வம்பு வேணுமா உமா?

 

எனது 250 வது பதிவு இது! என்பதை அடக்கத்துடன் சொல்லிகொள்ளுகிறேன்.

இப்போதெல்லாம் மாலை வேளை ஒரு புதிய பரிமாணம் அடைந்திருக்கிறது. தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டே நடந்து யோகா வகுப்புக்குப் போவது ஒரு மணி நேர யோகா பயிற்சிக்குப் பிறகு மறுபடி அரட்டை அடித்துக் கொண்டே திரும்பி வருவது. நடை  பயிற்சியும் ஆயிற்று; யோகாவும் ஆயிற்று.

நான் எனது மொழிப்புலமை பற்றி எழுதி இருந்தேன். நமக்கு நம் தாய் மொழி மிகவும் சுலபம்.

எனது யோகா வகுப்பில் எனக்கு இரண்டு தோழிகள். சுகன்யா, ஜோதி. சுகன்யாவின் தோழி உமா சிவஸ்வாமி. எனக்குத் தோழி சுகன்யா; சுகன்யாவின் தோழி உமா; அதனால் நானும் உமாவும் தோழிகள். (அட, அட, என்ன ஒரு லாஜிக்!)

மூவரும் கர்நாடகாவில் பிறந்து திருமணம் ஆன பின் தமிழ் நாட்டில் குடியேறி, தற்சமயம் தாய் மாநிலத்துக்கே திரும்பி வந்தவர்கள்.

நான் ஒருநாள் என் ‘பாப்பா’ அனுபவத்தை சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது உமா தன் அனுபவத்தை சொன்னார்:

‘திருமணம் ஆகிப் போன இடம் அம்பா சமுத்திரம். திருநெல்வேலி! அங்கு பேசும் தமிழ் சென்னை வாசிகளுக்கே புரியாது. போன புதிதில் பக்கத்து வீட்டு மாமியுடன் பேசிக்கொண்டு இருந்தேன் எனக்குத் தெரிந்த அரைகுறை தமிழில். மாமி பேசுவதும் அரைகுறையாகத்தான் புரியும். யாரையோ பற்றி பேசிக்கொண்டு இருந்த மாமி கேட்டார்:

‘நமக்கெதுக்கு வம்பு? உனக்கு வம்பு வேணுமா உமா?’

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என் வீட்டுக்காரரைக் கேட்டுச் சொல்லுகிறேன்’, என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

வேலையிலிருந்து வீடு திரும்பியவரிடம், ‘ பக்கத்து வீட்டு மாமி கேட்கிறார் வம்பு வேண்டுமா என்று என்ன சொல்ல?’

எனது கணவர் பல வருடங்களாக தமிழ் நாட்டில் இருந்தவர். நன்றாக தமிழ் வரும். என்னை பார்த்தவர், ‘ ‘சீப்’ ஆக இருந்தால் இரண்டு வாங்கிக் கொள்’ என்றார்.

நானும் அடுத்த நாள் மாமியிடம் போய் ‘சீப்’ ஆக இருந்தால் இரண்டு வாங்கிக் கொள்ளச் சொன்னார் என் வீட்டுக்காரர்’ என்று சொல்ல மாமி என் கன்னத்தை இரண்டு கைகளாலும் அழுத்தி திருஷ்டி கழித்து, ‘எத்தனை சமத்துடி நீ பொண்ணே!’ என்று சொல்லியபடியே சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

உமா சொல்லி முடிக்கவும், உமாவுடன் சேர்ந்து அந்த தெருவே அதிருகிறாப்போல நாங்கள் சிரித்தோம்.

‘இன்னிக்கு சிரிக்கிறேன். அன்னிக்கி என்னடாது மொழி தெரியாத ஊர்ல எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று ஒரு சின்ன பயம் இருந்தது’. என்றார் உமா.

இங்கு வந்த புதிதில் ஒரு பெண்மணி என்னிடம், ‘எஷ்டு மக்களு?’ என்றபோது கொஞ்சம் கோவமாக ‘மக்களு?!’ என்றேன். என்ன நம்மைப் பார்த்து எவ்வளவு மக்கள் என்கிறாளே, ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று என்று இரண்டுதானே என்று கோவம். பிறகுதான் தெரிந்தது மக்கள் என்றால் குழந்தைகள் என்று!

எனது வகுப்பில் ஒரு இளைஞர் முதல் நாள் வந்திருந்தார். நான் அவரிடம் ‘பெயர் என்ன?’ என்றேன்.

‘கணேசன்’

‘எங்கிருந்து வருகிறீர்கள்?’

‘பனசங்கரி’

அடுத்த நிமிடம் மற்ற மாணவர்கள் ‘மேடம் தமிளு!’ என்றார்கள்.

உண்மையில் எனக்கு இங்கு வந்தபின் தான் உச்சரிப்பில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

மகாபாரதம் (magabaradham!) महाभारथम  ஆகி இருக்கிறது.

