(இது ‘மங்கையர் மலரில்’ 2000 மாவது ஆண்டு வெளியான என் முதல் கதை.)
முன்குறிப்பு: ராகி முத்தை என்பது கர்நாடக மாநிலத்தின் முக்கிய உணவு. ‘ஹள்ளி’ (கிராமம்) யிலிருந்து தில்லிக்குச் சென்ற நமது மாஜி பிரதமர் திரு.ஹெச்.டி. தேவே கௌடாவை ‘முத்தே கௌடரு’ என்று செல்லமாக அழைக்கும் அளவிற்கு அவரால் பிரபலப் படுத்தப்பட்ட உணவு.
“பன்னி, அத்தை, பன்னி மாவா,” என்று வாய் நிறைய வரவேற்றாள் எங்கள் மாட்டுப் பெண் ஷீதல். என் கணவர் அவரிடம், “பன்னியாச்சும்மா, சென்னகிதியா?” என்று கேட்டு வி.ட்டு பெருமை பொங்க என்னைத் திரும்பிப் பார்த்தார். அந்தப் பார்வைக்கு ‘என்னம்மா கன்னடம் பேசுகிறேன், பார்’ என்று அர்த்தம்.
நானும் என் பங்கிற்கு அவளை குசலம் விசாரித்து விட்டு, ஊரிலிருந்து நான் பண்ணிக் கொண்டு வந்திருந்த பட்சணங்களை அவளிடம் கொடுத்தேன்.
இதற்குள் என் அருமைப் புதல்வன் எங்களது பெட்டி படுக்கைகளை வீட்டினுள் வைத்துவிட்டு வந்தான்.
‘ஏம்மா! பிரயாணம் சௌகரியமாக இருந்ததா? அப்பா வழியெல்லாம் படுத்தினாரா?”
“இல்லடா, உன் அப்பாதான் பக்கத்து சீட்டில் இருந்த சீனியர் சிட்டிசனிடம் வசமாக அகப்பட்டுக் கொண்டார்,” என்றவள் அவரது முறைப்பை அலட்சியம் செய்தேன்.
குளித்து முடித்து டிபன் சாப்பிட உட்கார்ந்தோம்.
“இன்னிக்கு என்னம்மா டிபன்? சீக்கிரம் கொண்டா” என்ற என் கணவரை, “ஸ்..ஸ்.. பரக்காதீர்கள், வரும்” என்று அடக்கினேன்.
“இன்னிக்கு டிபன் அக்கி ரொட்டி” என்றபடி வந்தாள் ஷீதல்.
“என்னடாது அக்கி, படை என்று ஏதேதோ சொல்கிறாளே” என்று பதறிப்போய் மகனிடம் கேட்டேன்.
“அய்யோமா! அக்கி என்றால் அரிசி. அரிசி மாவில் ரொட்டி செய்திருக்கிறாள்.
சாப்பிட்டுப் பார். சூப்பரா இருக்கும்!”
“சரியான சாப்பாட்டு ராமன் ஆகி விட்டாய் நீ!” என்று அவனை செல்லமாகக் கடிந்து கொண்டு விட்டு சாப்பிட ஆரம்பித்தேன். நிஜமாகவே சூப்பராக இருந்தது. மாட்டுப் பெண்ணை மனதார பாராட்டிவிட்டு, ”அடுத்த முறை வருவதற்கு கன்னடம் கற்றுக் கொண்டு விட வேண்டும்,” என்றேன்.
“ஆமா, ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் சொல்லுகிறாய்!”
“அவளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தாயா?” என்றேன்.
மகன் கப்சிப்.
விஷயம் இதுதான்: எங்கள் பிள்ளை மாதவன் கன்னடப் பெண்ணை ப்ரீதி மாடி (காதலித்து) கல்யாணம் செய்து கொண்டு பெங்களூரில் இருந்தான். நாங்கள் வரும்போதெல்லாம் இந்தக் கூத்து தான்.
