Life · Women

மூக்குத்திப் பூ ….!

 

nose ring

‘பொண்ணு மூக்கு குத்திண்டு இருக்காளா?’

‘இல்லை…பிடிக்கலங்கறா…’

‘பெரிய மாட்டுப் பொண்ணும் குத்திக்கல…. அக்கா மாதிரியே தங்கையும் இருக்காளாமா?’

என் அப்பாவுக்கும் என் எதிர்கால மாமியாருக்கும் என் திருமணத்திற்கு முன் நடந்த வார்த்தையாடல் இது.

‘வயசானப்பறம் மூக்குத்தி இல்லைன்னா முகத்துல களையே இருக்காது….’ (என்னுடைய இப்போதைய முகக் களைக்கு காரணம் தெரிஞ்சுதா?)

எதற்கும் நான் மசியவில்லை.

‘உங்க மாமியார் இப்படி சொல்றாளே’ என்று என் அப்பா சொன்னதற்கு ‘வயசானப்பறம் குத்திக்கறாளாம் – ன்னு சொல்லு அப்பா’ என்றேன்.

‘நீயே கல்யாணம் ஆனப்பறம் சொல்லிக்கோ’ என்றார் என் அப்பா.

இதனால் எங்கள் கல்யாணம் நிற்காது என்ற தைரியம் எனக்கு. காதலித்து கடிமணம் புரிபவர்கள் ஆயிற்றே!

ஸோ, மூக்கு குத்திக்காமலேயே கல்யாணம் ஆயிற்று.

அக்காவைப் போல என்று என் மாமியார் சொன்னது என் பெரிய ஒர்ப்படியை – என் பெரியம்மாவின் பெண்!

அவளது திருமணத்தில் தான் செம்புலப்பெயல் நீர் போல எங்கள் அன்புடை நெஞ்சங்கள் கலந்தன!

எனக்கு அடுத்த ஒர்ப்படி என் மாமியார் சொல்வதற்கு முன்பே மூக்குத்தி அணிந்தே எங்கள் கூட்டுக் குடும்பத்தில் வலது காலை வைத்து வந்தாள். அவளுக்கு ஸ்பெஷல் மரியாதை!

‘நான் சொல்வதற்கு முன்னாலேயே லட்சணமா மூக்குத்திண்டு வந்திருக்கா!’ என்று.

என் பெரிய ஓர்ப்படி வெளியூரில் இருந்ததால் நான்தான் எல்லோருடைய விமரிசனத்துக்கும் ஆளானேன்.

அசரவில்லை நான்.

பக்கத்து வீட்டு மாமியின் பிள்ளைக்குக் கல்யாணம். போய்விட்டு வந்து என் மாமியாரிடம் சொன்னேன்: ’பொண்ணு மூக்கு குத்திண்டு லட்சணமா இருக்கா..!’

‘வயசானப்பறம் மூக்குத்தி இல்லைன்னா முகத்துல களையே இருக்காது… அதான் உன்னையும் குத்திக்கச் சொன்னேன்….!’

‘அதான் வயசானப்பறம் குத்திக்கறேன்னு சொன்னேனே!’

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் மாமியார் ‘நான் இந்த விளையாட்டுக்கு வரலை’ ன்னு  விலகிட்டார்.

என் மாமியார் 1992 ஆம் வருடம் பரமபதித்தார். நானும் மூக்குத்தி விவகாரத்தை மறந்தே போனேன். அப்போது நாங்கள் தும்கூரில் இருந்தோம்.

எங்கள் திருமணத்தின் போது என் அப்பா என் கணவருக்கு 3 வைரக் கற்கள் வைத்து ஒரு மோதிரம் போட்டிருந்தார். தினமும் அதை கையோடு போட்டிருந்தார் என்னவர்.

