்து போனாள்.

எனக்கும் வயதாவதாலோ என்னவோ இன்று பாட்டியின் நினவு அதிகமாக வந்து விட்டது. அன்னையர் தினத்தன்று எங்கள் அருமைப் பாட்டியைப் பற்றி எழுதுவதில் ரொம்பவும் சந்தோஷப் படுகிறேன்.

எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

***************************************************************************

இந்தப் பதிவு படித்துவிட்டு ஸ்ரீரங்கத்தில் இருக்கும் என் மாமா (திருமஞ்சனம் சுந்தரராஜன்) எழுதிய கடிதம் இது. சில திருத்தங்கள் சொல்லியிருக்கிறார். அவற்றை அப்படியே மாமாவின் கடிதத்திலிருந்தே கொடுக்கிறேன். மாமாவின் பாராட்டையும் இணைத்துள்ளேன்.

சௌபாக்யவதி ரஜிக்கு 
சுந்துமாமாவின் ஆசீர்வாதம் 
 
பாட்டியைப் பற்றி உனது கட்டுரை படித்தேன், (தில்லியில் ஆண்டு 1985 கண்ணப்பா மாமா எடுத்த) போட்டோவும் பார்த்து சந்தோஷப் பட்டேன்.
 
இரண்டு வாஸ்தவமான திருத்தங்கள்  ~ 
 
என் தகப்பனார் (மாத்த்யூ ஆர்னல்ட் போன்று) 
ஸ்கூல்ஸ்-இன்ஸ்பெக்டர் ஆக இருந்தார், 
அவர் ஆயுள் 54 வருஷம்.
மாமா” (ராமாநுஜம்) ஆயுள் 49 வருஷம் 7 மாசம் 
கொண்டது.   தான் பிறந்தது ருஷ்ய போல்ஷ்விக் புரட்சி
நிகழ்ந்த ஆண்டு 1917 என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார்.  
அவர் நீங்கியது மே-1967. 
உன் கட்டுரை மிக அருமை.
ஏதோ இலக்கிய உத்தி / ரீதி என்று கற்பனை
பண்ணிக்கொண்டு முண்டும் முடிச்சுமாக
எழுதி அவஸ்தைப் படுகிறவர்களை நான்
பார்த்திருக்கிறேன்.
 
உன் எழுத்து கி. ராஜநாராயணன் என்கிறவர்
நடை போல ஸ்வதந்த்ரமாக, போலி இன்றி 
அமைந்திருக்கிறது.
 
உன்னுடைய readers’ feedback புகழ்ச் சொற்கள் 
அனைத்தும் தகும்.    பாராட்டுகள்.   மிக அருமை.
 
நான் எனது சுய-சரிதை எழுதி, அதற்கு  முன்னர் 
உன் கட்டுரை கிடைத்திருந்தால், அதை அப்படியே 
தூக்கி ஒரு முழு அத்தியாயமாகச் சேர்த்திருப்பேன் !
அன்புடன்,
சுந்து மாமா
(ஸ்ரீரங்கம்)
 

54 thoughts on “எங்கள் பாட்டி!

  1. அன்னையர் தினத்திற்கேற்ற அருமையான பாட்டி. மனதிருந்தது. செயலிருந்தது.
    பாசமும், பலமும் இருந்தது.
    பணத்திர்கு என்ன செய்தார் என்ற யோசனைகளெல்லாம்
    நமக்குத் தெரியாது. இம்மாதிரி எவ்வளவோ கேள்விகள்
    எத்தனையோ விஷயங்கள், எவ்வளவோபேரிடம் கேட்டதில்லை. இப்படியெல்லாம்
    சிந்திக்கத் தோன்றுகிரது.
    உறவுகளுக்கு மதிப்பு இருந்தது. உறவாடவும் செய்தோம்.
    இப்போது அது மிஸ்ஸிங். உங்கள் பாட்டி என்னை எங்கேயோ அழைத்துப் போய்விட்டார்.
    மதிப்புக்குரிய பாட்டிக்கு அழகான நினைவாஞ்சலி. அன்புடன்

  2. வாருங்கள் காமாக்ஷிமா!
    உங்கள் தளத்தில் உங்கள் அம்மாவைப் பற்றிப் படித்தவுடனேயே எனக்கு என் பாட்டியின் நினைவு தான் வந்தது. அதனாலேயே உடனே எழுதினேன். எத்தனை பேருக்குக் கிடைப்பார்கள், இந்த மாதிரி பாட்டிகள்?

