எனர்ஜியின் ரகசியம்!

thank u

பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜி என்று கிரிக்கெட் வீரர்கள் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம்.

பதிவாளர்களின் எனர்ஜி பின்னூட்டத்தில் இருக்கிறது என்று நான் சொல்லுவேன்.

பூஸ்ட் குடிப்பதை விட பின்னூட்டம் தரும் ஊட்டச்சத்து அதிகம்.

இன்று வேர்ட்ப்ரஸ்-ஸிலிருந்து 2012 Review Report என்று அனுப்பியிருந்தார்கள். இந்த ஒரு வருடத்தில் எத்தனை வருகையாளர்கள், எத்தனை வாசிப்புகள், வருகையாளர்கள் எந்தெந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள், யார் அதிகப் பின்னூட்டம் கொடுத்திருக்கிறார்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட்! படித்துப் பாருங்கள்.

என்னுடைய பதிவுகளுக்கு அதிகப் பின்னூட்டம் போட்டவர்கள் லிஸ்டில் திரு வைகோ முதலிடம் வகிக்கிறார்.

இவரது பின்னூட்டங்கள் நம் எழுத்துக்களை சற்று ஓரம் கட்டி விடும் அபாயமும் இருக்கிறது. நமது எழுத்துக்களை படிக்க வந்தவர்கள் இவரது பின்னூட்டங்களைப் படித்து சிலாகித்துவிட்டு அதற்கு பாராட்டுத் தெரிவிப்பார்கள்! (இந்த சந்தடியில் நம் எழுத்துக்கள் காணாமல் போய்விடும்!) இது எப்படி இருக்கு?

தனக்கு வந்த விருதுகளை சக பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் இவர் முதலிடம்!

மிகச் சமீபத்தில் தான் எழுத வந்தேன் என்பார். ஆனால் நகைச்சுவை கலந்து இவர் எழுதுவது படிக்கப் படிக்க அலுக்காத ஒரு விஷயம்.

இவர் சமீபத்தில் எழுதிய அடை பற்றிய பதிவு படியுங்கள்.

உங்களது தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி திரு வைகோ ஸார்!

இவருக்கு அடுத்தபடியாக திரு திண்டுக்கல் தனபாலன். நாம் பதிவு எழுதி வெளியிட்டவுடன் இவரது பின்னூட்டம் பறந்து வந்து விடும். கொஞ்ச நாட்களாக இவர் பதிவுலகில் வலம் வராமல் இருக்கிறார். புது வருடத்தில் மீண்டும் பதிவுலகத்திற்கு வந்து தனது எழுத்துக்களாலும், பின்னூட்டங்களினாலும் அனைவரையும் சந்தோஷப் படுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி திரு தனபாலன்!

மூன்றாவதாக திருமதி காமாட்சி. இவரது இந்த வருட அறிக்கை அசத்துகிறது. ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட வருகையாளர்கள்!

நான்காவது திரு வெங்கட் நாகராஜ். பயணக் கட்டுரைகளும், வெள்ளிக்கிழமைகளின் ப்ரூட் சாலட்டும் பரிமாறி எல்லோருடைய உள்ளங்களையும் கொள்ளை கொண்டவர். இவரது மனைவி திருமதி ஆதியும், மகள் ரோஷ்னியும் கூட பதிவர்கள். தமிழ் மணம் ரேங்க்-கில் எனது ஒரே சவால் இவர்தான். (ஹா…ஹா…)

நன்றி திரு வெங்கட்!

ஐந்தாவதாக பதிவர் சந்திப்பில் நான் கண்ட தங்கப் பெண் சமீரா! எனது மிக இளைய வயதுத் தோழி. இத்தனை வருடங்கள் பதிவர்களின் எழுத்துக்களை படித்து பின்னூட்டம் மட்டுமே போட்டு வந்த சமீரா இந்த வருடம் சொந்த வலைபூ ஆரம்பித்திருக்கிறாள். புது வருடத்தில் மேலும் மேலும் எழுத்துலகில் வளர்ந்து தன் முத்திரையைப் பதிக்க வாழ்த்துக்கள்.

இவர்களைத் தவிர இன்னும் என் உள்ளம் கவர்ந்த இருவரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஓரளவுக்கு ஊகித்திருப்பீர்கள்.

முதலில் திரு தமிழ்: கதை பிறந்த கதை என்ற பதிவில் என் வலைத் தளத்தின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக் கூறி இருக்கிறார். வரும் வருடங்களில் இன்னும் இன்னும் சிறப்பாக எழுதி தனக்கென்று பதிவுலகத்தில் ஒரு இடம் பிடிக்க ஆசிகள். நன்றி தமிழ்!

இரண்டாவதாக திரு ஓஜஸ்: மாலைப்பொழுதினிலே என்ற ஒரு அழகான பாடலைப் போட்டு எனது வலைப்பூவின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு பரிசளித்த திரு ஓஜஸ்-ஸுக்கு நெஞ்சு நிறைந்த நன்றி.

இவரது யாம்’ என்ற இன்றைய பதிவிலும் என்னை குறிப்பிட்டு இருக்கிறார்.

சமீபத்தில் தோழிகளான அனுஸ்ரீனி, ராஜலக்ஷ்மி பரமசிவம், மஹா என்று நான் அழைக்கும் மகாலட்சுமி விஜயன் (முகம் தெரியாத முதல் தோழி என்று அழைத்து மனத்தைக் கவர்ந்து விட்டார் இவர்!) திருமதி சித்ரா சுந்தர், திருமதி ஷீலா, திரு தமிழ் இளங்கோ, திருமதி இராஜராஜேஸ்வரி இன்னும் இன்னும் பலருக்கும் எனது நெஞ்சு நிறைந்த நன்றிகள்!

