தப்புத்தப்பாக ஒரு தினம்!

நேற்றைக்கு விஜயதசமி. எதை செய்ய ஆரம்பித்தாலும் வெற்றிதான் என்று உலகம் முழுக்க ஒரு நம்பிக்கை. தப்பு செய்ய ஆரம்பித்தால்….? அதையும் வெற்றிகரமாக செய்ய முடியுமா?

அதென்னவோ நேற்று முழுக்க தப்புத்தப்பாகச் செய்துகொண்டிருந்தேன். (மற்ற நாளெல்லாம் ரொம்ப சரி சரியாகச் செய்கிறாப் போல….!)

சமையல் எல்லாம் சரியாகவே செய்தேன். குழம்பிற்கு உப்பு; பாயசத்திற்கு வெல்லம் என்று காலை வேளை நன்றாகவே இருந்தது. விஜயதசமி பூஜை செய்து, சரஸ்வதி பூஜை அன்று பூஜையில் வைத்த புத்தகங்களைப் படித்து, எல்லோரையும் படிக்கச் செய்து…..

சாயங்காலம் நாலு மணிக்கு என் தோழி சுகன்யாவிடமிருந்து தொலைபேசி. ‘ரஞ்ஜனி!  நீயே என் வீட்டுக்கு வா. மஞ்சள் குங்குமம் கொடுக்கிறேன். பிறகு உன்னுடனேயே உங்கள் வீட்டிற்கு வருகிறேன். சரியா?’ என்று.

‘நல்லதாச்சு. நானே வருகிறேன்.’

‘ஒரு தடவை வந்திருக்கிறாய் இல்லையா, வீடு தெரியும் தானே?’

‘ஓ! நல்லா தெரியும். எங்க வீட்டிலேர்ந்து உங்கவீடு ரொம்ப பக்கம்தானே…… கவலையே படாத! நானே வந்துடுவேன்….’

‘எதுக்கும் என் போன் நம்பர் வைச்சுக்கோ….நீ ஒரு தடவை தான் வந்திருக்கே…..’

‘அதெல்லாம் இருக்கு. டோன்ட் வொரி!’ (தமிழ்ல சொன்ன புரியாதா? ஆங்கிலத்தில் வேறயா?)

இப்படியாக 6 மணிக்கு வெற்றிகரமாக கிளம்பினேன். அது தப்புகரமாக முடியப் போகிறது என்று அப்போது தெரியவில்லை.

நிஜமாகவே சுகன்யா வீடு பக்கம்தான். என் வீட்டிலிருந்து நேராகப் போய் முதல் வலது. சிறிது தூரம் போய் முதல் இடது…….அப்புறம்…….அப்புறம்…….!!??!!

நேராக நடந்து கொண்டே இருந்தேன். சுகன்யா வீடு வரவே இல்லை. அது எப்படி வரும்? நீதான் போகணும்…! சமய சந்தர்ப்பம் தெரியாமல் என் செல்லக்குட்டி (அதாங்க என் மன சாட்சி)  என்னை இடித்தது.

‘தப்புத்தப்பா எங்கெங்கேயோ போகிறாய்…ஒழுங்காக சுகன்யாவிற்கு போன் செய்…’ மனதிற்குள் எச்சரிக்கை மணி!

வேண்டாம் வேண்டாம் நான்தான்  வந்திருக்கிறேனே….எச்சரிக்கை மணியை அலட்சியப்படுத்தி விட்டு மறுபடி நடக்க ஆரம்பித்தேன். இங்கேதான் எங்கேயோ……

நடுவில் ரோடு வேறு ரிப்பேர். தோண்டிப் போட்டிருந்தார்கள். தாண்டித் தாண்டி…

மெதுவாக வயிற்றில் ஒரு பட்டாம் பூச்சி…..ஒன்று இரண்டானது….இரண்டு……பலவானது….

போன் செய்தேன் சுகன்யாவிற்கு. அவளது மாட்டுப்பெண் பேசினாள்.

‘சொல்லுங்கோ ஆண்ட்டி!’

என் பரிதாப நிலையை சொன்னேன். ‘ஆண்ட்டி, நீங்க லக்ஷ்மி கோவில் கிட்ட வந்துடுங்கோ. நான் அங்க வரேன்’.

நான் இருக்கும் இடம் எங்கே? கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு பார்த்தேன். வலது பக்கம் மைசூர் ரோடு. சரி இடது பக்கம் டௌன்ல போகணும் (வீதிகள் ஏற்ற இறக்கமாக இருப்பதால் ‘அப்’புல போகணும், ‘டௌன்’ல போகணும் இதெல்லாம் சகஜம் இங்கே.) இடம் புரிந்துவிட்ட தைரியத்தில் வேகமாக (!!) நடந்து இடது பக்கம் திரும்பியவுடன் கோவில்…அப்பாடா!

அங்கிருந்து எனக்கு சுகன்யாவின் வீட்டுக்குப் போக வழி தெரிந்து விட்டது. ஆனாலும் பாவம் அந்தப் பெண் வரேன் என்று சொல்லி இருக்கிறாளே என்று அங்கேயே நின்றேன்(!!). அவள் வந்தவுடன் அவளுடன் (அசடு வழிந்தபடியே) எப்படி வழி தவறினேன் என்று சொல்லிக் கொண்டே சுகன்யா வீட்டிற்குப் போனேன்.

கிளம்பும்போது சொன்னேன்: ‘இனிமேல் நான் போன் செய்தாலே உன் மாட்டுப் பெண், ‘எங்க மாட்டிக் கொண்டு இருக்கீங்க’ என்று கேட்கப் போகிறாள்…’

சரி அந்தத் தப்பை சரி செய்து வீட்டிற்கு வந்து கணணி முன் உட்கார்ந்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது, தெரியாத்தனமாக ‘reblog’ க்ளிக் பண்ணி……அசடு வழிந்து…….

ஒருவழியாக reblog செய்ததை குப்பைத்தொட்டியில் தள்ளி…. திரும்பி வந்து இன்-பாக்ஸில்  ‘நாற்சந்தி’ யின் புது பதிவு வெற்றி விஜயம். சரி தப்பு பண்ணி மனசு நொந்துபோய் இருக்கே, வெற்றி விஜயத்தை படிப்போம் என்று படிக்க ஆரம்பித்து….

’சிவகாமியின் சபதத்தில்…’ என்று தெளிவாக அவர் எழுதியதைப் படித்துவிட்டு…. பின்னூட்டத்தில் ‘பார்த்திபன் கனவு…’ என்று எழுதி…..

காலையில் எழுந்து பார்த்தால் சிவகாமியின் சபதத்தை  ‘பார்த்திபன் கனவு’ ஆக்கிவிட்டீர்களே’ என்று ஓஜஸ் நொந்து போய் இருந்தார்!

இப்படி ஒரே நாளில் அடுக்கடுக்காக உலகம் முழுக்க தெரிகிறார்போல தப்பு செய்ய யாராலாவது முடியுமா இந்த அபராத சக்ரவர்த்தியை தவிர?

இதை படித்து விட்டு தலைப்பை ‘தினம் தப்புத்தப்பாக’ என்று நீங்கள் படித்தாலும் எனக்குக் கோபம் தப்பித் தவறிக் கூட வராது!