வோட்டுப் போட்டால் புளியோதரை….!

அமெரிக்கத் தேர்தல் முடிந்து திரு ஒபாமா மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சமயத்தில் அந்தக் கால தேர்தல் பற்றி நான் படித்த ஒரு சிறிய கட்டுரை இதோ:

‘என் வாழ்க்கையில் முதன்முதலில் நான் தேர்தல் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான். ஆனால், இந்தக் காலத்துத் தேர்தல் பிரசாரங்களுக்கும், தடபுடல்களுக்கும் அது எவ்விதத்திலும் ஈடாகுமா? எனினும் அந்தக் காலத்துத் தேர்தல் நிகழ்ச்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தவை பிரமாதமாக இருந்தன என்றே சொல்லவேண்டும்.

அவைகளில் முனிசிபல் வார்டு எலெக்ஷன் தான் முக்கியமானது. அப்போது எவ்வளவு தேடித் பார்த்தாலும் ஒரு வார்டில் நூறு வாக்காளர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள். ஆனாலும், எலெக்ஷன் என்றால், ஊரில் எங்கும் ஒரே பரபரப்பாகத்தான் இருக்கும்.

அப்போது முனிசிபல் ஆபீஸ் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதித் தெருவில் இருந்தது. அது ஒரு மண்டபம். போட்டி போடும் ஒவ்வொருவரும் முனிசிபல் ஆபீஸுக்குப் பக்கத்தில் இருக்கும் மற்ற மண்டபங்கள் ஒவ்வொன்றிலும் ஜாகை ஏற்படுத்திக் கொள்ளுவார்கள். வோட்டுப் போடுகிறவர்களை அபேட்சகர்கள் ஆட்களை அனுப்பியோ, வண்டிகளிலேயோ கூட்டிக்கொண்டு வருவார்கள். முதலில் அவரவர்கள் ஜாகைக்குத் தான் கூட்டிக்கொண்டு வருவார்கள்.

அங்கே ஓர் கூடையில் புளியோதரை; மற்றொரு கூடையில் தோசை; இன்னும் பிரசாத வகைகளையும் வைத்திருப்பார்கள். கலியாண அழைப்புக்காக வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குத் தாம்பூலம் கொடுத்து மரியாதை செய்யும் வழக்கம் இருக்கிறதல்லவா? அதேபோல, வோட்டுப் போட வந்தவர்களுக்கும் ஏதாவது மரியாதை செய்யாமல் அனுப்புவது நன்றாக இராது என்று எண்ணித்தான் பிரசாத வகையறாக்களை கொடுத்து உபசாரம் செய்வது. வந்தவர்கள் முதலில் புளியோதரை, தோசைகளைச் சாப்பிட்டுவிட்டுத் தான் பிறகு வோட்டுப் போடப் போவார்கள்.

புளியோதரை, பொங்கல், தோசை இவைகளை சாப்பிட்டப் பிறகு தான் வோட்டுப் போட வேண்டுமென்று தேர்தல் விதி ஒன்றும் கிடையாது. ஆனால், நடைமுறையில் அப்படித்தான்!

இதைத் தெரிந்து கொள்ளாமல் யாரவது நேராகப் போய் வோட்டுப் போட்டு விட்டால், அப்புறம் புளியோதரை, தோசை ஒன்றையும் அவர் காண முடியாது! வோட்டுப் போட்ட பிறகு அவரை என்ன, ஏது என்று கேட்பார் தான் யார்…? திக்கற்ற அநாதை போல வீடு திரும்ப வேண்டியதுதானே!

ஆனால் ஒன்று: ஒரு மண்டபத்தில் சாப்பிட்டு விட்டு மற்றொரு மண்டபக் காரருக்கு வோட்டுப் படுவது அந்தக் காலத்தில் நடந்திருக்காது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் இந்தக் காலம் மாதிரி எலெக்ஷன் சூட்சுமங்களும் சூழ்ச்சிகளும் அவ்வளவாக இல்லாத காலம் அல்லவா?’

பின் குறிப்பு:

தமிழகத்தின் முதல்வராக இருந்த பி.எஸ். குமாரஸ்வாமி ராஜா ஆனந்த விகடன் இதழில் 1952 தனது இளைமைக்கால நினைவுகளை எழுதி இருந்தார். 1998 ஆம் வருடம் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது ஆ.வி. யில், அதிலிருந்து சில பகுதிகளை வெளி இட்டனர். அதிலிருந்து ஒரு பகுதி தான் நீங்கள் மேலே படித்தது.

 

என் அம்மாவிற்கு பிடித்த பொழுதுபோக்கு பத்திரிகைகளில் வரும் நல்ல கதை கட்டுரை கவிதைகளை எடுத்து புத்தகமாகத் தைத்து வைப்பது. இன்று பிற்பகல் ஓய்வின்போது இந்தத் தொகுப்பை படிக்க எடுத்தபோது இந்தக் கட்டுரை கண்ணில் பட்டது.

சுவாரஸ்யமான இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று!