அந்த நாள் முதல் இந்த நாள் வரை…..

 

ஜெயந்தியை நான் எப்போது சந்தித்தேன்?

 

நினைவில்லை.

 

‘உனக்கும் நினைவில்லையா?’ இருவரும் ஆச்சரியப் பட்டோம்.

 

ஒரே பள்ளியா? இல்லை.

 

ஒரே அலுவலகத்தில் வேலை செய்தோமா? இல்லை.

 

ஒரே வீதியில் வீடா? அதுவும் இல்லை.

 

பின் எப்படி தோழிகளானோம்?

 

பலத்த யோசனைக்குப் பின் நினைவுக்கு வந்தது. ஒரே பேருந்தில் அலுவலகத்திற்குப் பயணம் செய்திருக்கிறோம். பேருந்து தோழிகள்! அதுவும் சில மாதங்களுக்குத் தான். ஜெயந்தி பிறகு வேறு வேலைக்கு மாறிவிட்டாள்.

 

ஆனால் எனக்கு திருமணம் ஆகும் வரை நானும் அவளும் கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே மாலை வேளைகளில் சந்தித்திருக்கிறோம். புரசைவாக்கம் டேங்க், எதிரில் இருக்கும் (இப்போது இருக்கிறதா?) அனுமார் சந்நிதி, கங்காதரேஸ்வரர் கோவில் என்று சுற்றிக் கொண்டே இருப்போம்.

 

எங்களுக்குள் பேச எத்தனையோ. ‘அதென்ன மணிக்கணக்கா பேச்சு?’ என்று இருவர் வீட்டிலும் கோபித்துக் கொள்ளுவதால் இருவரும் புரசைவாக்கம் தெருக்களில் சுற்றி சுற்றி வருவோம் – கோவிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு!

 

பிறகு எனக்குத் திருமணம் ஆகி அசோக் நகர் வந்து விட்டேன். ஜெயந்தியின் தொடர்பும் விட்டுப் போயிற்று. ’79 இல் ஜெயந்தியின் குடும்பம் அசோக் நகரில் இருந்த போஸ்டல் குவார்ட்டர்ஸ் –இல் இருந்தபோது ஒரு முறை சந்தித்தோம். என் பெண்ணுக்கு அப்போது மூன்று வயது.

 

பிறகு நாங்கள் அண்ணாநகர் வந்து, அங்கிருந்து பெங்களூரு வந்து….ஜெயந்தி நினைவிலிருந்து மறைந்தே போனாள்.

 

இப்போது எங்கிருந்து வந்தாள் என்று கேட்கிறீர்களா?

 

என் ப்ளாகின் மூலம்தான்! ஆச்சரியம் இல்லையா?

 

எனது ப்ளாகில் ஒரு முறை திரு ரா.கி. ரங்கராஜன் அவர்களின் மறைவின் பின்னணியில், அவர் எனக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். ‘கடுகு’ என்கிற திரு ரங்கநாதன் அவர்களும் அவரது கடுகு தாளிப்பு என்ற வலைப்பூவில் திரு ராகிரா பற்றி எழுதி இருந்தார். அதை அவரது தளத்தில் படித்த நான் ‘நானும் திரு ராகிரா பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தால் படித்துப் பாருங்கள்’ என்று என் வலைதளத்தின் இணைப்பையும் கொடுத்து பின்னூட்டம் இட்டிருந்தேன்.

 

ஜெயந்தி திரு ‘கடுகு’ அவர்களின் எழுத்துக்களை மிகவும் விரும்பிப் படிப்பாள். அவள் எனது பின்னூட்டத்தைப்  படித்து விட்டு என் பதிவைப் படித்திருக்கிறாள். எனது அழகான(!!!)  புகைப் படத்தையும் பார்த்துவிட்டு நீ புரசைவாக்கத்தில் இருந்த ரஞ்சனி தானே என்று கேட்டு எங்கள் ஊர் சுற்றலையும் குறிப்பிட்டிருந்தாள்.