  3. பாட்டியின் கை சாப்பாடு, கொள்ளிடக் குளியல், மாலையில் கோவில், வெள்ளைக் கோபுரம் தாண்டி இருக்கும் மணல்வெளியில் வீடு கட்டி விளையாட்டு, சேஷராயர் மண்டபத்தில் கண்ணாமூச்சி விளையாட்டு //மலரும் நினைவுகள் அருமை

    1. வாருங்கள் கண்ணதாசன்!
      மலரும் நினைவுகள் என்றுமே இனிப்பவை தான், இல்லையா?

  4. உங்கள் பாட்டி, மிக நெகிழ வைத்தார். என் பாட்டியை , அம்மா அழைத்ததால் நாமும்
    ஆச்சி எனவே அழைப்போம். வாழ்வில் நல்லது கெட்டதுகளை எல்லாம் இயல்பாக ஏற்று வாழ்ந்தவர்.
    அவருக்கு ஒரே பெண் என் அம்மா அதனால் எங்களுடனே இறுதி வரை வாழ்ந்தார்.
    விசா இல்லாக் காலத்தில் இந்தியா வந்து மதுரை மீனாச்சி, சிதம்பரம் நடராசர், செந்தூர் முருகனை எல்லாம் தரிசித்த கதைகள் கூறுவார்.
    அவர் கீரை வகைகள் போட்டு அவிக்கும் ஒடியல் பிட்டு,மறக்க முடியாத உணவு.
    பாட்டிகள் மறக்கமுடியாதவர்களே!

    1. வாருங்கள் யோகன்!
      உங்கள் ஆச்சியும் எங்கள் பாட்டியைப் போலவே என்று அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அடுத்த தலைமுறை என்னைப் பற்றி இப்படி பேசுமா தெரியாது.
      நீங்கள் சொல்வது போல பாட்டிகள் என்றும் மறக்க முடியாதவர்களே!
      உங்கள் வருகை மெத்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நன்றி!

  5. எங்கள் இளமைக்காலமும், எங்கள் பாட்டி அம்மா நினைவுகளும் வருகிறது. என் பாட்டி சம்பந்தமாக எனக்கும் மொறுமொறு தோசை, மோர்க்களி மைசூர்ப் பாக், என்று பிரத்தியேக நினைவுகள் உண்டு.

    1. வாருங்கள் ஸ்ரீராம்!
      இத்தனை அருமையான உறவுகள் நமக்கிருந்தன என்று சொல்லிக் கொள்வதில்தான் எத்தனை ஆனந்தம், இல்லையா?

    1. வாருங்கள் தனபாலன்!
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

    1. வா ஜெயந்தி!
      பாட்டியைப் பற்றி எழுத வேண்டும் என்று ரொம்ப நாட்களாகவே நினைத்திருந்தேன். அன்னையர் தினப் பதிவாக எழுதினேன்.

  6. உங்களுக்குப் பாட்டி, எங்களுக்கு அத்தைப் பாட்டி [அம்மாவின் அத்தை]…. எங்கள் வீட்டிலோ, பெரியம்மாவின் வீட்டிலோ இருக்கும்போது இவர் கையால் சாப்பிடுவதில் அப்படி ஒரு ஆனந்தம்…..]

    அன்னையர் தினம் அன்று சிறப்பான பகிர்வு….

    1. வாருங்கள் வெங்கட்!
      என்ன ஒரு அருமையான உறவுகள், இல்லையா? எவ்வளவு வருடங்கள் ஆனாலும் நம்மை வருடிக் கொடுக்கும் நினைவுகளுக்கு சொந்தக்காரர்கள், இவர்கள்!

