தினம் தினம் ஒரு ‘தினம்’!

தினமும் தலைப்புகள் பற்றிப் பேசலாம் என்று சொல்லிவிட்டு நேற்று திசை மாறி ‘ஆசிரியர் தினம்’ பற்றி எழுதிவிட்டேன். இப்போது நம் பாதைக்கு வருவோம் மீண்டும்!

இந்த தினங்களை பற்றியே எழுதிவிடலாம்! கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவார்களா?

ஜனவரியில் ஆரம்பித்து டிசெம்பர் முடிய எத்தனை ‘தினம்!’

ஜனவரி முதல் தேதி – புதிய வருடத்தின் முதல் தினம்! நீங்கள் இந்த வருடம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறீர்கள்? அவற்றை பற்றி – ஏன் அந்த உறுதி மொழி? இதன் பின்புலம் என்ன?  எத்தனை நாட்களில் அதை நிறைவேற்ற வேண்டும்? எழுதுங்கள். பதிவு எழுதுவதால் உங்கள்  உறுதிமொழி காற்றில் பறந்து போகாமல் இருக்கும். பதிவில் போட்டுவிட்டதால் உறுதி மொழியைக் காப்பாற்ற உங்களுக்கும் ஒரு உந்துதல் இருக்கும். மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாக இருப்பீர்கள்.

அடுத்தபடி குடியரசு தினம். எல்லோருக்கும் தெரிந்தது என்றாலும் நமது குடியரசை எப்படிக் காக்கலாம், குடிமக்களின் கடமை என்ன – நம் நாட்டில் படித்தவர்கள் பலர் தேர்தலில் வாக்களிப்பதில்லை. வாக்களித்தலின் முக்கியத்துவம் பற்றி எழுதலாம். இவர்கள் ஏன் வாக்களிப்பதில்லை? அவர்களை எப்படி வாக்களிக்க வைப்பது?

மாதங்களின் பெயர்கள் எப்படி வந்தன என்று கூட ஒரு பதிவு எழுதலாம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!

ஃபிப்ரவரியில் வாலண்டைன்ஸ் தினம்! எனது யோசனைகளை வேண்டவே வேண்டாம். நீங்களாகவே எழுதலாம்.

மார்ச் மாதம் மகளிர் தினம்.

ஏப்ரலில் தமிழ் வருடப் பிறப்பு! தமிழை வைத்தே பதிவுகளைத் தேற்றலாம்! தமிழ் மொழி, தமிழ் மண், தமிழ் பண்பாடு, தமிழ் பண்டிகைகள், தமிழன், தமிழ் நூல்கள், தமிழ் புலவர்கள்…..

மே மாதம் அன்னையர் தினம், தொடர்ந்து வருவது தந்தையர்கள் தினம்; ஆசிரியர் தினம் குழந்தைகள் தினம் என்று தினங்களின் அணிவகுப்பு மிக நீண்டது.

எனக்குத் தெரிந்த தினங்கள் பற்றி மட்டும் நான் எழுதுகிறேன். இன்னும் பல இருக்கின்றன.

சில நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினங்கள்; உலகளவில் பலபல தினங்கள் அனுசரிக்கப் படுகின்றன. தினசரி செய்தித்தாள்கள் படித்தால் இவையெல்லாம் தெரிய வரும்.

இவற்றைத் தவிர திருமண நாள், பிறந்த நாள், தலைவர்களின் நினைவு நாள் என்று யோசித்து யோசித்து நிறைய எழுதலாம். உங்களின், உங்கள் பெற்றோர்களின், உங்களுக்குத் தெரிந்தவர்களின் 25 வது திருமண நாள், 50 வது திருமண நாள் என்று அவர்களது வாழ்வின் வெற்றியை எழுதலாம்.

இந்த மாதிரி நாட்கள் என்று தனியே கொண்டாடுவது அவசியமா என்று கூட ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. அதைப்பற்றி உங்கள் கருத்துக்களை எழுதலாம்.

எழுதுவது பற்றி இன்னும் சில சிந்தனைகள்:

தினம் ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. எழுதினாலும் தவறு இல்லை. தினம் எழுத விஷயம் வேண்டுமே! இருக்கவே இருக்கிறது செய்தித்தாள்கள்; வார, மாதாந்திர பத்திரிக்கைகள்! அதில் படிக்கும் விஷயங்களுடன் உங்கள் சொந்த கருத்துக்கள், அனுபவங்கள் என்று சேர்த்து எழுதலாம்.

எழுத நினைப்போம் ஆனால் கணணி முன் உட்கார நேரம் கிடைக்காது. அதனால், ஒரு சின்ன நாட்குறிப்புப் புத்தகம் எப்போதும் கைவசம் இருக்கட்டும். எழுத ஒரு சின்ன யோசனை தோன்றினாலும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

அதேபோல உங்களுக்கு வரும் மின்னஞ்சலில், பல அருமையான கட்டுரைகள் கிடைக்கும். இவற்றையெல்லாம் ஒரு தனி கோப்புறையில் (folder) போட்டு வையுங்கள்.

ஆங்கிலத்தில் வரும் கட்டுரைகளை மொழியாக்கம் செய்யலாம். தெரியாத ஆங்கிலப்பதங்களுக்கு கூகிள் மொழிபெயர்ப்பு (Google Translator) உதவும். பல ஆங்கில தமிழ் அகராதிகளும் இணையத்தில் கிடைக்கும்.

நம் படைப்புகள் நமக்கு என்றுமே சிறந்ததாகத் தான் தோன்றும். அதனால் எழுதியவுடன் உங்கள் நண்பரிடமோ, துணைவரிடமோ கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். முதலிலிருந்து கடைசி வரை ஒரு தொடர்ச்சி இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லுங்கள். நீங்கள் எழுத எடுத்துக்கொண்ட விஷயத்திலிருந்து விலகாமல் இருக்கிறதா உங்கள் கட்டுரை என்று கேளுங்கள்.