 

பல வருடங்களுக்குப் பிறகு தோழிகள் ஒருவரையொருவர் மறுபடி கண்டுகொண்டோம் கண்டு கொண்டோம்…..!!!

 

போன மாதம் சென்னை சென்ற போது ஒரே ஒரு நிகழ்வு:  ஜெயந்தியை சந்திப்பது மட்டும்தான்!

 

காலை சதாப்தி வண்டியில் கிளம்பினோம். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே வருவதாக ஜெயந்தி சொல்லியிருந்தாள். நான் தான் வழக்கம்போல CCC2 கோச் என்பதற்கு பதிலாக CC1 என்று சொதப்பி இருந்தேன். பாவம் ஜெயந்தி, C1 கோச் முழுவதும் தேடி என்னைக் காணாமல் என்னவோ ஏதோ, நான் ஏன் வரவில்லை என்று பதறி எனக்கு போன் மேல் போன் செய்து….தவித்துக் கொண்டிருக்க,

 

நான் நிதானமாக அடுத்த பெட்டியிலிருந்து இறங்கி, யார் இந்த நேரத்தில் போன் செய்கிறார்கள் என்று தொலைபேசியில் கண்ணையும் கருத்தையும் வைத்துக் கொண்டு நடக்க….

 

‘ரஞ்சனி……’ என்று ஓடி வந்தவள் என்னை அப்படியே அணைத்துக் கொண்டாள்.

 

‘உங்களைக் காணோமென்று ஆடிப் போய்விட்டாள்’ என்றார் ஜெயந்தியின் துணைவர் திரு ஸ்ரீதரன்.

 

‘ஸாரி, ஸாரி’ என்று அசடு வழிந்தேன். ஜெயந்தி என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

 

‘நீங்கள் வரப்போவது அமெரிக்கா முதல் ஆஸ்திரியா வரை தெரியும்…’

 

ஜெயந்தியின் பிள்ளைகள் இருவரும் இந்த இரண்டு ஊர்களில் இருந்தனர்.

 

‘பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ?’ என்பார்கள். ஆனால் நாங்கள் இருவரும் விடாமல் – மூச்சு விடாமல் பேசினோம். வீடு போய் சேரும்வரை, சேர்ந்த பின், சாப்பிடும்போது, பேசிக் கொண்டே, பேசிக் கொண்டே……!

 

ஜெயந்தியின் அம்மா பக்கத்திலேயே இருந்தார். என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே ‘என்ன ரஞ்சனி, எத்தனை குழந்தைகள், எல்லோருக்கும், கல்யாணம் ஆயிற்றா, பேரன், பேத்திகள் இருக்கிறார்களா…..?’ என்றார்.

 

‘ஐயோ! மாமி அதையெல்லாம் கேட்காதீங்கோ! நானும் ஜெயந்தியும் இப்போது புரசைவாக்கத்தில் கல்யாணம் ஆகாத பெண்களாக சுற்றிக் கொண்டிருக்கிறோம்’ என்றேன்.

 

எவ்வளவுதான் இந்த நாளின் நிஜம் இருவருக்கும் தெரிந்தபோதும், மறுபடி மறுபடி பழைய நினைவுகளிலேயே இருவரும் மூழ்க ஆசைப்பட்டோம்.

 

‘குட்டி குட்டியா நகம் வளர்த்துப்பியே என்ன ஆச்சு?’ என்றாள் ஜெயந்தி.

 

‘பேருந்தில் நம்முடன் கூட ‘குட்டி ப்ளஷ்டோர்’ அலுவலகத்தில் வேலை செய்யும் சௌபாக்யவதி என்ற ஒரு பெண் வருவாள் நினைவிருக்கிறதா?’- நான்.

 

‘ஓ!…’

 

‘நான் அவளிடம் உனக்கு சௌபாக்யவதி என்று பெயர் வைத்திருக்கிறார்களே…கல்யாணப் பத்திரிகையில் சௌபாக்யவதி சௌபாக்யவதிக்கு என்று போடுவார்களா என்று ஒரு நாள் கேட்டேன்….!’

