Humour · Life

நானும் என் மொழிப் புலமையும்!

தலைப்பை படித்தவுடன் நானும் நமது முன்னாள் பிரதமர் (17  மொழிகளில் மௌனம் சாதிப்பவர் என்று திரு மதன் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்!) திரு நரசிம்மராவ் மாதிரி பன்மொழி புலமை உடையவள் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பாளி அல்ல!

திரு அப்பாதுரை சொன்னது போல ஆங்கிலத்தையும் தமிழில் கற்றவள் நான். அந்த காலத்து வழக்கப்படி என் அக்காவின் வழியில் SSLC முடித்தவுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

ஒரு அலுவலகத்தில் வேலையும் கிடைத்து, 1971 ஜூன் 2 ஆம் தேதி வேலையில் சேர்ந்தேன். நேர்முக தேர்வில் எனது ஆங்கில அறிவு தடையாக இல்லை. ஆனால் போகப் போக,  வெறும் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் மட்டுமில்லாமல் தொலைபேசிக்கும் பதில் சொல்லவேண்டும் என்று வந்தபோது ரொம்பவும் தவித்தேன். ஆங்கிலத்தில் பேசுவது சிம்ம சொப்பனமாக இருந்தது.

என் அப்போதைய பாஸ் கொஞ்சம் முரடர். அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கும். ‘sslc – வரைக்கும் ஆங்கிலம் படித்திருக்கிறாய் இல்லையா? பேசு!’ என்பார். கடிதங்கள் எழுதுவதிலேயோ, வரும் கடிதங்களுக்கு பதில் எழுதுவதிலேயோ எனக்கு எந்தவித பிரச்சினையும் இருக்கவில்லை. பேசுவதற்குத் தயங்கினேன்.

இன்னொரு பிரச்சினை என் பாஸ்- களின் பெயர்கள்! நான் பொதுமேலாளருக்கு உதவியாளியாக இருந்துபோதும் சேர்மன், மானேஜிங் டைரக்டர் என்று எல்லோருக்கும் வரும் தொலைபேசி அழைப்புகளை பெற்று அவர்களுக்கு தொடர்பு கொடுக்கும் வேலையையும் செய்ய வேண்டி வந்தது.

எனது நேர் பாஸ் பெயர் நடராஜ். சேர்மன் எதிராஜ். மானேஜிங் டைரக்டர் (சேர்மனின் தம்பி) நாகராஜ். சேர்மனின் பிள்ளை ஹரிராஜ்!

முதலே ஆங்கிலம் என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஒரேமாதிரியான பெயர்களும் சேர்ந்து என்னைபோட்டுக் குழப்பியதில் (நான் என் ஆங்கிலத்தில் கவனம் செலுத்துவேனா, பெயர்களை கவனிப்பேனா?) இந்த ராஜ்-க்கு வரும் அழைப்பை அந்த ராஜ்-க்கும், இளைய  ராஜ்-ஜின் பெண் தோழியின் அழைப்பை அவரது அப்பாவிற்கும் மாற்றி மாற்றிக் கொடுத்து……

இதெல்லாம் நடந்து சிறிது காலம் ஆயிற்று. ஒரு நாள் காலை எனது நேர் பாஸ் அலுவலகத்திற்கு வந்தவர் ஏதோ அவசர அழைப்பு வர தலைமை அலுவலகத்திற்குக் கிளம்பி விட்டார். தலைமை அலுவலகம் பாரி முனையில். நான் வேலை பார்த்தது தொழிற்சாலை – திருவேற்காடு பக்கத்தில். இனி இவர் எங்கே திரும்பி வரப் போகிறார் என்ற தைரியத்தில் தட்டச்சு இயந்திரத்திற்கு உறையைப் போட்டு மூடி, ஆனந்தமாக கையோடு எடுத்துப் போன ஆனந்த விகடனில் மூழ்கினேன்.

நிஜமாகவே மூழ்கிப் போனவள் பாஸ் வந்ததையே பார்க்கவில்லை. ஏதோ ஃபைலை எடுத்துப் போக திரும்பி வந்திருக்கிறார். எனது அறையில் தான் ஃபைல் ராக் இருக்கிறது.

