என்விரோன்மென்ட் · Nature · Sparrows

துளசி டீச்சரின் சிட்டுக்குருவி அனுபவங்கள்

என்னுடைய ‘இன்று சிட்டுக்குருவிகள் தினம்’ பதிவுக்கு

திருமதி துளசி கோபால் எழுதிய மறுமொழி:

இந்த மறுமொழியை நான் எனது வலைத்தளத்தில் ஒரு பதிவாகப் படுவதற்குக் காரணம், எல்லோருமே துளசியைப் போல இருந்தால் மறுபடி இந்த சின்னஞ்சிறு பறவைகளை நம் வீடுகளின் அருகில் பார்க்கலாமே என்று ஆசையில் தான்.

Over to திருமதி துளசி:

வீட்டு முன்கதவு சாவி எல்லார் கிட்டேயும் ஒவ்வொண்ணு இருந்தது. வீட்டை ஒட்டி ஒரு ரயில்வே லைன். அந்தத் தெருவின் கடைசி வீடு இதுதான். முன்கதவுக்கு மேலே ஒரு குருவி கூடுகட்டி, தன் பிள்ளைங்களோட இருந்தது!

ஒரு நாள் சினிமா ரெண்டாவது ஆட்டம் போயிட்டு திரும்பி வந்தபோது பார்த்தா, கூடு பிரிஞ்சிருக்கு. மூணு குருவிக் குஞ்சுங்க தரையிலே கிடக்குதுங்க! ஐய்யயோன்னு பதறி, அதுங்களை நம்ம வீட்டுக்குள்ளே கொண்டு வந்தோம். செருப்பு வாங்குன அட்டைப் பெட்டியிலே வச்சுட்டேன். எல்லாம் கண்ணைக்கூடத் திறக்கலே. பாவம். ஆனா, மனுஷங்க தொட்டதாலே அதோட அம்மா அதை சேத்துக்காதாம்!

இப்படிதான் வேற குடித்தனக்காரங்க சொன்னாங்க. மறுநாளிலே இருந்து அதுங்களுக்குப் பணிவிடை ஆரம்பிச்சிருச்சு.சின்ன’ட்ராப்பர்’லே சொட்டு சொட்டாப் பாலு விடுவேன்.சாதத்தை ஒவ்வொரு பருக்கையா கையிலெ மசிச்சு ஊட்டுவேன். ரெண்டு நாளிலே, மூணுலே ஒண்ணு மண்டையைப் போட்டுருச்சு. மத்ததுங்க ரெண்டும் கண்ணைத் திறக்க ஆரம்பிச்சது. அதுலே ஒண்ணு கொஞ்சம் ‘ஸ்லோ’! சாப்பாடை வாய்க்கிட்டே கொண்டுபோனா, ரொம்ப நேரம் யோசிச்சுத்தான் வாயைவே திறக்கும்! தத்தியா இருக்கேன்னு அதும்பேரே ‘தத்தி!’ மத்தது ச்சிண்ட்டு.

அதுங்க மெதுவா இறக்கையை விரிக்க ஆரம்பிச்சவுடனே வீட்டுலே பல காரியங்களுக்குத் ‘தடா’ போட்டாச்சு. ஜன்னலுங்களைத் திறக்கக்கூடாது. கதவைத் திறக்கறதுக்கு முன்னாலே இதுங்க எங்கே இருக்குன்னு பாத்துட்டு அப்புறமா திறந்து, வெளியே போனதும் உடனே  கதவை மூடிடணும். முக்கியமான இன்னொண்ணு  பேன் போடக்கூடாதுரெண்டும் நல்லா வளந்துடுச்சுங்க. எங்க தலைமேலே உக்காந்து, ரெண்டு ரூமுக்கும் சவாரி. அரிசிலே கல்லு பொறுக்கும்போது, முறத்துலேயே உக்காந்து அரிசி தின்னுறது, இட்டிலிக்கு அரைக்கறப்ப, ஊற வச்ச அரிசி, பருப்பை, ஆட்டுக்கல்லுக்குப் பக்கத்துலேயே உக்காந்து தின்னுறது இப்படி நல்லா பழகிடுச்சுங்க. கூண்டு எல்லாம் இல்லே.

இதுலே ச்சிண்டு எப்பவும் கண்ணாடி முன்னாலே உக்காந்து தலையை, அப்படியும இப்படியுமா திருப்பிப் பார்த்துகிட்டு இருக்கும். ‘என்னடா மாப்ளே, அலங்காரமெல்லாம் சரியா இருக்கா?’ன்னு கேப்போம்.