 

இருவரும் பெரிதாகச் சிரித்தோம்….எங்கள் துணைவர்கள் இருவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு!

 

அந்தநாள் நடந்த சின்ன சின்ன விஷயங்கள் ஒவ்வொன்றும் நினைவலைகளில் மோதி மோதி வந்தன.

 

 

 

அரவிந்த அன்னையின் பக்தையாகி விட்டாள் ஜெயந்தி. ‘பிரார்த்தனை நேரத்தில் ஒருமுறை கூட உன் நினைவு வந்ததில்லை ரஞ்சனி. ஆனாலும் நீயும் நானும் மறுபடி சந்திக்க வேண்டும் என்று அன்னை நினைத்திருந்தாள் போலிருக்கிறது. அதனால் தான் என் உறவினர் ஒருவரின் வேண்டுகோளின் படி ‘கடுகு தாளிப்பு’ படிக்க ஆரம்பித்தவள் அதன் மூலமே உன்னையும் மறுபடியும் சந்தித்தேன். இல்லையானால் நான் எங்கே நீ எங்கே?’

 

அன்னை சேர்த்து வைத்தாளோ? இல்லை கடுகு சேர்த்து வைத்தாரோ? எப்படியானால் என்ன? அந்தநாள் முதல் இந்த நாள் வரை எங்கள் நட்பு மாறவில்லை என்பதை ஒருவர் கையை ஒருவர் விடாமல் பிடித்திருந்த விதம் சொல்லியது.

 

 

 

 

 

 

 

 

 

பாதக் கமலங்கள் காணீரே!

b'day gift

1974 ஆகஸ்ட் 13 என் அக்காவின் குழந்தை சிரஞ்சீவி சம்பத்குமாரன் பிறந்தபோது நான் அடைந்த  சிலிர்ப்பு  1998 டிசெம்பர் மாதம் 10 ஆம் தேதி ரீப்ளே ஆயிற்று!

என் பேரன் சிரஞ்சீவி தேஜஸ் கிருஷ்ணா அன்று தான் சுப ஜனனம்.

வெளியில் நல்ல மழை. குளிரான குளிர். பெங்களூரு இந்த அளவிற்கு அசுத்தமடையாமல் இருந்த காலம்.

மருத்துவ மனையில் திரைப் படங்களில் காண்பிப்பார்களே அதைப் போல எங்கள் குடும்பமே உட்கார்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது என் மாப்பிள்ளை எழுந்து நடந்து விட்டு வருவார்.

‘குவா….’குவா….’ (நிஜமாகவே இப்படித்தான் குழந்தை அழுததா என்று நினைவில்லை!) அத்தனை பேரும் மூடியிருந்த பிரசவ அறையைப் ஒருவிதப் பரவசத்துடன் பார்த்தோம்.

கொஞ்ச நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து பச்சைத் துணியில் சுற்றிய ஒரு பஞ்சுப் பொதியை கொண்டு வந்து எங்களிடம் காண்பித்து ‘மம்மக’ (பேரன்) என்றாள். ஆக்ஷன் ரீப்ளே! நான் தான் வாங்கிக் கொண்டேன். உடனே சுதாரித்துக் கொண்டு மாப்பிள்ளை கையில் குழந்தையைக் கொடுத்தேன். அவர் பிள்ளை பிறந்த ஆனந்தத்தில் ‘பரவாயில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார்.

என் அம்மா, என் கணவர், என் பிள்ளை எல்லோரிடத்திலும் குழந்தையைக் காண்பித்து ‘நான் இப்போ proud பாட்டி!’ என்றேன். எனக்கு வயது 45.

என் பிள்ளை அப்போது பி.யு.சி. இரண்டாவது வருடம் தும்கூரில் படித்துக் கொண்டிருந்தான். என் பெண்ணின் புக்ககமும் தும்கூர் தான். பிள்ளைக்காக தும்கூரில் ஒரு வருடம் நான் தனிக் குடித்தனம். என் கணவர் இங்கே பெங்களூரில்.

