கனவெல்லாம் குப்பை!

அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி!

வழக்கம்போல் உலகம் முழுக்க பொழுது புலர்ந்தாலும்….எங்களுக்கு – பெங்களூரு வாசிகளுக்கு வேறு விதமாக விடியல் தொடங்கியது.

“இந்தக் குப்பையை எந்த குப்பைக் கூடைல போடறது?”

“வெட்டா? (wet) ட்ரையா? (dry)”

“ட்ரைல ரெண்டு மூணு வகை இருக்கு…பாத்துப் போடு…..!”

எதில் போடுவது என்று தெரியாமல் நானும் என் மாட்டுப் பெண்ணும் கையில் ஆளுக்கொரு ‘குப்பை’ யை வைத்துக் கொண்டு ‘திரு திரு’ வென்று நின்று கொண்டிருதோம். என் கணவர் கையில் ‘டெக்கான் ஹெரால்ட்’ உடன்.

ஒவ்வொன்றாகப் படித்துப் படித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“காய்கறி, பழத்தோல், இதெல்லாம் ‘வெட்’. …..”

“புளிச்சக்கை……?”

நான் கையில் புளிச்சக்கையுடன் கேட்டேன். பாதி சமையல் நடந்து கொண்டிருந்தது. பிள்ளையும், மாட்டுப் பெண்ணும் அலுவலகம் கிளம்ப வேண்டுமே!

பொதுவாக சமையல் அறையில் ஒரு குப்பைத் தொட்டி. (ஆங்கிலத்தில் அழகாக டீசண்டாக ‘Waste basket’!) ஒவ்வொரு குளியலறையிலும் ஒவ்வொன்று. எப்போது எங்கு எது சௌகரியமோ நாங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு குப்பைத்தொட்டியையும் பயன்படுத்துவோம்.

என்னுடைய ஆரோக்கியத்திற்காக கணவரும், பிள்ளையும் நின்ற, உட்கார்ந்த  இடத்திலிருந்தே குப்பைத் தொட்டியை நோக்கி வாழைப் பழத்தோலை அவ்வப்போது எறிவதும் உண்டு. கொஞ்சம் குனிந்து, நிமிர்ந்தால் உடம்புக்கு நல்லது – எனக்கு மட்டும்! கீழே குறி தப்பி விழும் குப்பையை நான்தான் குனிந்து எடுத்துப் போட வேண்டும்!

இரண்டு மூன்று நாட்களாக பெங்களூரே அல்லலோல கல்லோலம்! அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் குண்டு கட்டாகக் கட்டி குப்பை வண்டியில் – பாதி –  கீழே மீதி! –  போடக் கூடாது என்று பெங்களூரு மஹா நகர பாலிகே ( நம்மூரு நகரசபை தாங்க!) கண்டிப்பாக உத்தரவு போட்டிருக்கிறது.

பெங்களூரு வாசிகளான நாங்கள் ‘என்னடா இது? நம்மூருக்கு வந்த சோதனை?’ என்று செய்வதறியாமல் உட்கார்ந்திருந்தோம்.

காலையில் வேலைக்காரி வந்தாள். வழக்கம் போலக் குப்பை கூடையை எடுக்கப் போனவளைப் பார்த்துப் பதறினேன். “தொடாதே!, தொடாதே….!”

பயந்து பின் வாங்கினாள்.

“ஏம்மா….! குப்பை கொட்ட வேண்டாமா….?”

“வேணாம், வேணாம், அது…..வெட் குப்பை, ட்ரை குப்பைன்னு தனித் தனியா பிரிச்சு போடணுமாம், இன்னியிலேருந்து…!”

“அப்டீன்னா?”

கணவர் திரும்ப டெக்கன் ஹெரால்ட் தினசரியைப் பிரிக்க, நான் அவசரமாக அவளிடம், “நீ குப்பை கொட்ட வேண்டாம்…..”

“நீயே குப்பைக் கொட்டிக்கீறீயா….. அப்பால….?” என்று கேட்டவாறே கையை வீசிக் கொண்டு  வெளியேறினாள் ‘நைட்டி லச்சுமி’.

இந்தக் காலத்து இல்லத்தரசிகளின் ‘தேசீய உடை’ யான நைட்டியை இவளும் அணிந்து வருவதால் அவளுக்கு நாங்கள் வைத்த செல்லப் பெயர் ‘நைட்டி லச்சுமி’.

