எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது

 

சென்ற பதிவில் ஒரு பதிவிலிருந்து அடுத்த பதிவுக்குத் தலைப்பு கிடைக்கும் என்று பார்த்தோம். இன்று உங்கள் தனித் திறமையை வைத்து வலைபதிவு செய்வதைப் பார்க்கலாம்.

ஔவையாரின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றின் கடைசி வரி இன்றைய பதிவின்  தலைப்பு.

இதோ முழுப் பாடல்:

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்

வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

ஆறறிவு படைத்த மனிதனால் செய்ய முடியாதை இந்த வான்குருவி, கறையான், தேனீக்கள் செய்யும். ஆனால் நம்மால் அவைகளைப் போல கூடு கட்டவோ, புற்று உருவாக்கவோ, தேன்கூடு செய்யவோ முடியாது. ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள்: நம்மால் பூவிலிருந்து தேனை எடுக்க முடியுமா, தேனீக்களைப் போல? அவை சேகரிக்கும் தேனைக் கூட அவைகளை விரட்டி விட்டு விட்டுத்தான் எடுக்கமுடியும்!

இதைதான் ஒவ்வைப் பாட்டியும் சொல்லுகிறாள்: ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று எளிது. நானே வல்லவன் என்று பெருமை கொள்ள வேண்டாம்.

உங்களுக்கு எது எளிது? உங்கள் வலைப்பதிவில் அதைப் பற்றி எழுதுங்கள்.

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றில் திறமைசாலியாக இருப்போம். கடவுளின் படைப்பில் யாருமே ‘பயனில்லாதவர்கள்’ இல்லை. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித் திறமை இருக்கும். அதைப் பற்றி பதிவு எழுதுங்கள்.

நீங்கள் ஒரு இசை வல்லுனரா? இசையைப் பற்றி எழுதுங்கள். நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்தில் இருந்து வரும் விதம்விதமான இசை பற்றியும் சங்கீதச் செய்திகளையும், அவற்றில் பிரபலமானவர்களையும் பற்றி எழுதுங்கள்.

பாடல்கள் எழுதுவீர்களா? இசை அமைக்க விருப்பமா? பாடல் எழுதி, இசை அமைத்து, நீங்களே பாடி வலைப்பதிவில் இணையுங்கள்.

எனக்குப் பாட்டுக் கேட்கத் தான் தெரியும், என்கிறீர்களா? விரும்பிக் கேட்கும் பாடல்களை பற்றி எழுதுங்கள். பல பாடல்கள் ஏதாவது ஒரு கர்நாடக ராகத்தை ஒட்டி இருக்கும். கர்நாடக சங்கீதமும் கொஞ்சம் தெரியும் என்றால் என்ன ராகம், அதை எப்படிக் கையாண்டு இருக்கிறார்கள் என்று எழுதலாம். அந்தச் சாயலில் இருக்கும் பிற பாடல்கள், கர்நாடகப் பாடல்கள் இவற்றைப் பற்றி எழுதலாம்.

உங்களை கவர்ந்த, பாதித்த பாடல் வரிகளை எழுதலாம். கூடவே அந்தப் பாடல்களின் ஆசிரியர், பாடியவர்(கள்), ஆடியோ, முடிந்தால் வீடியோ காட்சிகள் இணைக்கலாம்.

நன்றாகத் தையல் வேலை செய்வீர்களா? உங்கள் தையல் அனுபவங்களை எழுதுங்கள். எப்படி தைப்பது என்று சொல்லிக் கொடுங்கள். பூத்தையல் போடச்சொல்லித் தரலாம். ஒவ்வொரு நிலையாக, புகைப்படங்களுடன் விளக்கலாம்.

குழந்தைகளின் உடைகள் வடிவமைப்பு, பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் தயாரிப்பு என்று பலவற்றையும் எழுதலாம்.

தோட்டக்கலை பிரியரா நீங்கள்? சின்ன வீட்டில் எப்படி தோட்டம் போடலாம், என்னென்ன பூச்செடிகள், கொடிகள், காய்கறிச் செடிகள் வளர்க்கலாம் என்று சின்னச்சின்ன குறிப்புகள் கொடுக்கலாம். தக்காளி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, வெண்டைக்காய், பாகல் இவை வெகு வேகமாக வளரும். வெற்றிலைக் கோடி போடலாம். நல்ல வெய்யில் இதற்கு வேண்டும். பால்கனி கிரில்களில் படர விடலாம்.

மொட்டைமாடியில் பூத்தோட்டம், பால்கனியில் போன்சாய் , சமையல் அறை தோட்டம்  என்று விதவிதமாக வலைபூக்கள் எழுதி வாசகர் உள்ளத்தில் மணக்க மணக்க வலம் வரலாம்.

எங்கள் ஊரில் (பெங்களூரில்) சேப்பங்கிழங்கு இலையில் பத்ரோடை என்று ஒரு வகை (பொரியல் போலச் செய்யலாம்). இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, நீங்கள் வாங்கி வந்த சேப்பங்கிழங்குகளில் சிறிய முளை வந்திருந்த கிழங்குகளை தொட்டியிலோ, வீட்டின் முன், பின் பாக்கங்களில் இருக்கும் தக்குனூண்டு மண் இருக்கும் இடத்திலோ நட வேண்டியதுதான்.

இலைகள் ஒரு கையகலம் வந்தவுடன் அவற்றைப்  பறித்து, நன்கு அலம்பித் துடைத்துக் கொள்ளவும். நடுவில் இருக்கும் நரம்புகளை எடுத்து விடவும். ஒரு இலையை  இரண்டு பகுதிகளாக செய்து கொள்ளலாம்.   இட, வலப்பக்கங்களில் இருக்கும் நரம்புகள் இளசாக இருந்தால் எடுக்க வேண்டாம். துவரம் பருப்பு, கடலைப் பருப்பு சம அளவில் எடுத்துக் கொண்டு காரம் வேண்டிய அளவிற்கு சிவப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு போட்டு அரைத்து கொள்ளவும்.

அரைத்த விழுதை இந்த இலைகளில் நன்கு தடவி, இலைகளை சுருட்டி ஆவியில் வேகவைக்கவும். வெந்தவுடன் சின்னச்சின்ன துண்டுகளாக நறுக்கி, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தாளித்து, தேங்காய் சேர்த்து பொரியல் செய்யலாம்.

நம் வீட்டில் நாம் வளர்த்த செடிகள் என்றால் அது தனி ருசிதான்! அதேபோல வெங்காயம் நட்டீர்களானால், வெங்காயத் தாள் கிடைக்கும்.

தோட்டக்கலையுடன், உங்கள் சமையல் திறமையையும் சேர்த்து எழுதுங்கள். வெற்றி உங்கள் பக்கம்தான்!