Life · Women

உனக்கு 70, எனக்கு 60….!

hubby bdayஆனந்தவல்லி கல்யாண மண்டபத்தில் எங்கள்  திருமணம் நேற்றுதான் (23.05.1975) நடந்தது போல இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குள் 38 வருடங்கள் ஓடிவிட்டன.

எல்லாப் பெண்களைப் போலவே நானும் திருமணம் என்ற பந்தத்தின் பொருள் புரியாமலேயே திருமணம் செய்து கொண்டேன். பெரிய குடும்பத்தில் இரண்டாவது (எண்ணிக்கையில் மட்டும்) பிள்ளை. ஆனால் பொறுப்பில் முதல் பிள்ளையாக இருந்தார்.

திருமணம் ஆன அடுத்தநாள் இவர்  தன் தந்தையின் தேவைகளை கவனிக்கக் காலை 5 மணிக்கு எழுந்த போது  – எனக்கு மட்டுமல்ல இவர் – என்கிற முதல் பாடம் புரிந்தது.

இவரது பக்குவம் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. எனது மாமனார் பக்கவாத நோயால் செயலிழந்திருந்தார். அவருக்கு தினமும் காலைக் கடன்களை கழிக்க உதவுவதிலிருந்து, குளித்துவிட்டு உடை உடுத்தி அவரை கூடத்தில் உட்கார்த்தி வைக்கும் பொறுப்பு இவருடையது. ஒருநாள் கூட இந்த பணிவிடையை இவர் செய்ய மறந்ததில்லை. ஆத்மார்த்தமாகச் செய்வார்.

இதே ஆத்மார்த்தமான பணிவிடையை நான் பத்து வருடங்களுக்கு முன் கீழே விழுந்து காலை முறித்துக் கொண்ட போது எனக்குச் செய்தார். இதற்கு கைம்மாறு செய்ய வேண்டுமென்றால் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ?

இவருடைய பக்குவமான தோழமையால் கொஞ்சம் கொஞ்சமாக திருமணம் என்பதின் உண்மைப் பொருள் புரிய ஆரம்பித்தது. பலசமயங்களில் தடுமாறிய போதும், இவர்  எனக்கு முக்கியம் என்பது புரிய மற்ற உறவுகள் ஏற்படுத்திய காயங்கள் என்னைத் தாக்குவது குறைந்தது.  அம்மா அடிக்கடி சொல்லும் ‘பாத்திரத்தைப் பார்க்காதே, பாலைப் பார்’ என்பதன் அர்த்தம் புரியப் புரிய வாழ்க்கை கொஞ்சம் எளிதாயிற்று.

பத்து வயது வித்தியாசம் எங்களுக்குள். எனது பிடிவாதங்கள், எதிர் கேள்விகள் இவரது பக்குவப்பட்ட பேச்சுகளினால் மெல்ல மெல்ல குறையத்  தொடங்கின.

ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்று இரண்டு குழந்தைகள். ஆசை நிறையவும், ஆஸ்தியாக எங்களிடம் இயற்கையாக அமைந்திருக்கும்  நல்ல பழக்கங்கள், எண்ணங்களையும் குறைவில்லாமல் கொடுத்து வருகிறோம்.

இன்று இத்தனை வருடங்களுக்குப்  பிறகு திரும்பிப் பார்த்தால் மிக நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் என்ற மன நிறைவு ஏற்படுகிறது.

என்னுடைய பல ‘முதல்’ கள் இவரைத் திருமணம் செய்த பின் தான் நடந்தேறின.

முதல் எம்.ஜி.ஆர் படம்;

முதல் ஐஸ்க்ரீம்;

முதல் கார்/விமான பயணங்கள்;

முதல் வீடு;

பங்குனி உத்திரத்தில் பிறந்த இவருக்கு இன்று எழுபது வயது நிறைகிறது.

வாழ்க்கையின் எல்லா மேடு பள்ளங்களிலும் இருவருமாகக் கை கோர்த்துப் போய்க்கொண்டிருக்கிறோம்.

இன்னும் மீதம்  இருக்கும் எங்கள் வாழ்க்கைப் பயணம் இப்படியே இப்படியே….செல்ல வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

 

thank you 1

 

 

 

 

 

 

 

Thank you my dear Husband for everything!

