Life

மலரும் நினைவுகள்!

 

உலகெங்கும் இருக்கும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

 

ஒரு ஆசிரியையாக சில நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 

நான் ஆசிரியை ஆனது ஒரு தற்செயல். (பாவம் மாணவர்கள்!)

 

2000 மாவது ஆண்டு. ஒரு மல்டிமீடியா மையத்தில் சேர்ந்து பிளாஷ், கோரல்டிரா, பேஜ்மேக்கர் எல்லாம் கற்றுக்கொண்டு இருந்தேன். அப்போது வேலைக்கு  செல்லவில்லை முழுக்க முழுக்க இல்லத்தரசியாக இருந்தேன்.

 

எனது ஆசிரியை சௌஜன்யா மிகவும் சிறிய வயது பெண். அவள் அடிக்கடி எனது ஆங்கிலத் திறமையை மெச்சுவாள். ஒருநாள் அரக்கப்பரக்க வந்தாள்.

 

“மேடம்! பக்கத்து தெருவில் ‘இங்லிஷ் சென்டர்’ திறக்கப் போகிறார்கள். ஆங்கிலத்தில் பேச சொல்லித் தர வேண்டும். நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும்….”

 

“ஐயோ! சௌஜன்யா! எனக்கு பேச வரும் சொல்லித்தரத் தெரியாது. அதுவுமில்லாமல் இந்த வயதில் யார் வேலை கொடுப்பார்கள்?” என்று மறுத்தேன்.

 

அவள் விடவில்லை. “நீங்கள் உங்கள் ‘ரெச்யுமே’ (resume) தயார் செய்து கொண்டு வாருங்கள். நாளை நேர்முகத் தேர்வுக்குப் போகலாம்…” என்றாள்.

 

சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் எனது ரெச்யுமே தயார் செய்தேன். நேர்முகத்தேர்வு அன்று நான் ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல் இருந்தேன். ஏனென்றால் கிடைத்தால் ஓகே இல்லையென்றால் இருக்கவே இருக்கு ‘அடுப்பங்கரை அரசி’ உத்தியோகம். ஆனால் சௌஜன்யாவுக்கு வேலை மாற்றம் அவசியமாகி இருந்தது. அவள் பாவம் படு டென்ஷனில் இருந்தாள்.

 

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்! அதை நிரூபிப்பது போல  நான் தேர்வு செய்யப்பட்டேன். அவள் தேர்வு செய்யப் படவில்லை! அவளுக்காக நானும் போக வேண்டாம் என்று நினைத்தேன். அவள் விடவே இல்லை. ‘நல்ல வாய்ப்பு விடாதீர்கள்; உங்களிடம் ஏதோ திறமை ஒளிந்திருக்கிறது. ஒப்புக் கொள்ளுங்கள்’, என்று மிகவும் வற்புறுத்தினாள்.

 

அவளது பெருந்தன்மை என்னை வியக்க வைத்தது. அவளிடமிருந்து நான் கற்றது அந்தப் பெருந்தன்மையை.

 

வாழ்க்கை நமக்கு பல பாடங்களை போதிக்கிறது ஒவ்வொருவர் மூலம், இல்லையா? இவர்கள் எல்லோருமே நம் ஆசிரியர்கள்தான்.

 

அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறியது. அடுப்பங்கரை அரசியாக இருந்தவள் இருந்து ஆங்கில பயிற்சியாளராக மாறினேன்.

 

என்னைவிட வயதில் சின்னவர்களுக்கு நடுவில் என்னை நிலை நிறுத்திக் கொள்ள கடுமையாக உழைத்தேன். என்னைத் தயார் செய்து கொள்ளாமல் ஒரு வகுப்பிற்குள்ளும் போனது இல்லை. மாணவர்கள் என்னிடம் எவ்வளவு கற்றார்களோ அவ்வளவு நானும் அவர்களிடமிருந்து கற்றேன்.

.

மற்ற ஆசிரியர்களைப் போல அல்ல இந்த பயிற்சியாளர் வேலை. ஒரு வகுப்பில் பல வயதினர் இருப்பார்கள். கல்லூரி செல்லும் மாணாக்கர்கள், வேலை தேடுபவர்கள், ஆங்கிலம் தெரியாததால் வேலையில் முன்னேற முடியாத நடுத்தர வயதினர் என்று ஒவ்வொரு வகுப்பும் புதுப்புது அனுபவங்கள்தான்.

 

ஒரு வகுப்பில் எழுபது வயதைக் கடந்த பாட்டி ஒருவர் வந்து ‘அமெரிக்காவில் இருக்கும் என் பேரப்பிள்ளைகளுடன் பேச எனக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடு’ என்றார்! ‘இந்த வயதில் நீங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை விட அவர்களுக்கு  உங்கள் தாய்மொழியை கற்றுக் கொடுங்கள்’ என சமாதானம் சொல்லி அனுப்பினேன்!