வரும் வருடம் எல்லோருக்கும் எல்லாம் இனிதாக நடக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

 

snake year

 

85 நாடுகள் 34000 வாசிப்புகள் = 1 வருடம்!

கீழே இருக்கும் ஆண்டு அறிக்கை வேர்ட்ப்ரஸ் தளத்திலிருந்து வந்தது. கடந்த ஒரு ஆண்டில் என் வலைதளத்தின் நிலை பற்றியது.

இது என்னுடைய முதல் ஆண்டாகையாலே பார்க்கப் பார்க்கப் பரவசமாயிருக்கிறது.

என் ரசிகர்கள் எல்லோருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 

The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog.

Here’s an excerpt:

4,329 films were submitted to the 2012 Cannes Film Festival. This blog had 34,000 views in 2012. If each view were a film, this blog would power 8 Film Festivals

Click here to see the complete report.

தமிழ் உங்கள் தாய் மொழியா? உறவாட வாருங்கள்!

”  ஒன்றுபட்ட ஒரு நல்ல சமூகத்தை அமைக்க  நீங்கள் விரும்புவீர்களேயானால், உங்கள் பார்வையை மாணவர்களின் பக்கம் திருப்புங்கள். உங்கள் கரங்களை கொடுத்து அவர்களை வலுப்படுத்துங்கள்”

இந்த நல்ல சிந்தனையுடன் ஒரு விழா நாளை நடக்க இருக்கிறது, திருப்பூரில்!

மேலும் விவரங்களுக்கு : http://thozhirkalam.blogspot.in/2012/12/blog-post_21.html

தொழிற்களம் டிசம்பர் விழா அழைப்பிதழ்

வாருங்கள் பதிவர்களே! திருப்பூரில் சங்கமிக்கலாம்..

சென்னை பதிவர் விழாவிற்குப் பிறகு திருப்பூரில் நடக்கும் இந்த விழாவிற்கு தமிழ் பதிவர்கள் அனைவரும் பெரும் திரளாக வந்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தொழிற்களம் சார்பில் கேட்டுக் கொள்ளுகிறேன்.

ஆட்சியர் திரு சகாயம் அவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்.

அனைவரும் வருக!

எங்கள் மாமா

ஸ்ரீரங்கம் என்றால் உடனே நினைவுக்கு வருவது எங்கள் பாட்டியின் வீடு மட்டுமல்ல; எங்கள் மாமாக்களின் நினைவும் தான்.

எங்கள் பெரிய மாமா சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தார். அவர் ரொம்பவும் கண்டிப்பானவர். அவரிடம் எங்களுக்கு சற்று பயம் அதிகம். எதிரில் நின்று பேச பயப்படுவோம்.

அடுத்த மூன்று மாமாக்களிடம் அதீத செல்லம். மாமா வா, போ என்று பேசும் அளவுக்கு சுதந்திரம். இந்த மூவரில் பெரிய மாமா திருமஞ்சனம் கண்ணன் என்கிற கண்ணப்பா மாமா. அவர்தான் இந்தப் பதிவின் நாயகன்.

நாங்கள் சிறுவயதினராக இருந்த போது  மாமா எங்களுடன் சில காலம் சென்னையில் தங்கி இருந்தார். அதனால் இந்த மாமா ரொம்பவும் நெருக்கமானவர் எங்களுக்கு.

மாமாவின் பொழுதுபோக்கு புகைப்படங்கள் எடுப்பது. அவரது  புகைப்படங்களுக்கு பாத்திரங்கள் நாங்கள் – மாமாவின் மருமான்களும், மருமாக்களும் தான். அதுவும் நான் ரொம்பவும் ஸ்பெஷல்.

என் தோழி ஜெயந்தி எனக்கு photographic memory இருப்பதாக எழுதியிருந்தாள். என் மாமா நான் photogenic என்று அடிக்கடி சொல்லுவார். அதனால் மாமா எடுத்த படங்களின் முக்கிய கதாநாயகி நானாக இருந்தேன் – எனக்குத் திருமணம் ஆகி புக்ககம் போகும் வரை!

எங்களை சிறுவயதில் புகைப்படங்கள் எடுத்ததுடன் நிற்காமல் எங்களது திருமணங்களுக்கும் மாமாதான் புகைப்படக்காரர்.

தன்னிடமிருந்த கருப்பு வெள்ளை காமிராவில் மாமா காவியங்கள் படைத்திருக்கிறார். மாமாவின் புகைப்படங்களில் நாங்கள் எல்லோரும் உயிருடன் உலா வந்தோம். மாமா தன் புகைப்பட பரிசோதனைகளை எங்கள் மேல் நடத்துவார்.

மாமாவின் மனதில் தோன்றும் கற்பனைகளுக்கு ஏற்ப நாங்கள் ‘போஸ்’ கொடுக்க வேண்டும். மாமா நினைத்தது புகைப்படத்தில் வரும் வரை எங்களை விட மாட்டார்.

இப்போது இருப்பது போல டிஜிட்டல் காமிராக்கள் இல்லாத நேரம் அது. ஒரு பிலிம் சுருள் முடியும் வரை புகைப்படங்கள் எடுத்துவிட்டு, திருச்சி போய் அவற்றை பிரதி எடுத்துக் கொண்டு வருவார். கூடவே புதிய பிலிம் சுருளும் வரும், அடுத்த பரிசோதனைக்கு.