  7. You have taken us back to the sweet memories of Srirangam… these things happened in our household too with our grand mother… How can we forget… there is no other better ways than expressing our gratitudes to these great souls… and remembering and sharing their selfless and unconditional love …Thank you very much…

    1. வாருங்கள் கீதா!
      எல்லோருக்குமே ஒரு பாட்டி, ஒரு பெரியம்மா அல்லது ஒரு அத்தை பாட்டி என்று நெஞ்சில் இதமாய் படிந்திருக்கும் உறவுகள், இல்லையா?
      என் பதிவைப் படித்து மனம் நெகிழ்ந்து கருத்துரை எழுதியதற்கு நான் அல்லவோ உங்களுக்கு நன்றி கூற வேண்டும்?
      நன்றி!

  8. பாட்டி எங்கு போனாலும் அவள் பின்னே நாங்கள்

    நானும் சிறு வயதில் எப்பவும் பாட்டியோடுதான் .. மலரும் இனிய நினைவுகள்…

    1. வாருங்கள் இராஜராஜேஸ்வரி!
      அப்படி பாட்டியின் பின்னாலேயே ஓடியதாலேயோ என்னவோ நான் இப்போது சரீரத்திலும் பாட்டி போலவே!

  9. பாட்டியைப்பற்றிய பகிர்வு நெகிழ்ச்சியைத்தந்தது.என் பாட்டியும் என் மனக்கண் கண்முன் வந்துவிட்டார்..அந்த பாட்டியின் பெயரென்னவோ?கூடவே பாட்டியின்புகைப்படத்தையும் போட்டு இருந்தால் நாங்களும் பாட்டியை பார்த்திருப்போம்.

    1. வாருங்கள் ஸாதிகா!
      எங்கள் பாட்டியின் பெயர் ஸ்ரீரங்கம்மாள். எழுத வேண்டுமென்று நினைத்து மறந்திருக்கிறேன். நீங்கள் கேட்டிராவிட்டால் மறந்தே போயிருப்பேன்.
      பாட்டியின் புகைப்படம் இருக்கிறதா என்று பார்த்து விரைவில் போடுகிறேன். போட்டுவிட்டு உங்களுக்கு தகவலும் கொடுக்கிறேன், சரியா?

      1. மிக்க மகிழ்ச்சி.பாட்டியை பகிர்வில் பார்த்து ,மகிழ்ச்சி.மிக்க நன்றி ரஞ்சனிம்மா..

    1. வாருங்கள் ஞானசேகரன்!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  10. எங்க பாட்டியை நாங்க எல்லாரும் “தாத்தாம்மா” என்றே கூப்பிடுவோம். பாட்டி(அம்மாவின் அம்மா) சம்பந்தமான பல நினைவலைகள் என்னிடமும் உண்டு. அப்பாவின் அம்மாவைப் பார்த்ததில்லை. நாங்களும் நினைவு தெரிந்து ஒவ்வொரு லீவுக்கும் உள்ளூரிலேயே இருக்கும் பாட்டி வீட்டுக்குப் போயிடுவோம், பாட்டி கையில் பிசைந்து போடும் அந்தக் கற்சட்டிப் பழையதுக்காகவே. இன்னமும் கை மணக்கும்.

    1. வாங்க கீதா!
      தங்களது அன்பாலும் அரவணைப்பாலும் இன்னும் நம் நினைவில் வாழ்ந்து வருபவர்கள் இந்தப் பாட்டிகள்!

  11. பாட்டியின் நினைவலைகளை உருக்கமாக எழுதியுள்ளீர்கள்.
    அன்னையர் தின வாழ்த்துகள்.

    1. வாருங்கள் மாதேவி!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
      உங்களுக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துகள்!

  12. வணக்கம்
    அம்மா

    தினத்துக்கு ஏற்றதுபோல்அருமையான பகிர்வு அருமையான விளக்கம் ஒவ்வொரு வரிகளிலும் ஒவ்வொரு அர்த்தங்கள் பிறந்திருக்கிறது மனதை நெகிழவைத்து விட்டது

    அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    1. வாருங்கள் ரூபன்!
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  13. எனன பொருத்தம் நம் இருவருக்கும் நானும் என் பாட்டியின் ஊர் பற்றியும் பாட்டி பற்றியும் எழுதியுள்ளேன் நீங்களும் எழுதியிருக்கிறீர்கள் உங்கள் பாட்டி நல்ல களையாக இருக்கிறார் என் பாட்டி போலவே உங்களுக்கும் அவரது ஜாடை இருக்கிறது என்றே தோன்றுகிறது அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

  14. வாருங்கள் விஜயா!
    என் வீட்டுக்காரர் சரீரத்திலும் நான் பாட்டி மாதிரியேதான் என்பார் பாட்டிக்கு நிறைய கூந்தல் – அதெல்லாம் வரவில்லை பாருங்கள்!