அக்டோபர் 2 ஆம் தேதி. வீடு முழுக்க குப்பை இறைந்து கிடப்பதைபோல இரவெல்லாம் கனவு. ‘கனவெல்லாம் குப்பை’ – ன்னு ஒரு பதிவு எழுது’ என்று என் மனம் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கொக்கரித்தது!

வீட்டில் தலைக்கு மேல் குப்பை. என்ன செய்வது? சே! சே! என்னையும் அறியாமல் தலையை தட்டி விட்டுக் கொண்டேன். தொலைகாட்சியில் மூழ்கி இருந்த என்னவர் என்னைத் திரும்பிப் பார்ப்பதை ‘கண்டும் காணாமல்’ இருந்தேன்.

வாசலில் காலிங் பெல். எங்கள் அபார்ட்மெண்ட் பராமரிப்பு செய்யும் கௌடா.

“ஸார்! இன்னிக்கு ‘குப்பை மீட்டிங்’ 11 மணிக்கு. கட்டாயமா வந்துடுங்க”.

“ஒருத்தருக்கும் ஒண்ணும் புரியாது பாரு…நான்தான் போயி……” என்றவாறே ஒரு புது உற்சாகத்துடன் ‘குப்பை மீட்டிங்’ கிற்கு தயாரானார் என் கணவர்.

‘ஏதாவது ஒரு வழி பிறந்தால் தேவலை….’ என்ற என்னை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே என் மாட்டுப் பெண் “நீங்க ஏம்மா இதுக்குப் போயி இத்தனை டென்ஷன் ஆறேள்?” என்றாள்.

என் கவலை யாருக்குத் தெரியும் (புரியும்?) அடுத்த வாரம் வலைச்சரம் ஆசிரியர். அதற்காக பதிவுகளை பொறுக்கிக்… சே! குப்பைதான் மனம் முழுக்க…..(இந்தத் தலைப்புக் கூட நன்றாக இருக்கிறது – மனம்!) சாரி, சாரி, தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

என் கணவர் மறக்காமல்(!) டெக்கான் ஹெரால்ட் தினசரியை எடுத்துக் கொண்டு மீட்டிங்குக்குச் சென்றார்.

அவர் வந்தவுடன் பாய்ந்தேன்: ‘என்னாச்சு…?’

“வெட் குப்பை, ட்ரை குப்பை ன்னு தனித்தனியா……”

“அதான் தெரியுமே…!”

“ரெண்டு மூணு குப்பைத்தொட்டி வச்சிக்கணும்…”

“அதான் தெரியுமே…!”

“வீட்டுக் வீடு …..”

“குப்பைதான்….”

கணவர் கோபமாக முறைக்க மௌனித்தேன்.

“….ரொம்ப தமாஷு…….. மாடி வீட்டு ஏ.கே. குமார் சொல்றான், ஒவ்வொரு வீட்டுக்கும் போய்  யாராவது தினமும் குப்பையை கலெக்ட் பண்ணனும். ஒரு வீட்டுக்கு தினம் நூறு ரூபா கொடுத்துடலாம்-ன்னு! நான் சொன்னேன்: நானே கலெக்ட் பண்றேன். 40 வீடு இருக்கு. தினம் 4000 ரூபா! வருடத்துக்கு…… 1,20,000!…..சாப்ட்வேர் என்ஜினீயர் விட அதிகம் கிடைக்கும்…நான் இப்படி சொன்னவுடனேதான் அவனுக்கு புரிஞ்சுது. நீ சரியாதான் பெயர் வச்சிருக்கே அறிவு கெட்ட குமார்-ன்னு!”

அபூர்வமாக என் கணவர் என்னைப் பாராட்டுவது கூட ரசிக்கவில்லை எனக்கு.

சே! என்னோட பிரச்சினை தீரவே இல்லை. சேர்ந்திருக்கும் குப்பையை என்ன செய்வது? இன்றும் கனவெல்லாம் குப்பைதானா? யோசித்து யோசித்து எனக்கே இந்தத் தலைப்புல பதிவு போடலாம்னு தோன்ற ஆரம்பித்து விட்டது.

“குப்பை விஷயம் சொல்லுங்கோ….” பொறுமை போயே விட்டது எனக்கு.

“சானிடரி நாப்கின்ஸ், பாப்பாவோட டயபர்ஸ் எல்லாம் பேப்பர்ல சுத்தி சிவப்பு கலர் பேனாவுல பெருக்கல் குறி போட்டு தனியா வைக்கணுமாம். இப்போ மார்க்கர் பேனா வேற வாங்கணும்….!”