 

இன்னொரு பெண்மணி (60+) “எனக்கு இந்த ஆமு, இஸ்ஸூ, ஆரு எல்லா வேண்டா. பையன் கூட அமெரிக்கா போவணும். அந்த  வீஸா ஆபிசுல என்னா கேப்பாங்க, நா என்னா சொல்லணும், இவ்வள சொல்லிக் கொடு போரும்’ என்றார்!

 

இன்னொரு பெண்மணி How என்பதையும், Who என்பதையும் மாற்றி மாற்றி உபயோகிப்பார்! ஒரு நாள் வகுப்பிற்குள் வருவதற்கு முன் அங்கிருந்த பிற ஆசிரியைகளை ஒவ்வொருவராகப் பார்த்து ‘Who are you?’ என்று கேட்டு திணற அடித்துக் கொண்டிருந்தார்!

 

இதைப்போல எத்தனை எத்தனையோ அனுபவங்கள். இவற்றை வைத்தே ஓர் சதம் பதிவு எழுதலாம்!

 

இன்று காலையிலிருந்து பல மாணவர்கள் தொலைப்பேசியில் அழைத்தும், குறும்செய்திகள் அனுப்பியும் வாழ்த்துத் தெரிவித்தவாறு இருக்கின்றனர்.

 

அவர்களது வாழ்க்கையில் எனக்கும் ஒரு சிறு பங்கு இருப்பது தெரிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

 

எல்லாவற்றையும் விட நான் பெரிதாக நினைப்பது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக Oral Examinar என்ற அடையாளத்தைதான். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் மாணவர்களுக்காக பல்வேறு நிலையில் ஆங்கில மொழித் தேர்வுகள் நடத்துகிறது. ஒவ்வொரு தேர்விலும் எழுதும் தேர்வுகளைத் தவிர அவர்களது பேசும் திறனையும் பரிசோதிக்கிறது. அப்படிப் பரிசோதிப்பவர்கள் தான் இந்த ‘Oral Examinar’. 3 நாட்கள் பயிற்சி; பிறகு தேர்வு! அதில் வெற்றி பெற்றால்தான் இந்தப் பட்டம் கிடைக்கும்.

 

தேர்வு பெற்றவுடன் எங்களுக்கு ஒரு அடையாள எண் கொடுக்கப்படும். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக இணையதளத்திற்கு சென்று இந்த எண்ணை போட்டவுடன் ‘Welcome, Ranjani Narayanan!’ என்று வந்தவுடன் என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். எத்தனை பெரிய பாக்கியம்!

 

மிகவும் தாமதமாக ஒரு வாய்ப்புக் கிடைத்து நான் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன் என்று நினைக்கையில் பெருமையாக இருக்கிறது. எனது வெற்றியில் எனது கணவரின் பங்கு மிகப் பெரியது.

 

இந்த நல்ல நாளில் எனக்கு உதவிய எல்லோரையும் நினைத்துக் கொள்ளுகிறேன்.

 

வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் எனக்குத் துணை நின்ற இறைவனுக்கு  தினமும் நன்றி தெரிவித்து வருகிறேன்.

 

Advertisements

12 thoughts on “மலரும் நினைவுகள்!

  1. சிறப்பான பகிர்வும்மா. உங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அழகா சொல்லியிருக்கீங்க…. தொடர்ந்து எழுதுங்கம்மா…. எங்களுக்கும் பயனுள்ளதா இருக்கும் உங்க அனுபவங்கள்.

  2. மிகவும் தாமதமாக ஒரு வாய்ப்புக் கிடைத்து நான் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன் என்று நினைக்கையில் பெருமையாக இருக்கிறது. எனது வெற்றியில் எனது கணவரின் பங்கு மிகப் பெரியது.

    ஆசிரியையாக நீங்கள் அனுபவித்த அழகாக ரசிக்கும் வண்ணம் பதிவு செய்துள்ளீர்கள். ஒரு சின்ன வேண்டுகோஅல் எனக்கும் ஆங்கிலம் கற்றுத் தருவீர்களா அம்மா…?

  3. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!! உங்களின் அனுபவங்கள் எங்களுக்கு ஒரு சிறந்த பாடம்… உங்களின் பலமுக திறமை கண்டு பெருமையாக உள்ளது… பகிர்விற்கு நன்றி அம்மா

  4. ஏற்கனவே உரையாடிய போது அறிந்த விசயங்கள் தான் இருந்தாலும் உங்களிடம் எனக்குப் பிடித்ததே ஒவ்வொரு விசயத்திலும் (எழுத்திலும் கூட) அறம் என்பதை கடைபிடிப்பதோடு அதை சமயம்கிடைக்கும் போதெல்லாம் சுட்டிக்காட்டியும் விடுறீங்க. இந்த தளத்தில் படிக்க சுகமாக உள்ளது. நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s