குழந்தை பிறந்த கொஞ்ச நாளில் பெண்ணையும் குழந்தையையும் தும்கூர் கூட்டிப் போய் விட்டேன். என் பேரனின் ஒவ்வொரு அசைவையும், அவனது ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன். மறக்க முடியாத நாட்கள் அவை.

அவனை காலில் போட்டுக் கொண்டு தீர்த்தாமாட்டுவதில் இருந்து ஒவ்வொன்றும் அனுபவித்து அனுபவித்து செய்தேன்.

தலைப்பில் நான் சொல்லியிருக்கும் பெரியாழ்வாரின் பாசுரங்களை அன்றிலிருந்து நானும் அனுபவிக்க ஆரம்பித்தேன்.

‘பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்

ஒத்திட்டிருந்தவா காணீரே….!’

‘முழந்தாளிருந்தவா காணீரே..!’

நம் குழந்தைகளிடம் நாம் மிகவும் கண்டிப்பாக இருப்போம். நாம் நல்ல பெற்றோர்களாக பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் நமது கண்டிப்பையும் கறார் தனத்தையும் காண்பிப்போம். அவர்களைக் கொஞ்சுவதைவிட கடிந்து கொள்வது அதிகம்.

அவர்களிடம் நம் எதிர்பார்ப்புகளும் விண்ணை முட்டும். அதி புத்திசாலியாக இருக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் குறைகளை எல்லாம் நம் குழந்தைகள் ஈடு கட்ட வேண்டும். நம்மிடம் இல்லாத ‘perfection’  -ஐ அவர்களிடம் எதிர்பார்ப்போம்!

அது மட்டுமல்ல; நமக்கு குழந்தைகள் பிறக்கும்போதுதான் நாமும் நம் உத்தியோகத்தில் உச்சகட்ட நிலையை அடைந்திருப்போம்; அல்லது அடையப் பிரயத்தனங்கள் செய்து கொண்டிருப்போம். குழந்தைகளுடன் போதிய அளவு நேரம் செலவிட  முடியாமல் போகும்.

ஆனால் பேரன் பேத்திகள் என்றால் அதீத பாசம்! நமக்கு எந்தவிதப் பொறுப்போ பாரமோ கிடையாது. ஒரு சுகமான சுமை!

ஓரளவுக்கு நம் கடமைகளும் முடிந்திருக்கும். அவர்களுடன் கொஞ்சி மகிழ நிறைய நேரம் கிடைக்கும். நாமும் ஒய்வு பெற்றிருப்போம்; அல்லது ஓய்வு பெறும் நிலையில் இருப்போம்.

அவனுக்கு நான் பாடிய தாலாட்டு பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே…’ பாட்டுதான்.

நான் பாடும்போது கண் கொட்டாமல் என்னையே பார்த்துக் கொண்டு படுத்திருக்கும். ‘ஒனக்கு ரொம்ப பிடிச்சுடுத்தா என் பாட்டு..’ என்று நடு நடுவே அதனுடன் பேசிக் கொண்டே தூங்க வைப்பேன்.

என் கைதான் அவனை அளக்கும் கருவி. ‘முதலில் என் கையளவு தான் இருந்தது; இப்போ பார் வளர்ந்து விட்டது. கால் என் கையை தாண்டி போறது…’

மூன்று மாதங்களில் ‘ராகி ஸரி’ கொடுங்கள் என்றார் என் மகளின்  மாமியார். ராகியை நனைத்து உலர்த்தி, முளை கட்டி, அதை சிறிது சிறிதாக வாணலியில் போட்டு வறுத்து பொடி செய்து வஸ்த்ர காயம் செய்ய, ராகி ஸரி கிடைக்கும். அதையும் அவரே செய்து கொடுத்தார். முதல் நாள் மிக மிக கொஞ்சம் ராகி ஸரியை எடுத்துக் கொண்டு நீரில் கரைத்து அடுப்பில் கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பாலை கலந்து குழந்தைக்குக் கொடுத்தேன். சாப்பிட்டு முடித்து ஒரு ராகம் இழுத்தது பாருங்கள், நான் அசந்தே போய் விட்டேன். ‘இப்போதான் அதுக்கு பிடிச்சதை குடுத்திருக்கோம் போலிருக்கு..’ என்றேன் மகளிடம்.