காவிரியில் ஆடிப்பெருக்கன்று சுழித்தோடும் வெள்ளத்திலிருந்து, மகாபலிபுரம் அர்ஜுனன் தபஸ் வரை மாமாவின் கருப்பு வெள்ளைக் காமிராவில் புகைப் படங்களாக சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும்.

எனக்கு நினைவு இருக்கும் மாமாவின்  புகைப்படப் பரிசோதனை ஒன்று. எனக்கு நானே புத்தகம் கொடுப்பது போல.

நான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். காமிராவின் லென்ஸ் –ஐ பாதி மூடிவிட்டு உட்கார்ந்திருக்கும் படத்தை எடுப்பார். அடுத்தாற்போல அந்த நாற்காலி பக்கத்தில் நின்று கொண்டு காலி நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு புத்தகத்தைக் கொடுக்க வேண்டும். லென்ஸ்- இன் மறுபாதியை மூடிவிட்டு இந்தப் படத்தை எடுப்பார்.

திரும்பத் திரும்பத் திரும்பத் ……….

எத்தனை முறை இதனை எடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? எனக்கு இன்றுவரை நினைவு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அப்போதெல்லாம் செய்தி பரிமாற்றம் கடிதங்கள் மூலம்தான். நாங்களும் எங்கள் மாமாக்களுக்கு கடிதம் எழுதுவோம். கடிதத்தின் ஆரம்பத்தில் ‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ போட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது எங்கள் கண்ணப்பா மாமா தான்.

மாமாவுக்கு கணீரென்ற குரல். அகத்தில் இருக்கும் பெருமாளுக்கு அந்த கணீர் குரலில் பாசுரங்கள் சேவித்தபடியே மாமா திருமஞ்சனம் செய்வதைக் காணக் கண் கோடி வேண்டும்.

‘நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று மாமா நாத்தழுதழுக்க பெரிய திருமொழி சேவிக்கும்போது திருமங்கையாழ்வாரும், ‘எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்* எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே’ என்று திருமாலை சேவிக்கும்போது தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் நம் கண் முன்னே தோன்றுவார்கள்.

கண்ணப்பா மாமாவுக்குத் திருமணம் ஆகி மாமி வந்தார். மாமா எங்களுக்கு எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் ராஜம் மாமியும். திவ்யப்பிரபந்தம் மட்டுமே தெரிந்திருந்த எங்களுக்கு முமுக்ஷுப்படி, ஸ்ரீவசன பூஷணம், ஆச்சார்ய ஹ்ருதயம் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியவர் இந்த மாமிதான்.

‘பகவத்கீதையில் கிருஷ்ணனுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் ராஜத்தைத் தான் கேட்பார்’ என்று என் மாமா வேடிக்கையாகக் கூறுவார். அந்த அளவுக்குக் கீதையை கரைத்துக் குடித்தவர் மாமி.

பல திவ்ய தேசங்களுக்கும் சென்று அங்கிருக்கும் பெருமாள்களையும் தன் காமிராவில் சிறை எடுத்து வருவார் எங்கள் மாமா. மாமாவிற்கு தான் எடுத்த படங்களுள் மிகவும் பிடித்தமான படம் திருவாலி திருநகரி திருமங்கையாழ்வார் தான். கூப்பிய கைகளுடன் நிற்கும் அவரது திரு முகத்தை மட்டும் க்ளோஸ்-அப் – பில் எடுத்து வீட்டுக் கூடத்தில் மாட்டியிருப்பார். ஆழ்வாரின்  கண்களின் வழியே அவரது கருணை நம்மை ஆட்கொள்ளும்.

இத்தனை திறமை இருந்தும் மாமா தனது திறமையை பணமாக்க விரும்பவில்லை. எத்தனையோ பேர்கள் சொல்லியும் தனது மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்காக மட்டுமே வைத்துக்கொண்டு இருந்தார்.

எங்களது பாட்டியின் முதுமை காலத்தில் மாமாவும் மாமியும் மிகுந்த ஆதுரத்துடன் பாட்டியைப் பார்த்துக் கொண்டனர். மாமாவின் குழந்தைகளும் பாட்டியினிடத்தில் வாஞ்சையுடனும், மிகுந்த பாசத்துடனும் இருந்தனர். பாட்டியின்  கடைசிக் காலம் இவர்களது அரவணைப்பில் நல்லவிதமாக கழிந்தது. இதற்காக மாமாவுக்கும், மாமிக்கும் நாங்கள் எல்லோருமே நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.

கண்ணப்பா மாமா என்று நாங்கள் ஆசையுடன் இன்றும் அழைக்கும் எங்கள் மாமாவுக்கு இன்று 80 வயது நிறைகிறது. மார்கழித் திருவாதிரையில் பிறந்தவர் மாமா. எங்கள் அம்மா ஒவ்வொரு வருடமும் தனது தம்பியை நினைத்துக் கொண்டு திருவாதிரை களியும், ஏழுகறிக் கூட்டும் செய்வாள்.

பழைய நினைவுகளுடன், மாமாவின் அன்பில் நனைந்த நாட்களை அசை போட்டபடியே இந்தப் பதிவை மாமாவுக்கு அர்ப்பணிக்கிறேன்.

மாமாவும் மாமியும் என்றென்றும் ஆரோக்கியத்துடன், சந்தோஷமாக இருக்க ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை வேண்டுகிறேன்.

இரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம்! (2)

first anniversary 2

இரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம் – தொடர்ச்சி

நானும் படித்து பின்னூட்டமிட்டேன். இந்த இரு இளைஞர்களின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. எங்களுக்குப் பாலமாக கல்கி அவர்கள் இருந்தார் என்பது மிகப் பெரிய விஷயம்! இருவரையும் தொடர ஆரம்பித்தேன்.

இந்த இருவரில் எனக்கு முதலில் திரு தமிழ் பற்றி சிறிய பயம் இருந்தது; ரொம்பவும் கண்டிப்பான தமிழ் ஆசிரியரோ என்று! இப்போது இவரும் நானும் நல்ல நண்பர்கள்!

ஆனால் திரு ஓஜஸ் முதலிலிருந்தே மிகவும் நட்புடன் இருந்தார்.

நமக்குத்தான் கொஞ்சம் நட்பானவுடன் நெக்குருகி அடுத்த நாளே காலை சிற்றுண்டியுடன் அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும் குணமாயிற்றே.

அவரிடம் ஒரு முறை மின்னஞ்சலில் கேட்டேன் : ‘எங்கே இருக்கிறீர்கள்?’ என்று.

வந்ததே ஒரு பதில்! ‘உங்களைப் போன்ற நல்லவர்களின் மனதில்!’

ஒரு வினாடி திகைத்தாலும், மறு வினாடி புரியாத பாடம் புரிந்தது:

‘உங்கள் சுதந்திரம் என் மூக்கு நுனி வரைதான். உங்கள் எல்லையில் நீங்கள் இருங்கள். என் எல்லையில் நான்!’

இளைஞரான இவரிடமிருந்து நான் கற்ற பாடம் மறக்க முடியாத ஒன்று.

‘காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்’ இல்லையா?

***********

தமிழ் பதிவுலகில் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. பிரபல எழுத்தாளர்களும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல பல படைப்புகள் படிக்கக் கிடைக்கின்றன.

பலபல திரட்டிகள். உலகம் முழுவதும் நம் எழுத்தைப் படிக்கிறார்கள். நமது பொறுப்புகளும் அதிகம்.

சென்சார் இல்லாத இணையம் இருமுனைக் கத்தி போல. மிகவும் விழிப்புடன் பயன்படுத்த வேண்டும். மற்றவர்களைப் பார்த்து கத்தியை நீட்டும்போது அதன் இன்னொரு கூர் முனை நம்மை நோக்கி இருப்பதை மறந்து விடக்கூடாது.

நம் எழுத்துக்களின் பாதிப்பு உடனே பின்னூட்டங்கள் என்னும் வடிவில் நமக்கு வரும்.

எப்போதும் புகழ்ந்தே எழுதுவார்கள் என்று எதிர்பார்ப்பது நல்ல எழுத்துக்களை உருவாக்காது. எதிர்மறையான கருத்துக்களை ஏற்கும் பக்குவம் வேண்டும்.

பிறரது எழுத்துக்களைப் படித்துவிட்டு – நல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி என்று மொக்கையாக பின்னூட்டம் போடாமல், நிஜமான உணர்வுகளை எழுத வேண்டும். சில பதிவர்களுக்கு இது பிடிப்பதில்லை. எதிர்மறையான கருத்துக்களை – அல்லது அவர்களது எழுத்துக்களை உண்மையாக விமரிசனம் செய்தால் பிடிப்பதில்லை. நம் தளத்திற்கு வருவதை நிறுத்தி விடுவார்கள்.

இந்தப் போக்கு நல்லதல்ல.

***********

பதிவுலகில் மறக்க முடியாத நிகழ்வு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடை பெற்ற மூத்த பதிவர்களுக்கு நடந்த பாராட்டு விழா.

பல பதிவர்களை சந்தித்தேன். இத்தனை பேர்களா என்று ஆச்சரியப் பட்டேன். வேர்ட்ப்ரஸ் தளத்தில் எழுதுபவர்களில் நான் ஒருவள் மட்டுமே. நிறைய இளைஞர்கள், யுவதிகளைச் சந்தித்தேன்.

ப்ளாக்ஸ்பாட்டில் எழுதுபவர்கள் எல்லோரும் ஒரே குடும்பமாக பழகுவது மிகவும் வியப்பாக இருந்தது. அதே போல இங்கும் வேர்ட்ப்ரஸ்ஸில் தமிழில் எழுதுபவர்கள்  ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

தொடர்பதிவுகள் எழுதலாம். மற்றவர்களை நம் பதிவில் (விருந்தினர் பதிவுகள்) எழுத வைக்கலாம். நான்கு பேர்களாக அல்லது ஒரு குழுவாக  சேர்ந்து எழுதலாம்.

ஏற்கனவே திரு தமிழும், திரு ஓஜஸ்ஸும் சேர்ந்து இசைப்பா என்று ஒரு வலைத்தளம் துவங்கி இருக்கிறார்கள்.

ஒத்த கருத்தை உடையவர்கள் சேர்ந்து இதைப்போல செய்யலாம்.

எல்லாமே எல்லையைத் தாண்டாமல் தான்!

என் ப்ளாக் மூலம் என் பழைய தோழியை 33 வருடங்களுக்குப் பின் சந்தித்தேன். இதை விட வேறு என்ன வேண்டும்?

இதுவரை என் எழுத்துக்களைப் படித்து ரசித்து பின்னூட்டமிட்ட ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தொடர்ந்து உங்கள் ஊக்கத்தை அளியுங்கள்.

பதிவர்கள் விழாவில் எடுத்த காணொளி

இரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம்! பாகம் ஒன்று

first anniversary

எனது வலைத்தளம் இன்று முதலாண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கிறது.