Advertisements

106 thoughts on “உனக்கு 70, எனக்கு 60….!

 1. அம்மா அடிக்கடி சொல்லும் ‘பாத்திரத்தைப் பார்க்காதே, பாலைப் பார்’ என்பதன் அர்த்தம் புரியப் புரிய வாழ்க்கை கொஞ்சம் எளிதாயிற்று.

  ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகள் கிருபையில் இன்னும் பல்லாண்டு நலமாய் வாழ என் பிரார்த்தனையும்.

  1. இன்று பங்குனி உத்திரம். ஸ்ரீரங்கத்தில் தான் மனதளவில் இருக்கிறேன். அங்கிருந்து உங்கள் மூலம் கிடைத்திருக்கும் இந்த வாழ்த்துக்கள் அந்த திவ்ய தம்பதிகளின் வாழ்த்துக்களாகவே உணர்கிறேன்.

   முதல் வருகைக்கு நன்றி ரிஷபன்!

  2. //புரிய மற்ற உறவுகள் ஏற்படுத்திய காயங்கள் என்னைத் தாக்குவது குறைந்தது.// என்ன ஒரு அற்புதமான வரிகள்…

   உங்கள் கணவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், இருவரும் நீடூடி வாழ எல்லா.ம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்

 2. அன்புள்ள சகோதரிக்கு,

  ஏதோ ஒரு ஒற்றுமை இந்த ஜன்மத்தில் நமது பந்தம். எனக்கு 63. என் மனைவிக்கு 58. அதே 23.5.75இல் திருமண நாள்.

  நீங்கள் எழுதியது போல் 38 ஆண்டுகள் கழிந்தது ;இன்ப துன்பங்களில் இணைந்து செயல்பட்டது எல்லாம் இறைவனின் லீலை.

  தங்கள் கணவரும் நீங்களும் அன்பு குறையாமல் ஆரோக்யத்துடன் பல்லாண்டு வாழ
  ஸ்ரீ பத் மாவதி சமேத வெங்கடேசன் அருள் புரிய பிரார்த்தனைகள்.

 3. இன்னும் பல்லாண்டு காலம் ரஞ்சனி தம்பதிகள் நலமாய் , சந்தோஷமாய் வாழ
  ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்

 4. குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள், எண்ணங்களையும் குறைவில்லாமல் கொடுத்து வருகிற உங்களுக்கும் அவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்… இதைவிட வாழ்க்கைக்கு என்ன வேண்டும் அம்மா…?

  தங்களின் ஆசீர்வாதம் என்றும் எங்களுக்கும் வேண்டும்… நன்றி…

 5. 38 வருட இனிய குடும்ப வாழ்வு. அதுவும் 32 வயதிலேயே பக்குவம் தெரிந்த கணவருடன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் கணவருக்கு.
  புரிந்துணர்வும் ஒத்தாசையும் அன்பும் நிறைந்த மனைவியுடன்
  36 வருடங்கள் வாழ்ந்தவனின் மனமார்ந்த வாழ்த்தக்கள்.

 6. பீஷ்மரதசாந்தி காணும் உங்கள் கணவருக்கு எங்களுடைய வணக்கங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்கள் இருவருக்கும் நீண்ட ஆயுளையும், நல்ல உடல் நிலையும் அருள ப்ராத்திக்கிறோம்.

 7. பங்குனி உத்திரம் வரும் போதெல்லாம், எங்கள் காஞ்சீபுரத்தில் பார்த்த உற்சவத்தை நினைவு கூர முயலுவோம். இப்போது உங்கள் அழகிய பதிவும் இனி நினைவுக்கு வரும் 😉

 8. இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி ரஞ்சனி!

  ஆத்மார்த்தமாக நீங்கள் எழுதியிருந்தது என் மனதை நெகிழ்த்திச் சென்ற‌து!
  இத‌ய‌த்தின் ஆழ‌த்திலிருந்து நீங்க‌ள் எழுதியிருக்கும் இந்த பதிவு, உங்களின் கணவரின் அன்பிற்கு உங்களின் இனிமையான சமர்ப்பணம் என்று தான் நான் உணர்கிறேன்.

