வம்பு வேணுமா உமா?

 

எனது 250 வது பதிவு இது! என்பதை அடக்கத்துடன் சொல்லிகொள்ளுகிறேன்.

இப்போதெல்லாம் மாலை வேளை ஒரு புதிய பரிமாணம் அடைந்திருக்கிறது. தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டே நடந்து யோகா வகுப்புக்குப் போவது ஒரு மணி நேர யோகா பயிற்சிக்குப் பிறகு மறுபடி அரட்டை அடித்துக் கொண்டே திரும்பி வருவது. நடை  பயிற்சியும் ஆயிற்று; யோகாவும் ஆயிற்று.

நான் எனது மொழிப்புலமை பற்றி எழுதி இருந்தேன். நமக்கு நம் தாய் மொழி மிகவும் சுலபம்.

எனது யோகா வகுப்பில் எனக்கு இரண்டு தோழிகள். சுகன்யா, ஜோதி. சுகன்யாவின் தோழி உமா சிவஸ்வாமி. எனக்குத் தோழி சுகன்யா; சுகன்யாவின் தோழி உமா; அதனால் நானும் உமாவும் தோழிகள். (அட, அட, என்ன ஒரு லாஜிக்!)

மூவரும் கர்நாடகாவில் பிறந்து திருமணம் ஆன பின் தமிழ் நாட்டில் குடியேறி, தற்சமயம் தாய் மாநிலத்துக்கே திரும்பி வந்தவர்கள்.

நான் ஒருநாள் என் ‘பாப்பா’ அனுபவத்தை சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது உமா தன் அனுபவத்தை சொன்னார்:

‘திருமணம் ஆகிப் போன இடம் அம்பா சமுத்திரம். திருநெல்வேலி! அங்கு பேசும் தமிழ் சென்னை வாசிகளுக்கே புரியாது. போன புதிதில் பக்கத்து வீட்டு மாமியுடன் பேசிக்கொண்டு இருந்தேன் எனக்குத் தெரிந்த அரைகுறை தமிழில். மாமி பேசுவதும் அரைகுறையாகத்தான் புரியும். யாரையோ பற்றி பேசிக்கொண்டு இருந்த மாமி கேட்டார்:

‘நமக்கெதுக்கு வம்பு? உனக்கு வம்பு வேணுமா உமா?’

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என் வீட்டுக்காரரைக் கேட்டுச் சொல்லுகிறேன்’, என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

வேலையிலிருந்து வீடு திரும்பியவரிடம், ‘ பக்கத்து வீட்டு மாமி கேட்கிறார் வம்பு வேண்டுமா என்று என்ன சொல்ல?’

எனது கணவர் பல வருடங்களாக தமிழ் நாட்டில் இருந்தவர். நன்றாக தமிழ் வரும். என்னை பார்த்தவர், ‘ ‘சீப்’ ஆக இருந்தால் இரண்டு வாங்கிக் கொள்’ என்றார்.

நானும் அடுத்த நாள் மாமியிடம் போய் ‘சீப்’ ஆக இருந்தால் இரண்டு வாங்கிக் கொள்ளச் சொன்னார் என் வீட்டுக்காரர்’ என்று சொல்ல மாமி என் கன்னத்தை இரண்டு கைகளாலும் அழுத்தி திருஷ்டி கழித்து, ‘எத்தனை சமத்துடி நீ பொண்ணே!’ என்று சொல்லியபடியே சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

உமா சொல்லி முடிக்கவும், உமாவுடன் சேர்ந்து அந்த தெருவே அதிருகிறாப்போல நாங்கள் சிரித்தோம்.

‘இன்னிக்கு சிரிக்கிறேன். அன்னிக்கி என்னடாது மொழி தெரியாத ஊர்ல எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று ஒரு சின்ன பயம் இருந்தது’. என்றார் உமா.

இங்கு வந்த புதிதில் ஒரு பெண்மணி என்னிடம், ‘எஷ்டு மக்களு?’ என்றபோது கொஞ்சம் கோவமாக ‘மக்களு?!’ என்றேன். என்ன நம்மைப் பார்த்து எவ்வளவு மக்கள் என்கிறாளே, ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று என்று இரண்டுதானே என்று கோவம். பிறகுதான் தெரிந்தது மக்கள் என்றால் குழந்தைகள் என்று!

எனது வகுப்பில் ஒரு இளைஞர் முதல் நாள் வந்திருந்தார். நான் அவரிடம் ‘பெயர் என்ன?’ என்றேன்.

‘கணேசன்’

‘எங்கிருந்து வருகிறீர்கள்?’

‘பனசங்கரி’

அடுத்த நிமிடம் மற்ற மாணவர்கள் ‘மேடம் தமிளு!’ என்றார்கள்.

உண்மையில் எனக்கு இங்கு வந்தபின் தான் உச்சரிப்பில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

மகாபாரதம் (magabaradham!) महाभारथम  ஆகி இருக்கிறது.

எனக்கு வீட்டு வேலை செய்யும் சுதா தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மராட்டி என்று பல மொழிகள் பேசுவாள். ஒரு நாள் என்னிடம் வந்து ‘அம்மா பாங்கு – ல அக்கவுண்ட் ஆரம்பிக்கணும். சுதா – ன்னு  எழுத சொல்லிக் கொடுங்க என்றாள். ஆங்கிலத்தில் எழுத விரும்பிகிறாள் போலிருக்கிறது என்று நினைத்து நீ கன்னடாவிலேயே கையெழுத்துப் போடலாம் சுதா’, என்றேன். ‘எனக்கு ஒரு மொழியும் எழுத வராதும்மா’ என்ற அவள் சொன்ன போது  அசந்து விட்டேன். ‘இத்தனை மொழிகள் பேசுகிறாயே?’ என்றபோது ‘நான் வீட்டு வேலை செய்யும் வீடுகளில் பேசும் மொழிகள் எல்லாம் எனக்கு பேச வரும்மா. ஆனா எழுத படிக்க ஒரு மொழியும் தெரியாது’ என்றாள்.

‘நீங்க மட்டும் என்னோட கூட இங்கிலீஷ்ல தினம் பேசினீங்கன்னா அதையும் பேசுவேன்….!’

சுதாவுக்கு இருக்கும் தன்னம்பிக்கை படித்த நம் இளைஞர்களுக்கு ஏன் இல்லை?