இந்த ஓராண்டில் நான் படித்து மகிழ்ந்த தளங்களையும், அதனால் ஏற்பட்ட தோழமைகளையும், கற்றுக் கொண்ட பாடங்களையும், பாராட்டுக்களையும்,  பகிர்ந்து கொள்ள இந்த சிறப்புப் பதிவு.

(உஸ்……அப்பாடா!)

***********

ஒரு வாரத்திற்கு முன்னால் வேர்ட்ப்ரஸ் இலிருந்து ஒரு வாழ்த்து செய்தி: போன வருடம் இந்த நாள் தான் நீங்கள் எங்களிடம் பதிவு செய்து கொண்டீர்கள், வாழ்த்துக்கள் என்று! முதல் வாழ்த்து!

ஆனால் முதல் பதிவு போட்டது 24.12.2012

அதனால் இந்த நாளையே என் வலைதளத்தின் முதல் பிறந்தநாள் என்று கொண்டாடலாம்!

வலைப்பூ ஆரம்பித்ததன் நோக்கம் எனது படைப்புக்களை ஒரே இடத்தில் தொகுப்பதுதான்  என்றாலும், வேறு வேறு படைப்புக்களைப் படிக்க ஆரம்பித்த பின் என் வலைப்பூவிற்காகவே எழுத ஆரம்பித்தேன்.

சுய தம்பட்டம்:

வலைச்சரத்தில் ஆசிரியர் பதவி – நினைத்து நினைத்து மகிழும் ஒரு நிகழ்வு!

மூன்று முறை வலைச்சரத்தில் தொடர்ச்சியாக அறிமுகப் படுத்தப் பட்டேன்.

தமிழ் மணம் 205 ரேங்க். (சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றாலும் ஒரு வருடத்தில் நல்ல முன்னேற்றம் என்றே தோன்றுகிறது.) தமிழ்மணம் 2 வது 5 வது ரேங்க் பெற்றவர்களுக்கும் எனக்கும் நடுவில் ஒரு பூஜ்யம் – அவ்வளவே வித்தியாசம்!

மேலும் இரண்டு வலைத்தளங்கள் ஆரம்பித்தது.

http://pullikkolam.wordpress.com

http://thiruvarangaththilirunthu.blogspot.in

புதிதாக இவற்றில் எழுதுவது இல்லை. முதல் தளத்தில் இருப்பதையே இங்கும் போடுகிறேன். சில புதிய பதிவுகளும் இருக்கின்றன.

எதிர்காலம்:

எனது கதைகள் சம்ஸ்க்ருத மொழியில் மொழி பெயர்க்கப் பட இருக்கின்றன.

ஸ்ரீவைஷ்ண க்ரந்தங்களை எளிய ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது பிறவிப் பயன் இது.

***********

என்னிடம் ஒரு குணம். நல்லது என்று மனதிற்கு படுபவற்றை மற்றவர்களுக்கும் சொல்லுவேன். இது நான் படிக்கும்  புத்தகங்கள்  என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் அடங்காது. சிலசில உணவகங்களும்,ஊர்களும், உறவுகளும்  இந்தப் பட்டியலில் அடங்கும்!

இவற்றைத் தவிர

எனது ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் ராஜேஷ்;

யோகா பயிற்சியாளர் திருமதி ரேகா ஸ்வரூப்;

துணைவரின் மருத்துவர் டாக்டர் சிவராமையா;

எங்கள் ஜோசியர் திரு. உமேஷ் ஜோயிஸ், திரு அருளாளன்

என்னிடம் தங்களதுஆரோக்கியத்தை பற்றி பேசுபவர்கள் எல்லோருக்கும் இவர்களை பரிந்துரைப்பேன். விளைவு: நான் பார்த்தே இராத பலர் என் பெயரைச் சொல்லிக் கொண்டு  இவர்களை நாடுவார்கள்!

சிலர் சில சமயங்களில் இதற்காக கோபப் பட்டதும் உண்டு! ‘நீ யாரு என்னை பற்றி சொல்ல?’ என்று!

சமீபத்திய உதாரணம்: வலைச்சரத்தில் பலரை அடையாளம் காட்டியிருந்தும், சிலர் மட்டுமே நன்றி பாராட்டி இருந்தார்கள்.

‘இவள் யார் நம்மை அடையாளம் காட்ட?’ என்று நினைத்திருப்பார்களோ, என்னவோ?

அப்போது எனக்குள் நான் நல்லவளா கெட்டவளா என்ற கேள்வி எழுந்தது.

ஆனாலும் இந்த குணம்  மாறவில்லை. இப்போது பதிவுலகத்திலும் எனக்குப் பிடித்த தளங்களை தொடருவதுடன், பின்னூட்டமிட்டு, என் வலைபதிவில் இணைப்பு கொடுத்து…. அவர்களது பதிவை ரீ-ப்ளாக் செய்து…. எனது சமூகம் என்று அவர்களை அடையாளம் காட்டி…

தொட்டில் பழக்கம்…..மாறாது இல்லையா?

எனது வலைதளத்தின் மூலம் பலரின் நட்பு கி டைத்திருக்கிறது.

வலைப்பதிவுக்கு அப்பால் என்னுடன் நட்பாக இருக்கும் ஒருவர் திருமதி காமாட்சி. 

அவ்வப்போது தொலைபேசவும் செய்கிறோம். அவரிடம் பேசுவது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. எங்கள் நட்பு இதேபோல வரும் வருடங்களிலும் தொடர வேண்டும்!

ஒரு முறை நான் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகும் போது இவரும் அறிமுகம் ஆகியிருந்தார். எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்கிறாய் என்று நெகிழ்ந்து போனார் இவர்.