எங்க வீட்டுலே வேற இவர்,’எப்பப் பாத்தாலும் வீட்டுக்குள்ளேயே இருக்குதுங்களே. வெளியேபோய் சுதந்திரமா இருக்கட்டுமே’னு சொல்வார். நானு, ‘இன்னும் கொஞ்சநாள் ஆகட்டும்’ன்னு சொல்லிகிட்டே இருந்ததுலே மூணு மாசமோடிருச்சு. ஒருநாளு, நான் இன்னொரு அறையிலே சமையலைக் கவனிச்சுகிட்டு இருக்கப்ப, ‘ஒரு குருவி வெளியே பறந்துருச்சும்மா!’ன்னு இவரு வந்து சொல்றார். ஓடிப்போய் பார்த்தா, ‘பால்கனி’ கதவு திறந்து இருக்கு! ச்சிண்ட்டு வழக்கம்போல கண்ணாடி பாத்துகிட்டு இருக்கு.

பறந்துபோனது நம்ம ‘தத்தி!’ ஊமையாட்டம் இருந்துகிட்டு, வீட்டைவிட்டு ஓடிட்டா! ச்சிண்ட்டு மாத்திரம் இருக்கு. அப்பப்ப கத்துது. தத்தியை’மிஸ்’ செய்யுதோன்னு நினைக்கிறேன். அதுவா ஒண்ணும் போயிருக்காது. இவர்தான் வேணுமுன்னே கதவைத் திறந்து வச்சிருந்திருப்பார்! இப்ப என்ன செய்யறது?வேலிப் பக்கமாப் போய், அப்பப்ப தத்தி, தத்தின்னு குரல் கொடுத்துகிட்டு இருந்தேன். எந்தக் குருவியைப் பார்த்தாலும் நம்ம தத்தி மாதிரியே இருக்கு!

ச்சிண்ட்டு சோகமா இருக்கற மாதிரி கண்ணாடி முன்னாலே உக்காந்து இருந்தது. மனசைக் கல்லாக்கிக்கிட்டுக், கதவைத் திறந்து வச்சேன்.ஆனா, அது இடத்தைவிட்டு நகரலே.ஒரு அரைமணி நேரம் ஆச்சு. அப்புறம் அது மெதுவாப் பறந்து வெளியே போய், கைப்பிடிச் சுவருலே உக்காந்தது. திருப்பியும் உள்ளே வந்தது.மறுபடி வெளியே போனது. அப்புறம் வரவே இல்லை!

அன்புள்ள துளசி,

உங்கள் மறுமொழி பார்த்து மனசு நெகிழ்ந்து போனது. என்னால் ஆனது இதை ஒரு பதிவாகப் பதிந்து விடுவதுதான் என்று தோன்றியது. பதிந்தும் விட்டேன். உங்களின் பரந்த மனசுக்கு கோடானுகோடி வந்தனங்கள்!

இன்னொரு பதிவர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் ‘குருவி கூடு கட்டும் அழகு’. பார்த்து ரசியுங்கள்.

Advertisements

18 thoughts on “துளசி டீச்சரின் சிட்டுக்குருவி அனுபவங்கள்

 1. வணக்கம்
  அம்மா

  உங்கள் பாச உணர்வை பார்த்தபோது என் மனம் மகிழ்ச்சியடைந்தது அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. துளசி டீ்ச்சரி்ன் மென்மையான ஈர இதயத்தை அவருடன் பழகியவர்கள் நன்கறிவார்கள். பறவைகளை பாசத்துடன் அவர்கள் கவனித்ததும், பறந்து சென்ற சிட்டுக் குருவிகள் மீண்டும் வரவில்லை என்றதும் மனதை நெகிழ்த்தியது. இன்றைய நிலையில் சிட்டுககுருவிகள் கண்ணில் படாதா என்றுதான் நானும் ஏங்கிப் பார்வையைச் சுழலவிட்டபடி அலைகிறேன். அருமையான உணர்வுகளைப் படிக்கத் தந்த ரஞ்சனிம்மாவுக்கு மனம் நிறைய நன்றி!

 3. இந்த அனுபவங்களை நான் அவரது ‘என் செல்லச் செல்வங்கள்’ புத்தகத்தில் படித்த நினைவு….

  துளசி டீச்சர் எழுதியதை மீண்டும் ஒரு முறை படிக்கத் தந்தமைக்கு நன்றி ரஞ்சனிம்மா.

