‘இன்னிக்கு படிக்க வேண்டாம்’!

சரஸ்வதி பூஜை என்றால் உடனே நினைவுக்கு வருவது ‘இன்னிக்கு படிக்க வேண்டாம்’ தான்!

நாளை சரஸ்வதி பூஜை என்றால் இன்றைக்கே அம்மா சொல்லுவாள்: ‘பொஸ்தகங்களை எல்லாம் நாளைக்கு கொலு முன்னாடி அடுக்கணும். நாளைக்கு பூஜை முடிஞ்சு நாளன்னிக்குத் தான் அதை எல்லாம் எடுக்கலாம். இன்னிக்கே வீட்டுப்பாடம் முடிச்சுடுங்கோ!’

இன்னிக்கு வீட்டுப் பாடங்களை முடிக்க வேண்டும் என்பதைவிட நாளைக்கு படிக்க வேண்டாம் என்பது பெரிய விஷயம் எங்களுக்கு.

இப்போது என் பேரன் கேட்கிறான்: ‘சரஸ்வதி பூஜை பண்ணிட்டு படிச்சா என்ன? சரஸ்வதி ஒம்மாச்சி கோச்சுபாளா?’

‘இல்லம்மா, நாம தெனம் படிக்கிறோம், இன்னிக்கி ஒரு நாள் சரஸ்வதி ஒம்மாச்சி நமக்காகப் படிப்பாள்…!’

‘நிஜமாவா….?’

‘ம்ம்ம்….நாளைக்கு நீ புஸ்தகத்தை எடுத்தவுடன் உனக்கு படிக்காமலே எல்லாம் மனப்பாடம் ஆகிவிடும்..’

‘நிஜமாவா?’

அந்த நாட்களைப் போல பெரியவர்கள் சொல்வதைக் குழந்தைகள் கேள்வி கேட்காமல் ஒப்புக் கொள்வதில்லை இந்தக் காலத்தில். ஆனாலும் குழந்தைத்தனம் என்பது இருக்கத்தான் செய்கிறது.

கொலுவிற்காக வீட்டில் இருக்கும் ட்ரங்க் பெட்டிகளெல்லாம் வெளியே எடுக்கப் பட்டு படிகளாக மாறும். அப்பாவின் புது வேஷ்டி படிகளை அலங்கரிக்கும். நாங்கள் எல்லோருமாக ‘லக்ஷ்மி கல்யாண வைபோகமே’ பாடி சோபனம் (அரிசி, பருப்பு, வெல்லம்) வைத்து விட்டு முதலில் லக்ஷ்மி சரஸ்வதி பொம்மைகளை வைப்போம். பிறகு மற்ற பொம்மைகள்.

தினமும் எல்லார் வீட்டுக்கும் போவோம் (சுண்டல் கலக்க்ஷனுக்கு!). எங்கள் வீட்டுக்கும் எல்லோரும் வருவார்கள். அம்மா முதலிலேயே ஒரு காரம் ஓர் இனிப்பு பண்ணி வைத்துவிடுவாள். சின்ன பசங்களுக்கு பட்சணம், இனிப்பு. பெரியவர்களுக்கு தாம்பூலம், பழம், சுண்டல்.

எங்கள் எதிர் வீட்டில் ஒரு மாமி. நாங்கள் (நானும், என் அக்காவும்) எப்போது போனாலும் ‘இப்போ ரெண்டு பேரும் பாட்டு பாடிவிட்டு, சுண்டலுக்கு அப்புறம் வாங்கோ’ என்பார். நாங்களும் விடாமல் போய் சுண்டல் வாங்கி வருவோம்!

அப்புறம் வருடங்கள் போகப் போக ஒரே ஒரு நாள் மட்டும் போவது என்று ஆகிவிட்டது. சிலர் நவரத்திரிக்கும் ஒரு நாள் குறித்து அன்று வாருங்கள் என்று ‘அழைப்பிதழ்’ போடுகின்றனர். அன்றைக்குப் போக முடியவில்லை என்றால் அடுத்த வருடம் தான்!

பெங்களூரு வந்த பிறகும் இன்று வரை கொலு வைத்துக் கொண்டு இருக்கிறேன். இப்போது இரண்டு வருடங்களாக என் மாட்டுப் பெண்ணும் படிகளை அமைப்பதிலிருந்து ரங்கோலி போட்டு, பொம்மைகள் அடுக்குவது வரை ரொம்பவும் ஆர்வத்துடன் செய்கிறாள்.

பண்டிகைகள் என்பது நமது தினசரி வாழ்விலிருந்து நமக்கு சிறிது விடுதலை கொடுக்கத்தான்.  ஒரே மாதிரியான வேலைகளிலிருந்து வேறுபட்டு, பழைய சிநேகிதங்கள் புதுப்பிக்கப்படவும், புதிய சிநேகிதங்கள் வளரச் செய்யவும்தான்.

சிலர் ‘எனக்கு இரண்டும் பிள்ளைகள்…அதனால் கொலு வைப்பதையே விட்டுவிட்டேன்’ என்கிறார்கள். பிள்ளைகளானால் என்ன, நம் சம்பிரதாயங்கள் அவர்களுக்கும் தெரிய வேண்டும் அல்லவா?

 

எல்லோருக்கும் மஞ்சள், குங்குமம், தாம்பூலம் சுண்டலுடன் பார்சல்…..!

சரஸ்வதி பூஜை, விஜயதசமி தின வாழ்த்துக்கள்!

எங்கள் வீட்டு கொலுவின் சில படங்கள் உங்கள் பார்வைக்கு:

‘எங்ககிட்ட மளிகை சாமான் வாங்குங்க….FDI வரதுக்குள்ள…!

 

 

எல்லா ஜாமானும் இருக்குதுங்கோ…!

வாங்கம்மா…, வாங்க… புது கறிகாய்…..!

எங்க வீட்டு கொலு !

தாசரதி – மைதிலி, இலக்குமணன், சிறிய திருவடி

மானிடர்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன்…