எனக்கு எங்கு போனாலும் ஒரு ராசி. என்னைவிட வயது குறைந்தவர்கள் என்னுடன் மிக எளிதில் நட்பு கொள்ளுவது. பதிவுலகத்திலும் இது தொடர்வது அதிசயமே!

எனக்குப் பிடித்த இரண்டு இளைய தலைமுறை:

ஆடி பதினெட்டாம் நாள். காலையில் கலந்த சாதங்கள் செய்துவிட்டு கணணி முன் உட்கார்ந்து பதிவுகளைப் பார்க்க ஆரம்பித்தேன். தமிழ் என்னும் பெயரில் எழுதும் திரு தமிழ் ‘ஆடித் திருநாள் என்னும் பதிவு எழுதியிருந்தார். படித்து விட்டு

‘பதினெட்டாம் பெருக்கு என்று கலந்த சாதங்கள் செய்துவிட்டு, வந்து கணணி முன் உட்கார்ந்தால் உங்கள் பதிவு! காவிரிக்கரையில் வந்தியத்தேவனுடன் அங்கு நடக்கும் கோலாகலங்களை நேரடி ஒளிபரப்பு செய்துவிட்டீர்கள்!

கல்கியின் ‘பொன்னியின்செல்வன்’ போனதலைமுறையிலிருந்து இந்த இளைய தலைமுறை வரை இதயத்தைக் கொள்ளை கொள்ளுவது வியப்பேதும் இல்லை. அது அமர காவியம் என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதும்.

இந்த நன்னாளில் காவிரியையும் பொன்னியின் செல்வனையும் நினைவு படுத்தியதற்கு நன்றிகள் பல!’

என்று ஒரு பின்னூட்டம் போட்டேன்.

அடுத்த நாள் ஓஜஸ் என்பவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல்: எனது நண்பன் தமிழ் அவர்களின் பதிவைப் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி. என்னுடைய நாற்சந்தி   வலைத்தளத்தில் வந்தியத்தேவன்  பற்றிய பதிவைப் படித்து கருத்து இருந்தால் சொல்லவும் என்று.

ரொம்பவும் நீளமாகப் போய்விட்டபடியால் அடுத்த பதிவில் தொடருகிறேன்.

கணிதமும் நானும்!

என் மொழிப்புலமை போலவேதான் என் கணிதப் புலமையும்.

maths

எட்டாவது வகுப்பில் என் கணித ஆசிரியர் திருமதி லில்லி கான்ஸ்டன்டைன் அவர்கள் என்னை ஆச்சர்யத்துடன் கேட்ட கேள்வி இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது: ;ஏண்டி! உனக்கு கணக்குப் பாடம் வராதா?’

நான் ‘வராது டீச்சர்’ உண்மையை ஒப்புக் கொண்டேன். வராததை வராது என்ற ஒப்புக் கொள்ளும் குணம் நல்லது இல்லையா?

அன்றிலிருந்து அவர் என் வழிக்கு வருவதே இல்லை. மற்ற பாடங்களில் இருந்த மேதமை(!!) கணக்குப் புத்தகத்தை எடுத்தாலே மறைந்து கொண்டு கண்ணாமூச்சி விளையாடியது.

ஒரு நாள் என் ஆசிரியர் சொன்னார்: ’இத பாருடி! யாருகிட்டயாவது கணக்கு கத்துக்க. அண்ணா, அக்கா யாரும் இல்லையா, வீட்டிலே?’

அண்ணா தான் ஆங்கிலம், கணக்கு இரண்டும் சொல்லித் தருவான். அவனும் தன திறமைகளை எல்லாம் என்னிடத்தில் பயன்படுத்திப் பார்த்து வெறுத்துப் போய் விட்டான். ‘இந்த ஜென்மத்தில உனக்கும் கணக்குக்கும் ஸ்நானப் பிராப்தி இல்லை..!’ என்று சொல்லி என்னை மஞ்சள் தண்ணீர் தெளித்து விட்டு விட்டான்.

எப்படியோ சமாளித்து எஸ் எஸ் எல் சி வந்துவிட்டேன். ஆசிரியை ராஜி பாய்! ரொம்பவும் கண்டிப்பு. எனக்கு எப்படியாவது கணக்குப் பாடத்தை சொல்லிக் கொடுத்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். தினமும் போராட்டம்தான் எனக்கும் (கணக்கு பாடத்திற்கும் இல்லை!) ராஜி பாய் டீச்சருக்கும் தான்!

அந்த காலத்தில் ஒன்பதாம் வகுப்பில் காம்போசிட் மேத்ஸ் அல்லது அரித்மேடிக்ஸ் இரண்டு வகைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அண்ணா சொன்னான்:’காம்போசிட் மேத்ஸ் எடு. மதிப்பெண்கள் நிறைய வாங்கலாம். நான் சொல்லித் தருகிறேன்’.

‘ஐயையோ! வேண்டாம்’ என்று ஜகா வாங்கிவிட்டேன்.

‘1௦ ஆட்கள் சேர்ந்து 8 மணிநேரம் வேலை செய்தால் 6 நாட்களில் ஒரு வேலை முடியும். அதே வேலையை இரண்டே நாட்களில் முடிக்க எத்தனை ஆட்கள் எத்தனை மணிநேரம் வேலை செய்யவேண்டும்?’

‘ஒரு பெரிய நீர்த்தொட்டி. இரண்டு குழாய்கள் குறிப்பிட்ட வேகத்தில் நீரை நிரப்பும். ஒரு குழாய் குறிப்பிட்ட வேகத்தில் நீரை காலி செய்யும். எத்தனை மணி நேரத்தில் தொட்டி நிரம்பும்?’