டிபன் சாப்பிட்டு முடிந்ததும், “சொல்ப காபி குடிக்கிறீங்களா மாவா?” என்றாள் ஷீதல். என் கணவர் அவசர அவசரமாக “சொல்ப போறாது. தும்ப (நிறைய) வேண்டும்,” என்றார். வேறொன்றுமில்லை. முதல் தடவை நாங்கள் வந்திருந்தபோது அவள் காபி கொண்டு வந்த டம்ளரைப் பார்த்து அசந்து விட்டோம். அதைவிட சின்ன சைஸ் டம்ளரை உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது. அந்த சின்னஸ்ட் டம்ளர் காப்பியை சூப்பி சூப்பி அவள் குடிக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும். தண்ணீரைக் கூட இந்த ஊரில் எச்சில் பண்ணித்தான் குடிக்கிறார்கள்.
“என்ன இது! தண்ணீரையாவது தூக்கிக் குடிக்கக் கூடாதா?” என்றேன்.
“சின்ன விஷயம்மா, இதையெல்லாம் பெரிசு படுத்தாதே” என்று என் வாயை அடக்கி விட்டான் என் மகன்.
இது மட்டுமா? இதைப்போல பல சின்ன(!) விஷயங்களில் அவனது கல்யாணத்தின் போது வாயை மூடிக் கொள்ள வேண்டியதாயிற்று. அவனது கல்யாணத்திற்கு முதல் நாள் பெங்களூர் வந்து இறங்கியவுடன் பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். காரிலிருந்து பெண்ணின் வீட்டு முன் இறங்கியவுடன் ‘திக்’ கென்றது. இது முதல் ‘திக்’.
வீட்டு வாசலில் பச்சைத் தென்னை ஓலையில் பந்தல்! அவர்கள் வழக்கமாம் இது. பெண் வீட்டாரின் உபசரிப்பில் மயங்கிப் போயிருந்த என் உறவினர்களும் இதை கண்டு கொள்ளவில்லை. நானும் திருடனுக்குத் தேள் கொட்டியது போல பேசாமல் இருந்து விட்டேன். அன்று மாலை வரபூஜை எனப்படும் மாப்பிள்ளை அழைப்பு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்தது.
மறுநாள் காலை கல்யாணம். கெளரி பூஜையுடன் ஆரம்பமாயிற்று. கௌரம்மனுக்கு பூஜையை முடித்துவிட்டு, எனக்குக் கைகளில் மஞ்சள் பொடியைக் கொடுத்து மணைமேல் அமரச் செய்தனர். என் கால்களுக்கு மஞ்சள் பூசினாள் என் மாட்டுப் பெண். பிறகு ‘மொறத பாகணா’ வை (ஒரு முறத்தில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கண்ணாடி, சீப்பு, வளையல், ரவிக்கைத் துணி ஆகியவற்றை வைத்து இன்னொரு முறத்தால் மூடி) தன் மேல் புடவையால் மூடி என்னிடம் கொடுத்தாள். நானும் அவர்கள் சொன்னபடி என் புடவைத் தலைப்பால் மூடி வாங்கிக் கொண்டேன்.
என் கைகளில் அக்ஷதையைக் கொடுத்து நமஸ்கரித்து எழுந்தவளைப் பார்க்கிறேன். மறுபடி ‘திக்’. இரண்டாவது ‘திக்’. அவள் கழுத்தில் தாலி! என் திகைப்பை மறைத்துக் கொண்டு அசட்டுச் சிரிப்புடன் அவள் முகத்தையும், அவள் கழுத்திலிருந்த தாலியையும் மாறி மாறிப் பார்த்தேன். நான் ‘திரு திரு’ வென முழிப்பதை பார்த்துவிட்டு, என் சம்மந்தி அம்மாள் “ஏன் பேக்கு? ஏன் பேக்கு?” என்றார். என்ன இவர் நம்மைப் பார்த்து பேக்கு, பேக்கு என்கிறாரே! (அதுவும் இரண்டு தடவை வேறு!) என்று நினைத்துக் கொண்டே தாலியைக் காட்டினேன்.
“ஓ! அதுவா? அது ‘தவருமனே’ தாலி (பிறந்தகத்துத் தாலி) கெளரி பூஜை பண்ணும்போது பெண்ணின் கழுத்தில் தாலி இருக்க வேண்டும். பெண்ணின் தாயார் இதைக் கட்டி விடுவார்” என்று விளக்கம் அளித்தார். ஓ! இந்த சம்பிரதாயத்தை வைத்துத்தான் ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ என்ற படம் எடுத்தார்களோ? என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன், “அப்படியா? சந்தோஷம். என் பிள்ளையும் தாலி கட்டுவான் இல்லையா?” என்று ஜோக் அடித்தேன். அவர்கள் யாரும் சிரிக்காததால் நானே ‘ஹஹ ஹஹ!’ என்று சிரித்து விட்டு நகர்ந்தேன்.