‘ரஞ்ஜனி…!’ அவரது இடி முழக்கம் கேட்டு ஆ. வி. யில் மூழ்கி போனவள் திடுக்கிட்டு எழுந்தேன்.

கையில் ஆ.வி!

என் கையிலிருந்த ஆ.வி.யை ஒரே பிடுங்காகக் பிடுங்கி இரண்டாகக் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டார்!

(அப்போதெல்லாம் ஆ.வி. குண்டு புத்தகமாகவே வரும். இவர் எப்படி ஒரே தடவையில் இரண்டாகக் கிழித்தார் என்று எனக்கு இன்னும் ஆச்சரியம் தான்!)

‘காச் மூச் என்று கத்த ஆரம்பித்தார். சாரம் இதுதான்: உன்னை ஆங்கிலம் கற்க சொன்னால் தமிழ் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்….. இன்னொரு தடவை நீ தமிழ் புத்தகம் படிப்பதைப் பார்த்தால்….என்ன நடக்கும் தெரியுமா?’

(என்ன நடக்கும் இதேபோல கிழித்துப் போடுவாய்!)

பதிலே பேசவில்லை நான்.

‘உனக்கு வேலையில்லை, ‘போர்’ அடிகிறது என்றால்…..’ என்று சொல்லியபடியே அவரது அறைக்குள் போய் அவரது மேஜை டிராயரில் இருந்து கேம்ப்ரிட்ஜ் அட்வான்ஸ்ட் டிக்ஷனரியை கொண்டு வந்து என் மேஜை மேல் போட்டார்.

‘இதைப் படி…வாழ்வில் உருப்படுவாய்….என்று சொல்லியபடியே திரும்ப காரில் ஏறிக் கொண்டு போய்விட்டார்.

வீட்டிற்குப் போய் என் அப்பாவிடம் இனி ஆபீசுக்குப் போகவே மாட்டேன் என்று நடந்ததை சொல்லி என் பாஸ்-ஐ கன்னாபின்னாவென்று (இடியட், ஸ்டுபிட்….என்று எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்!) திட்டித் தீர்த்தேன்.

‘சரி தூங்கு, காலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்றார் அப்பா.

அடுத்த நாள் கலையில் வழக்கம்போல அப்பா என்ன சீக்கிரமே எழுப்பினார். எங்கள் வீட்டிலிருந்து பூந்தமல்லி ஹை ரோட் வரை நடராஜ சர்வீஸ். அங்கிருந்து அலுவலகத்திற்கு பேருந்து. அதனால் 8.30 மணி ஆபிசுக்கு சீக்கிரமே எழுந்து 7 மணிக்கு கிளம்ப வேண்டும்.

‘நான்தான் போகப் போவதில்லையே!’ என்றேன்.

‘யார் மேல தப்பு? நிதானமா யோசி. உன் மேல தப்பு என்றால் உடனே கிளம்பு. பாஸ் மேலே என்றால் போக வேண்டாம்’ என்றார் அப்பா.

அடுத்த அரை மணியில் கிளம்பி அலுவலகம் போய் சேர்ந்தேன். என் பாஸ்-க்கும் என்னைத் திட்டியது ஒரு மாதிரி இருந்திருக்க வேண்டும். மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை. என்னைக் கொஞ்சம் கருணையுடன் நடத்தத் தொடங்கினார்.

நானும் அன்றிலிருந்து அவர் சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு டிக்ஷனரி படிக்க ஆரம்பித்தேன். பெரிய ஆங்கில அகராதியில் ஒரு வார்த்தைக்கு வெறும் அர்த்தம் மட்டும் கொடுத்திருக்க மாட்டார்கள். அதை வைத்து எப்படி வாக்கியம் பண்ணுவது என்றும் உதாரணங்கள் கொடுத்திருப்பார்கள். அது எனக்கு பெரும் உதவியாக இருந்தது.

இன்றும் எனக்கு டிக்ஷனரி படிப்பது மிகவும் விருப்பமான பொழுது போக்கு.

