கணபுரத்தென் கருமணியே….!

கோவிலும் நித்ய புஷ்கரிணியும்

சுமார் 30 வருடங்களுக்கு முன் ஒரு நல்லிரவில் முதல் முறையாக திருக்கண்ணபுரம் சென்றோம். அங்கு யாரையும் எங்களுக்குத் தெரியாது – தலைப்பில் சொன்னவரைத் தவிர!

கோவில் முன்னே மிகப் பெரிய குளம். குளத்தின் நீள அகலத்தைவிட என்னைக் கவர்ந்தது குளம் நிறைய, காற்றினால் சிறுசிறு அலைகளுடன் அலைபாய்ந்து கொண்டிருந்த நீர்!

‘வா, வா….. எத்தனை வருடமாகச் சொல்லிக்கொண்டே இருந்தாய் – திருக்கண்ணபுரம் போகவேண்டுமென்று?’ என்று அழைப்பதுபோல இருந்தது. சிலுசிலுவெனக் காற்று தண்ணீரின் வாசனையையும் சுமந்து வந்தது. எப்படி இத்தனை தண்ணீர்?

‘கோவிலுக்குள் போலாமா? அப்புறம் மூடி விடுவார்கள்…..’ கணவரின் குரல்.

கோவிலுக்குள் இன்னொரு ஆச்சரியம்: கருத்த திருமேனியுடன் நீலமேகப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில். அறையில் சார்த்திய சிவந்த ஆடை….’அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்ற தாம் என் சிந்தனையே….’

என்ன ஒரு காம்பீர்யம்! முதல் பார்வையிலேயே மனம் கொள்ளை போயிற்று.

மிகப்பெரிய கோவில். உள்ளே யாரும் இல்லை. நாங்களும் பெருமாளும்தான்!

உற்சவர் செளரிராஜன். தன் அடியவரைக் காப்பாற்ற கூந்தல் வளர்த்ததாக கதை. சௌரிகொண்டையுடன் பின்னழகும் நம்மைக் கவரும். ரொம்பவும் புராதனத் திருமேனி. வலது திருக்கையில் ப்ரயோகச் சக்கரம்.

கோவில், கோவில் முன்பு பெரிய நித்ய புஷ்கரிணி. நான்கு புறமும் மட விளாகம் என்னும் அக்ரஹாரம். அவ்வளவு தான் ஊர்!

முதல் தடவை சென்று வந்தபின் நிறைய தடவைகள் போய் வந்தோம். இந்த வருடம் இரண்டு முறை போய் வந்தாயிற்று.

உற்சவத்தின் போது கொஞ்சம் வெளி ஆட்களைப் பார்க்கலாம். பெருமாள் வருடத்திற்கு ஒரு முறை திருமலை ராயன் பட்டினம் போய் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

ஒவ்வொரு முறை சென்று திரும்பும்போதும் மறுபடி வர வேண்டும் என்றே தோன்றும்.

போனதடவை சென்றபோது எங்கள் நண்பர் சொன்னார்: ‘இங்க வந்துடுங்கோ, தினமும் கோவிலில் உட்கார்ந்து நாலாயிரம் சேவிக்கலாம் அவன் காது குளிர… ஆனந்தமாகக் கேட்பான்.’

‘நம்மால இங்க வந்து இருக்க முடியாது. ஆஸ்பத்திரி வசதியே கிடையாது.. ஏதாவது ஆச்சுன்னா…’

என் கணவர் ரொம்ப ப்ராக்டிகல்.

எங்கள் ஆடிட்டர் நண்பர் சொன்னார்: ‘ஏதாவது ஆச்சுன்னா போய்ச்சேர வேண்டியதுதான். எதுக்கு ஆஸ்பத்திரி?’

போனதடவை திருக்கண்ணபுரம் போயிருந்தபோது ஒரு மாமா மாமி வந்திருந்தார்கள். ‘ஒரு வருஷம் ஸ்ரீரங்கத்துல இருக்கப் போறோம். அத்தனை உத்ஸவமும் சேவிக்க’ என்றார் மாமி.

எனக்குக் கூட ஆசைதான். இந்த முறை போயிருந்த போது மறுபடி அதே மாமா, மாமி. ‘ஸ்ரீரங்கத்தில இருந்துட்டு, கும்மோணத்துலேயும் ஒரு வருஷம் இருந்தாச்சு,’ என்ற மாமியைப் பார்த்து ரொம்பப் பொறாமையாக இருந்தது.

என்றைக்கு நான் இதைபோல கிளம்பப் போகிறேன்?

திருக்கண்ணபுரத்தில் கேட்ட திண்ணைப் பேச்சு:

ஸ்ரீரங்கத்தில் பிறக்கணும். திருக்கண்ணபுரத்தில் பரமபதிக்கணும். ரொம்ப விசேஷம்.

யார் செய்த புண்ணியமோ, ஸ்ரீரங்கத்தில் பிறந்து விட்டேன்.

‘சரணமாகும் தன தாளடைந்தார்கெல்லாம்

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்’

என் ஆசையை நிறைவேற்றுவானா?