நல்லபடியாக மாங்கல்ய தாரணம் ஆயிற்று. எங்கள் பக்கத்து உறவினர்கள் சாப்பாட்டிற்கு உட்கார்ந்து இருந்தனர். பந்தி விசாரிக்க ஆரம்பித்தேன்.
“ஏண்டி கோமளி! ஒரு வாழைக்காய் கறியமுது இல்லை. ஒரு தயிர் வடை இல்லை. என்ன கல்யாண சாப்பாடு, போ!” என்று ஒரு குரல்! மூன்றாவது ‘திக்’. குரல் வந்த திசையைத் திரும்பியே பார்க்காமல் சம்மந்தி அம்மாவைத் தேடி விரைந்தேன். அவர் ரொம்பவும் ‘கூலா’க “ஓ! பாளேகாய் பல்யா? உத்தின் வடே! அதெல்லாம் கல்யாணத்திற்குப் போட மாட்டோம். ஆகாது” என்றார்.
‘வாழைக்காய் கறியமுதும் தயிர் வடையும் சாப்பிட்டுக் கல்யாணம் பண்ணிக் கொண்ட நாங்கள் எல்லாம் பேக்கா?’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். (அட! எனக்கும் சாக்கா, பேக்கா என கன்னடம் பேச வந்து விட்டதே!)
ஒரு வழியாக எல்லா திக், திக், திக்குகளையும் சமாளித்துவிட்டு என் பிள்ளைக்கு பெங்களூரிலேயே வேலையானதால் குடித்தனத்தையும் வைத்து விட்டு சென்னைக்குத் திரும்பினோம்.
சும்மா சொல்லக் கூடாது. என் பிள்ளை எள் என்றால் எண்ணையாக வழிவான்; வெட்டிண்டு வா, என்றால் கட்டிண்டு வரும் சமத்து. காதலிக்க ஆரம்பித்த உடனேயே காஸ் புக் பண்ணிவிட்டான். கல்யாணம் நிச்சயம் ஆன உடன் வீடு பார்த்து அட்வான்ஸும் கொடுத்து விட்டான்.
என் ஸொசே (மாட்டுப் பெண்) மிக மிக நல்ல மாதிரி. நாங்கள் பெங்களூர் போகும் போதெல்லாம் புதிய புதிய ஐட்டங்கள் சாப்பிடப் பண்ணித் தருவாள். மிகவும் ருசியாகப் பண்ணுவாள். நானும் அவளிடமிருந்து சக்லி, கோடுபளே, பிஸிபேளே பாத் எல்லாம் செய்யக் கற்றுக் கொண்டேன்.
முதலில் கொஞ்ச நாள் இருவரும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டோம். பிறகு கொஞ்சம் தமிழ், கொஞ்சம் கன்னடம், மீதி ஆங்கிலம் என்று கலந்து கட்டி பேச ஆரம்பித்தோம். என் கணவர் பாடு தேவலை. அவளுக்கு புரிகிறதா இல்லையா என்று கவலையே பட மாட்டார். தமிழிலேயே பிளந்து கட்டிவிட்டு கடைசியில் “கொத்தாயித்தா?” என்பார். அவளும் சிரித்துக் கொண்டே “ஆயித்து மாவா” என்பாள்.
பழைய நினைவுகளை அசை போட்டபடியே கண்ணயர்ந்து விட்டேன்.
“அத்தை, மாவா, மதிய சாப்பாடு தயார். உண்ண வாருங்கள்” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.
