காதல் பொக்கிஷம் – காதல் கதை 3

love symbol

அன்று ஞாயிற்றுக்கிழமை.

“மேடம் ஃப்ரீ தானே? இன்னிக்கு உங்களோட குப்பைத் தொட்டியை ( என் புத்தக அலமாரியின் செல்லப் பெயர்!) சரி பண்ணலாமா?” என்றார் கணவர்.

“எத்தனை புத்தகங்கள்! ஏன் இப்படிச் சேர்த்துச் சேர்த்து வைக்கிறே? படிச்சதை எல்லாம் தூக்கிப் போடக் கூடாதா? எப்படி அடைச்சு அடைச்சு வெச்சிருக்கே, பாரு! இதிலேருந்து பாம்பு, தேள் – ஏன் சிங்கம் புலி வந்தாலும் ஆச்சரியமில்லை!” – என்னைக் கடிந்தவாறே புத்தகங்களை எடுத்து வெளியே வைக்க ஆரம்பித்தார். சற்று நேரத்தில் எங்களைச் சுற்றிப் புத்தக மலை.

“இதோ பாரு…இதென்ன ஃபைல்? இவ்வளவு பேப்பர்களையும் ஒரே ஃபைலில் போட்டு திணிக்க வேண்டுமா?”

புத்தக தீவுக்குள் அமர்ந்திருந்த நான் கையை மட்டும் நீட்டி, அந்த மஞ்சள் நிற பைலை வாங்கினேன். திறந்தவுடன் ‘குப்’பென்று ஓர் ஆனந்தம் உடல் முழுக்க ஹை- வோல்டேஜ் மின்சாரம் போல் பாய்ந்தது. சூழ்நிலை மறந்து, புத்தக மலைகளை ஒரே தாண்டாகத் தாண்டி, கணவரின் பக்கத்தில் போய் அமர்ந்தேன்.

என்னை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே பைலைத் திறந்தவர், அடுத்த நொடி முகம் மலர்ந்தார். “ஏய்! இன்னுமா இதையெல்லாம் வெச்சிருக்கே? தூக்கிப் போட்டு இருப்பேன்னு நினைச்சேன்!” என்றார்.

“சேச்சே! இதையெல்லாம் தூக்கிப் போட முடியுமா?” என்றேன். இருவருமே மௌனத்தின் வசமானோம்.

எங்களுடைய திருமணம் காதல் – கம் அரேஞ்ஜ்டு  மேரேஜ்.  இருவரும் சந்தித்து ஆறு மாதங்கள் கழித்து நிச்சயதார்த்தம். பிறகு ஆறு மாதங்கள் கழித்து திருமணம். ஆக, இந்த ஒரு வருடம் நாங்கள் காதலர்களாக இருந்தபோது பரிமாறிக் கொண்ட கடிதங்கள், வாழ்த்து அட்டைகள்தான் அந்த பைலில் இருந்தன!

வாயு வேகம், மனோ வேகம் என்பார்களே அதைவிட வேகமாக மனத் திரையில் எங்கள் ரொமான்ஸ் மலர்ந்தது.

நாங்கள் இருவரும் சென்னையில்தான் இருந்தோம். அவர் அசோக்நகர். நான் புரசைவாக்கம். ஆனாலும் தினமும் சந்தித்திக்கொள்ள முடியாது. தொலைபேசியில் (உபயம்: அவரவர் அலுவலகங்கள்) மணிக்கணக்கில் அரட்டையடிப்போம். அத்தோடு, தினம் ஒரு கடிதம், மாதம் ஒரு வாழ்த்து அட்டை என அனுப்பிக் கொள்வோம்.

“ஏய்!, இந்த கிரீட்டிங் கார்ட் பாரு…” – கணவரது குரலால், நினைவுகள் என்னும் மேகக் குவியலிலிருந்து சட்டென்று தரையிறங்கினேன்.

