கனவெல்லாம் குப்பை!

அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி!

வழக்கம்போல் உலகம் முழுக்க பொழுது புலர்ந்தாலும்….எங்களுக்கு – பெங்களூரு வாசிகளுக்கு வேறு விதமாக விடியல் தொடங்கியது.

“இந்தக் குப்பையை எந்த குப்பைக் கூடைல போடறது?”

“வெட்டா? (wet) ட்ரையா? (dry)”

“ட்ரைல ரெண்டு மூணு வகை இருக்கு…பாத்துப் போடு…..!”

எதில் போடுவது என்று தெரியாமல் நானும் என் மாட்டுப் பெண்ணும் கையில் ஆளுக்கொரு ‘குப்பை’ யை வைத்துக் கொண்டு ‘திரு திரு’ வென்று நின்று கொண்டிருதோம். என் கணவர் கையில் ‘டெக்கான் ஹெரால்ட்’ உடன்.

ஒவ்வொன்றாகப் படித்துப் படித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“காய்கறி, பழத்தோல், இதெல்லாம் ‘வெட்’. …..”

“புளிச்சக்கை……?”

நான் கையில் புளிச்சக்கையுடன் கேட்டேன். பாதி சமையல் நடந்து கொண்டிருந்தது. பிள்ளையும், மாட்டுப் பெண்ணும் அலுவலகம் கிளம்ப வேண்டுமே!

பொதுவாக சமையல் அறையில் ஒரு குப்பைத் தொட்டி. (ஆங்கிலத்தில் அழகாக டீசண்டாக ‘Waste basket’!) ஒவ்வொரு குளியலறையிலும் ஒவ்வொன்று. எப்போது எங்கு எது சௌகரியமோ நாங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு குப்பைத்தொட்டியையும் பயன்படுத்துவோம்.

என்னுடைய ஆரோக்கியத்திற்காக கணவரும், பிள்ளையும் நின்ற, உட்கார்ந்த  இடத்திலிருந்தே குப்பைத் தொட்டியை நோக்கி வாழைப் பழத்தோலை அவ்வப்போது எறிவதும் உண்டு. கொஞ்சம் குனிந்து, நிமிர்ந்தால் உடம்புக்கு நல்லது – எனக்கு மட்டும்! கீழே குறி தப்பி விழும் குப்பையை நான்தான் குனிந்து எடுத்துப் போட வேண்டும்!

இரண்டு மூன்று நாட்களாக பெங்களூரே அல்லலோல கல்லோலம்! அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் குண்டு கட்டாகக் கட்டி குப்பை வண்டியில் – பாதி –  கீழே மீதி! –  போடக் கூடாது என்று பெங்களூரு மஹா நகர பாலிகே ( நம்மூரு நகரசபை தாங்க!) கண்டிப்பாக உத்தரவு போட்டிருக்கிறது.

பெங்களூரு வாசிகளான நாங்கள் ‘என்னடா இது? நம்மூருக்கு வந்த சோதனை?’ என்று செய்வதறியாமல் உட்கார்ந்திருந்தோம்.

காலையில் வேலைக்காரி வந்தாள். வழக்கம் போலக் குப்பை கூடையை எடுக்கப் போனவளைப் பார்த்துப் பதறினேன். “தொடாதே!, தொடாதே….!”

பயந்து பின் வாங்கினாள்.

“ஏம்மா….! குப்பை கொட்ட வேண்டாமா….?”

“வேணாம், வேணாம், அது…..வெட் குப்பை, ட்ரை குப்பைன்னு தனித் தனியா பிரிச்சு போடணுமாம், இன்னியிலேருந்து…!”

“அப்டீன்னா?”

கணவர் திரும்ப டெக்கன் ஹெரால்ட் தினசரியைப் பிரிக்க, நான் அவசரமாக அவளிடம், “நீ குப்பை கொட்ட வேண்டாம்…..”

“நீயே குப்பைக் கொட்டிக்கீறீயா….. அப்பால….?” என்று கேட்டவாறே கையை வீசிக் கொண்டு  வெளியேறினாள் ‘நைட்டி லச்சுமி’.

இந்தக் காலத்து இல்லத்தரசிகளின் ‘தேசீய உடை’ யான நைட்டியை இவளும் அணிந்து வருவதால் அவளுக்கு நாங்கள் வைத்த செல்லப் பெயர் ‘நைட்டி லச்சுமி’.

அக்டோபர் 2 ஆம் தேதி. வீடு முழுக்க குப்பை இறைந்து கிடப்பதைபோல இரவெல்லாம் கனவு. ‘கனவெல்லாம் குப்பை’ – ன்னு ஒரு பதிவு எழுது’ என்று என் மனம் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கொக்கரித்தது!

வீட்டில் தலைக்கு மேல் குப்பை. என்ன செய்வது? சே! சே! என்னையும் அறியாமல் தலையை தட்டி விட்டுக் கொண்டேன். தொலைகாட்சியில் மூழ்கி இருந்த என்னவர் என்னைத் திரும்பிப் பார்ப்பதை ‘கண்டும் காணாமல்’ இருந்தேன்.

வாசலில் காலிங் பெல். எங்கள் அபார்ட்மெண்ட் பராமரிப்பு செய்யும் கௌடா.

