பாதித்த கவிதை

இன்றைக்கு ஒரு கவிதை. என்னை மிகவும் பாதித்த கவிதை.

முதல் எச்சரிக்கை: இது நான் எழுதியது இல்லை. (அப்பாடி!)

ஆங்கிலக் கவிதை ஒன்றின் தமிழாக்கம்.

இரண்டாவது எச்சரிக்கை: தமிழாக்கமும் நான் செய்தது இல்லை. ( இரண்டாவது அப்பாடி!)

இத்தனை எச்சரிக்கைகள் தேவையா?

ஆமாம், இன்னுமொரு எச்சரிக்கை : மனசு கனத்துவிடும்!

திரு தமிழ் அவர்களின் பதிவிலிருந்து நான் ரசித்து, மனசு கனத்துபோன   கவிதை.

கவிதைக்கு முன் திரு தமிழும் சின்னதாக ஒரு முன்னுரை கொடுத்திருக்கிறார்.

கவிதையின் தலைப்பு:

பதில் சொல்லுங்கள் அம்மா

படித்துவிட்டு அவரது தளத்திலேயே கனத்த மனசை கொட்டிவிடலாம்!

லாம்….. எழுதலாம்……ப்ளாக் எழுதலாம்…….!

‘டொக்…. டொக்….’

‘யாரது?’

‘நாங்கள் Worldpress.com இலிருந்து வந்திருக்கிறோம். இங்கு ரஞ்ஜனி நாராயணன் என்பது….?’

‘நான்தான், நான்தான்…உள்ளே வாருங்கள்…!’

‘நீங்களா…?’

‘நானேதான்! ஆதார் கார்ட் காட்டட்டுமா?’ (எனக்கு ஆதார் கார்ட் வந்துவிட்டதே!)

‘வேண்டாம்…உங்கள் பெயரைப் பார்த்துவிட்டு ரொம்பவும் சின்ன வயதுப் பெண் என்று நினைத்துவிட்டோம்….’

60, 70, 80 களில் நானும் சின்னவளாகத்தான் இருந்தேன்…

மனதில் நினைத்துக் கொண்டு ‘இப்பவும் மனசளவில் சின்னவள்தான்….ஹி….ஹி….’ என்றேன். (நாளைக்குப் போய் ‘டை’ அடித்துக் கொண்டு வரவேண்டும்…)

‘நீங்க என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?’

‘திரு வை.கோ. சொன்னார்…நீங்கள் ப்ளாக் எழுதுகிறீர்களாம்….’

‘ஓ! ஓ! வைகோ ஸாரா? என்னோட பரம விசிறி ஸார் அவர். எனக்கு கூடிய சீக்கிரம் ‘விசிறிகள் மன்றம்’ கூட ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்!’ (இது கொஞ்சம் ‘ஓவர்’ – இடித்தது என் செல்லம்)

ஷ்…..சும்மா இரு என்று அதை அடக்கினேன்.

‘கிட்டத்தட்ட 237 பதிவுகள் எழுதி இருக்கிறேன் ஸார்! எல்லாமே நானே எழுதியது….என் சொந்த முயற்சியில்…’

‘…அப்படியா…..?’

‘ஆமா ஸார்…அவள் விகடனில் கூட ‘வலைப்பூவரசி’ என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள்.’

‘ஓ!……’

‘அப்பறம்….ஒருதடவ வலைச்சரம் ஆசிரியராகவும் இருந்தேன்……..’

‘இத்தனை எழுதின அப்பறம்  திருப்தி ஏற்பட்டிருக்க வேணுமே?’

‘திருப்திதான். ஆனாலும் தினம் தினம் ஒரு பதிவு போட வேண்டும் என்று ஒரு அரிப்பு…’

‘அரிப்பா? மருத்துவரைப் போய் பாருங்கள்….!’

‘ஸார், ஸார் நீங்க தப்பாகப் புரிஞ்சுண்டு இருக்ககீங்க! எழுத வேண்டும் என்று மனசுல சதா ஒரு குடைச்சல்….

‘உங்க அரிப்பு, குடைச்சல்  எல்லாத்துக்கும் ஒரு  நல்ல மருத்துவரைப் பாருங்க. அத்த விட்டுட்டு எங்களைப் படுத்தினால்….’

‘…..ஸார், என்ன சொல்றீங்க?’

‘நிறுத்துங்க!’

என்ன சொல்றீங்க?

‘நிறுத்துங்க…’

‘புரியலையே!’

‘மணிரத்னம் படமெல்லாம் பாக்க மாட்டீங்களா?’

