Uncategorized

பாதக் கமலங்கள் காணீரே!

b'day gift

1974 ஆகஸ்ட் 13 என் அக்காவின் குழந்தை சிரஞ்சீவி சம்பத்குமாரன் பிறந்தபோது நான் அடைந்த  சிலிர்ப்பு  1998 டிசெம்பர் மாதம் 10 ஆம் தேதி ரீப்ளே ஆயிற்று!

என் பேரன் சிரஞ்சீவி தேஜஸ் கிருஷ்ணா அன்று தான் சுப ஜனனம்.

வெளியில் நல்ல மழை. குளிரான குளிர். பெங்களூரு இந்த அளவிற்கு அசுத்தமடையாமல் இருந்த காலம்.

மருத்துவ மனையில் திரைப் படங்களில் காண்பிப்பார்களே அதைப் போல எங்கள் குடும்பமே உட்கார்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது என் மாப்பிள்ளை எழுந்து நடந்து விட்டு வருவார்.

‘குவா….’குவா….’ (நிஜமாகவே இப்படித்தான் குழந்தை அழுததா என்று நினைவில்லை!) அத்தனை பேரும் மூடியிருந்த பிரசவ அறையைப் ஒருவிதப் பரவசத்துடன் பார்த்தோம்.

கொஞ்ச நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து பச்சைத் துணியில் சுற்றிய ஒரு பஞ்சுப் பொதியை கொண்டு வந்து எங்களிடம் காண்பித்து ‘மம்மக’ (பேரன்) என்றாள். ஆக்ஷன் ரீப்ளே! நான் தான் வாங்கிக் கொண்டேன். உடனே சுதாரித்துக் கொண்டு மாப்பிள்ளை கையில் குழந்தையைக் கொடுத்தேன். அவர் பிள்ளை பிறந்த ஆனந்தத்தில் ‘பரவாயில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார்.

என் அம்மா, என் கணவர், என் பிள்ளை எல்லோரிடத்திலும் குழந்தையைக் காண்பித்து ‘நான் இப்போ proud பாட்டி!’ என்றேன். எனக்கு வயது 45.

என் பிள்ளை அப்போது பி.யு.சி. இரண்டாவது வருடம் தும்கூரில் படித்துக் கொண்டிருந்தான். என் பெண்ணின் புக்ககமும் தும்கூர் தான். பிள்ளைக்காக தும்கூரில் ஒரு வருடம் நான் தனிக் குடித்தனம். என் கணவர் இங்கே பெங்களூரில்.

குழந்தை பிறந்த கொஞ்ச நாளில் பெண்ணையும் குழந்தையையும் தும்கூர் கூட்டிப் போய் விட்டேன். என் பேரனின் ஒவ்வொரு அசைவையும், அவனது ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன். மறக்க முடியாத நாட்கள் அவை.

அவனை காலில் போட்டுக் கொண்டு தீர்த்தாமாட்டுவதில் இருந்து ஒவ்வொன்றும் அனுபவித்து அனுபவித்து செய்தேன்.

தலைப்பில் நான் சொல்லியிருக்கும் பெரியாழ்வாரின் பாசுரங்களை அன்றிலிருந்து நானும் அனுபவிக்க ஆரம்பித்தேன்.

‘பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்

ஒத்திட்டிருந்தவா காணீரே….!’

‘முழந்தாளிருந்தவா காணீரே..!’

நம் குழந்தைகளிடம் நாம் மிகவும் கண்டிப்பாக இருப்போம். நாம் நல்ல பெற்றோர்களாக பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் நமது கண்டிப்பையும் கறார் தனத்தையும் காண்பிப்போம். அவர்களைக் கொஞ்சுவதைவிட கடிந்து கொள்வது அதிகம்.

அவர்களிடம் நம் எதிர்பார்ப்புகளும் விண்ணை முட்டும். அதி புத்திசாலியாக இருக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் குறைகளை எல்லாம் நம் குழந்தைகள் ஈடு கட்ட வேண்டும். நம்மிடம் இல்லாத ‘perfection’  -ஐ அவர்களிடம் எதிர்பார்ப்போம்!

அது மட்டுமல்ல; நமக்கு குழந்தைகள் பிறக்கும்போதுதான் நாமும் நம் உத்தியோகத்தில் உச்சகட்ட நிலையை அடைந்திருப்போம்; அல்லது அடையப் பிரயத்தனங்கள் செய்து கொண்டிருப்போம். குழந்தைகளுடன் போதிய அளவு நேரம் செலவிட  முடியாமல் போகும்.

ஆனால் பேரன் பேத்திகள் என்றால் அதீத பாசம்! நமக்கு எந்தவிதப் பொறுப்போ பாரமோ கிடையாது. ஒரு சுகமான சுமை!

ஓரளவுக்கு நம் கடமைகளும் முடிந்திருக்கும். அவர்களுடன் கொஞ்சி மகிழ நிறைய நேரம் கிடைக்கும். நாமும் ஒய்வு பெற்றிருப்போம்; அல்லது ஓய்வு பெறும் நிலையில் இருப்போம்.

அவனுக்கு நான் பாடிய தாலாட்டு பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே…’ பாட்டுதான்.

