கணபுரத்தென் கருமணியே….!

கோவிலும் நித்ய புஷ்கரிணியும்

சுமார் 30 வருடங்களுக்கு முன் ஒரு நல்லிரவில் முதல் முறையாக திருக்கண்ணபுரம் சென்றோம். அங்கு யாரையும் எங்களுக்குத் தெரியாது – தலைப்பில் சொன்னவரைத் தவிர!

கோவில் முன்னே மிகப் பெரிய குளம். குளத்தின் நீள அகலத்தைவிட என்னைக் கவர்ந்தது குளம் நிறைய, காற்றினால் சிறுசிறு அலைகளுடன் அலைபாய்ந்து கொண்டிருந்த நீர்!

‘வா, வா….. எத்தனை வருடமாகச் சொல்லிக்கொண்டே இருந்தாய் – திருக்கண்ணபுரம் போகவேண்டுமென்று?’ என்று அழைப்பதுபோல இருந்தது. சிலுசிலுவெனக் காற்று தண்ணீரின் வாசனையையும் சுமந்து வந்தது. எப்படி இத்தனை தண்ணீர்?

‘கோவிலுக்குள் போலாமா? அப்புறம் மூடி விடுவார்கள்…..’ கணவரின் குரல்.

கோவிலுக்குள் இன்னொரு ஆச்சரியம்: கருத்த திருமேனியுடன் நீலமேகப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில். அறையில் சார்த்திய சிவந்த ஆடை….’அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்ற தாம் என் சிந்தனையே….’

என்ன ஒரு காம்பீர்யம்! முதல் பார்வையிலேயே மனம் கொள்ளை போயிற்று.

மிகப்பெரிய கோவில். உள்ளே யாரும் இல்லை. நாங்களும் பெருமாளும்தான்!

உற்சவர் செளரிராஜன். தன் அடியவரைக் காப்பாற்ற கூந்தல் வளர்த்ததாக கதை. சௌரிகொண்டையுடன் பின்னழகும் நம்மைக் கவரும். ரொம்பவும் புராதனத் திருமேனி. வலது திருக்கையில் ப்ரயோகச் சக்கரம்.

கோவில், கோவில் முன்பு பெரிய நித்ய புஷ்கரிணி. நான்கு புறமும் மட விளாகம் என்னும் அக்ரஹாரம். அவ்வளவு தான் ஊர்!

முதல் தடவை சென்று வந்தபின் நிறைய தடவைகள் போய் வந்தோம். இந்த வருடம் இரண்டு முறை போய் வந்தாயிற்று.

உற்சவத்தின் போது கொஞ்சம் வெளி ஆட்களைப் பார்க்கலாம். பெருமாள் வருடத்திற்கு ஒரு முறை திருமலை ராயன் பட்டினம் போய் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

ஒவ்வொரு முறை சென்று திரும்பும்போதும் மறுபடி வர வேண்டும் என்றே தோன்றும்.

போனதடவை சென்றபோது எங்கள் நண்பர் சொன்னார்: ‘இங்க வந்துடுங்கோ, தினமும் கோவிலில் உட்கார்ந்து நாலாயிரம் சேவிக்கலாம் அவன் காது குளிர… ஆனந்தமாகக் கேட்பான்.’

‘நம்மால இங்க வந்து இருக்க முடியாது. ஆஸ்பத்திரி வசதியே கிடையாது.. ஏதாவது ஆச்சுன்னா…’

என் கணவர் ரொம்ப ப்ராக்டிகல்.

எங்கள் ஆடிட்டர் நண்பர் சொன்னார்: ‘ஏதாவது ஆச்சுன்னா போய்ச்சேர வேண்டியதுதான். எதுக்கு ஆஸ்பத்திரி?’

போனதடவை திருக்கண்ணபுரம் போயிருந்தபோது ஒரு மாமா மாமி வந்திருந்தார்கள். ‘ஒரு வருஷம் ஸ்ரீரங்கத்துல இருக்கப் போறோம். அத்தனை உத்ஸவமும் சேவிக்க’ என்றார் மாமி.

எனக்குக் கூட ஆசைதான். இந்த முறை போயிருந்த போது மறுபடி அதே மாமா, மாமி. ‘ஸ்ரீரங்கத்தில இருந்துட்டு, கும்மோணத்துலேயும் ஒரு வருஷம் இருந்தாச்சு,’ என்ற மாமியைப் பார்த்து ரொம்பப் பொறாமையாக இருந்தது.