ஒரு நாள் அதில் ஒரு கல்லைக் காணவில்லை. எங்கே விழுந்ததோ? எனக்கு ரொம்பவும் வருத்தம். அப்பா போட்ட மோதிரம் என்று பயங்கரமான சென்டிமென்ட் வேறே!

என் கணவர் அதை கழட்டி விட்டார். என் அம்மாவிடம் கேட்டேன். இரண்டு கற்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய?

என் கணவருக்கு நவரத்தின மோதிரம் வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஒரு ஆசை. சரி இந்த இரண்டு கற்களில் அதில் ஒன்றை வைத்து விடலாம் என்றாள் அம்மா.

இன்னொன்று?

‘நீ மூக்கு குத்திண்டு அதில் மூக்குத்தி பண்ணி போட்டுக்கோ!’

‘நானா? இந்த வயதில் மூக்கு குத்திக்கறதா?’

‘நீதானே சொன்னே, வயதானப்பறம் மூக்குக் குத்திக்கறேன்னுட்டு….!’ மடக்கினாள் அம்மா. என் அம்மாவாயிற்றே!

ஆஹா!, நுணலும் தன் வாயால் கெடும் என்பார்களே, அது இதுதானோ?

கொஞ்சம் யோசித்தேன். சரி வந்தது வரட்டும் என்று சம்மதித்தேன்.

ஒரே மாதத்தில் மூக்குத்தி ரெடி! மூக்கு?  குத்திக்கொள்ளணுமே! அப்போதானே ரெடி ஆகும்?

வலிக்குமோ என்று கொஞ்சம் (இல்லை, நிறையவே)  பயந்தேன். எங்கள் டாக்டரிடம் போனேன். ஏதோ ஸ்ப்ரே அடித்து விட்டு மூக்கை வலி தெரியாமல் குத்தி மூக்குத்தியையும் போட்டு விட்டு விட்டார். சந்தோஷமாக வீட்டிற்கு வந்தேன். அல்ப சந்தோஷம் என்று அடுத்த நாள் காலையில் தெரிந்தது. மூக்கு வீங்கிப் போய் வேதனை தாங்கவில்லை.

டாக்டரிடம் போய் மூக்குத்தியை வெற்றிகரமாக கழற்றிக்கொண்டு வந்தேன்.

சிறிது நாட்கள் ஆன பின் என் அம்மா சொன்னாள்: ‘தங்க மாளிகைல போய் குத்திக்கோ. வலி தெரியாம குத்திண்டு வரலாம்’

மறுபடியுமா? அடுத்த முறை சென்னை போனபோது தங்க மாளிகையில் போய் கேட்டேன். ‘உங்கள் மூக்குத்தியை போட முடியாது. எங்களிடம் வெறும் தங்கத்தில் செய்த மூக்குத்தி இருக்கிறது. முதலில் அதைப் போட்டுக் கொள்ளுங்கள். கொஞ்ச நாட்கள் ஆனவுடன் வைர மூக்குத்தியைப் போட்டுக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.

அடடா! இந்த ரகசியம் தெரியாமல் எடுத்தவுடனே வைர மூக்குத்தியைப் போட்டுக் கொண்டு….

ஐந்தே நிமிடங்கள் தான். 1993 இல் இரண்டாவது முறையாக வெற்றிகரமாக மூக்கு குத்திக்கொண்டு தங்க மூக்குத்தியுடன், முகத்தில் புதிய களை வழிந்து ஓட, வெளியே வந்தேன். உலகம் முழுவதுமே என்னையும், என் மூக்குத்தியையுமே பார்க்கிறாப் போல பிரமை!

சிறிது நாட்களில் என் வைர பேசரியை (சும்மா…ஒரு பந்தா தான்!) போட்டுக் கொண்டேன்.

ஒரு விஷயம் நினைவுக்கு வந்து துன்புறுத்தியது. 40 வயதில் பண்ணிக் கொண்டதை 20 வயதில் பண்ணிக் கொண்டிருந்தால் மாமியார் மகிழ்ந்திருப்பாரோ?