  15. பாட்டியின் மலரும் நினைவுகள் எல்லாம் அப்படியே நெஞ்சை வருடி சென்றது.
    என் அம்மாவை நினைவு படுத்தினார்கள் உங்கள் பாட்டி.
    //பாசிமணி எனப்படும் சின்னச்சின்ன மணிகளில் பொம்மைகள் செய்து, அந்த மணிகளிலேயே செடி, கொடி, மரம் செய்து இந்தப் பொம்மைகளை அவற்றின்மேல் உட்கார வைத்து அவற்றை ஒரு பாட்டிலுக்குள் நுழைத்து செய்யும் கைவேலையும் பாட்டி செய்வாள்.//
    என் அம்மாவும், அம்மாவின் அம்மாவும் பாட்டிலுக்குள் கிளி பொம்மை மஞ்சள், சிவப்பு, பச்சைகலரில் பளபள மணிகளில் செய்து இருப்பார்கள்., கம்பிளி நூலில் ரோஜாபூ, கலர் கலராய் செய்வார்கள் கோர்ஸாநூலில் மேஜை விரிப்பு , மரசட்டத்தில் ஆணி அடித்து அதில் நூலை சுற்றி இடை இடையே முடிச்சிட்டு வண்ணத்து பூச்சி , பூக்கள் எல்லாம் அதில் கொண்டு வருவார்கள். பாலித்தீன் பைகளை அழகான் ரோஜாபூக்கள் செய்து அவற்றை வட்டமாய் இணைத்து டீப்பாய் மேல் வைக்கும் விரிப்பாய் மாற்றுவார்கள். கைவேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள். அந்தக் காலத்துக்காரர்களுக்கு எவ்வளவு நேரம் இருந்து இருக்கிறது.அதை அவர்கள் பயனுள்ளதாக கழித்து இருக்கிறார்கள்1
    குழந்தைகளுக்கு திண்பண்டங்களும் கடையில் வாங்காமல் அவர்களே வீட்டில் செய்வார்கள்.

    உங்கள் குடும்பத்தில் சிறு வயது இழப்புகள் ஏற்பட்டது போல் எங்கள் வீட்டிலும் உண்டு. பெரியமாமா, மாமா பெண், என் அக்கா, என் அண்ணன் என் தங்கை, எல்லாம் இன்ப, துன்பங்களை தாங்கி கொண்டு வாழும் பக்குவத்தை இறைவன் அருளி இருக்கிறார். அம்மா, பாட்டியிடமிருந்து வந்த சொத்து இறை நம்பிக்கை.

    பாட்டியின் மலரும் நினைவலைகள் அவர்களின் அன்பை சொல்கிறது.
    அன்னையர் தின வாழ்த்துக்கள். அன்பான பாட்டியின் நினைவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    1. வாருங்கள் கோமதி! என் அழைப்பை ஏற்று என் பதிவுகளைப் படித்து கருத்துரையும் கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றி!
      வீட்டுவேலைகளையும் செய்துகொண்டு, கைவேலைகளிலும் சிறந்து விளங்கினார்கள் அந்தக் கால பெண்மணிகள். எல்லோருமே மணி மணியானவர்கள் தான்!இவர்களிடமிருந்து நாம் எத்தனை எத்தனையோ கற்க வேண்டும்!

    1. வாருங்கள் மஹா!
      ஓ! அதுதான் வலைப்பக்கம் காணவில்லையா? என்ஜாய்!
      நிஜமாகவே அவையெல்லாம் மால்குடி டேஸ் தான்! நீங்கள் இப்படிச் சொன்னவுடன்தான் நாங்கள் விளையாடியதைஎல்லாம் எழுதலாம் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கும், இந்த ஐடியாவுக்கும் நன்றி!

