ஏமருவும் சிலை வலவா! ராகவனே தாலேலோ!

Sourirajan (pinnazhagu)
சவரிக் கொண்டையுடன் சௌரிராஜப் பெருமாள்
kaittala sEvai
சௌரிராஜப் பெருமாள் முன்னழகு – அமாவாசை தோறும கைத்தல சேவை – பின்னால் கருத்த திருமேனியுடன் நீலமேகப் பெருமாள்

திருக்கண்ணபுரம் என் மாமியாரின் ஊர். அவரது தகப்பனார் வாழ்ந்த வீடு தற்போது வேறு  ஒருவருக்கு சொந்தம். என் கணவர் அந்த வீட்டை ‘எங்க தாத்தாவின் வீடு’ என்று ஒவ்வொரு முறையும் காட்டுவார்.

‘எங்க தாத்தாவின் வீடு’ (மஞ்சள் நிற காம்பவுண்ட்)

நித்ய புஷ்கரிணியில் எப்படி இவ்வளவு நீர் என்ற என் கேள்விக்கு திரு ரவியின் தாயாரிடம் பதில் கிடைத்தது. காவிரியில் நீர் வரத்து மிகும் போது அந்த உபரி நீர் இங்கு வரும்படியாக செய்திருந்தனர். அதைத்தவிர மழை பெய்யும்போது கோவிலில் விழும் நீர் நேரடியாக திருக்குளத்தில் வந்து சேருமாறு அமைத்திருக்கிறார்கள். அந்தக் காலத்திலேயே மழை நீர் அறுவடை!  இந்தத் திருப்பணியில், திரு ரவியின் திருத்தகப்பனாரின் பங்கு அபரிமிதம்.

சமீபத்தில் நாங்கள் போனது புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று.

முதல் நாள் காலை பெங்களூரிலிருந்து காரில் கிளம்பினோம். திருவண்ணாமலை, காரைக்கால் வழி சரியாக இல்லை என்று சிலர் சொல்லவே, சேலம், ஆத்தூர், துறையூர் என்று வழி கேட்டுக் கேட்டு வந்ததில் சில இடங்களில் வழி தவறி….

எதிர்பட்ட ஆட்டோ டிரைவரிடம் கேட்டோம்: ‘திருக்கண்ணபுரம் எப்படிப் போவது?’

‘காரைக்கால் வழியாக வந்திருக்கலாமே ஸார்! இங்கு என் வந்தீர்கள்? சரி விடுங்கள்…இங்கிருந்து கும்பகோணம், நாச்சியார் கோவில்…என்று கேட்டுக் கொண்டே போங்கள்…இப்போது மணி 6…, ஒரு 8 8.30 க்குப் போய்ச்சேரலாம்…அப்புறம் ஸார், மறக்காமல் திருக்கண்ணங்குடி, திருகண்ணமங்கை போய்விட்டு வாருங்கள்…. எல்லாம் க்ருஷ்ண க்ஷேத்திரங்கள்’. என்று எங்களை வழி அனுப்பி வைத்தார்.

அவர் சொன்னதுபோல 8.30 க்கு திருக்கண்ணபுரம் வந்து சேர்ந்தோம். ரவி எங்களுக்காக ‘முநியதரையன் பொங்கல்’ வாங்கிவர கோவிலுக்குப் போயிருந்தார். கோவில் நடையும் சார்த்தி விட்டார்கள் எட்டரை மணிக்கு. அதனால் அன்று பெருமாள் சேவை கிடைக்கவில்லை.

அடுத்தநாள் காலை எழுந்திருந்து தீர்த்தாமாடி (நித்ய புஷ்கரிணியில் நீர் மிகவும் குறைந்திருந்தது. அதனால் அங்கு தீர்த்தாமாடும் எண்ணத்தை மாற்றிக் கொண்டோம்.) போன தடவை நானும் என் கணவரும் புஷ்கரிணியில் தீர்த்தாமாடியதை நினைத்துக் கொண்டே வீட்டிலேயே குளித்தோம். பிள்ளை, மாட்டுப் பெண்ணை அழைத்துக் கொண்டு ‘வா, புஷ்கரிணியை சுற்றி நடந்து விட்டு வரலாம்’ என்று சொல்லி கிளம்பினேன்.

நித்ய புஷ்கரிணியை ஒரு பிரதட்சிணம் செய்து குளத்தங்கரை அனுமனை சேவித்தோம். மிகவும் வரப்ரஸாதி இவர். நிறைய பேர் வேண்டுதலுக்காக வடைமாலை சாத்துகிறார்கள்.

வருடந்தோறும் வைகாசி உத்ஸவத்தின் போது வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி மூன்று நாட்கள் உபன்யாசம் நிகழ்த்துகிறார். நல்ல கூட்டம்!  அவரது உபன்யாசத்தைக் கேட்கவென்றே பலர் வருகிறார்கள். உபன்யாசத்தை முடித்துவிட்டு குளக்கரையில் வந்து அமர்கிறார் ஸ்வாமி. அவரைப் பார்க்கவும், கேட்கவும் பலர் அவரை சுற்றி. எனக்கும் அவரிடம் பேச வேண்டுமென்று ஆசை. என்ன பேசுவது? மற்றவர்களுடன் ஸ்வாமி பேசுவதை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்.

‘சவரி பெருமாள்’ என்று அவர் சொல்லும் அழகே தனி. உத்ஸவ சமயத்தில் மாலை 3.30 மணிக்கு கோவில் திருக்காப்பு நீக்குகிறார்கள். உடனே கைத்தல சேவை. ஸ்வாமியும் பெருமாளை எழுந்தருளப் பண்ணுகிறார்.

வேண்டுதலுக்காக சவரிக் கொண்டையும் வாங்கி வந்து சமர்ப்பிக்கலாம். காதி கிராமோத்யோக் பவனத்தில் பெருமாளுக்கேன்றே சவரி கிடைக்கிறது. விலை சுமார் 3,000 ரூபாய்கள் ஆகும்.

திரு ரவியின் தொலைபேசி எண்: +919626350326 / +918973898295

திரு ரவி சவரிப் பெருமாளுக்காகவே திருக்கண்ணபுரத்தில் இருப்பவர். இவரை தொடர்பு கொண்டால் திருக்கண்ணபுரம் வருவதற்கு வழியும் சொல்லுவார். வயிற்றுப் பசியையும் போக்குவார்.

‘ரஞ்ஜனி மாமி சொன்னாள்’ என்று சொல்லுங்கள். (ஹி…..ஹி…..!) ரவிக்கு மட்டும்தான் இந்த அடையாளம் வேண்டும்.  கணபுரத்தென் கருமணிக்கு அல்ல!

கௌசலை தன் குல மதலையை , தயரதன் தன் மாமதலையை,

மைதிலி தன் மணாளனை, கணபுரத்தென் கருமணியை

சேவித்து விட்டு வாருங்கள்.

குலசேகர ஆழ்வார் சௌரிராஜ பெருமாளை ஸ்ரீராமனாகவே எண்ணி தாலாட்டுப் பாடியிருக்கிறார்,

இதோ அந்தப் பாடல்:

http://www.youtube.com/watch?v=8iLjj-0R2Q4