  உங்களுக்கு ஒரு வருடம் முன்பு எனக்குத் திருமணமாயிற்று! நாற்பதாவது திருமன நாள் இன்னும் சில மாதங்களில் பிறக்கவிருக்கிறது!

 9. சந்தோஷமான செய்தி.நீங்கள் இருவரும் இனி வரும் காலங்களிலும் இதே உற்சாகத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

  நீங்கள் கொடுத்திருக்கும் பிறந்த நாள் பரிசு சூப்பர்.உங்கள் மனம் நிறைந்த பாராட்டுகளைவிட உயர்வானது வேறென்ன இருக்க முடியும்!

  உங்கள் பிரார்த்தனை நிறைவேற நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

 10. மைல்கல் பொறந்தநாளுக்கு மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

  இனி பங்குனி உத்திரமென்றால் உங்களையும் நினைச்சுக்குவேன்.

  இன்னும் ரெண்டு மாசத்துலே வரப்போகும் திருமணநாளுக்கு எங்கள் அட்வான்ஸ் வாழ்த்து(க்)கள்.

  புரிதல் வாழ்க்கைக்கு இனிப்பு கூடுதல்:-))))

  எப்படிப்பார்த்தாலும் கல்யாண விஷயத்தில் மட்டும் நாங்க அம்பது வாரம் ஸீனியர்ஸ்:-)))

  நல்லா இருங்கப்பா!!!

 11. உங்களின் அனுவபூர்வமான எல்லா நிகழ்வுகளுமே நிச்காயம் எல்லா சக மனிதர்களுமே அறிந்து ஆதரித்திருப்பார்கள் இதுவே வாழ்கையின் வெற்றியின் ரகசியம் நர்ர்ந்களும் வரும் தலைமுறைக்கு உங்களின் அனுபவத்தை எடுத்து சொல்லி எல்லோரையும் ஆசிர்வதிக்க வேண்டுமாய் சிரம் தாழ்த்தி வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.இன்றுபோல் பல்லாண்டு வாழ்க இனிய நண்பர்களாய்

 12. // இன்று இத்தனை வருடங்களுக்குப் பிறகு திரும்பிப் பார்த்தால் மிக நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் என்ற மன நிறைவு ஏற்படுகிறது. //

  சகோதரிக்கும் உங்களது கணவருக்கும் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!

 13. எத்தனை பேரால் இப்படி நிறைவான வாழ்க்கை
  வாழ்கிறோம் என சந்தோஷமாகச் சொல்ல முடிகிறது
  சுருக்கமாகச் சொல்லிப் போனாலும்
  நிறைய உணரச் செய்து போகும் அருமையான பகிர்வு
  பதிவுக்கு மனமார்ந்த நன்றி

  1. வாருங்கள் ரமணி!
   இன்னும் நிறைய எழுத வேண்டும் என்றே நினைத்தேன்.
   சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதுதான் அழகு, உங்கள் கவிதைகளைப் போல, இல்லையா? நான் எழுதாததையும் உணர்ந்து வாழ்த்தும் உங்களுக்கு நன்றி!

 14. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுத்த சொத்து மதிப்பிடற்கரியது! பொறுப்பான பிள்ளையான உங்களவருக்கும், அன்பான தம்பதிகளாகிய உங்களிருவருக்கும் மிகமிக மனமகிழ்வுடன் என் நல்வாழ்த்துகள்! உங்களின் விருப்பம் நிச்சயம் ஈடேறும். ‘நல்லவர் விருப்பம் வெல்வது நிச்சயம்’னு வாத்யாரே படத்துல பாடியிருக்காரே…! படிக்கையில் சந்தோஷமும், படித்ததும் மனநிறைவும் தந்த பகிர்வும்மா!

  1. வாருங்கள் கணேஷ்!
   வாத்தியாரின் பாடலைப் போட்டு எங்களை வாழ்த்திய பதிவு உலக வாத்தியாருக்கு நன்றி! (இது எப்படியிருக்கு?)

 15. உள்ளத்தில் அன்பிருந்தால்
  இந்த உலகில் அனைத்தும் இனிக்கும்
  உளமகிழ்ந்து வாழ்த்துகிறேன்.

