வோட்டுப் போட்டால் புளியோதரை….!

அமெரிக்கத் தேர்தல் முடிந்து திரு ஒபாமா மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சமயத்தில் அந்தக் கால தேர்தல் பற்றி நான் படித்த ஒரு சிறிய கட்டுரை இதோ:

‘என் வாழ்க்கையில் முதன்முதலில் நான் தேர்தல் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான். ஆனால், இந்தக் காலத்துத் தேர்தல் பிரசாரங்களுக்கும், தடபுடல்களுக்கும் அது எவ்விதத்திலும் ஈடாகுமா? எனினும் அந்தக் காலத்துத் தேர்தல் நிகழ்ச்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தவை பிரமாதமாக இருந்தன என்றே சொல்லவேண்டும்.

அவைகளில் முனிசிபல் வார்டு எலெக்ஷன் தான் முக்கியமானது. அப்போது எவ்வளவு தேடித் பார்த்தாலும் ஒரு வார்டில் நூறு வாக்காளர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள். ஆனாலும், எலெக்ஷன் என்றால், ஊரில் எங்கும் ஒரே பரபரப்பாகத்தான் இருக்கும்.

அப்போது முனிசிபல் ஆபீஸ் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதித் தெருவில் இருந்தது. அது ஒரு மண்டபம். போட்டி போடும் ஒவ்வொருவரும் முனிசிபல் ஆபீஸுக்குப் பக்கத்தில் இருக்கும் மற்ற மண்டபங்கள் ஒவ்வொன்றிலும் ஜாகை ஏற்படுத்திக் கொள்ளுவார்கள். வோட்டுப் போடுகிறவர்களை அபேட்சகர்கள் ஆட்களை அனுப்பியோ, வண்டிகளிலேயோ கூட்டிக்கொண்டு வருவார்கள். முதலில் அவரவர்கள் ஜாகைக்குத் தான் கூட்டிக்கொண்டு வருவார்கள்.

அங்கே ஓர் கூடையில் புளியோதரை; மற்றொரு கூடையில் தோசை; இன்னும் பிரசாத வகைகளையும் வைத்திருப்பார்கள். கலியாண அழைப்புக்காக வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குத் தாம்பூலம் கொடுத்து மரியாதை செய்யும் வழக்கம் இருக்கிறதல்லவா? அதேபோல, வோட்டுப் போட வந்தவர்களுக்கும் ஏதாவது மரியாதை செய்யாமல் அனுப்புவது நன்றாக இராது என்று எண்ணித்தான் பிரசாத வகையறாக்களை கொடுத்து உபசாரம் செய்வது. வந்தவர்கள் முதலில் புளியோதரை, தோசைகளைச் சாப்பிட்டுவிட்டுத் தான் பிறகு வோட்டுப் போடப் போவார்கள்.

புளியோதரை, பொங்கல், தோசை இவைகளை சாப்பிட்டப் பிறகு தான் வோட்டுப் போட வேண்டுமென்று தேர்தல் விதி ஒன்றும் கிடையாது. ஆனால், நடைமுறையில் அப்படித்தான்!

இதைத் தெரிந்து கொள்ளாமல் யாரவது நேராகப் போய் வோட்டுப் போட்டு விட்டால், அப்புறம் புளியோதரை, தோசை ஒன்றையும் அவர் காண முடியாது! வோட்டுப் போட்ட பிறகு அவரை என்ன, ஏது என்று கேட்பார் தான் யார்…? திக்கற்ற அநாதை போல வீடு திரும்ப வேண்டியதுதானே!

ஆனால் ஒன்று: ஒரு மண்டபத்தில் சாப்பிட்டு விட்டு மற்றொரு மண்டபக் காரருக்கு வோட்டுப் படுவது அந்தக் காலத்தில் நடந்திருக்காது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் இந்தக் காலம் மாதிரி எலெக்ஷன் சூட்சுமங்களும் சூழ்ச்சிகளும் அவ்வளவாக இல்லாத காலம் அல்லவா?’

பின் குறிப்பு:

தமிழகத்தின் முதல்வராக இருந்த பி.எஸ். குமாரஸ்வாமி ராஜா ஆனந்த விகடன் இதழில் 1952 தனது இளைமைக்கால நினைவுகளை எழுதி இருந்தார். 1998 ஆம் வருடம் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது ஆ.வி. யில், அதிலிருந்து சில பகுதிகளை வெளி இட்டனர். அதிலிருந்து ஒரு பகுதி தான் நீங்கள் மேலே படித்தது.

 

என் அம்மாவிற்கு பிடித்த பொழுதுபோக்கு பத்திரிகைகளில் வரும் நல்ல கதை கட்டுரை கவிதைகளை எடுத்து புத்தகமாகத் தைத்து வைப்பது. இன்று பிற்பகல் ஓய்வின்போது இந்தத் தொகுப்பை படிக்க எடுத்தபோது இந்தக் கட்டுரை கண்ணில் பட்டது.

சுவாரஸ்யமான இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று!

 

 

17 thoughts on “வோட்டுப் போட்டால் புளியோதரை….!

 1. அந்த காலத்தில் நல்ல முறையாக இருந்திருக்கிறதே….. நிச்சயம் அடுத்த மண்டபத்துக்காரருக்கு போட்டிருக்க மாட்டார்கள்.