‘………………………….!?’

’எழுதறத நிறுத்துங்க….’

‘என்ன சொல்றீங்க?’

‘ஆமாம்மா, நீங்க இனிமே எழுதக் கூடாது…’

‘ஸார், ஸார், இன்னும் ஒரு ஆசை நிறைவேறணும். வோர்ட்பிரஸ் freshly pressed – ல ஒரு முறையாவது என் இடுகை வரணும்…’

‘இது வேறயா?’

‘ஆமா ஸார்….நாற்சந்தி, தமிழ், ரூபன் இவங்க இடுகைகளெல்லாம் வரது….’

‘நீங்களும் முச்சந்தி, கன்னடம், அதிரூப சுந்தரி என்று எழுதினால் வருமோ என்னவோ…?’

‘ஸார், ஸார்….’

‘இதோ பாருங்கம்மா… இப்படியே ஒரொரு ஆசையா சொல்லிகிட்டே இருந்தீங்கன்னா எங்களை யார் காப்பத்துவாங்க? அதனால உடனே நிறுத்துங்க…..’

‘ஸார்! வைகோ ஸார்! என்னக் காப்பாத்துங்க….!’

‘இங்க பாருங்க, நாங்க எல்லோரும் உங்களால பாதிக்கப் பட்டவங்க….யாரும் உதவிக்கு வரமாட்டாங்க…’

‘சிவஹரி…சிவஹரி….நீங்களாவது உதவி செய்யுங்க….’

‘அருமை சகோ…கவலைப் படாதீங்க! நான் இருக்கிறேன்…இன்னிக்கு வலைச்சரத்திலே ஒரு கல்வெட்டுப் பதிவு உங்களைப் பற்றி போட்டிருக்கேன்….அதைப் படிச்சுட்டாவது உங்களோட மனச மாத்திக்கக் கூடாதா? எழுதறத நிறுத்தக் கூடாதா?’

‘யூ டூ சிவஹரி……?

’றேன்…. த்திடறேன்……..நிறுத்திடறேன்……. எழுதறத நிறுத்திடறேன்….. ப்ளாக் எழுதறத நிறுத்திடறேன்……’

********************************************

“ரஞ்ஜனி! ரஞ்ஜனி! எழுந்திரு…..!

‘மாதவா! அம்மாவை எழுப்பு… ப்ளாக் எழுத ஆரம்பிச்சு தூக்கத்தலேயும் ப்ளாக் உளறல்!?”

ஹப்பா! கனவா? நல்லவேளை…நாளையிலிருந்து திரும்ப….

லாம்….. எழுதலாம்……ப்ளாக் எழுதலாம்…….

பின்குறிப்பு:

நான் குறிப்பிட்டிருக்கும் பதிவர்கள் என்னை மன்னிப்பார்களாக!

தப்புத்தப்பாக ஒரு தினம்!

நேற்றைக்கு விஜயதசமி. எதை செய்ய ஆரம்பித்தாலும் வெற்றிதான் என்று உலகம் முழுக்க ஒரு நம்பிக்கை. தப்பு செய்ய ஆரம்பித்தால்….? அதையும் வெற்றிகரமாக செய்ய முடியுமா?

அதென்னவோ நேற்று முழுக்க தப்புத்தப்பாகச் செய்துகொண்டிருந்தேன். (மற்ற நாளெல்லாம் ரொம்ப சரி சரியாகச் செய்கிறாப் போல….!)

சமையல் எல்லாம் சரியாகவே செய்தேன். குழம்பிற்கு உப்பு; பாயசத்திற்கு வெல்லம் என்று காலை வேளை நன்றாகவே இருந்தது. விஜயதசமி பூஜை செய்து, சரஸ்வதி பூஜை அன்று பூஜையில் வைத்த புத்தகங்களைப் படித்து, எல்லோரையும் படிக்கச் செய்து…..

சாயங்காலம் நாலு மணிக்கு என் தோழி சுகன்யாவிடமிருந்து தொலைபேசி. ‘ரஞ்ஜனி!  நீயே என் வீட்டுக்கு வா. மஞ்சள் குங்குமம் கொடுக்கிறேன். பிறகு உன்னுடனேயே உங்கள் வீட்டிற்கு வருகிறேன். சரியா?’ என்று.

‘நல்லதாச்சு. நானே வருகிறேன்.’

‘ஒரு தடவை வந்திருக்கிறாய் இல்லையா, வீடு தெரியும் தானே?’