ஆஹா….! அவர் அனுப்பிய முதல் கார்ட்! அதின் என்னவர் ‘டு ரஞ்சனி’ என்று எழுதியிருந்தார். ‘ஐயோ! இதென்ன ஆபீஸ் கடிதமா? டியர் என்று எழுதக் கூடாதா?’ என்று செல்லமாக நான் கடிந்து கொண்டதும், அடுத்த கார்டில் ‘டியர்’ என்று எழுதினார்.

அடுத்து நான் ‘ரத்தத்தின் ரத்தமே’ ஸ்டைலில் ‘டியரஸ்ட் டியர்’ என்று தடாலடி காட்ட, ‘அம்மா, தாயே! எனக்கு இதுபோல எழுதத் தெரியாது. என்னை விட்டுடு!’ என்று அவர் சரண்டரான காட்சி கண்முன்னே வந்து நின்றது. இரண்டு பேருமே வாய்விட்டு சிரித்தோம். அப்பா! எத்தனை நாளாயிற்று, இப்படிச் சிரித்து!

ஒரு திங்கட்கிழமை – இவர் வெளியூர் போயிருந்தார். அப்போதுதான் புரிந்தது – பிரிவு என்பது எத்தனை துயரமானது என்று! தினமும் சந்தித்துக் கொள்வது இல்லை என்றாலும், டெலிபோனிலாவது பேசிக் கொள்வோம். இன்று அதுவும் முடியவில்லையே என்று நான் நொந்து நூலாகியிருந்த சமயம், தபாலில் வந்தது ‘Miss you…’ கார்ட்! அடடா… நான் அந்த வினாடி பெற்ற குதூகலம், இன்று நினைக்கையிலும் மனம் சிலிர்க்கிறது!

“ஆமா…சனிக்கிழமையே ஹைதராபாத் போறேன்னு சொல்லிட்டுக் கிளம்பினீங்க! எப்படி திங்கட்கிழமை ‘மிஸ் யூ’ கார்ட் கரெக்டா வந்தது எனக்கு?

“சனிக்கிழமை காலையிலே கார்டை போஸ்ட் பண்ணிட்டு ஊருக்குப் போயிட்டேன்….” என்றவர், “எனக்குத் தெரியும் – திங்கட்கிழமை என்னோடு பேச முடியலையேனு நீ அப்செட் ஆயிடுவேன்னு. அதனாலதான் சர்ப்ரைசா இருக்கட்டும்னு இப்படிப் பண்ணினேன்!” என்று கூறிச் சிரித்தார்.

“யப்பா….நாலு பக்கத்துக்கு ஒரு கடிதம்! எப்போ எழுதினே இதை?” என்றார் இன்னொரு கடிதத்தைக் காட்டியபடி.

எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அப்போது நான் பி.ஏ. கரஸ்பாண்டன்ஸில் பண்ணிக் கொண்டிருந்தேன். பரீட்சை நெருங்கிய நேரம். ‘நோ போன் கால்ஸ்…நோ லெட்டர்ஸ்..’ என்று அவருக்கு கண்டிஷன் போட்டு விட்டு படிப்பில் மூழ்கினேன். கஷ்டப்பட்டு ஒரு வாரம், மூன்று பரீட்சைகள் முடித்து விட்டேன். அடுத்த பரீட்சைக்கு முன்னால்  இரண்டு நாட்கள் லீவு. ‘கொஞ்சம் ரிலாக்ஸ்டாகப் படிப்போம்’ என்று மாடிக்குப் புத்தகங்களுடன் போனால், அவர் நினைவே….! ‘ச்சே! அனாவசியமாக நானே கண்டிஷன் போட்டு, மாட்டிக் கொண்டு தவிக்கிறேனே!’ – சுய இரக்கம் மேலிட்டது. ‘நோ போன் கால்ஸ்…நோ லெட்டர்ஸ்..’ என்றுதானே சொன்னேன். நேர்ல வரலாமே…! என்று அவர் மேல் இருந்த கோபம் அழுகையாக மாறத் தொடங்கிய நேரம்….

என் தம்பி மூச்சிறைக்க ஓடி வந்தான். “சீக்கிரம் கீழே வா. அவர் வந்திருக்கார்!”