 

பி.கு. இது எனது ரசிகை திருமதி ஷாந்தி அவர்களின் வேண்டுகோளுக்காக எழுதப்பட்டது.

அன்பு ஷாந்தி உங்கள் காமென்ட் – ஐ மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

முகத்தின் அழகு மூக்குத்தியில்!

 

 

 

 

Advertisements

58 thoughts on “மூக்குத்திப் பூ ….!

 1. வணக்கம்
  அம்மா

  மூக்குத்திப் பூ என்ற தலைப்பில் எழுதிய ஆக்கம் மிகவும் அருமையாக உள்ளது அதிலும்
  செம்புலப்பெயல் நீர் போல எங்கள் அன்புடை நெஞ்சங்கள் கலந்தன!
  என்ற வரி மூலம் அழகா சொல்லிவிட்டீர்கள் பாரட்டுக்கள் அம்மா,

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. மாமியாரிடமும் தமாஷ் பண்ணிருக்கிறீர்கள். அப்பா கொடுத்தவைரம், மாமியாரின் ஆத்மாவையும் குளிரப் பண்ணிவிட்டது. மூக்குத்தியணியாத பின்னோடியைப் பார்த்து,மூக்குத்தியைப் புறக்கணித்த முன்னோடிகளும் இருக்கிறார்கள். ஒட்ட வைத்த மூக்குத்தி , ஒரு ஃபேஷனாகவும் இருந்தது. மொத்தத்தில் சின்ன சின்ன மூக்குத்தியாம்,ரஞ்ஜனியின், வைரக்கல்லு மூக்குத்தியாம். வாசகர்களே உந்தன் வாக்குகள்
  பெற்ற மூக்குத்தியாம்.

 3. மூக்குத்திப்பூமேலே மலரும் நினைவுகள் என்னும் மின்னும் வைரங்களைப் பதித்து
  பதிவாக்கின விதம் வைர மூக்குத்தியாய் ஜொலிஜொலிக்கிறது ..வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

 4. இரண்டு நாட்களாகை உங்கள் பதிவுகள் ஒரே மலரும் நினைவுகளாகவே இருக்கிறது..
  இளமைக் காலத்தை நினைப்பது நிஜமாகவே இனிப்பான விஷயம்.
  மூக்குத்திக் கதைப் போலவே உங்கள் திருமணக் கதையும் நினைவிற்கு வந்தது போல் தெரிகிறதே.
  அருமையாக இருக்கிறது உங்கள் மூக்குத்தி.
  உங்கள் போட்டோவில் மூக்குத்தி போஸ் இல்லை.தேடிப் பார்த்தேன்

  ராஜி.

  1. கூகிள் புகைப்படத்தைப் பாருங்கள். ஒரே ஒரு கல் மூக்குத்தி தான். சும்மா பேசரி என்று எழுதி இருக்கிறேன். பதிவுக்கு சுவை கூட்ட!

   ஆமாம் திருமண வாழ்க்கை பற்றி வாலன்டைன்ஸ் தினத்தன்று எழுதலாம் என்று இருக்கிறேன்.
   விரைவில்……!
   வருகைக்கும் என் மலரும் நினைவுகளைப் படித்து உற்சாகமாக கருத்து தெரிவித்ததற்கும் நன்றி ராஜி!

   1. அருமையாக இருக்கிறது உங்கள் மூக்குத்தி வரலாறு. மற்றவர்களின் மூக்குத்தி வரலாற்றையும் இந்த பதிப்பில் எழுத வேண்டும்.

   2. அன்புள்ள ஷாந்தி,
    உங்களுக்காகவே எழுதியது. படித்து ரசித்ததற்கு நன்றி!
    உங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.