  உற்றமும் சுற்றமும் சூழ
  உள்ளத்தில் சாந்தியுடன்
  இறைநினைவுடன். வாழ

 16. உங்களவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் இடுகையை படித்த பின் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள நிறைய ஒத்துமைகள் பற்றி நினைத்துப் பார்த்தேன். உங்களுக்கு தனிமடலில் பிறகு அனுப்புகிறேன். 🙂

  நட்புடன்

  வெங்கட்
  திருவரங்கத்திலிருந்து….

  1. அருமையான பதிவு. உங்கள் கணவருக்கு எங்கள் நமஸ்காரங்கள். திருமண வாழ்க்கையில் நான் உங்களை விட சீனியர் . அதனால் உங்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கிறேன். உங்களோட அறுபதுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

   எனக்குப் பதினெட்டு முடிஞ்சு பத்தொன்பது ஆரம்பத்தில் தான் கல்யாணம் ஆச்சு. என்றாலும் இன்னமும் உங்கள் அளவுக்குப் பக்குவம் வரவில்லை. வரணும்னு பிரார்த்திச்சுக்கிறேன்.

   //அம்மா அடிக்கடி சொல்லும் ‘பாத்திரத்தைப் பார்க்காதே, பாலைப் பார்’ என்பதன் அர்த்தம் புரியப் புரிய வாழ்க்கை கொஞ்சம் எளிதாயிற்று.//

   தினம் தினம் பாத்திரத்தைப் பார்க்காமல் பாலையே பார்த்துக் கொண்டிருந்தும் இதன் அர்த்தம் இன்று தான் புரிந்தது. மிக்க நன்றி.

   1. அன்பு கீதா, பலமுறை உங்களின் இந்த மறுமொழியைப் படித்துப் பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்ட பக்குவம் வந்திருக்கிறதா, தெரியவில்லை. எனக்குத் திருமணம் ஆன அன்றிலிருந்து இன்றுவரை என் குறிக்கோள் என்ன காரணம் கொண்டும் எனக்கும் அவருக்கும் இடையில் தப்பு அபிப்பிராயம் வரக் கூடாது என்பதே. வீட்டில் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும் என்றால் இது ரொம்பவும் அவசியம்.

    இன்னும் நிறைய சொல்லலாம்.
    வாழ்த்துக்களுக்கு நன்றி!

  2. வாங்க வெங்கட்!
   திருவரங்கத்திலிருந்து வரும் இரண்டாவது வாழ்த்து இது. ரிஷபன் முந்திக் கொண்டு விட்டார்!
   தனிமடலுக்கு காத்திருக்கிறேன்.
   வாழ்த்துக்களுக்கு நன்றி!

   1. உண்மை. நீண்ட இடைவெளிக்குப் பின் சில கவிதைகள் எழுதியுள்ளேன்! நேரமிருந்தால் பார்க்கவும்!

 17. ரஞ்சனிம்மா,எனது வாழ்த்துக்களும் .நீங்கள் இருவரும் இன்று போல் என்று சந்தோஷமாக வளமோடு சிறப்போடு வாழ் பிரார்த்தனைகளும்.

  உங்கள் அனுபவங்கள் மற்றவர்களுக்கு நல்லதொரு ஆலோசனை.தொடருங்கள்.

  //திருமணம் ஆன அடுத்தநாள் இவர் தன் தந்தையின் தேவைகளை கவனிக்கக் காலை 5 மணிக்கு எழுந்த போது – எனக்கு மட்டுமல்ல இவர் – என்கிற முதல் பாடம் புரிந்தது.// அந்த பாடத்தை புரிந்து கொண்டு வாழ்ந்தால் என்றும் மகிழ்வுக்கு பஞ்சமில்லை.

  //பத்து வயது வித்தியாசம் எங்களுக்குள். எனது பிடிவாதங்கள், எதிர் கேள்விகள் இவரது பக்குவப்பட்ட பேச்சுகளினால் மெல்ல மெல்ல குறையத் தொடங்கின.// எங்களுக்கும் இதே அளவு வித்த்யாசமதான் கணவராக மட்டுமல்ல நல்லதொரு நண்பராகவும்,ஆசானாவும் இன்றுவரை இருந்து வருகிறார்.

  1. வாருங்கள் ஸாதிகா!
   புரிதல் என்பது திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய உதவும் முக்கியமான ஒன்று.
   நீங்கள் உங்கள் கணவரும் எப்போதும் இதே வகையான புரிதலோடு சிறந்த நண்பர்களாக வாழ ஆசிகள்!
   வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி!