“அட, என்னம்மா ஷீதல்! தமிழ் கற்றுக் கொண்டு விட்டாயா? பேஷ் பேஷ்!” என்ற என் கணவரின் குரலைக் கேட்டவுடன் தான் தமிழில் பேசியது ஷீதல் என்று புரிந்தது. ஒன்றும் புரியாமல் நான் என் மகனைப் பார்த்தேன். அவனோ முகமெல்லாம் பல்லாக “பாத்தியாம்மா! ஷீதல் ‘முப்பது நாட்களில் தமிழ்’ கற்று வருகிறாள். என்னமா பேசறா பார்! கார்த்தாலயே தமிழில் பேசுகிறேன் என்றாள். நான்தான் அம்மாவுக்கு ஹார்ட் வீக். காலங்கார்த்தல பயமுறுத்தாதே என்றேன்” என்றான்.
“நல்லதா போச்சு! நீயே எனக்கு கன்னடம் கற்றுக் கொடுத்து விடு” என்று அவளிடம் சொல்லிவிட்டு, அவளுக்கு நடைமுறை பேச்சுத் தமிழை விளக்கினேன்.
டைனிங் டேபிளில் எல்லோரும் உட்கார்ந்தோம். இந்த முறை புதிதாக என்ன செய்திருக்கிறாளோ என்று ஒருவித ஆவலுடன் உட்கார்ந்திருந்தேன். மகன் கையை அலம்பிக் கொண்டு வருகிறேன் என்று போனான்.
“இன்னிக்கு மத்தியான சாப்பாட்டிற்கு ராகி முத்தே பண்ணியிருக்கேன். தொட்டுக் கொள்ள பாகற்காய் கொஜ்ஜூ” என்ற சொல்லியபடியே வந்தவள் எங்கள் தட்டுகளில் பெரிய பிரவுன் கலர் உருண்டையை வைத்து விட்டு சுடச்சுட கொஜ்ஜையும் ஊற்றி விட்டு உள்ளே போனாள்.
மெதுவாக அந்த உருண்டையைத் தொட்டேன். ஒரு விரலால் மெள்ள அழுத்தினேன். அய்யயோ! விரல் உள்ளே போய்விட்டது. கையை ஆட்டி ஆட்டி விரலை எடுக்க நான் செய்த முயற்சியில் கை முழுவதும் ராகி ஒட்டிக்கொண்டு விட்டது. இது என்னடா கஷ்டகாலம் என்று நொந்த படியே என் கணவரைப் பார்த்தேன். அவர் நிலைமை இன்னும் பரிதாபமாக இருந்தது. வாயைத் திறக்க முடியாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். கையை உதறியபடியே எழுந்து அவரருகில் வந்து, “என்னாச்சு, என்னாச்சு?” என்றேன்.
“ழ…ழ…ழ….” என்றார்.
“ழ..ழா ழி, ழீ சொல்ல இதுவா நேரம்? வாயில் என்ன கொழுக்கட்டையா?” என்றேன் கோபமாக.
“இழ்ழை, இழ்ழை, ழாழி முழ்ழை…” என்றார்.
அந்தச் சமயம் கையை அலம்பிக் கொண்டு வந்த என் பிள்ளை எங்களைப் பார்த்து ஒரு வினாடி திகைத்துப் போனவன், அடுத்த நொடி வயிற்றைப் படித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான். எனக்கோ பயங்கர டென்ஷன்.
“என்னடாது? எங்க அவஸ்தை உனக்கு சிரிப்பா இருக்கா?” என்றேன் எரிச்சலுடன்.
கண்களில் நீர் வரச் சிரித்தவன், “ஸாரிமா, ஸாரிபா!” என்று சொல்லிவிட்டு “ஷீது! ராகி முத்தையை எப்படி சாப்பிடறதுன்னு நீ சொல்லிக் குடுக்கலையா?” என்றான். நானும், என் கணவரும் பரிதாபமாக அவனைப் பார்த்தோம்.
அவன் நிதானமாக எங்களிடம் “அம்மா, இந்த ராகி முத்தையா சாப்பிடுவது ஒரு கலை. இப்போ பார், நான் சாப்பிட்டுக் காண்பிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “இந்த உருண்டையை கொஞ்சமாகக் கிள்ளி கொஜ்ஜில் இப்படிப் புரட்டிவிட்டு வாயில் போட்டுக் கொண்டு முழுங்கி விட வேண்டும்” என்று செய்முறை விளக்கமும் காட்டி விட்டு ஒரே நிமிடத்தில் தட்டைக் காலி செய்தான். “இதை சாதம் மாதிரி பிசையவோ, கடிக்கவோ கூடாது” என்றான்.