  1. உண்ட வீட்டுக்கு ரண்டகம் நினைத்திருக்க மாட்டார்கள் இல்லையா?

   நன்றி ஆதி!

 2. மாமி, புளியோதரைக்காக தான் படிக்க ஆரம்பித்தேன், சுவையான பதிவு. ஒரு வருத்தம் மட்டும், இன்று இந்த கலாச்சாரம் இல்லமால் போய் விட்டது. 🙂 ‘வட போச்சே’ மாதிரி ஐயர் வீட்டு புளியோதரை போச்சே ;-(

 3. நல்ல பதிவு… தேர்தல் சமயத்தில் பதிவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்…

  1. வாருங்கள் ரக்ஷித்! அப்போது மீள் பதிவு போட்டுவிட்டால் போச்சு!

   நன்றி!

 4. No worries!
  எங்கள் வீட்டிற்கு எப்போது வந்தாலும் புளியோதரை உண்டு!
  எனக்கு பின்னூட்டம் போட்டாலும், போடாவிட்டாலும்!

  நன்றி ஓஜஸ்!

 5. ஒட்டுபோட்டுட்டு வந்தால் புளியோதரை கிடைக்காது.அப்பொழுது இருந்தே ஓட்டுப்போடும் வரைதான்.தொட்டில் பழக்கம் மாறவேண்டும் . இது நகைச்சுவை. புளியோதரையிலிருந்து நமது கட்சி குடம்,மூக்குத்தி என்று முன்னேறி,வரிப்பணத்திலேயே மிக்சி ,கிரைண்டர்,மடிகணினி,இலவச வண்ண தொலைக்கட்சிப்பெட்டி என வளர்ந்துள்ளது.
  வாழ்க ஜனநாயகம்.வாழ்க மக்கள்.

 6. முன்னெல்லாம் தொடர்கதைகள் முதலானதை பைண்ட் செய்து வைக்கும் பழக்கம் இருந்தது.
  புத்ததகங்கள் அதிகம் அறிமுகமில்லாக் காலம். பதிப்புகளும் எல்லோராலேயும் வாங்கயியலாது..திக் அட்டையிட்டு விகடனின் பதிப்புகள் கொடிகட்டிப் பறந்த காலம். உங்கம்மாவும் சேர்த்து வைத்தது அழகான பொக்கிஷமாக உதவுகிறது. உங்கம்மாவிற்கு
  சொன்னீர்களா? படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது. நல்ல பதிப்பு. நான் இதுவரை ஓட்டே போட்டதில்லை. ஓட்டர் அடையாள அட்டை போட்டோவுடன் இருக்கிறது. இது எப்படி?
  வீடுவீடா கலர் டி.வி கொடுத்த கதையைவிட புளியோதரை ருசியாக இருந்திருக்கும்.
  அதுவும் ஸ்ரீவில்லி புத்தூர். ருசிக்கிரது.

 7. ரஞ்ஜனி,

  உண்மையில் இக்கட்டுரை சுவாரசியமாகத்தான் இருக்கிறது.இதை சேமித்துவைத்த உங்கம்மாவுக்கும்,தேடிப்பிடித்து வெளியிட்ட உங்களுக்கும் நன்றி.

  புளிசாதமும்,தோசையும்தான் பரிணாம வளர்ச்சியில் கலர் டிவியாகவும், மடிகணினியாகவும் வளர்ந்திருக்கிறதோ!ஓட்டு போடுமுன்,போட்ட பிறகு வாக்காளரின் நிலைமை தலைகீழாக உள்ளதே.எல்லா காலத்திலும் மக்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

 8. வாருங்கள் சித்ரா,
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்! உங்கள் ஊர் தீபாவளி பற்றிய உங்கள் பதிவை எதிர் பார்க்கிறேன்.

 9. வணக்கம்
  ரஞ்ஜனியம்மா

  உண்மையில் நல்ல கருத்தை விதைத்துள்ளிர்கள் உங்கள் கட்டுரையில் அந்தக்காலத்தில் வாக்களிக்கச் செல்லும் அனைவருக்கும் புளியோதரை,தோசை,மற்றும் பிரசாதங்கள் கொடுத்தார்கள் ஆனால் இன்றைய காலகட்டத்தில் ,கலர் தொலைக்காட்சிப்பெட்டி,காந்திதாத்தா நோட்டும்,பிரியாணியும் கொடுக்கின்றார்கள் நம்மட சமுதாயம் வயிற்று பசிக்கும் பணத்துக்கும் உரிமையை விக்கும் சமுகம் நம்மட சமுதாயம் ,சுயமாக சிந்தித்து ஒருநாட்டின் பிரஜா உரிமை உடைய (நான்) என்ற சிந்தனை வளரும் வரை மேல் சொல்லப்பட்ட நிலை கட்டாயம் தொடரும்,
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 10. அருமையான பதிவு;
  ஓட்டு போடுவதற்க்கு முன் தான் உபசரிப்பு,
  ஓட்டிற்க்குப் பிறகெல்லாம் ஒன்றும் கிடையாது
  அன்றும் இன்றும் ஒன்றே என்று தோன்றுகிறது.

  இருந்தாலும், புளியோகரை தான் கிடைப்பதில்லை இப்பொழுதெல்லாம்….
  ஆனாலும் பிரியாணி கிடைக்கிறது (கேள்விப் பட்டிருக்கிறேன்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s