நான் பாடும்போது கண் கொட்டாமல் என்னையே பார்த்துக் கொண்டு படுத்திருக்கும். ‘ஒனக்கு ரொம்ப பிடிச்சுடுத்தா என் பாட்டு..’ என்று நடு நடுவே அதனுடன் பேசிக் கொண்டே தூங்க வைப்பேன்.

என் கைதான் அவனை அளக்கும் கருவி. ‘முதலில் என் கையளவு தான் இருந்தது; இப்போ பார் வளர்ந்து விட்டது. கால் என் கையை தாண்டி போறது…’

மூன்று மாதங்களில் ‘ராகி ஸரி’ கொடுங்கள் என்றார் என் மகளின்  மாமியார். ராகியை நனைத்து உலர்த்தி, முளை கட்டி, அதை சிறிது சிறிதாக வாணலியில் போட்டு வறுத்து பொடி செய்து வஸ்த்ர காயம் செய்ய, ராகி ஸரி கிடைக்கும். அதையும் அவரே செய்து கொடுத்தார். முதல் நாள் மிக மிக கொஞ்சம் ராகி ஸரியை எடுத்துக் கொண்டு நீரில் கரைத்து அடுப்பில் கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பாலை கலந்து குழந்தைக்குக் கொடுத்தேன். சாப்பிட்டு முடித்து ஒரு ராகம் இழுத்தது பாருங்கள், நான் அசந்தே போய் விட்டேன். ‘இப்போதான் அதுக்கு பிடிச்சதை குடுத்திருக்கோம் போலிருக்கு..’ என்றேன் மகளிடம்.

ஏழு எட்டு மாதத்தில் ‘ஜொள்ளு’ விட ஆரம்பித்தது குழந்தை. உடனே அதற்கு விதவிதமாக பெயர்கள் சூட்டினேன் : ஜொள்ளேஷ், ஜொள்ளப்பா, ஜொள்ளண்ணா, ஜொள்ராஜ், ஜொள்குட்டி, ஜொள்கண்ணா என்று!

அப்படி நான் சீராட்டி, பாராட்டி வளர்த்த தேஜஸ் கிருஷ்ணாவிற்கு நாளை 14 வயது பூர்த்தி ஆகிறது.

அவன் மிக நன்றாகப் படித்து, சீரும் சிறப்புமாக இன்னும் பல பிறந்த நாட்களைக் கொண்டாட வேண்டும் என்பது இந்த பாட்டி, தாத்தா, மாமா, மாமி எல்லோருடைய ஆசீர்வாதங்களும்.

Happy Birthday Tejas Krishna!

baby

குழந்தைகளுக்கு ஒரு கிடைத்தற்கரிய பரிசு!

Advertisements

25 thoughts on “பாதக் கமலங்கள் காணீரே!

 1. தேஜஸ் கிருஷ்ணாவிற்கு மிக நன்றாகப் படித்து, சீரும் சிறப்புமாக இன்னும் பல பிறந்த நாட்களைக் கொண்டாட வேண்டும் என்பது எங்கள் எல்லோருடைய ஆசீர்வாதங்களும் , பிரார்த்தனைகளும் …

 2. விஜி பாட்டிக்கு ஒரு சின்னு மாதிரி ரஞ்சனி பாட்டிக்கு ஒரு தெஜஸ் கிருஷ்ணா இன்றூ பிறந்த நாளை சந்தொஷமாக கொண்டாடவும் வாழ்க்கையில் விரும்பியதெல்லாம் கிடைக்கவும் இந்த பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

 3. ஆஹா ஆஹா….. தேஜஸ் கிருஷ்ணாவுக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்!

  //‘பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்

  ஒத்திட்டிருந்தவா காணீரே….!’//

  எனக்கு ரொம்பப்பிடிச்சது இது. வாழைப்பூவில் அடுக்கி வச்சுருக்கும் அரும்புகள் போல் பிறந்த குழந்தையின் விரல்கள் அடுக்கடுக்கா இருப்பதை ரசிச்சு ரசிச்சுப் பார்ப்பேன்!

 4. உங்கள் அன்புக்கும் ஆசிகளுக்கும் நன்றி துளசி!
  பெரியாழ்வாரைப் போல பிள்ளைத் தமிழ் சொல்பவர் யார் உண்டு?
  நீங்கள் சொல்வதைபோலத் தான் என் பேரனை நான் அனுபவித்தேன்!

 5. ரஞ்ஜனி பாலூட்டி.தாலாட்டி, சீராட்டி,பேணி வளர்க்க பாட்டிஸ்தானம் கொடுத்து வைக்க வேண்டும்.எல்லாரும் பேரன்,பேத்தியை நினைத்துக்கொண்டு ஒரு ரவுண்ட் உலா வந்திருப்பார்கள்.நான்
  அப்படித்தான் எல்லோரையும், பறந்துபோய் பார்த்துவிட்டு வந்து விட்டேன் தேஜஸ் கிருஷ்ணா, கிருஷ்ண தேஜஸைப்பெற்று மேன்மேலும் வளர்ந்து வாழ்க எங்ககளுடைய மனப்பூர்வமான ஆசிகளும், அன்புப் பகிர்தலும். அன்புடந்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s