  1. வாருங்கள் கார்த்திக்!
   சில பெண்கள் அதை அநாகரீகம் என்று நினைக்கிறார்கள். சிலர் அதனை பாஷன் என்கிறார்கள். அவரவர்கள் சொந்த விருப்பத்திற்கு விட்டுவிடலாம். கட்டாயப் படுத்தக் கூடாது என்பது என் கருத்து.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 5. ”மூக்குத்தி பூ மேலே காத்து உட்கார்ந்து பேசுதடி….” அப்படின்னு பாட்டு கேட்டுதா இல்லையா மூக்கு குத்திண்ட பிறகு? :)))))

  இனிமையான நினைவுகள்…..

 6. அந்தப் பாட்டு நினைவுக்கு வந்ததால்தான் இந்த தலைப்புக் கொடுத்தேன்!
  வருகைக்கும் ஒரு நல்ல பாட்டை நினைவு கூர்ந்ததற்கும் நன்றி வெங்கட்!

 7. Ranjani
  Humour seems to be an integral part of your writings & makes them enjoyable.I remember to have deliberately “lost” my Mookkuthi when I was 5 years old in a rebellious act repelling the compulsion of having had to allow my nose being poked for making me wear it earning my mother’s annoyance for life.Luckily my MIL spared me me of any such agony:)You have a delightful narrative style.Keep writing many more such stories/articles

  1. வாருங்கள் மைதிலி! உடனடி வருகைக்கும், உங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!
   உங்கள் பாராட்டுக்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!

 8. கிராமங்களில் ஒரு செடியின் பூக்கள் பார்க்க மூக்குத்தி போல இருக்கும். சிறுமிகள் அதை ஒட்டி விளையாடுவார்கள். மூக்குத்திப்பூ என்ற தலைப்பை பார்த்ததும் அந்த ஞாபகம் வந்தது. உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் என்ற கவிதைத் தொகுப்பை தாணு பிச்சையா என்பவர் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு அணிகலன் குறித்தும் அதை செய்பவர்களின் பார்வையோடு ஒன்றியிருக்கும்.

  1. மூக்குத்திப் பூவைப் பற்றிக் கேள்விபட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. நகரவாசிகள் எத்தனை விஷயங்களை இழக்கிறோம் என்று சின்னதாக ஓர் ஏக்கம் எட்டிப் பார்க்கிறது.

   ‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’ தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே.
   ஒரு சின்ன வேண்டுகோள்: மூக்குத்திப் பூவை உங்கள் தூரிகையில் தீட்டி, திரு தாணு பிச்சையா அவர்களின் மூக்குத்தி கவிதையையும் உங்கள் பதிவில் போடுங்களேன், ப்ளீஸ்!

 9. “உலகம் முழுவதுமே என்னையும், என் மூக்குத்தியையுமே பார்க்கிறாப் போல பிரமை!
  முகத்தின் அழகு மூக்குத்தியில்!”

  அழகான நடை…
  தெளிவான களம்…
  எளிமையான வார்த்தைகள்…
  மிகவும் ரசித்தேன்…

 10. என்ன ஒரு பிளாஷ் பாக்!! நீங்க ரொம்ப தாமதமா மூக்குத்தி போட்டதா கவலைபட்டீங்க.. நான் 3 வகுப்பு போகுபோதே அக்காவை பார்த்து எனக்கு என்னக்குன்னு குத்திகிட்டேன். அப்புறம் வலி தாங்க முடியாம கழட்டி போட்டது தான்.. பிறகு எனக்கே ஆசை வந்து 5 வகுப்புல கிச்சலி முள்ளால் குத்தி, அன்றைக்கு பொழுதே மூக்குத்தி போட்டுகிட்டேன்… அப்புறம் வலி 2 நாள் தான் இருந்தது!!

  உங்க பிளாஷ் பாக், என்னையும் சின்ன வயசுக்கு கொண்டுபோகிடிச்சிம்மா !!!
  இடையிடையே உங்க காதல் கதை சுவாரசியம்!!!