ஒரு வழியாக நானும் என் கணவரும் ராகி முத்தியை சாப்பிட்டு முடித்தோம்.
ஊருக்குத் திரும்பியதும், “பெங்களூர் எப்படி?” என்று கேட்டவர்களிடம் ராகி முத்தையை சாப்பிடக் கற்றுக் கொண்ட விதத்தைச் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனேன்.
“நல்ல கூத்து, சாப்பிடக் கற்றுக் கொண்டாளாம்” என்று முகவாய் கட்டையை தோளில் இடித்துக் கொண்டு போனார்கள்.
அவர்களுக்கு என்ன! எங்களுக்கல்லவா தெரியும் ராகி முத்தை சாப்பிடும் வித்தை!
வாவ்…. ராகி முத்தை…. :))
இங்கே ஒரு கன்னட நண்பர் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன்… 🙂 அதாவது உங்களை மாதிரியே முதல் முறை அவஸ்தையோடு….
நன்றி வெங்கட்!
செம காமெடி, நல்ல நடை, நானும் கொஞ்சம் கன்னடக் கலாச்சாரம், உணவுகள், மொழி கற்றுக் கொண்டேன்!!! First story itself too good!!!
//என் பிள்ளை எள் என்றால் எண்ணையாக வழிவான்; வெட்டிண்டு வா, என்றால் கட்டிண்டு வரும் சமத்து. Best ever joke 🙂
நன்றி ஓஜஸ்!
ழ..ழா ழி, ழீ சொல்ல இதுவா நேரம்? வாயில் என்ன கொழுக்கட்டையா?” என்றேன் கோபமாக.
“இழ்ழை, இழ்ழை, ழாழி முழ்ழை…” என்றார்.
அருமையாய் நகைச்சுவை விரவிய கதை !
நன்றி மணிராஜ்!
Thanks Ranjani, for posting this as I requested. Very hilarious and great humour. Hard to believe it is your maiden story.
Jayanthi.
thanks for enjoying!
I myself couldn’t believe!
very good. i think i am becoming an addict. Not able to resist & wait till I reach home from office to read your write ups.
Grt.
Regds
hello sheela,
sorry for the late response. I am happy to have an addicted fan for my writings!
thanks a lot!
ராகி முத்தை சாப்பிடும் அழகை நாங்களும் தெரிந்து கொண்டோம். அருமையான பகிர்வும்மா.
இப்போதுதான் உங்கள் மறுமொழியைப் பார்த்தேன். வருகைக்கும், ராகி முத்தை சாப்பிடக் கற்றுக் கொண்டதற்கும் நன்றி!
ரொம்ப நல்லா இருக்குமா… என்ன ஒரு கல்யாணம்.. நல்ல நகைச்சுவையோட சொல்லி இருக்கீங்க, உங்க மாட்டுப் பொண்ணப் பாக்கணும்னு ஆசையா இருக்கு 🙂
வாருங்கள் கண்மணி!
நன்றி, படித்ததற்கும் பாராட்டியதற்கும்
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சுதுப்பா! அருமை!
வாய் விட்டு சிரிச்சு நோய் விட்டுப் போச்சா?
நன்றி பட்டு!
🙂
அன்பின் ரஞ்சனி மேடம் – அருமையான கதை – முதல் கதையே அற்புதம் – மங்கையர் மலரில் வெளி வந்தமைக்குப் பாராட்டுகள் – நகைச்சுவை – இயல்பான நடை – மகன் மறுமகள் பற்றிய குறிப்புகள் – ஆங்காங்கே கணவரைப் பற்றியும்……. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
பல வேலைகளுக்கு இடையில் இங்கு வந்து படித்து கருத்துரை போட்டதற்கு நன்றி சீனா ஐயா!
தாங்கள் அனுபவித்த ஒவ்வொரு கஷ்டங்களையும் அழகாக ரஸித்து எழுதி சுவையாகக் கொடுத்து அசத்தி விட்டீர்கள், ரஞ்சூ, மிகவும் ரஸித்து சிரித்து மகிழ்ந்தேன். >>>>>>>>
ரொம்ப வேலைகளுக்கு நடுவில் படித்து பின்னூட்டமும் கொடுத்ததற்கு நன்றி கோபு ஸார்!
