முதல் முறையாக சிங்காரச் சென்னையை விட்டு நான் வெளியே வந்தது 1987 ஆம் ஆண்டுதான்.
அதுவே பெரிய சாதனையாக எனக்குத் தோன்றியது. இரண்டு நாட்கள் எங்காவது வெளியூர் போனாலே ‘ஆனந்தம் ஆனந்தம்’ பாடும் நான், சில வருடங்கள் பெங்களூரில் இருப்போம் என்றவுடன் ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விட்டேன்.
ஏப்ரல் மாதத்தில் குழந்தைகளுக்கு விடுமுறை ஆரம்பித்தவுடன் இங்கு வந்து விட்டோம். பசவங்குடியில் ஒரு பிரபல பள்ளியில் (TVS கம்பெனி என்று சொல்லுங்கள். உடனே இடம் கிடைக்கும் என்று நண்பர்கள் சொன்னார்கள்!) இருவரையும் சேர்த்தோம்.
என் அம்மா மல்லேஸ்வரத்தில் வீடு பார்க்கச் சொன்னாள்: ’தமிழ்காரா நிறைய இருப்பா. நீ கன்னடம் கத்துக்க வேண்டிய சிரமம் இருக்காது….’
ஆனால் என் எண்ணமே வேறு. ‘ரோமில் இருக்கும்போது ரோமாநியனாக இருக்க வேண்டும் இல்லையா? வாழ்வில் முதல் முறையாக வெளி ஊருக்கு வந்திருக்கிறோம். புது ஊர், புது பாஷை, புது மனிதர்கள் ஒவ்வொன்றையும் அனுபவிக்க வேண்டும், இல்லையா?
ஆங்கிலம் பேச வராமல் நான் தவித்த போது என் அப்பா சொன்ன ஒரு அறிவுரை: காதுகளை திறந்து வைத்துக் கொள். கவனமாகக் கேள். ஓரளவுக்குப் புரியும்.’
அப்பா சொன்ன அறிவுரையை பெங்களூர் வந்தவுடன் செயலாற்றத் தொடங்கினேன்.
நாங்கள் அப்போது இருந்து இடம் நரசிம்ம ராஜா காலனி. நிறைய கன்னடக்காரர்கள் இருக்குமிடம். கன்னடம் காதில் விழுந்து கொண்டே இருந்ததால் மூன்று மாதத்தில் கன்னட மொழியை தமிழில்– நான் பேச ஆரம்பிக்கும்போதே ‘தமிளா?’ என்று கேட்கும் அளவுக்கு பேச ஆரம்பித்தேன்!
என் குழந்தைகள் இருவரும் ‘அம்மா, ப்ளீஸ் கன்னடத்துல பேசாதம்மா! நீ தமிழ் உச்சரிப்புல பேசறது எங்களுக்கு வெக்கமா இருக்கு…. என்று கெஞ்சினர்.
‘ ச்சே…ச்சே….இதுக்கெல்லாம் வெக்கப்படக் கூடாது…. தப்புத்தப்பா பேசித்தான் புது பாஷையைக் கத்துக்கணும்’, என்று அவர்களை அடக்கினேன்.
என் கணவர் இந்த விளையாட்டுக்கு வரவே இல்லை. ‘இந்த வயதுக்கு (40+) மேல்(!) இன்னொரு மொழி கற்பது கஷ்டம் என்று அன்று சொல்லி இன்று வரை கற்காமலேயே காலம் தள்ளுகிறார்!
ஒரு முறை என்னவருக்கு உடல்நிலை சரியில்லை. ஆபீஸ் போகவில்லை. வீட்டிலேயே படுத்திருந்தார்.
இதை அறிந்து எங்கள் வீட்டு சொந்தக்காரரின் மனைவி எங்கள் வீட்டுக்கு வந்தாள். என்னவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டு விட்டு ‘………….பாப்பா…………!’ என்றாள்.
‘………….பாப்பா……!’
ஒவ்வொரு வாக்கியத்தின் முன்னும் பின்னும் பாப்பா, பாப்பா என்று…..
என் கணவரைப் பார்த்து இவள் ஏன் பாப்பா பாப்பா என்கிறாள்? குழந்தைகளும் வீட்டில் இல்லையே? ஸ்கூல் போய் விட்டார்களே! கணவரை கன்னடத்தில் ‘பாப்பா’ என்பார்களோ?
தலையே வெடித்துவிடும் போலிருந்தது. நாங்கள் இருந்த வீட்டில் கார் வைக்க இடமில்லாததால் பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் என் கணவர் காரை நிறுத்துவார். அவர்களுக்கு தமிழும் தெரியும். அவர்களுக்கு தொலைபேசினேன்.
நான் சொன்னதைக்கேட்டு அந்த மாமி ரொம்பவும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
பாபம் (பாவம்) என்பதை தான் அந்த பெண்மணி பாப….பாப… என்றிருக்கிறாள்!
இதற்கு அடுத்தபடி என்னை அதிர வைத்த வார்த்தை டாக்டர் ஷாப்!
மகனுக்கு உடல்நிலை சரியில்லை. வீட்டு சொந்தக்காரரிடம் போய் ‘டாக்டர் வீடு எங்கே?’ என்றேன்.
அவர் பதறிப்போய் ‘வீட்டுக்கெல்லாம் போகதீங்கம்மா. ஷாப்புக்கு போங்க!’ என்றார்.அவர் காட்டிய திசையில் போனேன். அங்கு ஒரு மெடிக்கல் ஷாப். இதைதான் சொன்னாரோ? கடைக்காரரிடம் ‘டாக்டர் வீடு எங்கே?’ என்று கேட்டேன். அவரும் ஷாப்புக்குப் போங்க என்றார்.
என்ன இது? அவரிடமே கேட்டேன். ‘தமிளா?’ என்று கேட்டு விட்டு அரைகுறை தமிழில் (என் அரைகுறை கன்னடத்திற்கு சமமாக!) இங்க டாக்டர் வீடுன்னு சொல்ல மாட்டோம். டாக்டர் ஷாப்பு (கிளினிக்) என்றுதான் சொல்லுவோம்’ என்றார்.
இப்படி பேச ஆரம்பித்த நான் என் பிள்ளையுடன் சேர்ந்து கன்னட மொழியை எழுத படிக்கக் கற்று, இரண்டாம் வகுப்பிற்கு கன்னட ஆசிரியையாகவும் ஆனேன் பிற்காலத்தில்!
முயற்சி திருவினையாக்கும் இல்லையா?
.