  1. வா சமீரா!, உன் பிளாஷ் பாக் நன்றாக இருக்கிறதே!
   கிச்சலி முள்? அப்படின்னா என்ன? கேள்விப்பட்டதில்லையே?

   உன் வயதில் காதல் கதை சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.

 11. மூக்குத்திபூ என்ற தலைப்பை பார்த்தவுடன் பாடல் வரிகள் தானாக மனதில் வந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும்பொழுது அம்மா சொன்னார் என்று குத்திகொண்டது. அன்று முதல் இன்று வரை சில நிமிடங்களுக்கு அவிழ்த்தாலும் திரும்ப போடுவது ம்ம்ம்ம் …. ஒரு முறை புத்தர் வேடம் அணிந்ததால் நிகழ்ச்சிகாக பள்ளியில் அவிழ்த்து விட்டு திரும்ப அணிய முயன்ற பொது பூரா கோலோனிகும் என் மூக்கின் பெருமை தெரிந்தது.

  என்னை விட என் மன்னி ரொம்ப மேல். நிச்சயம் பொது அவள் அப்பா என்னையும் என் அக்காவின் மூகுதியையும் பார்த்து ஆசை பட்டு என் அம்மாவிடம் கூற மாமியாரின் பேச்சை மீற முடியாமல் திருமணத்திற்கு 2 நாட்கள் முன்பு மூக்கு குத்தி திருமணத்தின் பொது மிளகாய் பழ மூக்குடன் தெரிந்தால்.

  எப்போவும் போல் உங்கள் பதிவு சூப்பர்

  1. அடடா! மூக்குத்தி பற்றி ஒவ்வொருவருக்கும் எத்தனை மலரும் நினைவுகள்!
   பாராட்டுக்கு நன்றி ஷீலா!
   நீங்கள் தமிழில் எழுதி இருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
   தொடர்ந்து எழுதுங்கள்.

 12. EPPIDI, ENGEYUM TAMIL L EZUTHI VITTEN. (cOURTESY – GOOGLE TRANSLITERATION. But still not able to write some letters, thats why some spelling mistakes in the above comment.

  One more thing, I have subsrcibed for your new entries twice, but still i am not getting any intimation like earlier. i do not know what / where I am missing if any.

  with regards

  1. நானும் கூகிள் transliteration தான் பயன்படுத்துகிறேன். நீங்கள் தட்டச்சு செய்யும்போதே பல வார்த்தைகளை காட்டும். அதில் சரியான வார்த்தையை தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான்.
   உங்களுக்காக நான் மறுபடி subscribe பண்ணியிருக்கிறேன். Confirmation வருகிறதா பாருங்கள்.
   என் எழுத்துக்களில் நீங்கள் காட்டும் ஆர்வம் எனக்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கிறது.

   நன்றி ஷீலா!

 13. ரஞ்சனி ….உங்கள் மூக்குத்திப்பூ அருமை….இளமையை நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்! அந்த நாள்ளல்லாம் மூக்குத்தி ஒரு மஸ்ட் ஆச்சே?

  எனக்கும் அப்பல்லாம் மூக்குத்தி போட்டுக்க இஷ்டம் இல்ல….என் அம்மா, அப்பா ரொம்ப திட்டி இஷ்டம் இல்லாமதான் மூக்கு குத்திண்டேன்! கல்யாணத்துக்கு அப்பா வைரத்துல முத்து மூக்குத்தியும் வாங்கிக் கொடுத்தார்! கல்யாணத்துக்கு அப்பறம் என் கணவர் என்னைப் பாத்து ‘ஒத்தைக் கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி’னு என்ற பாட்டைப் பாடி கலாய்ப்பார்!

  இப்போ எனக்கு ரொம்ப பிடிச்ச நகை மூக்குத்திதான்! அது முகத்துக்கு ஒரு அழகுதான் ! பல தினுசுல இப்போ மூக்குத்தி வெச்சிருக்கேன். என் பொண்ணு, மாட்டுப்பெண் யாரும் மூக்குத்தி போடல.