‘ஓ! நல்லா தெரியும். எங்க வீட்டிலேர்ந்து உங்கவீடு ரொம்ப பக்கம்தானே…… கவலையே படாத! நானே வந்துடுவேன்….’

‘எதுக்கும் என் போன் நம்பர் வைச்சுக்கோ….நீ ஒரு தடவை தான் வந்திருக்கே…..’

‘அதெல்லாம் இருக்கு. டோன்ட் வொரி!’ (தமிழ்ல சொன்ன புரியாதா? ஆங்கிலத்தில் வேறயா?)

இப்படியாக 6 மணிக்கு வெற்றிகரமாக கிளம்பினேன். அது தப்புகரமாக முடியப் போகிறது என்று அப்போது தெரியவில்லை.

நிஜமாகவே சுகன்யா வீடு பக்கம்தான். என் வீட்டிலிருந்து நேராகப் போய் முதல் வலது. சிறிது தூரம் போய் முதல் இடது…….அப்புறம்…….அப்புறம்…….!!??!!

நேராக நடந்து கொண்டே இருந்தேன். சுகன்யா வீடு வரவே இல்லை. அது எப்படி வரும்? நீதான் போகணும்…! சமய சந்தர்ப்பம் தெரியாமல் என் செல்லக்குட்டி (அதாங்க என் மன சாட்சி)  என்னை இடித்தது.

‘தப்புத்தப்பா எங்கெங்கேயோ போகிறாய்…ஒழுங்காக சுகன்யாவிற்கு போன் செய்…’ மனதிற்குள் எச்சரிக்கை மணி!

வேண்டாம் வேண்டாம் நான்தான்  வந்திருக்கிறேனே….எச்சரிக்கை மணியை அலட்சியப்படுத்தி விட்டு மறுபடி நடக்க ஆரம்பித்தேன். இங்கேதான் எங்கேயோ……

நடுவில் ரோடு வேறு ரிப்பேர். தோண்டிப் போட்டிருந்தார்கள். தாண்டித் தாண்டி…

மெதுவாக வயிற்றில் ஒரு பட்டாம் பூச்சி…..ஒன்று இரண்டானது….இரண்டு……பலவானது….

போன் செய்தேன் சுகன்யாவிற்கு. அவளது மாட்டுப்பெண் பேசினாள்.

‘சொல்லுங்கோ ஆண்ட்டி!’

என் பரிதாப நிலையை சொன்னேன். ‘ஆண்ட்டி, நீங்க லக்ஷ்மி கோவில் கிட்ட வந்துடுங்கோ. நான் அங்க வரேன்’.

நான் இருக்கும் இடம் எங்கே? கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு பார்த்தேன். வலது பக்கம் மைசூர் ரோடு. சரி இடது பக்கம் டௌன்ல போகணும் (வீதிகள் ஏற்ற இறக்கமாக இருப்பதால் ‘அப்’புல போகணும், ‘டௌன்’ல போகணும் இதெல்லாம் சகஜம் இங்கே.) இடம் புரிந்துவிட்ட தைரியத்தில் வேகமாக (!!) நடந்து இடது பக்கம் திரும்பியவுடன் கோவில்…அப்பாடா!

அங்கிருந்து எனக்கு சுகன்யாவின் வீட்டுக்குப் போக வழி தெரிந்து விட்டது. ஆனாலும் பாவம் அந்தப் பெண் வரேன் என்று சொல்லி இருக்கிறாளே என்று அங்கேயே நின்றேன்(!!). அவள் வந்தவுடன் அவளுடன் (அசடு வழிந்தபடியே) எப்படி வழி தவறினேன் என்று சொல்லிக் கொண்டே சுகன்யா வீட்டிற்குப் போனேன்.

கிளம்பும்போது சொன்னேன்: ‘இனிமேல் நான் போன் செய்தாலே உன் மாட்டுப் பெண், ‘எங்க மாட்டிக் கொண்டு இருக்கீங்க’ என்று கேட்கப் போகிறாள்…’

சரி அந்தத் தப்பை சரி செய்து வீட்டிற்கு வந்து கணணி முன் உட்கார்ந்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது, தெரியாத்தனமாக ‘reblog’ க்ளிக் பண்ணி……அசடு வழிந்து…….

ஒருவழியாக reblog செய்ததை குப்பைத்தொட்டியில் தள்ளி…. திரும்பி வந்து இன்-பாக்ஸில்  ‘நாற்சந்தி’ யின் புது பதிவு வெற்றி விஜயம். சரி தப்பு பண்ணி மனசு நொந்துபோய் இருக்கே, வெற்றி விஜயத்தை படிப்போம் என்று படிக்க ஆரம்பித்து….