“காலைல லாரி வரும்…..செக்யூரிட்டி விசில் அடிச்ச ஒடனே குப்பையைப் போய் போட வேண்டும்…..”

இன்று காலையில் எழுந்ததிலிருந்து விசில் சத்தம் வருகிறதா என்றே பார்த்துக் கொண்டிருந்தேன். ஊஹூம்! ஒரு சமயம் நானே விசில் அடிக்கலாமானு கூட யோசித்தேன். லாரி வரணுமே!

பாதி சமையல் ஆகிக்கொண்டு இருந்தது. வாசலில் என்னவோ பேச்சு சத்தம். எட்டிப் பார்த்தேன். தினமும் குப்பை அள்ளும் வண்டி!

“கௌடா! கசா தகோண்ட் பர்லா?” (குப்பையை எடுத்துக்கொண்டு வரட்டுமா?)

“பன்னி…பன்னி…(banni, banni) – வாங்க வாங்க…”

அத்தனை குப்பை தொட்டிகளையும் தூக்கிக் கொண்டு ஓடினேன்.

“இது வெட், இது ட்ரை….” ஆரம்பித்த என்னை “இன்னிக்கு எல்லாவற்றையும் ஒண்ணா போடுங்க…..” என்ற குரல் அடக்கியது.

மாற்றங்களை ஏற்பது எத்தனை கஷ்டம்!

பி.கு. குப்பை கொட்டிய சந்தோஷத்தில் என் மனம் சொன்ன தலைப்பிலேயே பதிவும் எழுதிவிட்டேன்!

30 thoughts on “கனவெல்லாம் குப்பை!

   1. அன்புள்ள பத்மா,
    வள்ளுவன் வாக்குப்படி நடப்பவள் நான்: இடுக்கண் வருங்கால் நகுக!

    வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி!

  1. அன்புள்ள ஓ!
   still ஆ? இனிமேல் இப்படித்தான்!

   இன்றைய தினசரி செய்தித்தாள் நிலவரம்: 32% குப்பைகள்தான் இதுபோல பிரிக்கப்பட்டு போடப் படுகின்றனவாம். மீதி 68% மக்களுக்கும் கொஞ்சம் விழிப்புணர்வு வந்தால் நன்றாக இருக்கும்.

 1. உங்களின் கனவும் தவிப்பும் நகைச்சுவையுடன் இருந்தது… எப்படியோ முடிவில் சுபம்…

  /// மாற்றங்களை ஏற்பது எத்தனை கஷ்டம்! ///

  உண்மை… பழகினால் கஷ்டம் காணாமல் போய் விடும்…

  நன்றி அம்மா…

  1. நேற்றைய தவிப்பை விட இன்று கொஞ்சம் நிலைமையை நன்றாகவே சமாளித்து விட்டோம்.

   நன்றி தனபாலன்!

 2. Oh mam, excellent. Actually we also heard the same policy is going to be implemented in our area (Delhi NCR ) & I was going thru all the above thoughts in my mind. I knew in America and all they do follow seperate disposal system & I was wondering we should consult some NRIs for this.
  I think though you have written with humour, this is going to happen at each household nationwide once it comes in to effect.

  Superb as usual.

  Best Regards
  Sheela

   1. I am indeed very seriously thinking on this line & may be very soon will join you all. May be (surely) I will not be able to pen down my thoughts in such a beautiful way like you all, I definitely would like to share the same.

    Hope to join by Navarathri, which is always a very special period of the year for me.
    PS : if it happens i think the 1st credit goes to you for all the encouragement / guidelines / & the push you have been giving so far.

    Thanks & Regards

 3. ஹாஸ்யமா எழுதியிருக்கிறாய். நல்லவேளை.காலெல்லாம் குப்பையாகாமல் ,கனவெல்லாம் குப்பையாக வந்ததில், இடுகை சிறிப்பாயிற்று. வீட்டினுள்ளே பச்சை கலர் பை ஈரத்திற்கும், கருப்பு கலர்பை காய்ந்ததற்கும், ஸிங்க்
  அடியிலேயே அதேகலர் ப்ளாஸ்டிக் கன்டெய்னர்களுடன் இருக்கும். ஒரு குறிப்பிட்ட
  பொதுவான இடத்தில் கண்ணாடிகுப்பைகள், எண்ணெய்கன்டெயினர்கள், வேண்டாத துணிகளைப்
  போடுமிடமெனத் தனித்தனியே பிறித்துப் போட
  வசதிகளுமிருக்கும். இதெல்லாம் நான் பாரர்த்த வெளி நாடுகளில்.. வசதிகளைப் பண்ணிக்கொடுத்து அனுஸரிக்கச் சொன்னால் கூட ஸகஜமாக ஆவதற்கு
  நேரமெடுக்கும். கையில் புளிச்சக்கையோடு நன்றாக
  இருந்தது

  1. அன்புள்ள காமாட்சி அம்மா,
   உங்கள் கருத்துரையில் இருக்கும் யோசனைகள் (வெளி நாடுகளில் கலர் கண்டெய்னர்கள்) நன்றாக இருக்கிறது.