இன்றைக்கு என் மாணவர்கள் என் ஆங்கிலத்தை மதிக்கிறார்கள் என்றால் எனக்குப் பிடிக்காத அந்த பாஸ் தான் காரணம்.

நாளை நானும் கன்னடமும்……!

Advertisements

30 thoughts on “நானும் என் மொழிப் புலமையும்!

 1. நேற்று ஹிந்தி இன்று ஆங்கிலம் நாளை கன்னடம்…

  எங்களுக்கு சுவாரசியம் தான்… முன்னாள் பிரதமர் நிறைய மொழிகளில் மௌனம் சாதிப்பார்! :))

 2. எப்படியெல்லாம் சுவைபட எழுதமுடியுமோ, அப்படியெல்லாமும் எழுதுகிறீர்கள். கொஞ்சநாள் எழுதுவதையெல்லாம் நான் மூட்டைகட்டிவைத்துவிட்டு, வாசித்து,ரசித்துப் பழக வேண்டியதுதான்.
  நீயெல்லாம் என்னடா எழுதுகிறாய்? என என்னை மிரட்டுகிறது குழப்பமில்லாத தெளிவான நடை.
  இன்னும் கற்க ஆவலோடு உள்ளேன்!
  அன்பன்
  தமிழ்.

  1. என்னுடைய எழுத்துக்கள் வெறும் பொழுது போக்குதான் தமிழ்!
   என்னால் கனமான எழுத்துக்களை எழுத முடியுமா என்று பல சமயங்களில் யோசித்தது உண்டு.

   கஷ்டம் தான்!
   கருத்துரைக்கு நன்றி தமிழ்!

 3. ஹ்ம்ம் பாஸ் திட்டினா அதுலயும் கொஞ்சம் நன்மை இருக்கே.. ஆனா எல்லா பாஸ்-உம் இப்படி இருப்பாங்களா தெரியல.. நீங்க லக்கி தான் அம்மா.. இப்படி ஒரு பாஸ்-கிட்ட வேலை பாத்து இருக்கீங்க.. கண்டிப்பா நிறைய தெரிஞ்சிடு இருப்பீங்க… எனக்கும் டிஷ்னரி படிக்க ஆசைதான், என்ன எடுத்தும் தூங்கிடுவேன்.. ஹிஹி!!!

  1. சமீரா உன் வருகை எனக்கு ரொம்பவும் உற்சாகத்தைக் கொடுக்கிறது.
   அந்த பாஸை இன்னிக்கு நினைத்தாலும் எனக்கு பிடிக்காது.
   ஆனால் என் ஆங்கில அறிவுக்கு அவன் போட்ட விதைக்கு நான் என்றென்றும் நன்றி உடையவளாக இருப்பேன்.

   நன்றி சமீரா!

 4. அம்மா எவ்ளோ அழகா எழுதறிங்க, என்னோட நண்பர்கள் எல்லாம் சொல்வாங்க, கண்மணி ஏன் எப்பவும் சீரியஸ்-ஆ எழுதற.. கொஞ்சம் காமெடியா எழுதுனு… ம்ஹ்ம்ம் எனக்கு சுத்தமா வராது… உங்கள பாத்து தான் கத்துக்கணும் …
  நல்லா சிரிச்சேன் 🙂
  நன்றி மா!

  1. அன்புக் கண்மணி,
   உன் வயதில் உன்னை போலவும், என் வயதில் என்னைபோலவும் இருப்பதுதான் நல்லது.
   உனக்கு என் வயது வரும்போது நான் இப்போ சொன்னது புரியும்!
   உன்னைப்போன்ற இளம் வயதினருக்கும் என் எழுத்து பிடித்திருப்பது சந்தோஷம்!

  1. ஆ.வி. மட்டுமல்ல; கல்கி, குமுதம், கதிர் என்று மாற்றி மாற்றி எடுத்துப் போவேன். ஹி…ஹி…
   என் பிரயாணம் ஒரு மணி நேரம் அப்போது படிப்பதற்காக! அன்று போதாத வேளை – இல்லையில்லை – நல்ல வேளை – பாஸ் கிட்ட மாட்டினேன்.

   வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்!

 5. //அப்போதெல்லாம் ஆ.வி. குண்டு புத்தகமாகவே வரும். இவன் எப்படி ஒரே தடவையில் இரண்டாகக் கிழித்தான் என்று எனக்கு இன்னும் ஆச்சரியம் தான்!//

  அடடே!! என்னவொரு மகத்தான சிந்தனை..?
  ——————–
  அலுவலக நேரத்தில் ஆனந்த விகடன வெச்சிருந்தா எந்தா பாஸ் ஸும் பயில்வானா மாறிடுவாங்கம்மா…

  — —————
  குறிப்பு :
  அண்ணன் திண்டுக்கல் கிட்டே மட்டும் பிளாக் பண்ணித்தர முடியுமானு..? நீங்க கேட்டிருப்பதால் போனில் அழைத்து கேட்டால் மட்டுமே நாம் செய்து தருவதாக கோபத்துடன் காத்திருக்கிறோம்..

 6. கோவிச்சுக்காதீங்க அண்ணாச்சி! திண்டுக்கல் அண்ணன் கிட்டே தமிழ்மணத்துல எப்படி வோட்டுப் போடணும் சொல்லி குடுங்கன்னு கேட்டேன்.
  அவரு தளத்துல ‘Read More ‘ option கூட குட்டிக்கரணம் அடிக்கும். அதெல்லாம் எப்படி செய்யுறதுன்னு கேட்டேன். அம்புட்டுதேன்!

  வருகைக்கு நன்றி!

 7. மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. நான் +2 வரை தமிழ்வழிக் கல்வி கற்றவன். இன்று பன்னாட்டு நிறுவனத்தில் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று ஆங்கிலேயருடன் சகஜமாகப் பேசி வேலை வாங்குவதும் செய்வதுமாக இருக்கிறேன். ஆங்கிலம் மற்றும் ஒரு மொழியே. குழந்தைப் பருவத்தில் தமிழ் பேசியது போல்வே ஆங்கிலத்தில் தவறாகப் பேசிப் பேசியே நன்றாகப் பேசப் பழக வேண்டும். நான் ஆங்கில மொழியறிவை வளர்க்கப் பயன்படுத்திக் கொண்டது ஆங்கிலேயர் எழுதிய ஆங்கில நாவல்களை. அவர்கள் பேசுவதை எளிதாகப் புரிந்து கொள்ள நாவல்கள் மிகவும் உதவும். நாமும் ஆங்கிலத்தில் ஆங்கிலேயர் போன்று உதார் விடவும் இது உதவும்…

  1. வாருங்கள் முதுகுடுமிப் பெருவழுதி! பெயரே ஆச்சர்யமாக இருக்கிறது. +2 என்றால் எனக்கு அடுத்த தலைமுறை. உங்களுக்கு இருந்து exposure எங்களுக்கு இருக்க வில்லை. ரேடியோ மட்டுமே!

   நமது முயற்சி மிகவும் முக்கியம். அந்த நாளில் என் அப்பா ‘த மெயில்’ என்று ஒரு ஆங்கில தினசரி வாங்குவார். அதைப் படித்துத் தான் எனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன்.

   உங்கள் அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

 8. பதிவு சொல்லிச் சென்ற விதத்தில்
  கூடுதல் சுவாரஸ்யம் தந்து போகிறது
  பாயாஸத்து முந்திரியாய் இடையிடையே
  தூவப்பட்ட நகைச்சுவை கமெண்ட்டுகள் அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

 9. வாருங்கள் ரமணி!
  உங்களைப் போன்றவர்கள் என் எழுத்துக்களைப் படிக்க மாட்டார்களா என்று ரொம்பவும் நினைத்துக் கொள்ளுவேன் – சுமாராக எழுதினாலும்!
  உங்கள் வருகையினால் எனது வெகு நாளைய ஆசை நிறைவேறியிருக்கிறது.

  உங்கள் கவிதைகளின் தீவிர ரசிகை நான்!

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ரமணி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s