 18. உங்கள் கணவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! அம்மா உங்களை மாதிரியே,எனக்கும் என் கணவருக்கும் 10 வருட இடைவெளி உண்டு! இதே போல் நூறாண்டு வாழ என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

 19. // இன்று இத்தனை வருடங்களுக்குப் பிறகு திரும்பிப் பார்த்தால் மிக நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் என்ற மன நிறைவு ஏற்படுகிறது. //அந்த திருப்தி வாழும் நாள் முழுவதும் கிடைக்க வேண்டுகிறோம்.
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயாவுக்கும்.

 20. திருமதி ரஞ்சனி நாராயணன் மேடம். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். ஏன் வாழ்த்தினால் என்ன? எல்லாம் வல்ல, எல்லாவற்றையும் விட மிகப்பெரிய இறைவனை வாழ்த்துவதில்லையா நாம். நாராயணன் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அந்த காலத்தில் அதிக வயது வித்தியாசத்தில் மணம் செய்ததில் அர்த்தம் இருப்பது எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது. அந்த வித்தியாசம் கண்டிப்பாக ஆணுக்கு ஒரு பக்குவத்தையும், மனைவிக்கு ஒரு பயம் கலந்த மரியாதையையும் கொடுக்கும். வயது வித்தியாசம் கம்மி என்றால் (எங்களை மாதிரி) செல்லச் சண்டை போடத்தோன்றுகிறதே.

  வாழ்த்துக்களுடனும், வணக்கங்களுடனும்
  ஜெயந்தி ரமணி

  1. வாங்க ஜெயந்தி!
   வாழ்த்துக்களுக்கு நன்றி!
   நாங்களும் செல்ல சண்டை போடுவோம்! இங்கு சொல்ல வேண்டாமே என்று…ஹி…ஹி…!
   நீங்கள் சொல்வது ரொம்ப சரி. பக்குவப் பட்ட ஆணை மணப்பது நமக்கு மிகப் பெரிய advantage தான்!

  1. வாங்க சுப்பு ரத்தினம் ஐயா! படத்தில் திருமதி மீனாட்சி அம்மாவையும் பார்க்க ரொம்ப மகிழ்ச்சி.
   இனிய ஒரு கல்யாண பாடலுடன் வாழ்த்தியிருப்பது மனதுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. என்னுடன் இவரும் உங்களது வாழ்த்தையும், கல்யாண பாடலையும் கேட்டார்.
   எத்தனை அழகான வாழ்த்துகள் என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.
   நன்றி உங்களுக்கும், மீனாட்சி அம்மாவிற்கும்.

 21. மிக அருமையான பிறந்த நாள் பரிசு உங்கள் கணவருக்கு கொடுத்திருக்கிறீர்கள் ரஞ்சனி எங்களின் அன்பையும் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள் என் இளைய மகளும் பங்குனி உத்திரத்தில் தான் பிறந்தாள் இன்று அவளுக்கு 27 வயது

  1. வாங்க விஜயா!
   நீங்களே அவருக்கு வாழ்த்தி சொல்லிவிட்டீர்களே!
   பங்குனி உத்திரத்தில் பிறந்த உங்கள் மகளுக்கும் எங்கள் ஆசிகளை சொல்லுங்கள்.
   நன்றி!

 22. பால் மிகவும் தூய்மையான பால். உங்கள் இடுகை பார்த்து மிகவும் ஸந்தோஷம். நான் இவ்வலவு லேட்டாக வருவதற்கு காரணம் நேரம் ஒழியவில்லை. எப்பொழுது வாழ்த்தினாலென்ன.? மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் உங்களிருவரையும் வாழ்த்துகிறோம். இன்றுபோல் என்றும் வாழ்க. பக்குவமாக வாழப்,பழக நல்லதொரு
  துணை அமைந்தது, வாழ்க்கை பிறருக்கு எடுத்துக் காட்டாக அமைவது வெகு விசேஷம். அந்த வகையில் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக கட்டுரையும் எழுதியுள்ளீர்கள். உங்களிருவருக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் விசேஷ ஆசிகள். என்றும் நலமுடன் வாழ்க.,வளமுடன் வாழ்க,வெற்றியுடன் வாழ்க.
  அன்புடன் காமாட்சி

  1. நீங்கள் எப்போது வாழ்த்தினாலும் எங்களுக்கு உங்கள் வாழ்த்துக்கள் பெரும் பேறு.
   உங்கள் எழுத்துக்களில் உங்கள் அழகான மனம் தெரிகிறது. உங்களிருவருடைய வாழ்த்துக்களுக்கு என்ன சொல்லி நன்றி சொல்ல?