“ஸார்! இன்னிக்கு ‘குப்பை மீட்டிங்’ 11 மணிக்கு. கட்டாயமா வந்துடுங்க”.

“ஒருத்தருக்கும் ஒண்ணும் புரியாது பாரு…நான்தான் போயி……” என்றவாறே ஒரு புது உற்சாகத்துடன் ‘குப்பை மீட்டிங்’ கிற்கு தயாரானார் என் கணவர்.

‘ஏதாவது ஒரு வழி பிறந்தால் தேவலை….’ என்ற என்னை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே என் மாட்டுப் பெண் “நீங்க ஏம்மா இதுக்குப் போயி இத்தனை டென்ஷன் ஆறேள்?” என்றாள்.

என் கவலை யாருக்குத் தெரியும் (புரியும்?) அடுத்த வாரம் வலைச்சரம் ஆசிரியர். அதற்காக பதிவுகளை பொறுக்கிக்… சே! குப்பைதான் மனம் முழுக்க…..(இந்தத் தலைப்புக் கூட நன்றாக இருக்கிறது – மனம்!) சாரி, சாரி, தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

என் கணவர் மறக்காமல்(!) டெக்கான் ஹெரால்ட் தினசரியை எடுத்துக் கொண்டு மீட்டிங்குக்குச் சென்றார்.

அவர் வந்தவுடன் பாய்ந்தேன்: ‘என்னாச்சு…?’

“வெட் குப்பை, ட்ரை குப்பை ன்னு தனித்தனியா……”

“அதான் தெரியுமே…!”

“ரெண்டு மூணு குப்பைத்தொட்டி வச்சிக்கணும்…”

“அதான் தெரியுமே…!”

“வீட்டுக் வீடு …..”

“குப்பைதான்….”

கணவர் கோபமாக முறைக்க மௌனித்தேன்.

“….ரொம்ப தமாஷு…….. மாடி வீட்டு ஏ.கே. குமார் சொல்றான், ஒவ்வொரு வீட்டுக்கும் போய்  யாராவது தினமும் குப்பையை கலெக்ட் பண்ணனும். ஒரு வீட்டுக்கு தினம் நூறு ரூபா கொடுத்துடலாம்-ன்னு! நான் சொன்னேன்: நானே கலெக்ட் பண்றேன். 40 வீடு இருக்கு. தினம் 4000 ரூபா! வருடத்துக்கு…… 1,20,000!…..சாப்ட்வேர் என்ஜினீயர் விட அதிகம் கிடைக்கும்…நான் இப்படி சொன்னவுடனேதான் அவனுக்கு புரிஞ்சுது. நீ சரியாதான் பெயர் வச்சிருக்கே அறிவு கெட்ட குமார்-ன்னு!”

அபூர்வமாக என் கணவர் என்னைப் பாராட்டுவது கூட ரசிக்கவில்லை எனக்கு.

சே! என்னோட பிரச்சினை தீரவே இல்லை. சேர்ந்திருக்கும் குப்பையை என்ன செய்வது? இன்றும் கனவெல்லாம் குப்பைதானா? யோசித்து யோசித்து எனக்கே இந்தத் தலைப்புல பதிவு போடலாம்னு தோன்ற ஆரம்பித்து விட்டது.

“குப்பை விஷயம் சொல்லுங்கோ….” பொறுமை போயே விட்டது எனக்கு.

“சானிடரி நாப்கின்ஸ், பாப்பாவோட டயபர்ஸ் எல்லாம் பேப்பர்ல சுத்தி சிவப்பு கலர் பேனாவுல பெருக்கல் குறி போட்டு தனியா வைக்கணுமாம். இப்போ மார்க்கர் பேனா வேற வாங்கணும்….!”

“காலைல லாரி வரும்…..செக்யூரிட்டி விசில் அடிச்ச ஒடனே குப்பையைப் போய் போட வேண்டும்…..”

இன்று காலையில் எழுந்ததிலிருந்து விசில் சத்தம் வருகிறதா என்றே பார்த்துக் கொண்டிருந்தேன். ஊஹூம்! ஒரு சமயம் நானே விசில் அடிக்கலாமானு கூட யோசித்தேன். லாரி வரணுமே!

பாதி சமையல் ஆகிக்கொண்டு இருந்தது. வாசலில் என்னவோ பேச்சு சத்தம். எட்டிப் பார்த்தேன். தினமும் குப்பை அள்ளும் வண்டி!

“கௌடா! கசா தகோண்ட் பர்லா?” (குப்பையை எடுத்துக்கொண்டு வரட்டுமா?)

“பன்னி…பன்னி…(banni, banni) – வாங்க வாங்க…”

அத்தனை குப்பை தொட்டிகளையும் தூக்கிக் கொண்டு ஓடினேன்.

“இது வெட், இது ட்ரை….” ஆரம்பித்த என்னை “இன்னிக்கு எல்லாவற்றையும் ஒண்ணா போடுங்க…..” என்ற குரல் அடக்கியது.

மாற்றங்களை ஏற்பது எத்தனை கஷ்டம்!

பி.கு. குப்பை கொட்டிய சந்தோஷத்தில் என் மனம் சொன்ன தலைப்பிலேயே பதிவும் எழுதிவிட்டேன்!