தீபாவளி வந்தாச்சு!

 

 

இன்று காலை சம்மந்தி அம்மா வந்திருந்தார். மாட்டுப் பெண்ணின் அம்மா. பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கூடவே மாப்பிள்ளைக்கு புது டிரஸ் வாங்கிக் கொள்ள பணம். எல்லாவற்றையும் வைத்து என்னிடம் நீட்டினார்.

நான் அதை அப்படியே மாட்டுப் பெண்ணிடம் கொடுத்து விட்டேன். சம்மந்தி அம்மா கிளம்பியவுடன், மாட்டுப் பெண் ‘நாம போய் உங்களுக்கும், அப்பாவுக்கும் புது துணிமணிகள் வாங்கலாம் வாருங்கள்’ என்றாள். படு குஷியுடன் கிளம்பி விட்டேன்.

புடவை வாங்கப் போய் ரொம்ப நாளாகிவிட்டது. இப்போதெல்லாம் புது புடவை வாங்குவதே இல்லை. பிறந்த நாளுக்குக் கூட ஒன்றும் வாங்கிக் கொள்ளவில்லை. தியாகம் எல்லாம் இல்லை. வெளியே போவது ரொம்பவும் குறைந்து விட்டது. புடவை வாங்கி அடுக்குவானேன் என்று.

முன்பெல்லாம் அதாவது நான் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தபோது பிறந்தநாளுக்கு மூன்று, தீபாவளிக்கு மூன்று என்று புடவைகள் வாங்கிக் கொண்டே இருப்பேன். அதுவும் காட்டன் புடவைகள் தான். என் அம்மா சொல்வாள்: ‘புடவை விலையை விட maintenance –க்கு அதிகம் செலவழிக்கிறாய்’ என்று! காட்டன் புடவையில் வரும் கம்பீரம் வேறு எதிலும் வருவதில்லை.

சரி இன்றைய கதைக்கு வருவோம்:

எப்போதும் போகும் பொப்பத்தி கடைக்குப் போனோம். சில்க் காட்டன் புடவைகள் பார்த்தோம். எல்லா கலருமே என்னிடம் இருப்பது போல இருந்தது. பச்சை வேண்டாம், நீலம் வேண்டாம், மரூன் வேண்டாம் – வேறு என்ன கலர் வாங்குவது? வெள்ளையில் மரூன் பார்டர் – என்னவருக்குப் பிடிக்கவில்லை. பச்சையில் மரூன் பார்டர் எனக்கு அவ்வளவாக சரி படவில்லை.

‘மாட்டுப் பெண்ணே என்னடி வாங்குவது?’ என்றேன்.

‘உங்களுக்குப் பிடித்ததை வாங்குங்கோ’ என்றாள் சமத்து!

ஆஹா! கண்டேன் சீதையை இல்லையில்லை! மயில் கழுத்துக் கலர் பச்சையும் நீலமும் கலந்து இரண்டு பக்கமும் பார்டர் போட்ட புடவை. அகல பார்டர் புடவை, இரண்டு பக்க பார்டர் புடவை  – உயரமானவர்களுக்குத் தான் நன்றாக இருக்கும். நிஜம் தான் ஆனால் எனக்குப் பிடித்திருக்கிறதே! நான் உயரம் இல்லை என்று நன்றாக இருக்கும் புடவையை வாங்காமல் இருக்க முடியுமா?

விலையைப் பார்த்தேன். கிறுகிறுத்தது. நான் பார்த்து கிறுகிறுத்ததை மாட்டுப் பெண் பார்த்தாள்.

‘விலையைப் பார்க்காதீங்கோ. பிடித்திருந்தால் வாங்கிக்கோங்கோ’ என்றாள். வாங்கியாச்சு!

எல்லாவற்றையும் விட எது அதிசயம்? 10 நிமிடத்தில் புடவை வாங்கினது தான்!

 

புடவை வாங்கி முடித்து பில் போட வந்தோம். பட்டுப் புடவை செக்ஷனில் ஒரு இளம் தம்பதி. அந்தப் பெண் தனது  தோளின் ஒரு பக்கம் வெள்ளையில் பல கலர் பார்டர் போட்ட புடவை; இன்னொரு பக்கம் நல்ல மஞ்சளில் அதே போல பல கலர் பார்டர் போட்ட புடவையைப் போட்டுக் கொண்டு எதை எடுப்பது என்று தெரியாமல் கணவனை கேட்டுக் கொண்டிருந்தாள். கடை சிப்பந்தியில் கையில் நல்ல நீல நிறத்தில் அதேபோல ஒரு புடவை!