   அதை எங்கள் அகத்திலும் நடைமுறைக்குக் கொண்டு
   வர முயலுகிறேன்.

   யோசனைகளுடன் கூடிய கருத்துரைக்கு நன்றி!

 4. அட்டகாசமாக எழுதுகிறீர்கள்! வாழ்த்துகள்.
  எழுதுகிற விடயத்தை சுவையோடு எழுதுவது உங்களுக்கு நன்றாக வருகிறது. எங்களைப் போன்ற புதிய(!!) பதிவர்களுக்கு தங்களைப் போன்ற மூத்த(!) பதிவர்கள் வழிகாட்டுங்கள்.பின் தொடர்கிறோம்!
  நன்றிகளுடன்,
  தமிழ்

 5. அன்புள்ள தமிழ், பாராட்டுக்களுக்கு நன்றி.
  உங்களைப் போல கனமான விஷயங்கள் எழுத வருமா எனக்கு என்பது சந்தேகம் தான்.

  புதிய தலைமுறை தமிழில் எழுதி வருவது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

 6. அப்பாடி.. நானே டென்ஷன் ஆகிட்டேன்.. குப்பை வண்டி வந்ததா இல்லையான்னு.. நல்லவேளை வந்து உங்க கனவா காப்பாதிடிச்சி.. இல்லன்னா இன்னைக்கும் உங்க கனவுல குப்பை வந்து இம்சை படுத்தி இருக்கும்… குப்பை லாரி வாழ்க.. கௌடா வாழ்க வாழ்க(குப்பை வண்டி வந்ததும் விசில் அடிச்சதுக்கு)…..

  நல்ல நகைசுவையா குப்பையா கூட ஒரு பதிவாகிடீங்க அம்மா …

  1. அப்படியா? எழுத்தெல்லாம் ரொம்ப சின்னச்சின்னதாக தெரியுது, மாத்திடலாமா ன்னு பார்க்கிறேன்.

   பதிவைப் படிப்பதுடன், டெம்ப்ளேட் டுக்கும் கருத்துரை இடுவது உன் தனி பாணியா?

   நன்றி சமீரா

 7. “குப்பை “- படித்தேன் ,சிரித்தேன்,ரசித்தேன்….
  //“இன்னிக்கு எல்லாவற்றையும் ஒண்ணா போடுங்க…..” என்ற குரல் அடக்கியது//
  🙂
  //”மாற்றங்களை ஏற்பது எத்தனை கஷ்டம்.”//…!வலைச்சரம் ஆசிரியராக பதவியேற்க போகிறீர்கள் வாழ்த்துக்கள் அம்மா..

 8. ஒரு சாதாரண குப்பை விஷயம். அடடா, அதற்குள் எவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கு பாருங்கோ.

  ஒரே சிரிப்பு தான். நான் முறை படித்து விட்டு என் மனைவியிடம் ஒரு முறைப் படித்துக்காட்டினேன்.

  நிறைய இடங்களில் யதார்த்தங்களை வெகு அழகாக உங்களுக்கே உரித்தான நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். மிகவும் ரஸித்த இடங்கள்: ;))))).

  //“காய்கறி, பழத்தோல், இதெல்லாம் ‘வெட்’. …..”

  “புளிச்சக்கை……?”//

  // நான் அவசரமாக அவளிடம், “நீ குப்பை கொட்ட வேண்டாம்…..”//

  // நான் சொன்னேன்: நானே கலெக்ட் பண்றேன். 40 வீடு இருக்கு. தினம் 4000 ரூபா! வருடத்துக்கு…… 1,20,000!…..சாப்ட்வேர் என்ஜினீயர் விட அதிகம் கிடைக்கும்…நான் இப்படி சொன்னவுடனேதான் //

  //“பன்னி…பன்னி…(banni, banni) – வாங்க வாங்க…”//

  தொடரும்….. VGK

 9. //என் கவலை யாருக்குத் தெரியும் (புரியும்?) //

  அதானே! அவாஅவா கவலை அவாஅவாளுக்கு! ;))))))

  //அடுத்த வாரம் வலைச்சரம் ஆசிரியர். அதற்காக பதிவுகளை பொறுக்கிக்… சே! குப்பைதான் மனம் முழுக்க…..//

  அடடா! இதுவேறையா! சொல்லவே இல்லையே நீங்க!
  அட்வான்ஸ் வாழ்த்துகள்.