தண்ணீர் நிரம்பவே நிரம்பாது என்பது என் வாதம். ஒரு குழாய் காலி செய்து கொண்டே இருக்கும் போது தொட்டி எப்படி நிரம்பும்?

இந்த சாதாரணக் கணக்குகளைப் போடவே தடுமாறும் நான் ஜியோமெட்ரி, அல்ஜீப்ரா (காப்ரா தான்!) என்று வாயில் நுழையாத பெயர்களில் கணக்குப் பாடம் என்றால் எங்கே போவேன்?

என் தலைமை ஆசிரியை திருமதி ஷாந்தா உட்பட எல்லா ஆசிரியர்களும் நான் எஸ் எஸ் எல் சி –யில் ‘கப்’ (அதாங்க, எங்க காலத்தில் பெயில் என்பதற்கு செல்லப் பெயர்) வாங்கிவிடுவேன் என்று உறுதியாக நம்பினார்கள்.

ஒரே ஒருத்தியைத் தவிர. நான் இல்லை அது!

எனது தோழி டி.ஏ. இந்திராதான் அந்த ஒரே ஒருத்தி.

அவள் ரொம்பவும் தீர்மானமாகச் சொன்னாள்: ‘இதோ பாருடி, இவர்கள் எல்லோரையும் தலை குனிய வைக்கிறாப் போல நீ எஸ் எஸ் எல் சி – பரீட்சையில கணக்குல அறுபது மார்க்ஸ் எடுத்து பாஸ் பண்ற, சரியா?’

‘வேண்டாம் இந்திரா, நான் மங்கம்மா இல்லை இது போல சபதம் போட…’

‘ஒண்ணும் பேசாதே…!’ என்று சொன்னவள் தினமும் பள்ளிக் கூடம் முடிந்ததும் எனக்கு கணக்கு சொல்லித் தர ஆரம்பித்தாள். என்னுடன் முட்டி மோதி என் தலையில் கணக்குப் பாடத்தை ஏற்றி…!

அவளுடைய அயராத முயற்சியினால் கணக்குப் பாடத்தில் நான் 61 மதிப்பெண்கள் பெற்று தேறினேன்! அந்தக் காலகட்டத்தில் 6௦ மதிப் பெண்கள் என்பது மிகவும் உயர்ந்த ஒன்று அதுவும் நான் வாங்கியது!

இப்போது நினைத்தாலும் எனக்கு மிகவும் ஆச்சரியம் தான்!

அவளுக்கென்ன என் மேல் இப்படி ஒரு அக்கறை? இன்று வரை விடையைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்.

என் கணவர் எத்தனை பெரிய எண்கள் கொடுத்தாலும் வாயினாலேயே கூட்டிச் சொல்லிவிடுவார்.

எனது மகளும், மகனும் என்னுடைய நேர் வாரிசு கணக்குப் பாட விஷயத்தில்.

என் பிள்ளைக்கு கல்யாணத்திற்கு பெண் தேடியபோது நான் போட்ட இரண்டே இரண்டு கண்டிஷன்கள் என்னென்ன தெரியுமா?

முதலாவது கணக்குப் பாடத்தில் வல்லவளாக இருக்க வேண்டும்.

இரண்டாவது அளக பாரம் (கூந்தல்) நிறைய இருக்க வேண்டும்.

நம் தலையெழுத்தை மாற்ற வேண்டுமே!

*********************************************************************************************************************

இன்று கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்களின் 125 வது பிறந்த நாள். அந்த மாமேதையின் பெயரைச் சொல்லவோ     அவரைப் பற்றிய பதிவு எழுதும்  தகுதியோ இல்லை எனக்கு.

என்னைபோல பலரும் கணக்குப் பாடம் என்றால் ஓடுகிறார்களே. கணக்குப் பாடத்தை எப்படி சுவாரஸ்யமாக சொல்லித் தரலாம் என்று யோசனைகள் சொல்லுங்களேன்.

என் தோழி திருமதி அனுஸ்ரீனியின் பதிவையும் படியுங்களேன்: கணிதத்தைப் பற்றிய அவரது எண்ணங்களும் என் எண்ணங்களும் எத்தனை ஒத்துப் போகின்றன பாருங்கள்!

இதோ இன்னுமொரு தோழி திருமதி மஹாலக்ஷ்மி விஜயன் அவர்களின் அனுபவம்

எனது இன்னொரு தோழி திருமதி விஜயா கணக்கு ஆசிரியை. அவரும் கணித மேதை ராமானுஜம் பற்றி எழுதி இருக்கிறார். அதையும் படியுங்கள், ப்ளீஸ்!

இரண்டாவது எண்ணத்தில் இப்போது: ஒரு கோப்பையிலே நம் வாழ்க்கை!

கடைசி பதிவு…..??

இன்னும் நான்கு நாட்களில் என் வலைபதிவு குழந்தைக்கு ஒரு வருடம் நிரம்புகிறது.

நாளைக்கு இருப்போமா என்பதே சந்தேகம்….இன்னும் நாலு நாள் கழித்து நடக்கப் போவதை பற்றி பேசுகிறாயே என்கிறீர்களா?

அடுத்த வருடம் இந்த நாளில் போன வருடம் இப்படியெல்லாம் பயந்து கொண்டிருந்தோம் என்பதையே மறந்து விடுவோம், சரி தானே?

 

மேலும் படிக்க:I forget things!

முப்பதும் தப்பாமே…..!