’சிவகாமியின் சபதத்தில்…’ என்று தெளிவாக அவர் எழுதியதைப் படித்துவிட்டு…. பின்னூட்டத்தில் ‘பார்த்திபன் கனவு…’ என்று எழுதி…..

காலையில் எழுந்து பார்த்தால் சிவகாமியின் சபதத்தை  ‘பார்த்திபன் கனவு’ ஆக்கிவிட்டீர்களே’ என்று ஓஜஸ் நொந்து போய் இருந்தார்!

இப்படி ஒரே நாளில் அடுக்கடுக்காக உலகம் முழுக்க தெரிகிறார்போல தப்பு செய்ய யாராலாவது முடியுமா இந்த அபராத சக்ரவர்த்தியை தவிர?

இதை படித்து விட்டு தலைப்பை ‘தினம் தப்புத்தப்பாக’ என்று நீங்கள் படித்தாலும் எனக்குக் கோபம் தப்பித் தவறிக் கூட வராது!

மன்னிக்க வேண்டுகிறேன்!

ஒரு பதிவு எழுதியவுடன் பிரசுரம் ஆகும்போது இடது பக்கத்தில் ‘reblog’ என்று ஒரு option இருக்கும். அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாது. ஒவ்வொரு தடவையும் அதை க்ளிக் பண்ணினால் என்ன ஆகும் என்று நினைப்பேன்.

ஆனால் சும்மா இருந்து விடுவேன். இன்று சும்மா இல்லாமல் க்ளிக் பண்ணிவிட்டேன்.

ranjani135 reblogged ‘இன்னிக்கு படிக்க வேண்டாம்’! to 40 followers on ranjani narayanan. Congrats!

You may want to visit their blog. Perhaps you’ll enjoy their blog as much as they enjoyed yours!’

என் மெயில் பெட்டியில் மேற்கண்ட செய்தி!

அப்புறம்தான் தெரிந்தது என்னுடைய பதிவை நானே மறுபடி பிரசுரித்து விட்டேன் என்று!

என்ன செய்வது? யாரும் பார்க்காமல் தலையில் அடித்துக் கொண்டு, அதை குப்பைத்தொட்டிக்குத்தள்ளி…

வீட்டில் குப்பை கொட்டுவதுடன் பதிவிலும் குப்பை கொட்டி….

எல்லோரிடமும் ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்று ‘மாப்பு’  (மாஃப்) கேட்டுக் கொண்டுவிட வேண்டியதுதான் என்று இதனை எழுதுகிறேன்.

விஜயதசமி அன்று ஒன்றுமே எழுத வில்லையே என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்.

ஒரு தப்பு பண்ணி மன்னிப்பும் கேட்டு…. அதையே விஜயதசமி பதிவா போட்டு …

அடடா! ரஞ்ஜனி என்னே உன் சாமார்த்தியம்….!

தொடரட்டும் உன் தப்பும் தவறும்!

‘இன்னிக்கு படிக்க வேண்டாம்’!

சரஸ்வதி பூஜை என்றால் உடனே நினைவுக்கு வருவது ‘இன்னிக்கு படிக்க வேண்டாம்’ தான்!

நாளை சரஸ்வதி பூஜை என்றால் இன்றைக்கே அம்மா சொல்லுவாள்: ‘பொஸ்தகங்களை எல்லாம் நாளைக்கு கொலு முன்னாடி அடுக்கணும். நாளைக்கு பூஜை முடிஞ்சு நாளன்னிக்குத் தான் அதை எல்லாம் எடுக்கலாம். இன்னிக்கே வீட்டுப்பாடம் முடிச்சுடுங்கோ!’

இன்னிக்கு வீட்டுப் பாடங்களை முடிக்க வேண்டும் என்பதைவிட நாளைக்கு படிக்க வேண்டாம் என்பது பெரிய விஷயம் எங்களுக்கு.

இப்போது என் பேரன் கேட்கிறான்: ‘சரஸ்வதி பூஜை பண்ணிட்டு படிச்சா என்ன? சரஸ்வதி ஒம்மாச்சி கோச்சுபாளா?’

‘இல்லம்மா, நாம தெனம் படிக்கிறோம், இன்னிக்கி ஒரு நாள் சரஸ்வதி ஒம்மாச்சி நமக்காகப் படிப்பாள்…!’

‘நிஜமாவா….?’