‘அவரா??! – தடதடவென்று மாடிப்படிகளில் இறங்கி வந்த நான், எங்கள் வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்திருந்த அவரைப் பார்த்துப் பரவசமானேன்.

‘நோ போன் கால்ஸ்…நோ லெட்டர்ஸ்.. என்றுதானே சொன்னே? நேர்ல வரலாம், இல்லையா?’ என்றபடி என்னைப் பார்த்துக் கண் சிமிட்ட…ஆஹா இதுவல்லவோ டெலிபதி!

அன்றிரவு என் மனநிலையை அப்படியே படம் பிடித்தாற் போல உணர்ந்து, அவர் நேரில் வந்ததை பற்றியும்  எங்கள் மனநிலையின் ஒற்றுமையையும் வார்த்தைகளில்  கொட்டி நான் எழுதிய கடிதம் தான் அது.

ஒவ்வொரு கடித்தத்தின் பின்னாலும் இதைப் போன்று ஒரு இனிய நினைவு. இத்தனை வருடங்களாகியும் இருவருமே எதையும் மறக்கவில்லை என்பதுதான் ஹைலைட்!

எத்தனையோ வாக்குவாதங்கள், சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் என்று வாழ்க்கை எங்களைப் புரட்டி எடுத்துப் புடம் போட்டிருந்தாலும், எல்லாவற்றுக்கும் அடித்தளமாக, அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருப்பது – இந்த இளவயதுக் காதல்தானே!

இருட்டு அறையில் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றினால், சட்டென்று ஒரு ஒலி பரவுமே….அதுபோல எங்கள் இதயங்களில் ஒரு புது ஒளியை பரவச் செய்தன இந்தக் கடிதங்கள்!

நீறு பூத்த நெருப்பாக இருந்த எங்கள் அன்பு இந்தக் கடிதங்களினால் மறுபடி புதுப் பொலிவைப் பெற்றது என்று சொல்ல வேண்டும்.

பழைய காதல் பொக்கிஷங்களைப் பாதுகாத்து வைப்பதும், அவ்வப்போது அவற்றை எடுத்துப் பார்த்து புதுப்பித்துக் கொள்வதும் கூட  ரொமான்ஸ் ரகசியங்களில் ஒன்று என்பது புரிந்தது.

 

2004 ஆம் ஆண்டு அவள் விகடன் ‘ரொமான்ஸ் ரகசியம்’ பகுதியில் வெளியான என் கட்டுரை.

 

காதல் கதை – 1

 

காதலர் தினம் – காதல் கதை 2

 

 

34 thoughts on “காதல் பொக்கிஷம் – காதல் கதை 3

 1. எத்தனை வருடங்களானால் என்ன? இந்த மாதிரி அற்புதமான தருணங்கள் நேற்று நடந்தது போல் நினைவிலிருக்கும்.

  உங்கள் காதல் அனுபவங்கள் சுவைபட எழுதியிருக்கிறீர்கள்.
  இப்பொழுது தான் புரிகிறது தினம் ஒரு காதல் பதிவு போட்டு
  காதலர் வாரம் கொண்டாடுவதன் ரகசியம்.

  வாழ்த்துக்கள்..

 2. படிக்கும்போதே உங்கள் சந்தோஷம் நிச்சயம் படிப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும்.2004 ல் வந்த பதிவா இது!இப்போது எழுதியது போலவே உள்ளது.நிகழ்ச்சிகளும் நேற்று நடந்ததுபோலவே உள்ளன.

  உங்கள் காதல் வாழ்க்கைப்பூ அதே நறுமணத்துடன்,ஏன் இன்னமும் அதிகமாக மேலும்மேலும் பூத்துக்குலுங்க வாழ்த்துக்கள்.

