Life · Vegetables

குதிக்கும் ‘அவரை’ தெரியுமா?

avarekaai

உங்கள் அவரா? ரொம்பவும் குதிப்பாரோ? எப்பவுமா? இல்லைக் கோபம் வந்தால் மட்டும் தலைகால் புரியாமல் குதிப்பாரா?

அவர் குதித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஸ்வரஜதி போடுவீர்களா? இல்லை, அவருடன் சேர்ந்து நீங்களும் குதிப்பீர்களா? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறதா?

ஸ்டாப்! ஸ்டாப்!

எங்கள் ஊரில் இந்த சீசனில் கிடைக்கும் அவரைக் காய்க்குத்தான் இந்தப் பெயர். ஆங்கிலத்தில் இதனை ‘Jumping Bean’ என்பார்கள். கன்னட மொழியில் ‘இதுக்கு’ (பிதுக்கு) அவரை என்பார்கள். எதுக்கு அவரை என்று கேட்காதீர்கள்!

அவரேகாய் என்றாலும் பயன்படுத்துவது இதன் பருப்புகளை மட்டுமே. கிட்டத்தட்ட மொச்சக் கொட்டை போல கொஞ்சம் சின்ன சைஸில் இருக்கும்.

தினசரி செய்யும் சாம்பார் வகைகளிலிருந்து, ஸ்பெஷல் ஆகச் செய்யும், கோடுபளே, அக்கி (அரிசி) உப்பிட்டு, மிக்ஸர்  என்று விதம்விதமாக  இந்த அவரை பருப்புகளை பயன்படுத்துவார்கள். இந்தப் பருப்புகளை வைத்து செய்யும்போது கட்டாயம் இஞ்சி சேர்க்க வேண்டும் – ஜீரணம் ஆவதற்காக – இன்னொரு காரணம் கடைசியில் சமையல் குறிப்பில் காண்க. மிகவும் ‘ஹெவி’ யாக இருக்கும் என்பதால் பலர் – குறிப்பாக வயதானவர்கள் – இதனை சாப்பிடுவதில்லை.

உரித்த அவரேகாய்

முன்பெல்லாம் முழுதாகக் கிடைக்கும். அதை வாங்கி வந்து மேல்தோல் பிரித்து (பட்டாணி போல) உள்ளிருக்கும் பருப்புகளை எடுக்கலாம். இந்த ஊருக்கு வந்த புதிதில் இந்தப் பருப்புகளின் மேல் இருக்கும் தோலியையும் எடுத்துவிட்டு சமைக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது.

எங்கள்  வீட்டு சொந்தக்காரரின் மனைவி ‘இதுக்(கு) பேக்கு’ (மேல்தோலை பிதுக்க வேண்டும்) என்று சொன்னவுடன் நான் மனதில் நினைத்துக் கொண்டேன்: ‘இதுக்கு பேக்கு, அதுக்கு பேக்கு, எதுக்கு பேக்கு, எல்லாத்துக்கும் பேக்கு?’ என்று!

பிறகு என் தோழி விளக்கம் கொடுத்தார். மேல்தோல் எடுத்தவுடன் கிடைக்கும் இந்த அவரை விதைகளை தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊறப் போட வேண்டும். பிறகு ஒவ்வொன்றாக எடுத்து ‘இதுக்க’ (பிதுக்க) வேண்டும்.

வேறு வேலை இல்லை என்று இதை வாங்குவதையே விட்டு விட்டேன். இப்போதெல்லாம் இதுக்கிய அவரேகாயே கிடைக்கிறது. உரிச்ச வாழைப்பழம் போல.

இந்த மாதங்களில் – அதாவது அவரேகாய் சீசனில் இங்குள்ளவர்கள் துவரம்பருப்பு வாங்கவே மாட்டார்களாம். அதற்கு பதில் இந்த பருப்பை பயன்படுத்துவார்களாம்.

இன்னொரு வேடிக்கையான விஷயமும் இந்தக் காயை பற்றி இருக்கிறது. இந்த சீசனில் தெருக்களின் நடுவில் இந்த பருப்புகளின் ‘இதுக்கிய’ தோலிகளை எறிந்து இருப்பார்கள்.

‘ஏன் இப்படி நடுத்தெருவில் இந்தத் தோலிகளைப் போடுகிறார்களோ’ என்று நான் அலுத்துக் கொண்டதற்கு என் தோழி கூறினார்: எத்தனை பேர்கள் இதன் மேல் நடந்து போகிறார்களோ அதனைக்கத்தனை இதன் ருசி கூடும்’ என்று!

இது எப்படி இருக்கு? குதிக்கும் அவரை மாதிரியே குதிக்கத் தோன்றுகிறதா?

சரி. இதனை வைத்துக் கொண்டு ஒரு சின்ன சமையல் குறிப்பு:

அவரேகாய் அக்கி உப்பிட்டு

புழுங்கலரிசி ரவை – 1 கப்

நீர் இரண்டு கப்.

அவரேகாய் கால் கப்.

பச்சை மிளகாய் 2 அல்லது 3 – குறுக்கு வாட்டில் அரிந்து கொள்ளவும்.

கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு

தாளிக்க கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் 2 அல்லது 3

பெருங்காயம் – சிறிதளவு

கட்டாயம் சேர்க்க வேண்டியது இஞ்சி (இல்லாவிட்டால் ஆட்டோகிராப் படத்தில் வரும் வாத்தியார் படும்பாடுதான்!)

தேங்காய்  துருவியது  கால் கப்

எண்ணெய் – 4 அல்லது 5 மேசைக் கரண்டி

உப்பு – ருசிக்கேற்ப

aval uppumaa

செய்முறை:

வாணலி அல்லது வெண்கல உருளியில் எண்ணெயை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய் போடவும். இஞ்சியை துருவிப் போடவும். பெருங்காயம் போடவும். கறிவேப்பிலை சேர்க்கவும். நீரை விடவும். தேவையான உப்பு சேர்க்கவும். நீர் கொதிக்கும் போது அவரேகாய் போடவும். 1௦ நிமிடம் கொதிக்க விடவும். ஒரு தட்டால் மூடி விட்டால் அவரேகாய் பாதி வெந்து விடும். பிறகு அரிசி ரவையைக் கொட்டிக் கிளறவும். உருளியின் மேல் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு வைக்கவும். உப்புமாவிற்கு நீர் தேவைபட்டால் இந்தக் கொதி நீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். அவரேகாய் நன்றாக வெந்து, அரிசியும் வெந்தவுடன் தேங்காய் பூவைப் போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை நிறுத்தி விடவும்.

சுடச்சுட சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பரிமாறும் முன்பு சிறிதளவு நெய்யை விடவும்.

பூப்பூவான அவரேகாய், அக்கி உப்பிட்டு தயார்!

avarekaai saaruஇந்த சீசனில் எல்லா உணவகங்களிலும் இந்தப் பருப்புகளை வைத்தே ரவை  உப்புமா, அவல் உப்புமா, கலந்த சாதங்கள் (சித்திரான்னம்) தோசை, அக்கி ரொட்டி, சாறு எனப்படும்  குழம்பு  முதலானவை தயாரிக்கப் படும். ருசியும், விலையும் வானத்தை தொடும்!

அவரேகாயில் செய்த மிக்சரை சாப்பிட்டுக் கொண்டே இந்தப் பதிவை எழுதுகிறேன்.

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளது: வைரப் பதிவர்கள் 

நன்றி மனோ மேடம்!

 

இன்று இசைப்பா கேட்டீர்களா?

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்!

Advertisements

37 thoughts on “குதிக்கும் ‘அவரை’ தெரியுமா?

   1. ஆஹா! எத்தனை இனிமையான செய்தி! அங்கு அறிமுகம் செய்துவிட்டு, இங்கு வந்து தகவல் சொல்லியதற்கு நன்றி மனோ!

 1. உங்கள் குதிக்கும் அவரை நல்ல நகைச்சுவையான பதிவு.
  அதை விட விசேஷம் அதை தெருவில் போட்டு எல்லோரையும் மிதிக்க விடுவது தான்.
  அடுத்த மாதம் பெங்களூர் விசிட் உண்டு. அப்பொழுது “இதுக்கு” வாங்கி சமைத்து பார்த்துவிட வேண்டியது தான். (நீங்கள் சொல்லியிறுக்கும் உப்பிட்டு தான் )

  பகிர்விற்கு நன்றி.
  ராஜி

  1. அடுத்த மாதம் எப்போ வருகிறீர்கள்? வீட்டுக்கு அவசியம் வாருங்கள். நானே நல்ல உணவகத்திற்கு அழைத்துப் போகிறேன். ஹி….ஹி….!

 2. ரஞ்சனி,

  அவரையை வைத்து இவ்வளவு நகைச்சுவையா!அவரையைத் தேடித்தேடி வாங்குவேன்.ரொம்ப பிடிக்கும்.இப்படி அதன் விதைகளைக் கொட்டி வைத்திருப்பதைப் பார்த்தால் அள்ளிக்கொண்டு (காசு கொடுத்துதான்) வந்துவிடுவேன்.இஞ்சி சேர்ப்பதை இப்போதான் கேள்விப்படுகிறேன்.இனி சேர்த்துக்கொள்கிறேன்.

  உப்புமாவும்,குழம்பும் பார்க்கும்போதே மணக்கிறது.

  “அவரேகாயில் செய்த மிக்சரை சாப்பிட்டுக் கொண்டே”___மிக்ஸரை கண்ணிலேயே காட்டல!

  இனிய பொங்கல் வாழ்த்துக்களுடன் சித்ரா.

  1. ஆமா! இரண்டு கைகளால் தட்டச்சு செய்துகொண்டு, ஒரு கையால் அவரேகாய் மிக்சரை சாப்பிட்டுக் கொண்டே….இருந்தேனா? சரி இதையும் ஒரு போட்டோ எடுக்கலாம் என்று தட்டைப் பார்த்தால்…காலி! (இரண்டு கையால் செய்யும் வேலையை விட ஒரு கையால் செய்யும் வேலையை வேகமாக முடிக்கிறேன், பாருங்கள்!)
   அடுத்தமுறை கட்டாயம் மிக்சர் போட்டோ போட்டுவிடுகிறேன். (இன்னொரு பதிவு எழுத விஷயம் கிடைத்துவிட்டது!)

   பொங்கல் திருநாள் வாழ்த்துகளுக்கு நன்றி, சித்ரா!

 3. அம்மா உங்கள் பதிவை படித்தவுடன் ஒரு அவரை ஜோக் ஞாபகத்தில் வந்தது….
  பெண் : அம்மா எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு
  அம்மா : என்னடி சொல்ற, எனக்கு அடி வயறு கலங்குறது!!
  பெண் : ஐயோ அம்மா நான் அவரைக்காயை சொன்னேன்!!!
  உங்கள் குடும்பத்தினருக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

 4. இதுக்கு, மொச்சை காயின்னு ஒரு பேர் சொல்லுவா யில்லே. கோலவடை,அக்கி ரொட்டி எல்லாம் செஞ்ஜிருக்கேன். அவரேகாயின்னு, நம்ம அவரைக்காயின்னு முதன்முதலில் ஏமாந்ததும் உண்டு. பொதுவா இந்த காய் வேலை வாங்கினாலும் ருசியானது. இதிலே ரஞ்ஜனியிடம் மாட்டிக்கொண்டு அவரை குதியோன்னு குதித்து வசமா சிக்கி, முழி பிதுங்கரதைப் பார்த்தால் சிரிப்புதான் வரது. ஆல் ரவுண்டர் அவரேகாளு.

  1. பருப்பைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் சொல்வது அவரேகாய்!
   உங்களுக்கும் இதை பயன்படுத்திய அனுபவம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு தான் இந்த பதிவை எழுதினேன்.
   உங்களுக்கும் ஒரு பதிவு எழுத விஷயம் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

 5. இதுக்கு அவரை நல்லா தான் இருக்கு. பெங்களூர் வந்திட வேண்டியது தான்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

 6. வணக்கம்
  அம்மா

  குதிக்கும் அவரை தெரியுமா? என்ற கதை நன்றாக உள்ளது நல்ல இலகு மொழி நடையில் வாசக உள்ளங்களை கட்டிப்போடும் அளவுக்கு நேர்த்தியாக அமைந்துள்ளது அத்தோடு (அவரை) எப்படி சமைப்பது என்ற முறையை அழகாக எழுதி உள்ளீர்கள் பாரட்டுக்கள் அம்மா
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பு நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. வாருங்கள் ரூபன்.

   வலைச்சர அறிமுகத்திற்கு முதலில் பாராட்டுக்கள்.

   உங்கள் அன்பு நிறைந்த பொங்கல் வாழ்த்துகளுக்கு நன்றி!

 7. இது மொச்சைக் கொட்டைதானே?!! ” மொச்சை மாதிரி” -என்று சொல்றீங்க, அதான் கேக்கிறேன்! ஊரில் அம்மா மொச்சைக் கொட்டையில் இந்த பிதுக்கு பருப்பு- செய்து குழம்பு செய்வாங்க.

  பொங்கலுக்கு முதல்நாள் சங்கராந்தி-க்கு மொச்சைக்கொட்டையும் அரசாணிக்காயும் (மஞ்சள் பூசணி) சேர்த்து பொரியல் செய்து சாலாணி(சால் வைக்கும் மர ஸ்டான்ட்) கீழே வைப்போம். 🙂

  நல்ல காமெடியான பதிவும் கூடவே ருசியான குறிப்புகளும்! அருமையா இருக்குங்க..பகிர்வுக்கு நன்றி!

  உங்களுக்கும் உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

  1. மொச்சை கொட்டை அளவிற்கு பெரியதாக இருக்காது மகி. கொஞ்சம் சின்னதாக இருக்கும். சாலாணி (சால் வைக்கும் மர ஸ்டாண்ட்) கொஞ்சம் விளக்குங்களேன். ஒரு பதிவு போட்டு விடுங்கள் மகி!

   பொங்கல் நல் வாழ்த்துகளுக்கு நன்றி!

 8. பச்சை மொச்சைனு சொல்லுவோம், மதுரையிலே. நிறையக் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் நாங்களும் போடுவோம். இஞ்சி பொதுவாகவே தினப்படி சமையலில் சேர்ப்பதால் பிரச்னை இல்லை. :))) நல்லதொரு பதிவு. இதைப் பிதுக்கி எடுத்து அரைப்பருப்பாகக் காய வைத்ததைப் பிதுக்குப் பருப்புனு சொல்லிக் கொடுப்பாங்க மளிகைக் கடைகளில். கூட்டுகளுக்குப் போட, பிட்லையில் சேர்க்க நன்றாக இருக்கும். உப்புமாவில் சேர்ப்பது என்பதை இன்று தான் கேட்கிறேன். நல்ல பதிவுக்கு நன்றி.

  1. வாருங்கள் கீதா!
   ரவையில் செய்யும் உப்புமாவிலிருந்து தோசையை கொஞ்சம் ‘திக்’ ஆக வார்த்து அதன் மேலும் வேக வைத்த இந்தப் பருப்பைப் போட்டு அவரேகாய் தோசே என்றும் செய்வார்கள். எங்கும் எதிலும் இன்னும் ஒரு மாதத்திற்கு இந்தப் பருப்பு தான்!

   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 9. பிதுக்கு அவரை குதிக்கும் அவரை நல்ல நகைச்சுவை எழுத்து வாழ்த்துக்கள்.
  பச்சை மொச்சையில் செய்த சமையல் குறிப்புக்கு நன்றி.. இங்கு பச்சை மொச்சை என்பது தான் பெயர்.
  பொங்கல் குழம்பில் இதை போட்டல் தான் ருசிக்கும்..
  பூப்பூவான அவரேகாய், அக்கி உப்பிட்டு செய்துப் பார்க்க வேண்டும்.

 10. வணக்கம்
  அம்மா
  19,01,2013 உங்களின் பதிவு வலைச்சரம் வலைப்பூவில் பதிவாகி உள்ளது வாழ்த்துக்கள் அம்மா
  -நன்றி,
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. வணக்கம் மேடம். இங்க கிடைக்கிற அவரைக்காய் மாதிரி தெரியல்லை.ஆனால் காய்ந்த மொச்சையிலும், பச்சை மொச்சையிலும் பிதுக்கு பருப்பு செய்வதுண்டு.பொங்கல் சமயம் கண்டிப்பா இதை செய்வார்கள்..இந்த காய் கிடைத்தால் செய்து பார்க்கலாம்.

  2. தகவலுக்கு நன்றி ரூபன். காலையிலேயே பார்த்து பின்னூட்டம் போட்டு நன்றியும் சொல்லிவிட்டு வந்தேன்.
   வாழ்த்துகளுக்கு நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s