தாங்கள் அனுபவித்த ஒவ்வொரு சின்னச்சின்ன கஷ்டங்களையும், நகைச்சுவையாக அழகாக எழுதி, அசத்தியுள்ளீர்கள். நான் மிகவும் சிரித்து ரஸித்து மகிழ்ந்தேன். >>>>>>>>
//“பன்னி, அத்தை, பன்னி மாவா,” என்று வாய் நிறைய வரவேற்றாள் எங்கள் மாட்டுப் பெண் ஷீதல்.//
அடடா, என்ன கொடுமை இது. மாமியார், மாமனார் என்ற மரியாதை இல்லாமல் ‘பன்னி’ என்று சொல்கிறாளே என்றல்லவா எல்லா மாமியார் மாமனார்களுக்கும் கோபம் வரும். அதோடு மாமனாரை மாவாட்ட அல்லவா சொல்கிறாள் போலிருக்கு! ;))))) ஒரே கூத்து தான் போங்கோ.
>>>>>>>
மறுபடியும் அதே பின்னூட்டம் வந்திருக்கிறது!
//“இல்லடா, உன் அப்பாதான் பக்கத்து சீட்டில் இருந்த சீனியர் சிட்டிசனிடம் வசமாக அகப்பட்டுக் கொண்டார்,” என்றவள் அவரது முறைப்பை அலட்சியம் செய்தேன்.//
நீங்க தானே அந்த சீனியர் சிட்டிசன்? ;)))))
இரயில் பயணத்தில் மட்டுமா? வாழ்க்கைப்பயணத்திலும் சேர்த்துத்தானே ! உங்க பாடு ஜாலி தான்!!
>>>>>>>>>
ராகி முத்தை, அக்கி ரொட்டி, பாகற்காய் கொஜ்ஜு நல்ல பெயர்கள்! சிரிப்பாகவே உள்ளான.
//என் சம்மந்தி அம்மாள் “ஏன் பேக்கு? ஏன் பேக்கு?” என்றார். என்ன இவர் நம்மைப் பார்த்து பேக்கு, பேக்கு என்கிறாரே! (அதுவும் இரண்டு தடவை வேறு!) என்று நினைத்துக் கொண்டே தாலியைக் காட்டினேன்.//
ஏன் பேக்கு? ஏன் பேக்கு?? இது ஒரே சிரிப்பு தான். ;))))).
//“சொல்ப காபி குடிக்கிறீங்களா மாவா?” என்றாள் ஷீதல். என் கணவர் அவசர அவசரமாக “சொல்ப போறாது. தும்ப (நிறைய) வேண்டும்,” என்றார்.//
இது எங்காத்திலும் நடந்த நகைச்சுவைதான் என் அப்பா + நான் எல்லாம் அடிக்கடி காஃபி குடிப்பவர்கள் அதுவும் சொம்பு நிறைய குடிப்பவர்கள். அட்லீஸ்ட் பெரிய டவரா டம்ளரிலாவது தரணும். இல்லாவிட்டால் கோபம் வந்து விடும். ஒவ்வொரு நாட்டுப்பெண்ணுக்கும் ஆரம்பத்திலேயே முதல் நாளே இதைப்பற்றி பாடம் நடத்தி விடுவது உண்டு.
//வேறொன்றுமில்லை. முதல் தடவை நாங்கள் வந்திருந்தபோது அவள் காபி கொண்டு வந்த டம்ளரைப் பார்த்து அசந்து விட்டோம். அதைவிட சின்ன சைஸ் டம்ளரை உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது.//
சிலர் வீடுகளில் அப்படித்தான் வைத்துள்ளார்கள். அச்சு வெல்ல சைஸுக்கு குட்டியூண்டு டம்ளராக. மிகவும் கடுப்பாகிவிடும், எனக்கே கூட. டம்ளர் டவரா எல்லாம் மோதமுழங்க பெரிசா இருக்கணும். காஃபி நுரை பொங்க மணமா ஸ்ட்ராங்கா இருக்கணும்.