 3. இருட்டு அறையில் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றினால், சட்டென்று ஒரு ஒலி பரவுமே….அதுபோல எங்கள் இதயங்களில் ஒரு புது ஒளியை பரவச் செய்தன இந்தக் கடிதங்கள்!//அழகான உவமை.
  எத்தனை வருடங்கள் ஆனாலும் இதெல்லாம் அசை போடும் பொழுது புதுப்பொலிவு கிடைக்கத்தானே சேயும்.சுவாரஸ்யமாக பகிர்ந்து இருக்கீங்க ரஞ்சனிம்மா.

  1. வாருங்கள் ஸாதிகா!
   உங்கள் வருகைக்கும், படித்து ரசித்ததற்கும் நன்றி!

 4. உங்கள் வாழ்க்கை இதே போல் எப்போதும் சந்தோசமாய் இருக்க என் வாழ்த்துக்கள்…..

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 5. காதல் ஒரு அற்புதமான உணர்வு! காதலில் கரைந்து , அதில் வெற்றி பெற்றவர்கள் நிஜமாகவே பாக்கியசாலிகள்! உங்களுக்கும் , உங்கள் காதல் கணவருக்கும் , எனது உள்ளம் கனிந்த advance Valentines Day வாழ்த்துக்கள் 🙂

 6. காதலர் தினம் கொண்டாட முடிவு செய்து விட்டீர்கள் என்பது புரிகிறது காதலும் அதன் நினைவுகளூம் எத்தனை அபூர்வமானது படிக்க ரொம்ப நன்றாக இருக்கிறது காதலர் தின வாழ்த்துக்கள்

  1. வாருங்கள் விஜயா!
   வாழ்த்துகளுக்கும், பதிவை படித்து ரசித்து பின்னூட்டம் போட்டதற்கும் நன்றி!

 7. ஐயோடி, நான் சிரிச்சிண்டே படிச்சேன். எப்படி ஆரம்பிச்சது என்பதற்கு இன்னொரு பதிவா? தைரியசாலிதான். காதல் கலியாணமானாலும் பெறியவா வெளியில் சொல்லியிருக்க மாட்டாளே? அப்போது ட்ரெண்ட் அதுதான். ஸரிதான். காதல் கலியாண ரஞ்சனிக்கு பிடி இன்னொரு வாழ்த்துகள்.
  காதல் உணர்ந்து படைப்புகள் அருமையாகப் படைக்க முடிகிறது.
  அதனால்தான்.. பரவாயில்லை. ஸரியான ஜோடிதான்.

  1. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அந்தக் காலத்தில் யாருக்கும் இது தெரியாது.
   2004 இல் நான் இதை எழுதியவுடன், என் அம்மா, அக்கா இருவருக்கும் என் மேல் கோவமோ கோவம். இத்தனை நாளுக்குப் பிறகு எதற்கு இதையெல்லாம் எழுதுகிறாய் என்று!

   எப்படி ஆரம்பிச்சதுன்னு பதிவு போடலாம்தான்!
   வாழ்த்துகளுக்கு நன்றி!

  1. வாங்க இராஜராஜேஸ்வரி! வருகைக்கும், ரசித்துப் படித்து கருத்துரை கொடுத்ததற்கும் நன்றி!

 8. “வாயு வேகம், மனோ வேகம் என்பார்களே அதைவிட வேகமாக மனத் திரையில் எங்கள் ரொமான்ஸ் மலர்ந்தது.”

  “இருட்டு அறையில் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றினால், சட்டென்று ஒரு ஒலி பரவுமே….அதுபோல எங்கள் இதயங்களில் ஒரு புது ஒளியை பரவச் செய்தன இந்தக் கடிதங்கள்!”

  இயல்பான படைப்பு.
  இதயம் கவர்ந்த படைப்பு.

 9. ஆஹா! எவ்ளோ அழகான காதல் கதை!! அனால் இது கதையல்ல நிஜம்!! ரொம்ப சந்தோஷமா இருக்கு இத படிக்கும் போது!!
  வாழ்த்துக்கள் அம்மா!!! தொடருங்கள் உங்கள் காதல் கதையை!!