நான் சும்மா வந்திருக்கலாம்.  சும்மா வருவது unlike Ranjani! இல்லையா?

‘உங்கள் கலருக்கு மஞ்சள் நன்றாக இருக்கும்….’என்றேன். அந்த இளம்  கணவன் என்னைப் பார்த்து, ‘என் விருப்பம் வெள்ளை ஆனால் அவள் மஞ்சள்…..!’ என்றான்.

‘இரண்டு பேருக்கும் பொதுவாக நீலத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.

இரண்டு பேரும் வாய்விட்டு சிரித்தனர்.

இதற்கு மேல் பேசினால் எல்லை மீறல்!

‘ஹேப்பி தீபாவளி’ என்று வாழ்த்தி விட்டு நகர்ந்தேன்.

தீபாவளி வந்தாச்சு!

 

 

 

20 thoughts on “தீபாவளி வந்தாச்சு!

 1. அது எப்படிங்க, எங்க போனாலும் அசால்ட்டா காமெடி பண்ணுறீங்க…. எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்க ! அத வேற அழகா கட கடனு படிக்கற மாதிரி எழுதுறீங்க 🙂

 2. இரண்டு பேருக்கும் பொதுவா நீலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் – இது நல்ல அட்வைஸ்! 🙂

  தீபாவளி வந்தாச்சு – வாழ்த்துகள் அம்மா.

  1. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்க்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்!

  2. நன்றி தனபாலன்! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்க்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்!

 3. .தீபாவளி வந்தாச்சு ! புத்தாடை எடுத்துவிட்டீர்கள் என்பதை பதிவிட்டு சொல்கிறீர்கள்….,தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா !

 4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள் விஜயன்!
  நன்றி!

 5. தீபாவளி வந்தாச்சு, மயில் கழுத்துக் கலர் புடவையோட,மற்றவர்களுக்கெடுத்ததெல்லாம் சஸ்பென்ஸா? அதைத் தெறிந்து கொள்ள எனக்கென்றே வைத்துக் கொள்ளேன் ஆசை இருக்காதா.
  அடுத்து பக்ஷணமா. நான் வேண்டுமானால் உதவிக்கு வரட்டா? அடுத்த தெருவானால் வந்து நிக்கலாம்.
  விலையைப் பாகாகாதிங்கோ, பிடிச்சா வாங்கிக்கங்கோ.
  புடவைக் கடையில் மாட்டுப் பெண். உன்னை மாதிறியே
  சொல்றா, என் மாட்டுப் பெண்ணிடம் சொன்னேன். ஸெலக்க்ஷன் அழகாயிருக்கு. பதிவும் அழகு. அன்புடன்

 6. மாட்டுப் பெண், பிள்ளை, அகத்துகாரர் எல்லோருக்கும் ரெடிமேட்!
  அடுத்தது பட்சணம் தான். நீங்கள் சொல்லிக் கொடுத்த அதிரசம் முயற்சிக்கலாம் என்று.
  நிஜமாகவே நீங்கள் பக்கத்தில் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!

  உங்களது பின்னூட்டம் நிஜமாகவே ஊட்ட சத்து தான். ஊக்க சத்தும் கூட!

  நன்றி!

 7. Hi mam,

  Happy Diwali. Not able to access the mails/ entries for few days because of some busy schedule. ( golu at home, busy at office…).
  Just read this recent entry. very good. Both your write up as well as the colour choice of saree. (peacock colour is my as well as my daughter’s favourite).
  best wishes for starting another blog.

  Once again Happy Diwali to you & your family.

  PS : Mami sonnadu pol adirasam seidal enakkum koduthu anupungo.

  thanks.

  1. நன்றி ஷீலா!
   நிச்சயம் அதிரசம் பார்சல் செய்கிறேன்!

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

 8. தீபாவளி வாழ்த்துகள் அம்மா. இங்கயும் தீபாவளி வந்தாச்சு.
  உங்க பதிவை படிக்கும் போது எனக்கு மங்கையர் மலர் படிப்பது போன்ற திருப்தி ஏற்படுகிறது.

 9. தீபாவளி வாழ்த்துக்கள் ஆதி! ஜவுளி எடுத்தாகி விட்டதா?

  உங்கள் பாராட்டுக்கு நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s