 23. உங்கள் கணவருக்கு இனிமையான பிரந்தநாள் வாழ்த்துகள். எவ்வளவு மேன்மையானவர் என்று ஸந்தோஷப்படுகிறேன். தனிப்பட அவருக்கு இதை எழுதியதாகச் சொல்லுங்கள். அன்புடன்

 24. அன்பு அம்மா,
  உங்களுக்கும் அய்யாவிற்கும் என்னுடைய மனமார்ந்த மரியாதை வாழ்த்துக்கள்…நீங்கள் கூறியபடி கணவர் என்பவர் அருமையான தோழராக அமைந்தால் வாழ்வின் செலுத்துதல் அழகாகவும் ,இனிமையாகவும் அமைவது உறுதி….உங்களைப் போன்றோரின் அறிவுரைகள் எங்களைப் பண்படுத்தும் மிக்க நன்றி அம்மா.

 25. Thank you என்று கணவருக்கு, ஆண்டவனுக்கு என்று நன்றி கூறலாம் . ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ மிக அருமையான வாழ்த்து தங்கள் கணவருக்கு.
  (என் கணவர் 2 வயது கூட. உறவுகளுடன் இலண்டனில் 70வது கொண்டாடினோம். 2 தங்கைகள் ஓரு தம்பி அங்கு உள்ளனர். இன்னும் பலர். 46 வருடமாகி விட்டது நாம் மணமாகி.)
  Vetha.Elangathilakam.

 26. பீமாரத சாந்தி காணும் உங்கட்கு எங்கள் பணிவு மற்றும் அன்பான நம்ஸ்காரங்கள். இருவரும் நலமுடன் கனகாபிஷேகம் காண எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்

  1. வாருங்கள் பாலா நடராஜன்!
   வாழ்த்துக்களுக்கு, பிரார்த்தனைகளுக்கும் நன்றியும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் ஆசிகளும்!

 27. சாருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எத்தனை பேருடைய நன்மதிப்பைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய பின்னூட்டம் மூலம் அறிய முடிகிறது. அத்தனை பேரின் வாழ்த்துக்களோடும் நீங்கள் இருவரும் எல்லா வளமும் பெற்று வாழ நானும் வாழ்த்துகிறேன்.

 28. ஆத்மார்த்தமாக நீங்கள் எழுதியிருப்பது என் மனதை நெகிழ்த்தியது. உங்கள் கணவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நீங்கள் இருவரும் நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.
  இத‌ய‌த்தின் ஆழ‌த்திலிருந்து நீங்க‌ள் எழுதியிருக்கும் இந்த பதிவு எல்லோர் மனதையும் தொட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
  //அம்மா அடிக்கடி சொல்லும் ‘பாத்திரத்தைப் பார்க்காதே, பாலைப் பார்’ என்பதன் அர்த்தம் புரியப் புரிய வாழ்க்கை கொஞ்சம் எளிதாயிற்று.//

  இதை இந்த கால இளம் தம்பதிகள் படித்து புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் அனுபவங்கள் இந்த கால இளசுகளுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். இன்னும் நிறைய உங்கள் வாழ்க்கை அனுபவங்களை எழுதுங்கள். வாழ்த்துக்கள் & பாராட்டுகள்

  வாழ்க வளமுடன்

 29. இந்த பதிவு படிக்கும் போது ஏதோ மனசுக்கு ரொம்ப சுகமா உற்சாகமாக இருந்தது!!!
  வாழ்த்துக்கள் அம்மா!! மேலும் பல பிறந்த நாட்களை இனிதுடன் கொண்டாடுங்கள்!!! மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.. இது கணவன் அமைவதற்கும் பொருந்தும்… அந்த வகையில் நீங்கள் அதிஷ்டசாலி!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s