இணையத்தில் கிடைக்கும் விஷயங்களை – அந்தப் பக்கத்தையே ‘புக்மார்க்’ அல்லது ‘favourite’ என்று குறித்து வைக்கலாம். நேரம் கிடைக்கும்போது எழுதலாம்.

வலையுலகம் மிகப் பெரியது. இந்த மிகப் பிரம்மாண்டமான உலகத்தில் உங்களை கவனிக்க வேண்டுமானால் உங்கள் எழுத்துக்கள் தனித்துத் தெரிய வேண்டும்.

நிறைய வலைப்பதிவுகளைப் படியுங்கள். படிக்கப் படிக்க உங்களுக்குள் ஒரு விழிப்புணர்வு வரும். இப்படி இப்படியெல்லாம் எழுதலாம் என்கிற அறிவு வரும். பலப்பல நுணுக்கமான விஷயங்கள் புரியும்.

மற்றவர்களுக்குப் புரியும்படி எழுதுவது நல்லது. ஏனெனில் இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன: ஒன்று நாம் புரிந்து கொள்ளுவது; இன்னொன்று நாம் புரிந்து கொண்டதை மற்றவர்களுக்குப் புரிய வைப்பது. இரண்டாவதில் உங்கள் எழுத்து வெற்றி பெற்று விட்டால் பதிவுலகம் உங்கள் வசப்படும்.

வாழ்த்துக்கள்!

http://tk.makkalsanthai.com/2012/09/blog-post_1433.html

 

10 thoughts on “தினம் தினம் ஒரு ‘தினம்’!

  1. மக்கள் சந்தைக்கும் போய் வந்தேன். இந்தப் பதிவும் மிகவும் உபயோகமானது. நல்ல நல்ல விஷயங்கள் வேண்டி இந்த ப்ளாகுகள் இருக்கிறது பெண்ணே.

    1. மக்கள் சந்தையில் ஒரு தொடர் போல எழுதி வருகிறேன். நேற்றைய பதிவின் இணைப்பு கொடுக்கிறேன். அதையும் படித்துப் பாருங்கள். நன்றி இரண்டு பதிவிலும் கருத்துரை கொடுத்ததற்கு!
      http://tk.makkalsanthai.com/2012/09/blog-post_7.html

  2. தொழிற்களத்திலும் கருத்திட்டேன் அம்மா… அதில் ஒரு கருத்தை சொல்லாமல் விட்டு விட்டேன்… அதாவது :

    /// நிறைய வலைப்பதிவுகளைப் படிக்கச் சொல்லி உள்ளீர்கள்… அது போல் புத்தகங்களும் என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள்… //// – இப்படி எழுதி இருந்தேன்…

    “ஒரு பதிவு எழுதுவதற்கு முன், அந்தப் பதிவை மேலும் மெருகூட்ட, அந்தப் பதிவிற்கான புத்தகங்கள் தேட வேண்டும்… படிக்க வேண்டும்…” என்று எழுத நினைத்தேன்…

    அப்படிச் செய்தால் பல புத்தகங்கள் படித்தது போலவும் ஆகும்… நாமும் நிறைய தெரிந்து கொள்ளலாம்… மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்… (அதை விட மகிழ்ச்சி ஏது ?)

    தெய்வம் இருப்பது எங்கே ? என்னும் பதிவை எழுதுவதற்கு பல புத்தகங்களை படிக்க வேண்டி இருந்தது… அத்தனையும் எழுதி விட்டேன்… பார்த்தால் அனுமார் வால் போல், பதிவு ரொம்ப நீ…ள…ம்… பிறகு மாற்றி உரையாடல் போல் எழுதி முடித்தது ஒரு தனிக்கதை… (அதுவும் உரையாடல் போல் எழுதுவது சிறிது சிரமம் தான்)

    நன்றி அம்மா… வாழ்த்துக்கள்…

    1. ஓர் பதிவு எழுத நீங்கள் மேற்கொள்ளும் சிரமம் மிகவும் பாராட்டத்தக்கது தனபாலன்! அந்தப் படிப்பு தரும் பண்பு வேறு எதிலும் வருவதில்லை.

      அதனால் தான் உங்கள் பத்தி, பின்னூட்டம் எல்லாமே சிறப்பாக அமைந்து விடுகிறது!

  3. Dear Mam,

    When I read about your last post (teacher’s day) I wanted to wish you but could not. However now I feel i can wish you today also (Happy Teacher’s Day) as you are being a best teacher to all of us through your every day posts.
    Remarkable.
    I feel energized after reading your articles. very useful.

    Thanks & Regards

  4. சிறப்பான பகிர்வு. ”எழுத மனமிருந்தால் எழுதுவதற்கு விஷயங்களா இல்லை!” எனத் தோன்றுகிறது.

    உங்களிடமிருந்து நானும் கற்றுக்கொள்கிறேன்… தொடர்ந்து எழுதுங்கள்…

    1. நன்றி வெங்கட்! நிறைய பதிவுகள் படிக்கும்போது எழுதுவதற்கு எத்தனை இருக்கின்றன என்று தோன்றும். அதைத்தான் எழுதி இருக்கிறேன்.

  5. அழகாக சொல்லிவிட்டீர்கள்… பதிவு எழுத இனி குழம்பவேண்டிய அவசியமில்லை… உங்களை பற்றி கூட ஒரு பதிவு எழுத எண்ணம் வருகிறது.. விரைவில் ஒரு பேட்டிக்கு ரெடி ஆகுங்க அம்மா….

Leave a reply to வெங்கட் Cancel reply