‘ம்ம்ம்….நாளைக்கு நீ புஸ்தகத்தை எடுத்தவுடன் உனக்கு படிக்காமலே எல்லாம் மனப்பாடம் ஆகிவிடும்..’

‘நிஜமாவா?’

அந்த நாட்களைப் போல பெரியவர்கள் சொல்வதைக் குழந்தைகள் கேள்வி கேட்காமல் ஒப்புக் கொள்வதில்லை இந்தக் காலத்தில். ஆனாலும் குழந்தைத்தனம் என்பது இருக்கத்தான் செய்கிறது.

கொலுவிற்காக வீட்டில் இருக்கும் ட்ரங்க் பெட்டிகளெல்லாம் வெளியே எடுக்கப் பட்டு படிகளாக மாறும். அப்பாவின் புது வேஷ்டி படிகளை அலங்கரிக்கும். நாங்கள் எல்லோருமாக ‘லக்ஷ்மி கல்யாண வைபோகமே’ பாடி சோபனம் (அரிசி, பருப்பு, வெல்லம்) வைத்து விட்டு முதலில் லக்ஷ்மி சரஸ்வதி பொம்மைகளை வைப்போம். பிறகு மற்ற பொம்மைகள்.

தினமும் எல்லார் வீட்டுக்கும் போவோம் (சுண்டல் கலக்க்ஷனுக்கு!). எங்கள் வீட்டுக்கும் எல்லோரும் வருவார்கள். அம்மா முதலிலேயே ஒரு காரம் ஓர் இனிப்பு பண்ணி வைத்துவிடுவாள். சின்ன பசங்களுக்கு பட்சணம், இனிப்பு. பெரியவர்களுக்கு தாம்பூலம், பழம், சுண்டல்.

எங்கள் எதிர் வீட்டில் ஒரு மாமி. நாங்கள் (நானும், என் அக்காவும்) எப்போது போனாலும் ‘இப்போ ரெண்டு பேரும் பாட்டு பாடிவிட்டு, சுண்டலுக்கு அப்புறம் வாங்கோ’ என்பார். நாங்களும் விடாமல் போய் சுண்டல் வாங்கி வருவோம்!

அப்புறம் வருடங்கள் போகப் போக ஒரே ஒரு நாள் மட்டும் போவது என்று ஆகிவிட்டது. சிலர் நவரத்திரிக்கும் ஒரு நாள் குறித்து அன்று வாருங்கள் என்று ‘அழைப்பிதழ்’ போடுகின்றனர். அன்றைக்குப் போக முடியவில்லை என்றால் அடுத்த வருடம் தான்!

பெங்களூரு வந்த பிறகும் இன்று வரை கொலு வைத்துக் கொண்டு இருக்கிறேன். இப்போது இரண்டு வருடங்களாக என் மாட்டுப் பெண்ணும் படிகளை அமைப்பதிலிருந்து ரங்கோலி போட்டு, பொம்மைகள் அடுக்குவது வரை ரொம்பவும் ஆர்வத்துடன் செய்கிறாள்.

பண்டிகைகள் என்பது நமது தினசரி வாழ்விலிருந்து நமக்கு சிறிது விடுதலை கொடுக்கத்தான்.  ஒரே மாதிரியான வேலைகளிலிருந்து வேறுபட்டு, பழைய சிநேகிதங்கள் புதுப்பிக்கப்படவும், புதிய சிநேகிதங்கள் வளரச் செய்யவும்தான்.

சிலர் ‘எனக்கு இரண்டும் பிள்ளைகள்…அதனால் கொலு வைப்பதையே விட்டுவிட்டேன்’ என்கிறார்கள். பிள்ளைகளானால் என்ன, நம் சம்பிரதாயங்கள் அவர்களுக்கும் தெரிய வேண்டும் அல்லவா?

 

எல்லோருக்கும் மஞ்சள், குங்குமம், தாம்பூலம் சுண்டலுடன் பார்சல்…..!

சரஸ்வதி பூஜை, விஜயதசமி தின வாழ்த்துக்கள்!

எங்கள் வீட்டு கொலுவின் சில படங்கள் உங்கள் பார்வைக்கு:

‘எங்ககிட்ட மளிகை சாமான் வாங்குங்க….FDI வரதுக்குள்ள…!

 

 

எல்லா ஜாமானும் இருக்குதுங்கோ…!

வாங்கம்மா…, வாங்க… புது கறிகாய்…..!

எங்க வீட்டு கொலு !

தாசரதி – மைதிலி, இலக்குமணன், சிறிய திருவடி

மானிடர்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன்…