  16. காலையிலேயே மொபைலில் படித்து மகிழ்ந்தேன்! ஆனால் கருத்திட முடியவில்லை! பாட்டியின் நினைவுகள் என்னையும் அந்த காலத்திற்கு இழுந்து சென்றது! அருமையான நினைவுகள்!

    1. வாருங்கள் சுரேஷ்!
      வருகைக்கும், படித்து (அதுவும் இரண்டு முறை!) மகிழ்ந்து கருத்துரை இட்டதற்கும் நன்றி!

  17. Late… அன்னையர் தின வாழ்த்துக்கள்!.
    அருமைப் பாட்டி பற்றி எழுதியதற்கு நன்றி.
    சுவையான தகவல்கள். இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    1. வாருங்கள் வேதா!
      எல்லா நாளுமே அன்னையர் தினம்தான், இல்லையா?
      வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

  18. நீங்க உங்க பாட்டியைப் பற்றி எழுதியது உங்க அம்மாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.உங்க அம்மாவை மகிழ்ச்சிபடுத்தி அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடிட்டீங்க.

    அருமையான பாட்டியின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பேத்திக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    1. வாங்க சித்ரா!
      டூ-இன்-ஒன் ஆ ஒரு பதிவு போட்டு எல்லோரையும் மகிழ்வித்துவிட்டேன் என்கிறீர்களா?
      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

  19. பழைய நினைவுகள் நினைக்க நினைக்க இனிமை, எங்களுக்கும் படிக்கப் படிக்க இனிமை! அன்னையர் தினத்துக்கேற்ற அழகான பதிவு! ரசித்துப் படித்தேன்.

    1. வாங்க மகி!
      வருகைக்கும், ரசித்துப் படித்ததற்கும் நன்றி!

  20. அருமைப்பா!. நம் தலைமுறைக்கு இருந்த சுலபமான, கவலை அற்ற , சின்ன வயது விடுமுறைகளும், விளையாட்டுகளும், இனிமை தான். என் பாட்டியின் நினைவும் எட்டிப்பார்க்கிறது.

    1. வாருங்கள் பட்டு!
      தமிழில் எழுதுவதையே நிறுத்தி விட்டீர்களா?
      உங்கள் பாட்டியின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்களேன்.
      நம் சின்ன வயது விடுமுறைகள் இன்னும் மறக்காமலிருக்க பாட்டிகளின் பங்கு அதிகம், இல்லையா?

      1. Hi Ranjani,
        தமிழில் எழுதுவதை நிறித்தும் நோக்கமே இல்லப்பா!. மனசிலே எப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.
        வீட்டிலே கொஞ்சம் நெருக்கடி ஆதலால், எழுதுவது தள்ளிப் போகிறது. உங்கள் அன்பான ஊக்கம் , எழுதும் ஆர்வத்தை தூண்டுகிறது. யார் கண்டார்கள், ஒரு நாள் அசத்த தான் போகிறேன்.;-)

        அது வரை உங்கள் ருசிகரமான பதிவுகளை படிக்கும் ஆவல்.

  21. உங்கள் “பாட்டி நினைவுகளில்” நானும் எங்கள் தாத்தா ஊருக்கு பயணித்து விட்டேன் என்றே சொல்ல வேண்டும். மாயவரம் அருகில் இருக்கும் ஒரு சின்ன அழகான கிராமத்தில் என் கோடை விடுமுறை செலவழியும். எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

    உங்கள் பாட்டியை பற்றிய செய்திகள் நீங்கள் அவர் மேல் வைத்திருக்கும் பாசமும், மரியாதையும் வெளிப் படுத்துகின்றன.
    பாராட்டுக்கள் ரஞ்சனி.

    1. வாருங்கள் ராஜி!
      உங்கள் மறுமொழிக்கு மிகவும் தாமதமாக பதிலெழுதுகிறேன்.
      வருகைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி!

    1. வாருங்கள் நிக்கி ஜாக்சன்!
      வருகைக்கும் ரசித்துப் படித்ததற்கும் நன்றி!

      1. நிறைய படிக்க வேண்டி உள்ளது உங்கள் வலைப்பூவில், பொறுமையாக செய்கிறேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s