என்றைக்கு நான் இதைபோல கிளம்பப் போகிறேன்?

திருக்கண்ணபுரத்தில் கேட்ட திண்ணைப் பேச்சு:

ஸ்ரீரங்கத்தில் பிறக்கணும். திருக்கண்ணபுரத்தில் பரமபதிக்கணும். ரொம்ப விசேஷம்.

யார் செய்த புண்ணியமோ, ஸ்ரீரங்கத்தில் பிறந்து விட்டேன்.

‘சரணமாகும் தன தாளடைந்தார்கெல்லாம்

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்’

என் ஆசையை நிறைவேற்றுவானா?

 

 

 

 

 

 

 

22 thoughts on “கணபுரத்தென் கருமணியே….!

 1. திருக்கண்ணபுரம் இன்னும் சென்றதில்லை. உங்கள் பகிர்வு படித்த பிறகு செல்ல வேண்டும் என்ற இச்சை ஏற்பட்டு விட்டது. அடுத்த பயணத்தின் போது தான் பார்க்கணும்…

  1. போய் விட்டு வாருங்கள் வெங்கட். ரவி என்று ஒருவர் இருக்கிறார். அவரது தொலைபேசி எண் கொடுக்கிறேன்.

   நன்றாக பெருமாளையும் சேவிக்கலாம். இரவு ‘முநியதரையன் பொங்கலும்’ சாப்பிடலாம்.

  1. போய்விட்டு வாருங்கள் தனபாலன். மிகவும் அமைதியான இடம். வேறு உலகத்தில் இருப்பது போல இருக்கும்.

   உங்களுக்கும் தொலைபேசி எண் கொடுக்கிறேன்.
   முநியதரையன் பொங்கல் ரொம்ப விசேஷம். இரவு 9.30 மணிக்குத்தான் கிடைக்கும்.

 2. தங்கள் திருக்கண்ணபுரம் பற்றிய பதிவில் கோயில், குளம் , இறைவன் திருமேனி பற்றிய வர்ணனைகள் அபாரம்.
  //போனதடவை திருக்கண்ணபுரம் போயிருந்தபோது ஒரு மாமா மாமி வந்திருந்தார்கள். ‘ஒரு வருஷம் ஸ்ரீரங்கத்துல இருக்கப் போறோம். அத்தனை உத்ஸவமும் சேவிக்க’ என்றார் மாமி.//
  இப்போது ஸ்ரீரங்கத்தில் அபார்ட்மெண்ட்கள் அதிகம். எனவே நிறையபேர் இதுபோல் ஸ்ரீரங்கம் வந்து ஃப்ளாட் (FLAT) ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கிச் செல்கின்றனர். சில அரசு மற்றும் பொதுத் துறை ஊழியர்கள் ஸ்ரீரங்கத்தில் தங்க வேண்டும் என்பதற்காகவே திருச்சி பக்கம் மாறுதல் (TRANSFER) வாங்கிக் கொள்கின்றனர். பாலக்காட்டைச் சேர்ந்த எனது வங்கி மேலாளர் ஒருவர் தனது வயதான தாயின் விருப்பத்திற்காக திருச்சிக்கு மாறுதலாகி ஸ்ரீரங்கத்தில் அபார்ட்மெண்டில் வீடெடுத்து குடும்பத்துடன் இரண்டு ஆண்டுகள் தங்கிச் சென்றார். அதிகமாக எழுதிவிட்டேன் போலிருக்கிறது. மன்னிக்கவும்.

  1. நீங்கள் சொல்வது உண்மை தான் திரு தமிழ் இளங்கோ. என் அக்காவும் ஒரு ஃப்ளாட் வைத்திருக்கிறாள் ஸ்ரீரங்கத்தில்.

   அவ்வப்போது போய் வருகிறாள்.
   உங்கள் மறுமொழி நன்றாக இருக்கிறது.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

 3. ஆஹா!! அழகா வர்ணனை பண்ணி இருக்கீங்க .. குளம் அழகா இருக்கு!! இந்த மாதிரி கோயில் குளத்துல கூட தண்ணி இப்போ குறைவா தான் இருக்கு…
  நீங்க ஸ்ரீரங்க நாயகியா அம்மா??

  1. சமீரா! ரொம்ப நாளாயிற்று சந்தித்து!

   ஆமாம், இப்போ தண்ணீர் ரொம்பவும் குறைந்துதான் விட்டது.

   எனக்குப் புதுபெயர் கொடுத்ததற்கு நன்றி!