 

thiruppavaiஇன்றைக்கு மார்கழி முதல் நாள்.

திருவாடிப் பூரத்து செகத்துதித்த, திருப்பாவை முப்பதும் செப்பிய, பெரியாழ்வார் பெற்றெடுத்த, பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னான, ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்த, உயரரங்கற்கு கண்ணி உகந்தளித்த, மருவாறும் திருமல்லி வளநாடி, வண்புதுவை நகர்கோதை அருளிச் செய்த திருப்பாவையால் சிறந்து விளங்கும் மாதம்.

தினமுமே திருப்பாவையை சேவித்த போதும் மார்கழியில் சேவிப்பது மன நிறைவைத் தரும். திருப்பாவையை நினைவு தெரிந்த நாளாக சேவித்து வருகிறேன்.

திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த போது விடியற்காலையில் மார்கழி மாதம் தினமும் பஜனை கோஷ்டி ஒன்று எங்கள் வீதி (நாகப்பா ஐயர் தெரு) வழியே போகும். அதுதான் எங்களுக்குத் திருப்பள்ளியெழுச்சி!

பள்ளியிலும் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுப்பார்கள். என் அக்கா, திருமதி எம்.எல்.வி. பாடிய ராகத்திலேயே எல்லாப் பாடல்களையும் அழகாகப் பாடுவாள். வாசலில் பெரிய கோலம் போடுவாள். நான்? ரசிப்பேன் அவ்வளவுதான்! நம்மால் முடிந்ததைத்தானே நாம் செய்ய முடியும்?

பிறகு புரசைவாக்கம் வந்தபோது நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். லேடி எம்.சி.டி. முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.

திருப்பாவை என்றால் எனக்கு நினைவுக்கு வரும் – ஆண்டாளைத் தவிர – ஒருவர் திரு கேதாரேஸ்வர ஸர்மா. எங்கள் தமிழ் வாத்தியார், ஸர்மா ஸார்.

மார்கழி மாதம் முப்பது நாளும் பள்ளி முடிந்த பின் திருப்பாவை அன்றைய நாள் பாட்டை சொல்லிக் கொடுத்து அதற்கு விளக்கமும் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவரது மாணவிகளுள் ஒருவர் வீட்டிலிருந்து பிரசாதம் வரும்.

வெள்ளைவெளேரென்ற பஞ்சகச்சம். வெள்ளை நிற அங்கி அதன் மேலே வண்ண ஷால். கட்டு குடுமி. நெற்றியில் பளீரென்ற திருநீறு.

ஆண்டாளைப் பற்றி சொல்லுகையில் கண்களில் நீர் ததும்பும்!

தமிழ் வாத்தியார் என்றால் மனதில் தோன்றும் பிம்பத்துக்கு ஏற்றார்போல் எங்கள் ஸர்மா ஸாருக்கும் நிறைய பெண்கள் + ஏழ்மை.

திருப்பாவை உபன்யாசத்துக்கு நடுவே தன் ஏழ்மையையும், ஆண்டாளும் அவள் சாதித்த திருப்பாவையுமே தன் பெண்களை கரையேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் கண்ணீருடன்  ஆண்டாளிடம் முன் வைப்பார்.

நாங்களும் கண்களில் கண்ணீருடன் அவருக்காக ஆண்டாளிடம் மானசீகமாக பிரார்த்தனை செய்து கொள்ளுவோம்.

அவரது மாணவிகளைத் தவிர, சில தாய்மார்களும் அவரது உபன்யாசத்தைக் கேட்க வருவார்கள். பல தாய்மார்கள் நேரில் வராவிட்டாலும் பிரசாதம் செய்து அனுப்பி விடுவார்கள்.

கடைசி நாளன்று – வங்கக் கடல் கடைந்த  பாசுரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடத்துவார். ரொம்பவும் அமர்க்களமாகப் பண்ணுவார். பூக்களும் நகைகளுமாக ஆண்டாளும் ரங்கமன்னாரும் மின்னுவார்கள். ஆண்டாள் பெருமாளுடன் கலந்து விட்டதை அவரால் சொல்லவே முடியாது. நா தழுதழுக்கும். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டும். உணர்ச்சிப் பெருக்கில் எல்லோரும் ஊமைகளாக உட்கார்ந்திருப்போம். அன்றைக்கு நிறைய மாணவிகள், பெற்றோர்களுடன் வருவார்கள்.

நடுவில் ஒரு நாள் திருப்பாவைப் போட்டி நடக்கும்.

வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டாள் படம் பரிசு. வருடம் தவறாமல் கலந்து கொண்டு பரிசும் வாங்கி விடுவேன் நான்.

ஆண்டாள் சாதித்த திருப்பாவை முப்பதையும் தப்பாமல் சொன்னால் நல்ல வாழ்க்கை அமையும்  என்ற  விதையை ஒவ்வொரு மாணவியின் உள்ளத்திலும் விதைத்தவர் அவர்தான்.

அவரது பெண்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்தது. அவர் நம்பிய ஆண்டாள் அவரைக் கைவிடவில்லை.

நானும் அவர் சொல்லியதை அப்படியே நம்பினேன். என் பெண்ணின் உள்ளத்திலும் திருப்பாவை என்கிற வித்தை விதைத்தேன்.

எனக்கு ஒரு நாராயணனும், அவளுக்கு ஒரு கேஷவ மூர்த்தியும்  கிடைத்து எங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்து இருக்கிறது.

‘சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்….

என்பதற்கு இதைவிட சாட்சி வேண்டுமா?

ப்ளாக்ஸ்பாட்டில் படிக்க: