கேலிச்சித்திரங்களின் முன்னோடி!

வின்சர் மெக் கே (Winsor Mcay)

கார்ட்டூனிஸ்ட் வின்சர் மெக்கெ (1869 – 1934) Winsor McCay

 

சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் கவர்ந்திழுப்பது கார்ட்டூன் படங்கள்தான். இவற்றைப் பார்த்து ரசிக்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். குழந்தைகளுடன் கூட உட்கார்ந்து  ‘டாம் அண்ட் ஜெர்ரி’ யை ரசிக்காத, ரசித்து வாய் விட்டுச் சிரிக்காத பெற்றோர்கள் உண்டா?

இப்போது தொழில் நுட்பம் மிகவும் வளர்ந்து விட்டது. கணணியின் மூலம் மிகவும் விரைவில் கேலிச்சித்திரங்கள் வரைந்து விடலாம்; அது மட்டுமல்ல அவைகளுக்கு உயிரூட்டலும் தற்போது சுலபம்.

இதற்கெல்லாம் முன்னோடி என்று ஒருவரை சொல்ல வேண்டுமானால், அவர் இன்றைக்கு 107 ஆண்டுகளுக்கு முன் ‘லிட்டில் நீமோ இன் ச்லம்பர்லாண்ட்’ என்ற முதல் நகைச்சுவை துண்டுப் படத்தை உருவாக்கிய வின்சர் மெக்கெ அவர்கள்தான்.

இவர் ஒரு கேலிச்சித்திரங்கள் வரைபவராக மட்டுமல்லாமல், அவைகளுக்கு அசைவைக் கொடுத்து  உயிரூட்டுபவராகவும் (Animator) இருந்தார். பிற்காலத்தில் உலகப் புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி  முதலான கேலிசித்திர கலைஞர்களுக்கு இவரே பாதை அமைத்துக் கொடுத்தவர்  என்றும் சொல்லலாம்.

சிறிய வயதிலிருந்தே அவருக்கு வரைவதில் ஆர்வம் இருந்தது. அவரது தந்தை ஒரு ரியல் எஸ்டேட் முகவர். அவருக்கு தன் தனயனை  ஒரு பெரிய தொழிலதிபராக உருவாக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் இவரது கனவுகள், ஆசைகள் வேறாக இருந்தன.

இவர் உருவாக்கிய  ‘லிட்டில் நீமோ’ என்னும் நகைச்சுவை துண்டுப் படமும், ‘ஜெர்டீ தி டையோனோசர்’ என்ற சலன கேலிச்சித்திர படமும் இவரை உலகிற்கு அடையாளம் காட்டின.

1889 ஆண்டு ஷிகாகோவிற்கு ‘ஆர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சிகாகோவில் படிக்க வேண்டும் என்று வந்தவர், பணப் பற்றாக் குறையால் சர்க்கஸ், மற்றும் நாடக நிறுவனங்களுக்கு சுவரொட்டிகள் தயாரிக்கும் நேஷனல் பிரிண்டிங் அண்ட் என்க்ரேவிங் நிறுவனத்தில் சேர்ந்தார். இரண்டு வருடங்களுக்குப்பின்  டைம் அருங்காட்சியகத்தில் (Dime museum) வேலைக்கு சேர்ந்தார்.

1903 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து நவம்பர் வரை இவரது முதல் நகைச்சுவை துண்டு படம் ‘எ டேல் ஆப் தி ஜங்கிள் இம்ப்ஸ்’ (பெலிக்ஸ் பிடில் எழுதிய), 43 தவணைகளாக ‘சின்சினாட்டி என்கொயரர்’ இல் வெளியிடப்பட்டது. இதில் வரும் கதைகள் காட்டு விலங்குகளையும் அவை எப்படி இந்த உலகத்தில் வாழ தங்களை பழக்கப் படுத்திக் கொள்ளுகின்றன என்பதையும் கூறுபவை. ‘யானைக்கு தந்தம் எப்படி வந்தது?’, ‘நெருப்புக் கோழி எப்படி இத்தனை உயரமாயிற்று’ என்ற தலைப்புகளில் இவை வெளி வந்தன.

தனது மகன் ராபர்ட் வைத்திருந்த படங்கள் நிரம்பிய புரட்டிப் பார்க்கும் புத்தகம் இவரது கவனத்தை ஈர்த்தது. அதன் அடிப்படையில் 1905 ஆண்டு அக்டோபர் மாதம் ‘லிட்டில் நீமோ’ வை உருவாக்கத் தொடங்கி 4000 வரைபடங்களுடன், 4 வருடங்கள் உழைத்து 1911 இல் முடித்தார்.

 

1906 ஆம் ஆண்டிலிருந்து பல்சுவை நிரம்பிய ஆடல் பாடல் நிறைந்த கேளிக்கை காட்சிகளை உருவாக்க ஆரம்பித்தார். தனது ‘தி செவென் ஏஜஸ் ஆப் மேன்’ என்ற கேளிக்கை ஆட்டத்தில் இரண்டு முகங்கள் வரைந்து அவை வயதடைவதையும் மிக தத்ரூபமாக வரைந்து இருந்தார்.

 

1914 ஆண்டு இவர் உருவாக்கிய ‘ஜெர்டி த டையனோசர்’ உலகப் புகழ் பெற்றது. இதில் தான் உருவாக்கிய கேலிசித்திர கதாபாத்திரங்களுடன் இவரே பேசி நடித்தார். இதற்காக இவர் பத்தாயிரம் தனித்தனி சித்திரங்களை வரைந்தார். ஒவ்வொரு முறையும் பின்புல ஓவியங்களை பொறுமையுடன் மாற்றி மறுமுறை வரைந்தார்.

 

மெக்கெ பல சின்னச்சின்ன அசையும் படங்களையும் தயாரித்தார். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் ஒவ்வொரு அசைவிற்கும் ஆயிரக்கணக்கான சித்திரங்களை கையால் வரைந்தார்.

 

இவரது ‘ஜெர்டீ த டையனோசர்’ புதுமையான, மிகவும் இயற்கையான ஒரு கேலிச்சித்திரப்  படம் என்று அசையும் படங்களின் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

 

இன்று 15 அக்டோபர் இவர் உருவாக்கிய ‘லிட்டில் நீமோ இன் சலம்பர்லாண்ட்’ 107 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் கூகிள் ஒரு  doodle ஐ உருவாக்கியுள்ளது.

 

வின்சர் உருவாக்கிய ‘ஜெர்டீ த டையனோசர்’  நீங்களும் ரசியுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் காண்பியுங்கள்.

 

மிகப் பெரிய கலைஞருக்கு நம் வந்தனங்களை செலுத்துவோம்.

 

நன்றி: யூடியூப்