  1. ஆஹா மலரும் நினைவுகள் எப்பொழுதுமே இனிமையானவைதான் அதிலும் உங்கள் நினைவுகள் நேற்று தான் நடந்தது போல சொன்னது அழகாய் இருந்தது சகோதரி

   1. வாருங்கள் நாகராஜ்!
    வருகைக்கும், ரசித்துப் பாராட்டியதற்கும் நன்றி!

 10. ஆஹா! அருமையான நிஜ காதல் கதை. நானும் இதுபோல் கடிதங்களை பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

  1. இது என்ன? என் அனுபவங்களும் உங்கள் அனுபவங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகின்றனவே!
   விரைவில் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்!

 11. சுய இரக்கம் மேலிட்டது. ‘நோ போன் கால்ஸ்…நோ லெட்டர்ஸ்..’ என்றுதானே சொன்னேன். நேர்ல வரலாமே…! என்று அவர் மேல் இருந்த கோபம் அழுகையாக மாறத் தொடங்கிய நேரம்.

  என்ன சொல்வது..? சற்று பொறாமையாகத் தான் இருக்கிறது. இன்று கடிதங்கள் அரிதாகிவிட்டது. அந்தக் காலத்தில் பிறந்திருக்கக் கூடாதா யென்று நான் ஆசைப்பட ஒரே ஒரு காரணம் இந்த கடிதங்கள் தான். என் அன்னை என் தந்தைக்கு எழுதிய ஒரே ஒரு கடிதத்தை மட்டுமே இப்பொழுது பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். உங்களின் பிள்ளைகள் அதிர்ஷடசாலிகள். நிறைய பொக்கிஷம் உங்களிடம் இருக்கிறது.

 12. வாருங்கள் தமிழ் ராஜா!
  கடிதங்கள் தங்கள் மதிப்பை இழந்துவிட்டன என்பது எனக்கும் வருத்தமான விஷயம் தான்.

  வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 13. //இருட்டு அறையில் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றினால், சட்டென்று ஒரு ஒலி பரவுமே….அதுபோல எங்கள் இதயங்களில் ஒரு புது ஒளியை பரவச் செய்தன இந்தக் கடிதங்கள்!//

  மிகவும் அழகாக சொல்லியிருக்கீங்க மேடம். உங்கள் நினைவுகளை..

  என்னதான் கணணியில் பார்த்து படித்தாலும் அன்றைய கையெழுத்தை பேப்பரில் பார்பதே தனி அனுபவம்தான்.

 14. ஆகா! கதையல்ல நிசம்!…நன்றாக உள்ளது.
  உங்களுக்குள் எங்களை நான் பார்த்தேன்.
  அருமை…அருமை..றொமான்ஸ். இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

 15. Sweet! 🙂

  காலங்கள் கடந்த பிறகு பழைய நினைவுகளை அசை போடும்போது ஒரு சந்தோஷம் கிடைக்கிறதுதானே! படிக்கையிலேயே உங்க சந்தோஷம் எங்களையும் தொத்திக் கொள்கிறது ரஞ்சனி மேடம்! டெலிபதி என்று ஒன்று உண்டு என்பதை பல தருணங்களில் நாம் உணர்வோம், அது போலதான் உங்கள் கணவர் உங்களைப் பார்க்க வந்ததும். 🙂

  சில நினைவுகள் என்றும் பசுமையாய் நம் மனதில் பதிந்துவிடும், அவ்வப்பொழுது அத்தகைய இனிமையான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!

  1. வாருங்கள் மகி!
   உண்மையில் பல நினைவுகள் மகி. அந்த நாளும் வந்திடாதோ என்று பாடத் தோன்றுகிறது!

 16. 🙂 🙂 நல்லா இருந்தது மா, அந்தக் காலத்து படத்துல வர மாதிரி உங்க கதைய வாசிக்கும் போதே கற்பனை செஞ்சு பாத்தேன்.
  ரொம்ப நல்லா இருந்தது. டெலிபதி தான் ஹைலைட் 🙂

  விஜயன் வலைச்சரத்துல தந்த இணைப்ப பாத்து தான் வந்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s