//அந்த சின்னஸ்ட் டம்ளர் காப்பியை சூப்பி சூப்பி அவள் குடிக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும். தண்ணீரைக் கூட இந்த ஊரில் எச்சில் பண்ணித்தான் குடிக்கிறார்கள்.//
நிறைய பேர் இப்படித்தான் உள்ளார்கள், இன்று. மிகவும் சகிக்க முடியாமல் கஷ்டமாகத்தான் உள்ளது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தான் இருக்க வேண்டியதாக உள்ளது.
குழந்தையிலிருந்தே உதடு படாமல் தூக்கிக்குடிக்க பழக்கணும். பேப்பர் கப் என்றால் பரவாயில்லை, அப்படியே தூக்கி எறிந்து விடலாம்.
கலாச்சார மாற்றம் மிகவும் அனாச்சாரமாகவே ஆகிவிட்டது.
என்ன செய்வது? என் பேரன் பேத்திகளும் அது போலவே தான் எச்சில் செய்து [சூப்பிச்சூப்பி] குடிக்கிறார்கள்.
>>>>>>>
திக் திக் 1, திக் திக் 2, திக் திக் 3 எல்லாமே ஒரே நகைச்சுவை தான்.
//“கொத்தாயித்தா?” என்பார். அவளும் சிரித்துக் கொண்டே “ஆயித்து மாவா” என்பாள்.//
இதுவும் நல்ல நகைச்சுவையாகவே உள்ளது.
//ழ..ழா ழி, ழீ சொல்ல இதுவா நேரம்? வாயில் என்ன கொழுக்கட்டையா?” என்றேன் கோபமாக.
“இழ்ழை, இழ்ழை, ழாழி முழ்ழை…” என்றார்.
இது இன்னும் டாப்பான நகைச்சுவை ! ;)))))
>>>>>>>>
அருமையான அனுபவப்பதிவு. நகைச்சுவை நிரம்பியது
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
மங்கையர் மலரில் வெளிவந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
சந்தோஷம் ரஞ்சு, மேடம்.
பிரியமுள்ள
VGK
வரி வரியாகப் படித்து, ரசித்து மறுமொழி எழுதுகிறீர்களே!
ரொம்பவும் பாராட்ட வேண்டும்.
உங்களிடமிருந்து நிறைய கற்க வேண்டும்!
நன்றி, நன்றி, நன்றி!
The story was just hilarious and I enjoyed reading it thoroughly. Infact I read it more than once for the humor.
நன்றி சதீஷ் குமார்!
ராகி முத்தை சாப்பிடும்போது உங்கள் கஷ்டமும், கணவர் பட்ட கஷ்டமும் வரும்போது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை! அருமையாக எழுதி இருக்கிறீர்கள். அப்படியே விழுங்கி விட்டால் என்ன ருசி தெரியும்?!!
ராகி முத்தைக்கு உப்பு கூட சேர்க்க மாட்டார்கள் ஸ்ரீராம்.
தொட்டுக் கொள்ள கொஞ்சம் காரசாரமாக – துளி இனிப்பும் சேர்த்து கொஜ்ஜு பண்ணுவார்கள். அதன் ருசியில் தான் இதை உள்ளே தள்ள வேண்டும்!
இணைப்பை உடனே தொடர்ந்து வருகை தந்து ரசித்துப் படித்து, பின்னூட்டம் தந்ததற்கு நன்றி ஸ்ரீராம்!
சிரிச்சு சிரிச்சு கண்களில் கண்ணீர், வயிறு வலிக்குது
வாருங்கள் பிரியதோழி!
படித்ததற்கும் ரசித்ததற்கும் நன்றி!
Ranjani
It is too good &hilarious a piece.Reading your personal story Iam amazed at your single minded accomplishments after marriage! just don’t believe it is your first story.Iam eager to read all your works.pl send me the link.May your creative outputs keep growing & you keep rocking:)
Regards
Mythili
ரொம்ப நல்லா ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க. இந்தச் சுட்டியைக் கொடுத்தது கீதா சாம்பசிவம் மேடம்.
அன்பவம் போன்று ஒரு கதை எழுதியிருக்கீங்க. நம்மைப் பொருத்திக்கொண்டு படிக்கும்படியாக இருந்தது. Well Done.
அனுபவம் தான். என் பெண் கல்யாணத்தின் போது நான் சந்தித்த அனுபவங்களை அப்படியே உல்டா செய்து எழுதியுள்ளேன். நன்றி முரளி.