ஹிந்தி மாலும்…?

 

 

ஏப்ரல் 16, 2000 மாவது வருடம். எனது வாழ்வில் முக்கியமான நாள்.

 

25 வருட இல்லத்தரசி வேடத்தைக் கலைத்து விட்டு வெளியில் வேலைக்கு வந்திருக்கிறேன். அலுவலத்தில் நாற்காலியில் உட்காந்து செய்யும் வேலை இல்லை. மாணவர்கள் முன்னிலையில் நின்று கொண்டு சொல்லிக் கொடுக்க வேண்டும்…எப்படி இருக்குமோ?

 

முதல்முறையாக பள்ளிக்கு போகும் குழந்தையைப் போல ஒரு கலக்கம்.

 

ஆங்கிலம் பேச வரும். சொல்லிக் கொடுப்பது வேறு இல்லையா?

 

முதல் வகுப்பு. முதல் நாள். உள்ளூர பட பட வென்று பல பல பட்டாம்பூச்சிகள் பறந்தாலும் முகத்தில் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எங்கள் கவுன்சிலரிடம் கேட்டேன்

 

‘எத்தனை மாணவர்கள்?’

 

‘இது அடிப்படை நிலை வகுப்பு. ஒன்லி டென்..’ என்று இனிமையாக சிரித்துக் கொண்டே சொன்னாள்.

 

‘ஓ! ஒன்லி டென்…?’

எனது முதல் வகுப்பு flop-show- வாக முடியப் போகிறது என்பதை அறியாமலேயே முகத்தில் இருந்த தைரியம் உடலிலும் பரவ வகுப்பினுள் நுழைந்தேன்.

‘குட் மார்னிங்’

9 குட் மார்னிங்-கு களுக்கு நடுவே ‘ஹிந்தி மாலும்..?’ என்று பத்தாவதாக ஒரு குரல்!

குரல் வந்த பக்கம் திரும்பினேன். ஒரு இஸ்லாமியப் பெண்மணி தலையில் பர்த்தாவுடன்!

எனக்குள் எழுந்த முதல் வியப்பு. எனக்கு ஹிந்தி தெரியாது என்று  இந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியும்?

அடுத்து என்ன மொழியில் பதில் சொல்வது? நோ என்று ஆங்கிலத்திலா? நஹி என்று ஹிந்தியிலா?

சவாலே சமாளி….

கொஞ்சம் நிதானத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னேன்.

‘நீங்கள் இங்கே வந்திருப்பது ஆங்கிலம் கற்க. அதை நான் உங்களுக்கு சொல்லித் தருகிறேன். கவலைப் படாதீர்கள்….!’

தன் தலை மேல் போட்டிருந்த பர்தாவை இழுத்து முகத்தை மூடியபடி அந்த பெண் எழுந்தே விட்டாள்.

நான் பதறிப் போனேன். ‘நோ, நோ, டோன்ட் கோ. ப்ளீஸ் சிட் டௌன்…!

நான் பேசியதை அவள் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ஒரு முறை திரும்பிப் பார்த்து மறுபடி ஹிந்தியில் மூச்சு விடாமல் ஏதோ சொன்னாள். சுத்தமாக எதுவும் புரியவில்லை.

மற்ற மாணவர்களிடம் தஞ்சம் அடைந்தேன். ‘அவளிடம் சொல்லுங்கள். அவளை வகுப்பிற்குள் வரச் சொல்லுங்கள்…’ என்றேன்.

என்னைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சிலர் அவளை உட்காரச் சொன்னார்கள். எதற்கும் மசியவில்லை அந்தப் பெண். போயிந்தே! Gone!

என்னைப் பரிதாபமாகப் பார்த்த 9 பேருக்கு, பேருக்குப் பாடம் எடுத்து விட்டு வெளியே வந்தேன்.

மையத்தின் கவுன்சிலர், ‘ஹிந்தி வராதா….?’ என்றாள். ஏற்கனவே நொந்திருந்த நான் மேலும் நொந்து நூடுல்ஸ் ஆனேன்.

‘நாளைக்கு வரட்டுமா வேண்டாமா?’

‘டோன்ட் ஒரி. அந்தப் பெண்ணை ஹிந்தி பேசத் தெரிந்த ஒரு டீச்சரிடம் அனுப்பி விட்டேன். ரோனிலா உங்களிடம் பேசுவாள்’ என்று என் வயிற்றில் புளியை கரைத்தாள்.

வீட்டிற்கு வந்து ‘இங்கிலீஷ் வகுப்புக்கு வந்து விட்டு இந்தி தெரியுமான்னு கேக்கறா?’ என்று புலம்பித் தீர்த்தேன்.

கொஞ்ச நேரத்தில் எனது பாஸ் என்கிற பாஸ்கரன் இல்லை – ரோனிலா விடமிருந்து தொலைபேசி.

கொஞ்சம் பயமாக இருந்தது. என்ன சொல்லுவாளோ?

என் மாமா Single Speech Hamilton என்று ஒருவரைப் பற்றிக் கூறுவார். ஒரே ஒரு முறை மேடையில் பிரமாதமாகப் பேசிவிட்டு நிறுத்திவிட்டாராம். அதன் பிறகு அவர் பேசவே இல்லையாம். அதைப்போலவே நானும் Single English Class – அதுவும் Flop Show பண்ணிவிட்டு நிறுத்தி விடப் போகிறேன். தினம் ஒரு புது கதை கேட்கும் என் பேரனுக்கு என் கதையை சொல்லலாம்.

என்னென்னவோ நினைத்தபடியே தொலைபேசியில் ‘ஹலோ..ரோனிலா…!’ என்றேன்.

‘வாட் ஹப்பென்ட்..?’

என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே என்று சொல்ல ஆரம்பித்தேன்.

‘ஸாரி ரோனிலா…எனக்கு ஹிந்தி வராது…..’

‘எனக்குப் புரிகிறது. நீ ஒண்ணு பண்ணு. உன்னிடம் வரும் மாணவர்களிடம் நீ லண்டனில் பிறந்து, தேம்ஸ் தண்ணி குடித்து வளர்ந்தவள் என்று சொல்லு….’

‘ரோனிலா…?’ நான் நம்ப முடியாமல் கேட்டேன். நான் ஸ்ரீரங்கத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்து, பெங்களூர் வந்து காவேரி நீர் குடித்து வருபவளாயிற்றே!

‘ஆமாம் , உனக்கு இந்திய மொழி எதுவும் வராது இன்னிலேருந்து சரியா?’

‘…………….’?

‘ஹிந்தியும் பேசாதே, கன்னடமும் பேசாதே…தமிழும் பேசாதே….’

‘ஆனா…. ரோனிலா வீட்டில…..’

‘ரஞ்ஜனி…! நான் வகுப்பு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்…..புரிகிறதா?’

அவளுக்கு கோபம் அதிகமாவதற்குள் ‘நன்றி…என்னைப் புரிந்து கொண்டதற்கு…’ என்று சொல்லிவிட்டு தொலை பேசியை கீழே வைத்தேன்.

அதற்குப்பின் ஒவ்வொரு வகுப்பிலும் சில பல ஹிந்தி பேசும் மாணவர்கள். ஹிந்தி கற்காமலேயே அன்றிலிருந்து இன்றுவரை வகுப்புகளை மட்டுமல்ல; வாழ்க்கையையும் தான் சமாளிக்கிறேன்!

முதல் கோணல்…முற்றிலும் வெற்றி!