  உங்கள் காதல் கணவரோட சப்போர்ட்டுல மாமியார்கிட்ட மூக்குத்திக்கு ‘நோ’ சொல்லிட்டேள்! காதல் கதையை விரைவில் எதிர் பார்க்கிறேன்!

  1. உங்களின் மலரும் நினைவுகளும் நன்றாக இருக்கின்றன ராதா!
   இன்னும் கலாய்க்கிறாரா உங்கள் கணவர்?
   அவள் விகடனில் ரொமான்ஸ் ரகசியம் பகுதியில் ஒரு முறை எழுதி இருந்தேன். அதை மறுபடி போடலாம் என்று இருக்கிறேன்.
   நன்றி ராதா!

 14. மூக்குத்திப் பூ நன்னா இருக்கும்மா…… நானும் இரண்டு தடவை குத்திக் கொண்டவள் தான். ரொம்ப நாளா இதை பற்றி எழுதணும்னு இருந்தேன். உடனே எழுதிடறேன்….

 15. ஓ !! உங்கள் திருமணம் காதல் திருமணமா சூப்பர்!! உங்க மூக்குத்தி பின்னாடி இவ்ளோ பெரிய கதை இருக்கா! எனக்கு காது குத்தி , ஒவ்வொரு தடவையும் அது அடைந்து , திருப்பி திருப்பி குத்துனத நினைத்தால் இப்ப கூட பயமா இருக்கு! நீங்க நிஜமாவே தைரியசாலிதான், மூக்குத்திக்காக இரண்டு தடவை!!!
  “உலகம் முழுவதுமே என்னையும், என் மூக்குத்தியையுமே பார்க்கிறாப் போல பிரமை! ” இந்த வரி நிஜமாவே சூப்பர் !!

 16. வாருங்கள் மஹா!
  எனது மூக்குத்திக்கு இத்தனை வரவேற்புகளும், மலரும் நினைவுகளும் கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை.
  நன்றி!

 17. நானும் மூக்குத்தி போட்டிருக்கிறேன். 40க்கு மேலே தான் குத்தியது.
  மிக சுவையாக எழுதியுள்ளீர்கள். மகிழ்ச்சி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

 18. ஒரு சின்ன மூக்குத்திக்குப் பின்னால இவ்வளவு அனுபவங்களா? 🙂 ஆனாலும் விடாமுயற்சியோட வைரபேஸரி அணிந்துகொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ஒரு காலத்தில் நானும் காதோரத்தில் இன்னுமொரு முறை குத்திக்கொள்வாங்களே (சைடு காது குத்துவது என்போம்:)) அதன் மீது ஆர்வமா இருந்தேன். ஆனாலும் பயம்!! அப்புறம் அந்த ஆசை விட்டுப் போய்விட்டது. 🙂

  1. வாருங்கள் மகி!
   வைர பேசரி இல்லை, ஒத்தக்கல்லு மூக்குத்திதான்! சும்மா ஒரு ‘பந்தா’வுக்கு எழுதினேன்.
   நீங்கள் சொல்லுமிடம் கொஞ்சம் தடிமனாக இருக்கும். அங்கு குத்திக் கொள்வது கொஞ்சம் அபாயம் தான்.

   உங்கள் மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

 19. “நம்மிடம் சொன்ன வாக்கை காப்பாத்திடுத்தே இந்தப் பொண்ணு” அப்படின்னு மாமியார் மேலேயிருந்து பார்த்து மகிழ்ந்துபோயிருப்பார்.மூக்குத்தியை வைத்து நடந்த ரகளைகளை அழகா,ரசிக்கும்படி கோர்வையா எழுதியிருக்கீங்க.

  “அவளது திருமணத்தில் தான் செம்புலப்பெயல் நீர் போல எங்கள் அன்புடை நெஞ்சங்கள் கலந்தன”__ரசித்து,மகிழ்ந்து எழுதியிருப்பது தெரிகிறது.