எனக்கு வீட்டு வேலை செய்யும் சுதா தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மராட்டி என்று பல மொழிகள் பேசுவாள். ஒரு நாள் என்னிடம் வந்து ‘அம்மா பாங்கு – ல அக்கவுண்ட் ஆரம்பிக்கணும். சுதா – ன்னு  எழுத சொல்லிக் கொடுங்க என்றாள். ஆங்கிலத்தில் எழுத விரும்பிகிறாள் போலிருக்கிறது என்று நினைத்து நீ கன்னடாவிலேயே கையெழுத்துப் போடலாம் சுதா’, என்றேன். ‘எனக்கு ஒரு மொழியும் எழுத வராதும்மா’ என்ற அவள் சொன்ன போது  அசந்து விட்டேன். ‘இத்தனை மொழிகள் பேசுகிறாயே?’ என்றபோது ‘நான் வீட்டு வேலை செய்யும் வீடுகளில் பேசும் மொழிகள் எல்லாம் எனக்கு பேச வரும்மா. ஆனா எழுத படிக்க ஒரு மொழியும் தெரியாது’ என்றாள்.

‘நீங்க மட்டும் என்னோட கூட இங்கிலீஷ்ல தினம் பேசினீங்கன்னா அதையும் பேசுவேன்….!’

சுதாவுக்கு இருக்கும் தன்னம்பிக்கை படித்த நம் இளைஞர்களுக்கு ஏன் இல்லை?

21 thoughts on “வம்பு வேணுமா உமா?

 1. உங்க அளவிற்கு எழுதக் கற்கிறேனோ இல்லையோ, குறைந்தபட்சம் மொழிகளையாவது கற்பேன்! நன்றி..

  1. நன்றி தமிழ்! கணணி சரியில்லை. இன்று தான் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.

 2. இன்னொரு Shawshank Redemption பார்த்த எபக்ட். செம ஜாலி, காமெடி பதிவு….. கடைசி வரி வரை. நச் முடிவு ! 250க்கு வாழ்த்துகள். மேலும் இது போல எழுதுங்கள் 🙂

  நாற்சந்தியிலிருந்து,
  ஓஜஸ் !

 3. நல்லவேளை. வம்பு கிலோ என்ன விலைன்னு கேட்காம வீட்டுக்காரரைக் கேட்டுச் சொன்னாளே? அவளும் கெட்டிக்காரிதான்.
  நிறைய அனுபவங்கள். சொல்லச்,சொல்ல கேட்டு ரஸிக்க முடிகிரது.
  பதிவுகளை, சீக்கிரம் படித்து கமென்ட் போட முடியலே. கொஞ்சம்
  தாமதம். அவ்வளவுதான்.

  1. உன் 250 ஆவது பதிவுகள் எண்ணமுடியாத பல பதிவுகளாக மிளிர வாழ்த்துக்கள்.

  2. எனக்கும் உடனே நன்றி சொல்ல முடியவில்லை. கணணி சரியில்லை. அதனால் தாமதம்.இன்றுதான் எல்லோருடைய பின்னூட்டத்தையும் பார்க்க முடிந்தது.

 4. மிக நன்றாக இருந்தது.
  உங்களின் 250க்கு வாழ்த்துக்கள்.உங்களின் பிற மொழி அனுபவங்களை ரசித்து ரசித்து எழுதுகிறீர்கள்.

  ராஜி.

 5. 250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.மேன்மேலும் வளர மீண்டும் வாழ்த்துக்கள்.இந்த நகைச்சுவையான பதிவுக்கு பாராட்டுக்கள்.

 6. நல்ல அனுபவப் பகிர்வு .மிக சுவை.
  தங்கள் 250வது பதிவுக்க இனிய நல்வாழ்த்து.
  வம்பு வாங்கலாமா?!!!!!!
  வேதா. இலங்காதிலகம்.

  1. வம்பு வேணுமென்றால் வாங்கலாம், சகோதரி!

   வாழ்த்துக்களுக்கு நன்றி!

 7. வணக்கம்
  ரஞ்ஜனியம்மா

  குடும்பச் சுமையை நெஞ்சில் தாங்கி வேலைச் சுமையை கைகளில் சுமந்து
  உள்ளம் சோர்வு கொள்ளாமல் பல வெற்றிப்படிகளை தாண்டியும் இளமை கடந்து முதுமையான வயதில் காகிதத்துடனும் பேனாவுடனும் போராடி உங்கள் அளுமை விருத்தியை வக்கிரப்படுத்தி பலவகைப்பட்ட படைப்புகளை வாசக உள்ளங்களுக்கு விருந்தாக அளித்திர்கள் என்றும் எழுத்துலகில் வெற்றி வகை சூட எனது வாழ்த்துக்கள் உங்களின் 250 வது படைப்பு மிக அருமையாகவும் நல்ல மொழிநடையிலும் எழுதப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் அம்மா 250 ம் அதையும் தாண்டி மேலும் படைப்புக்கள் ஒளிரவேண்டும்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s