ஏழு எட்டு மாதத்தில் ‘ஜொள்ளு’ விட ஆரம்பித்தது குழந்தை. உடனே அதற்கு விதவிதமாக பெயர்கள் சூட்டினேன் : ஜொள்ளேஷ், ஜொள்ளப்பா, ஜொள்ளண்ணா, ஜொள்ராஜ், ஜொள்குட்டி, ஜொள்கண்ணா என்று!

அப்படி நான் சீராட்டி, பாராட்டி வளர்த்த தேஜஸ் கிருஷ்ணாவிற்கு நாளை 14 வயது பூர்த்தி ஆகிறது.

அவன் மிக நன்றாகப் படித்து, சீரும் சிறப்புமாக இன்னும் பல பிறந்த நாட்களைக் கொண்டாட வேண்டும் என்பது இந்த பாட்டி, தாத்தா, மாமா, மாமி எல்லோருடைய ஆசீர்வாதங்களும்.

Happy Birthday Tejas Krishna!

baby

குழந்தைகளுக்கு ஒரு கிடைத்தற்கரிய பரிசு!

எப்படி முடிகிறது?

 

 

 

என்னை மிகவும் பாதித்த பதிவு இது. இப்படிக் கூட உண்டா என்று நினைத்து நினைத்து மாய்ந்து போகிறேன்!
இதை மீள் பதிவு செய்ய அனுமதி தந்த திருமதி அனுஸ்ரீனிக்கு நன்றிகள்!

 

மேலே இருக்கும் இணைப்பை சொடுக்கி மீதி பதிவைப் படிக்கவும்.

வருத்தமே வாழ்க்கையா

feel sad

 

இன்னிக்கு வருத்தப் பட விஷயமே இல்லை என்று வருந்துபவரா நீங்கள்? வருத்தம் வடிவேலுவின் அக்கா? தங்கை? அண்ணா? தம்பி? அப்போ இந்த செய்தி உங்களுக்கு வருத்தத்தை- இல்லையில்லை- சந்தோஷத்தைத் தரும்.

வருத்தப்படுபவர்களைப் பற்றிய ஆய்வு ஒன்று சமீபத்தில் நடந்தது. நாம் எல்லோருமே நம் வாழ்வில் நடந்த 6 விஷயங்களை பற்றி-இவை வேறுவிதமாக நடந்திருக்கலாமே என்று வருத்தப் படுகிறோம் என்கிறது இந்த ஆய்வு. 6 வித்தியாசங்கள் போல 6 வருத்தங்கள்!

இதில் முதல் இடம் பெறும் வருத்தம்: நாம் ஆசைபடும் அளவிற்கு பயணம் செய்ய இயலவில்லை என்பதுதான்.

இந்த ஆய்வில் பங்கு கொண்ட எல்லோருமே ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் வேறு விதமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

வேறு வேலை, வேறு துணைவர் இப்படி.

ஐந்தில் ஒரு பெண் தான் தப்பான ஒரு துணைவருடன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பதாகவும் ஆண்களில் வெறும் 10% பேர் மட்டுமே இப்படி நினைப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வில் சுமார் 2000 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 25% பேர் நம் வாழ்வில் வருத்தம் என்பது இல்லாமல் இருக்க முடியாது, வருத்தமும் சேர்ந்ததே வாழ்க்கை என்றும் கருத்து தெரிவித்தனர்.

அதனால் தான் ஒரு நாளைக்கு 19 நிமிடங்களும் ஒரு வாரத்திற்கு 2 மணி நேரங்களும் ‘இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்யாமல் போனோமே’ என்றும் நாம் வருத்தப் பட்டு மாய்கிறோம் என்றும் இந்த ஆய்விலிருந்து தெரிய வந்திருக்கிறது.

ஏன் நீங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ முடியவில்லை? காரணங்கள் என்ன என்று கேட்டபோது கிடைத்த பதில்கள்:

மூன்றில் ஒரு பங்கு பேர்கள் தங்களிடம் போதுமான பணம் இல்லாததால், தாங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழமுடியாமல் போயிற்று என்றனர். 25% பேர்கள் தங்கள் விருப்பத்திற்குரியவரின் அன்புக் கட்டளையை மீற முடியாமல் தாங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ் முடிய வில்லை என்றனர்.

ஆனால் 32% தங்களுடைய பலவீனமான மனமும் – வலிமையான செயல்பாட்டுத் திறன் இன்மையுமே  – வேறு ஒரு நல்ல வாழ்க்கையை – அதாவது தங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாமல் போனதற்கு காரணம் என்று ஒப்புக் கொண்டனர்.

நமது கனவு வாழ்க்கையை வாழ முடியாமல் தடை செய்யப் பல விதக் காரணங்கள் இருப்பதாக நம்மில் பலரும் நினப்பதே இந்த வருத்தங்களுக்குக் காரணம் என்று இந்த ஆய்வின் டாக்டர் கெயில் ப்ரூவர் கூறுகிறார். இந்த மன நிலையில் ஆசைப் பட்டாலும் அதை நிறைவேற்றக் கூடிய மன உறுதி இல்லாமல் போகிறது என்கிறார் இவர்.

நமது 10 உச்சகட்ட வருத்தங்கள்:

  1. போதுமான அளவு பிரயாணம் செய்ய முடியாமை
  2. நண்பர்களுடன் தொடர்பு விட்டுப் போவது
  3. போதுமான உடற்பயிற்சி செய்யாமை
  4. அதிகப் பணம் சேர்த்து வைக்க முடியாமை
  5. புகை பிடிப்பது
  6. பள்ளிப் பருவத்தில் சோம்பித் திரிந்தது
  7. வேலை தேர்வு
  8. சரியான துணை அமையாமை
  9. ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கம்
  10. நமது தாத்தா, பாட்டிகளின் வாழ்க்கை பற்றி அவர்கள் இருக்கும்போது கேட்டு அறியாமை.

என்ன தோழர்களே உங்கள் வருத்தங்களையும் பட்டியலிடுங்களேன்!

http://tk.makkalsanthai.com/2012/12/blog-post_8027.html

கம்பளின்னு ஒண்ணு இருக்கா?

கம்பளின்னு ஒண்ணு இருக்கா?

ஒவ்வொரு முறை சென்னை போய் விட்டு திரும்பியதும்  உடல் நலம் சரியில்லாமல் போய் விடுகிறது.

நிஜக் காரணம் அலைச்சல் தான். முதல் நாள் போய் விட்டு அடுத்த நாளே திரும்புதல்; அதற்குள் எத்தனை பேரை பார்க்க முடியுமோ பார்த்து விடுதல் என்று ஓய்வு இல்லாமல் போய்விடுகிறது.

சென்னை எல்லா பக்கங்களிலும் வளர்ந்து கொண்டே வருகிறது. நம் உறவினர்களும் அங்கங்கே பரந்து விரிந்து இருக்கிறார்கள். அக்கா சோளிங்க நல்லூர்; அண்ணா மேடவாக்கம். துணைவரின் ஒரு தம்பி வளசரவாக்கம்; இன்னொருவர் மடிப்பாக்கம் – எங்கு போவது?

‘எப்போதோ வருகிறாய், காபியாவது குடி’ என்ற அன்புத் தொல்லைகளும் இன்னொரு காரணம்! வேண்டுமோ வேண்டாமோ காபி குடிக்க வேண்டிய கட்டாயம். எங்களூரில் பை-டூ லோட்டாவில் ஒரு வாய், அரை வாய் காபி சாப்பிட்டு விட்டு சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் ‘அண்டா’ நிறைய காபியை குடிக்க நாங்கள் படும் பாடு…! படைத்தவனுக்கே வெளிச்சம்!

சென்னை வெய்யிலில், வேளை இல்லா வேளையில் சுடசுட காப்பி! போதுமடா சாமி சென்னை விஜயம் என்று நொந்து போய் திரும்பி வருவோம். அடுத்தநாளே வேறு ஒரு விசேஷம் என்று சென்னையிலிருந்து அழைப்பு வரும்!

எங்கள் பெங்களூரு நண்பர்கள் சொல்லுவார்கள்: ‘நீங்கள் சென்னையில் இருந்து கொண்டு அவ்வப்போது பெங்களூரு வந்து போகலாமே!’ என்று.

இத்தனை சொன்னாலும் சென்னை என்றால் மனம் பரபரப்பது நிஜமோ நிஜம். நமக்கும் சென்னைக்கும் இருக்கும் பந்தம் அந்த மாதிரி! IPL–இல் பிடித்த டீம் சென்னை சூப்பர் கிங் தான்!

சென்ற ஞாயிறு சென்னை போய்விட்டு திங்கட்கிழமை இரவே திரும்பி ஆயிற்று. அடுத்தநாள் எழுந்திருக்கும்போதே உடம்பு கூடவே வந்தது. தலை நான் இருக்கிறேன் என்றது. பச்சை மிளகாய் இல்லாமலேயே கண்கள் எரிந்தன. பால் – இல்லையில்லை – காப்பி கசந்தது; படுக்கை நொந்த உடலுக்கு இதமாக இருந்தது.

நேற்று ஷதாப்தியில் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் – இல்லையில்லை ஐஸ்கட்டி தொண்டை கட்டிய வில்லன் போல தொண்டைக்குள் ‘கீச் கீச்’ என்றது.  மூக்கிலிருந்து, தமிழ் நாட்டுக்குக் கொடுக்க மறுத்த காவேரி – சொட்டுச் சொட்டாக இல்லை குடம் குடமாக கொட்டியது. இருமல், தும்மல் என்று விடாமல் எதோ சத்தம் போட்டுக் கொண்டே இருந்தேன். பேச வாயைத் திறந்தால் குரல் உடைந்த சிறுவன் போல என்னுடன் கூடவே யார் யாரோ பேசினார்கள்.

அவசரமாக வெந்நீர் வைத்து, அதில் மிளகு போட்டு குடிக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் 100 கிராம் மிளகு தான் தீர்ந்தது.

‘டாக்டர் மதுகர் ஷெட்டிக்கு  நீ கொடுக்க வேண்டிய பணம் பாக்கி இருக்கிறது. இரண்டு பேருமாகப் போய் கொடுத்து விட்டு வரலாம் வா’ என்றார் என்னில் பாதியான என் பர்த்தா.

‘காந்தி பஜார் போய் ஷால் வாங்கி வர வேண்டும்’ சொன்ன என்னை அதிசயமாகப் பார்த்தார்.

‘என்ன இப்படி ஒரு ஊதக் காற்று. ச்சே! என்ன ஊர் இது? கொஞ்சம் வெய்யிலில் நிற்கலாமா?’

மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் கணவர் சொன்னார் மகனிடம்: ‘இன்னிக்கு அம்மா என்னவோ புதுசு புதுசா பேசறா. 27 வருடங்களா ஷால், ஸ்வெட்டர் இல்லாமல் பெங்களூரு குளிரை சமாளிச்சவளாக்கும் அப்படின்னு பெருமை பேசுவாளே, இன்னிக்கு சொல்றா, ஷால் வேணுமாம்; ஊதக் காற்றாம்; வெயில்ல நிக்கலாமான்னு வேற கேக்கறா! அம்மாவுக்கு ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணனும் போல இருக்கு…!’

பழிக்குப் பழி வாங்கறார் என்று தெரிந்தும் ஒண்ணும் சொல்லாமல் ‘கொஞ்சம் வெந்நீர் குடுக்கறேளா, மருந்து சாப்பிடணும்’ என்று ஈன ஸ்வரத்தில் கேட்டு விட்டு கம்பளியை (அப்படின்னு ஒண்ணு இருக்கா?) இழுத்து மூடிக் கொண்டு படுத்துக் கொண்டேன்!