  1. நேற்றே உங்களுக்கு பதில் எழுதினேன். எங்கே போயிற்று?

   மலரும் நினைவுகள் எல்லாமே ரசித்து மகிழத்தானே?

   நன்றி சித்ரா!

 20. நீங்கள் மூக்குத்தி போட்டுக்கொண்ட பெருமை படித்தேன் ரசித்தேன் நான் ஏழாவது வகுப்பு படிக்கும்போதே என் பாட்டியின் பிடிவாதத்திற்கு பலியாகி நான் மூக்குத்தி போட்டுக்கொண்டேன்

  நீங்களோ மாமியாருக்கே பயப்படாமல் இருந்திருப்பதை நினைத்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது
  எப்படியோ எங்களுக்கு படிக்க ஒரு நகைச்சுவையான பகிர்வு கிடைத்தது பாராட்டுக்கள்

 21. சொன்ன விதம் அருமை!மூக்கின் ஒரு பக்கம் முத்து மூக்குத்தியும்,இன்னொரு பக்கம் எட்டுக்கல் பேசரியும் போட்டால் அழகே தனிதான்!

  1. ரொம்ப ரசனைக்காரர் போலிருக்கிறதே! வாருங்கள் குட்டன், உங்கள் முதல் வருகைக்கும் மிகுந்த ரசனையுடன் ஓரு கருத்து போட்டதற்கும் நன்றி!

 22. அன்புள்ள ரஞ்சனி மா
  நான் மூக்குத்தி போட்டுண்ட கதை ரொம்ப ரொமாண்டிக்.. கல்யாணம் ஆகி 21வருஷம் ஆனப்புறம் வெட்டிங் டே ரெண்டு நாள் முன்னாடி அவர் உனக்கு மூக்கு குத்திண்டா நன்னா இருக்கும் னு சொல்ல அடுத்த நாளே வாங்க பொய் மூக்கு தளுக்கு வாங்கிண்டு அப்படியே மூக்கு ககுத்திண்டும் வரலாம்னு GRT போனோம். வைர மூக்குத்தி ஒண்ணு, தங்க மூக்குத்தி ஒண்ணு வாங்கிண்டு GRT ஆசாரி கிட்டேயே வித்தியாசமா இடது பக்கம் மூக்கும் குத்திண்டு வைர மூக்குத்தி யே போட்டுண்டாச்சு…. அவருக்கு ரொம்ப சந்தோஷம்…. இவ்வளவு வருஷம் கழிச்சு மூக்கு குத்திண்டது அம்மா, நண்பர்கள் எல்லோருக்கும் சந்தோஷமா இருந்தது.

  1. வாருங்கள் சுபாஷிணி!
   உங்கள் மலரும் நினைவுகளை ரொம்பவும் மகிழ்ச்சியுடன் (கொஞ்சம் வெட்கத்துடன்!) பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். நிஜமாகவே ரொமாண்டிக் தான்!

   உங்கள் வெட்டிங் டே எப்போது என்று தெரியவில்லை. இருந்தாலும் எனது வாழ்த்துக்கள். இதேபோல ரொம்ப ரொம்ப சந்தோஷமாக, ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடன் நீங்கள் இருவரும் வாழ ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை வேண்டுகிறேன்.

 23. உங்களை நான் பதிவர் விழாவில சென்னையில் பார்த்திருக்கேன். பேச தான் இல்லை….:(( நான் வல்லி மா கெஸ்டா வந்திருந்தேன்….

   1. ஹா ஹா ஹா இந்த கதை நடந்து ரெண்டு வருஷம் ஆயாச்சு மா. ஜூலை 2nd எங்க மண நாள். வாழ்த்துக்களுக்கு நன்றி மா. கண்டிப்பா அடுத்த முறை நேரில் பார்த்தா பேசலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s