  //(இந்தத் தலைப்புக் கூட நன்றாக இருக்கிறது – மனம்!) சாரி, சாரி, தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன்.//

  எப்படியோ ஜோராக நகைச்சுவையாக எழுதி ஒரு பதிவு தேத்திட்டேளே! என்னே உங்கள் சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும். வியக்க வைக்கிறது என்னை ;)))))
  மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு ந்ன்றிகள்.

  சரியானதொரு ஆசாமியிடம் தான் அடுத்த வார வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கள் கொடுக்கப்பட உள்ளன என்பதில் எனக்கு உங்களை விட மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான். ;))))))

  நீடூழி வாழ்க.

  பிரியமுள்ள
  கோபு .

 10. உங்களது மனமார்ந்த ஆசிகள் நெகிழ வைக்கின்றன. நீங்கள் வழி கட்ட இருக்கும் தைரியத்தில் தான் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

  வாலாம்பா மாமியை ரொம்பக் கேட்டதாகச் சொல்லுங்கள்.

  அடுத்தமுறை அவருடன் பேசுகிறேன்.

  மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும்,
  ரஞ்ஜனி

 11. குப்பையை வைத்து இவ்வளவு காமெடியா!நல்ல நகைச்சுவையான பதிவு. படிக்க நல்லாருந்துச்சு. உங்களுக்கு கனவில் மட்டும்தான்,இனி எங்களுக்கு பார்க்கும்போதெல்லாம்.

  1. பார்க்கும் போதெல்லாம் குப்பை என்று ஒரு பதிவு எழுதி விடுங்கள்.

   நீங்கள் எப்போது சமையலறையிலிருந்து வெளியே வந்து பதிவுகள் எழுதப் போகிறீர்கள்?

   காமாட்சி அம்மா வந்துட்டாங்களே! சீக்கிரம் ஆரம்பியுங்கள், ப்ளீஸ்!

 12. அன்புள்ள ஷீலா,
  உங்களுக்காகவே பல பதிவுகள் எழுதிவருகிறேன்.
  எப்படி ப்ளாக் ஆரம்பிப்பது? http://wp.me/p244Wx-kJ
  என்ன பெயர் வைப்பது?, என்ன விஷயங்கள் விலை போகும் என்று வரிசையாக எழுதி இருக்கிறேன்.

  அடுத்த வாரம் வலைச்சரம் என்ற மின்னிதழின் ஆசிரியராக ஒரு வாரத்திற்கு பொறுப்பேற்கிறேன்.
  அங்கும் வந்து உங்கள் மேலான கருத்துக்களை கொடுங்கள், ப்ளீஸ்!

 13. “பார்க்கும் போதெல்லாம் குப்பை”_எப்படிங்க சரியா சொன்னீங்க!ஆச்சரியமா இருக்கு.ப்ளாக்கர் ஒன்று ஆரம்பித்து அதில் சின்னசின்ன நினைவுகளைப் பகிரலாம் என நினைத்து எழுதியதில் ஒன்றுதான் இது.ட்ராஃப்டில் இருக்கு. அநியாயத்துக்கு பூஸ்ட் குடுத்திருக்கீங்க, பார்க்கலாம் நன்றி.

  1. பதிவு எழுதுவதை தவிர ‘சூ! மந்திரகாளி….’
   தெரியும்.

   அடுத்த பதிவின் தலைப்பையும் கொடுத்து விட்டேன் பாருங்க!

   நீங்கள் இன்னொரு பதிவு தொடங்குவது ரொம்ப சந்தோஷம்!

   வாழ்த்துக்கள்!

 14. சிரிசிரி யெனச் சிரித்ததில்
  சாப்பிட்ட வயிறு வலிக்கிறது.
  இடையிடையே டெக்கான் ஹெரால்ட்
  எங்களுக்கெல்லாம் சிரி டோஸ் கொடுத்துவிட்டீர்கள்
  அருமை.

  1. நன்றி நன்றி ஐயா!

   சிரிப்பும் நல்ல மருந்துதான் இல்லையா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s