 4. அழகிய வர்ணனை… அம்மா!…

  பெருமாள் கோவிலில் ஒரு வித அமைதியும் நிறைவும் இருக்கும்

  1. வாருங்கள் ஆயிஷா!

   அந்த ஊரில் எனக்கு கிடைக்கும் மன அமைதியை சொல்ல வார்த்தைகள் இல்லை.

 5. இறைவழிபாடு என்னிடமும் உண்டு. ஆனால் அதீதமாக இறைவழிபாடு இதுவரை செய்ததே கிடையாது. சமுதாயச் சூழல் கூட எனக்கொரு காரணமாக அமைந்திருக்கலாம். தங்களது இறைவழிபாட்டுக் கட்டுரையை வடித்திருக்கும் வடிவம் கண்டு மகிழ்ச்சி.

  கடைசி வரியினை கடவுள் தங்கள் சித்தப்படியே நிறைவேற்றிடுவனாக.

  நன்றி

 6. சென்னை மற்றும் மதுரையில் இருந்து பேருந்தில்/ரயிலில் செல்ல என்ன வழி
  என்ற தகவலும் பகிர்ந்தீர்கள் என்றால் கூடுதல் நன்றி
  முடிந்தால் கோவில் நடை திறக்கும் நேரமும்

 7. அன்புள்ள ராம்ஜி.
  நீங்கள் எந்த இடத்திலிருந்து திருக்கண்ணபுரம் போவதாக இருந்தாலும் மாயவரம் (28 km), கும்பகோணம் (40 to 50 km) இரண்டும் பக்கத்திலிருக்கும் இடங்கள்.

  நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர், மாயவரம் போகும் பேருந்துகள் திருப்புகலூர் வரை வரும்.

  இந்த இடங்களில் இருந்து சரியான பேருந்து/ரயில் வசதிகள் கொஞ்சம் சிரமம்தான். வாடகை கார் எடுத்துக் கொண்டு போகலாம்.

  காலை 7.15 க்கு கோவில் நடை திறக்கிறார்கள். 11 மணிவரை பட்டாச்சார் ஸ்வாமி இருப்பார்.

  மாலை 5 மணியிலிருந்து 8 மணி வரை சேவை உண்டு.

  எனது அடுத்த பதிவில் திரு ரவியின் தொலைபேசி எண் தெரிவிக்கிறேன். எல்லோருக்கும் உதவும்.

  முதலிலேயே தொலைபேசிவிட்டுப் போனால் நல்லது.

  கட்டாயம் ஒரு முறை போய்விட்டு வாருங்கள். மறுபடி மறுபடி வரச் சொல்லுவார் சொரிராஜன்!

 8. அடடே… நீங்க ஸ்ரீரங்கத்தில் பிறந்தவரா? ஏற்கனவே எனக்கு ஸ்ரீரங்கத்துக்காரர்கள் மட்டும் அபார எழுத்துத் திறம் பெற்றவர்களாக இருக்கிறார்களே என்ற மெல்லிய பொறாமை உண்டு. இப்போ அதிகமாய்டுச்சு. திருகக்ண்ணபுரம் இதுவரை போனதில்லை. இப்ப போய்ப் பாக்கணும்ணு ஆசையத் தூண்டிட்டீங்க. பாத்துடறேன். படங்களும் அருமைம்மா.

  1. வாருங்கள் கணேஷ், இன்னொரு செய்தியும் சொல்லுகிறேன். ஸ்ரீரங்கத்தில் எங்கள் பாட்டி வீட்டுக்கு எதிர் வீடு தான் எழுத்தாளர் சுஜாதாவின் வீடு!

   கட்டாயமாக திருக்கண்ணபுரம் போய்விட்டு வாருங்கள்.

 9. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க சுற்ற வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஒருவர் அமெரிக்காவில் இருந்து மூட்டை முடுச்சுகளை எல்லாம் கட்டிக் கொண்டு இங்கே தஞ்சைக்கு இந்த வருட இறுதியில் வந்து சேரப் போகின்றார். அவரும் நானும்திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு பகுதியாக மெதுவாக அவசரமின்றி சுற்ற வேண்டும்.

  பார்க்கலாம்.

  1. வாங்க ஜோதிஜி!
   நிதானமாகப் பார்த்துவிட்டு வாருங்கள். திருக்கண்ணபுரத்தை மறக்காதீர்கள்.
   நான் சொன்னவுடன் வந்து வாசித்து உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s