 4. Geetha Sambasivam10:54Edit
  //செருப்பு வாங்குன அட்டைப் பெட்டியிலே வச்சுட்டேன். எல்லாம் கண்ணைக்கூடத் திறக்கலே. பாவம். ஆனா, மனுஷங்க தொட்டதாலே அதோட அம்மா அதை சேத்துக்காதாம்!//

  குஞ்சுங்க கூட்டை விட்டுக் கீழே விழுந்துட்டாலே அம்மா, அப்பா அதைச் சேர்க்காது. நிறையத் தரம் பார்த்து மனம் வருந்தி இருக்கேன். :(

  என் பதிவுக்கும் இணைப்புக் கொடுத்ததுக்கு நன்றி ரஞ்சனி. :))))

 5. அம்மா, இதை படித்தவுடன்,எனக்கு எங்கள் வீட்டில் கூடு கட்டிய புறாக்கள் ஞாபகத்துக்கு வந்து செல்கிறது! நானும் அந்த நேரம் என் இரண்டாம் குழந்தையை கருவுற்று இருந்தேன்! அதனால் அவை எங்கள் வீட்டில் முட்டை இட்டு குஞ்சுக்காக என்னை போலவே காத்து கொண்டிருந்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது! ஒரு கூடு பால்கனியில், இன்னொன்னு ஒரு குளியலறையில்! இரண்டையும் நன்கு பாதுகாத்தோம்! ஆனால் அம்மா, குஞ்சு வந்த பின்பு, அவை எங்களை படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல! பால்கனியில் இருந்து மெல்ல வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க ஆரம்பித்தது! நாங்கள் அது வீட்டில் ஒண்டி கொண்டு இருக்கிறோமோ என்று சந்தேகமே வந்து விட்டது! அப்பப்பா, குஞ்சு எல்லாம் வளர்ந்து, அந்த புறாவின் மொத்த குடும்பம்(கிட்டத்தட்ட ஒன்பது புறாக்கள்), எல்லவற்றையும் வழியனுப்பி வைப்பதற்குள் போதும்,போதும் என்றாகிவிட்டது 🙂
  இன்னொரு முறை , கூட்டில் இருந்து கீழே விழுந்த 3அணில் குஞ்சுகளை , காப்பாற்றினோம்,நானும் எனது தம்பியும்! கண்ணை கூட திறக்காமல் இருந்த அந்த குஞ்சுகளுக்கு பாலை ஊற்றி, அதற்கு ஒரு கதகதப்பான வீடு அமைத்து கொடுத்து, அது வளர்ந்ததை ஆசை ஆசையாக ரசித்தோம்! அது ஓட படித்த பின், மறக்காமல் எங்களை, எல்லா நாளும் வந்து பார்த்து செல்லும், அழகே அழகு! துளசி டீச்சருக்கு எனது வாழ்த்துக்கள்!!

 6. சிட்டுக்குருவி நீ இப்படி பண்ணலாமா? படிக்கிர எங்களுக்கே ஐயோ இது ஒரு தடவையாவது திரும்பி வந்து பார்க்காதா என்று தோன்றுகிறது.. எல்லா குருவியும் உன்னைப்போல இருப்பதால் எதையாவது பார்த்து நீதான் என்று நினைப்போம்.
  துளஸி டீச்சர் நல்ல ஜீவகாருண்யம். . ரஞ்ஜனி நன்றி.

 7. அன்பு ரஞ்ஜனி,

  என்னப்பா இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க!!!!

  சிட்டுக்குருவி பின்னூட்டம் நம்ம என் செல்லச் செல்வங்கள் புத்தகத்துலே வந்தவைதான். கவனிச்சுக் குறிப்பிட்ட வெங்கட்டுக்கு நன்றி.

  http://thulasidhalam.blogspot.co.nz/2010/01/blog-post_23.html

  இங்கே நம்ம நியூஸி வீட்டில் தினம்தினம் சிட்டுக்குருவிகள் தினமே. வெள்ளைக்கார நாடு என்பதால் காலை ப்ரேக்ஃபாஸ்ட் ப்ரெட்தான், நமக்கில்லைப்பா… குருவிகளுக்கு:-))))

  செல்போன் புழக்கம் அதிகமுள்ள நாடு என்றாலும் மரங்கள் அதிகம் உள்ளதால் இவை அருகிப்போகவில்லை என்பது நிம்மதி.

  1. வாங்க துளசி!
   என்னுடைய பதிவுக்கு என்னமா ஒரு மறுமொழி குடுத்து, சாதாரணப் பதிவை 5 ஸ்டார் பதிவாக்கிடீங்களே!
   உங்கள் மனசு எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது, துளசி!
   டீச்சர் என்றால் இப்படி காக்கை குருவி நம் ஜாதி என்று அல்லவா இருக்க வேண்டும்.
   உங்கள் கருணைக்கு ஒரு சின்ன காணிக்கை, அவ்வளவுதான்!

   உங்களிடமிருந்து எத்தனை எத்தனை கற்க வேண்டும் நான்! நேரமிருக்குமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s