மாபெரும் கவிதைப்போட்டி!

வணக்கம் பதிவுலகமே,

ஒரு மாபெரும் கவிதை போட்டி  தலைப்பு:  அழகு என்பாள், கவிதை தந்தாள்  நிபந்தைகள்:

1. கவிதை 30 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. அக்டோபர் 10-ஆம்  தேதி இரவு 10 மணிக்குள் வரும் கவிதைகள்  மட்டுமே போட்டிக்காக எடுத்துக் கொள்ளப் படும்.

3. பரிசு அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்கப் படும்.

4. போட்டியில் பங்கு பெறுவோர் கண்டிப்பாக தங்கள் மின் அஞ்சல் மற்றும் வலைப் பூ முகவரியை சேர்த்தே அனுப்ப வேண்டும்.

5. கவிதை அனுப்ப வேண்டிய முகவரி chezhiyan7@gmail.com அல்லது கருத்துரையிலும் பதிவிடலாம்

 

மேலும் படிக்க:http://kavithai7.blogspot.in/2012/09/kavithai-contest.html

 

நண்பர் திரு செழியனுக்காக இந்த இடுகை.

நான் கலந்துகொள்ளப் போவதில்லை. அதனால் எல்லோரும் தைரியமாக (!) கலந்து கொள்ளலாம். கவிதை எழுதப் போகும் எல்லோருக்கும் இப்போதே வாழ்த்துகளை சொல்லுகிறேன்.

 

 

 

ஒரு பதிவிலிருந்து அடுத்த பதிவு!

 

தலைப்பு எங்கே……?

‘நாமாக நாம்’ இருந்து யோசித்தால் எழுத விஷயம்  நிறையக் கிடைக்கும். சில சமயங்களில் நம் பதிவுகளிலிருந்தே புது புது விஷயங்கள் கிடைக்கலாம்.

தினமும் என் பதிவுகளை வாசிக்க வருபவர்கள் எதைத் தேடிக்கொண்டு வருகிறார்கள் என்று பார்ப்பேன். பாதிக்கு மேற்பட்டவர்கள் ‘உடல் மெலிய’ ‘இரண்டு மாதத்தில் உடல் இளைக்க’, ‘உடனடியாக இளைக்க’ என்று தேடிக் கொண்டு வந்திருப்பார்கள். அது எப்படி ‘உடல் மெலிய’ என்று என் வலைதளத்திற்கு வருகிறார்கள் என்பது பெரிய புதிர்!  நானும் அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்பது அவர்களுக்கு எப்படித்  தெரியும் என்பது அதைவிடப் புரியாத புதிர்!

அதேபோல அழகுக் குறிப்புகளுக்காகவும் என் வலைதளத்திற்கு வருவார்கள். ‘உடல் மெலிய’ குறிப்புகள் கொடுக்க நான் கொஞ்சம் (‘கொஞ்சம் அல்ல; நிறைய நீ யோசிக்க வேண்டும்’- இது என் மனசாட்சி) யோசிப்பேன். அழகுக் குறிப்பு கொடுக்க யோசிக்கவே மாட்டேன். அழகுக் குறிப்பு கொடுக்க அழகாக இருக்க வேண்டும் என்று இல்லையே!

‘உடல் மெலிய’ குறிப்பு கொடுக்க முடியாத குறையை ‘புகைப்படத்தில் ஸ்லிம் ஆகத் தெரிய’ குறிப்புகள் கொடுத்துப் போக்கிக் கொண்டேன்!

ஒரு வாசகி என்னுடைய ‘முகத்தின் அழகு மூக்குத்தியிலே’ படித்துவிட்டு மூக்குத்தி பற்றிய உங்கள் சொந்தக் கதையை எழுதுங்களேன் என்று கருத்துரை இட்டு இருக்கிறார். எழுதிவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு, அவருக்கு விரைவில் எதிர்பாருங்கள் என்று பதிலும் எழுதி விட்டேன். மனதில் இப்போதே இப்போதே என்ன தலைப்பு வைக்கலாம் என்று ஏகத்துக்கு யோசனைகள்!

‘மூக்குத்தியும் நானும்’, ‘நானும் என் மூக்குத்தியும்’, ‘நானும் என் வைர மூக்குத்தியும்’(!!), நானும் என் 8 கல் வைர பேசரியும்’ (உனக்கே இது கொஞ்சம் ‘ஓவர்’ ஆகத் தெரியல?’ – மறுபடியும் மனசாட்சி!)

அடடா! எத்தனை அருமையான ‘பளபள’, ‘ஜிலுஜிலு’ தலைப்புகள்!

நிறையபேர் என்னைக் கேட்கும் கேள்வி இது:

பதிவு எழுதுவதால் என்ன பயன்? எனக்கு வியப்பாக இருக்கும். என்ன கேள்வி இது? படிப்பதனால் என்ன பயன்? படிப்பதுதானே? அதுபோலத்தான் இதுவும். என்ன பயன்? எழுதுவதுதான்! படிப்பதும் படித்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் தரும் இன்பம் வேறு எதில் கிடைக்கும்?

சில சமயம் தனிமையில் யோசிப்பதும் உண்டு. சற்று சிந்தித்தால் ‘பதிவர்’ என்ற அடையாளம் கிடைக்கிறது. எழுத்தாளர் என்றால் எதில் எழுதுகிறீர்கள் என்பார்கள். ‘ஓ!, நான் அந்தப் புத்தகம் படிப்பதில்லை’ என்று பதில் வரும்.

பதிவர் என்றால் இந்தக் கேள்வியே வராது. நம் எழுத்துக்கள் அச்சில் வருமா, வராதா என்ற கவலை இல்லை; நாமே அச்சேற்றி விடலாம். இதைவிடப் பயன் வேறு என்ன வேண்டும்?

அடுத்து என்ன எழுதுவது என்று மனதில் சதா ஒரு சிந்தனை, அதற்கான தேடல்கள், ஆயத்தங்கள்  இவை நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இந்த ஒரு பலன் போதாதா?

திரைப்படத்துக்கும் மேடை நாடகத்துக்கும் உள்ள வேறுபாடுதான்  பதிவர் என்பதற்கும் எழுத்தாளர் என்பதற்கும்  என்று கூடச் சொல்லலாம். திரைப்படம் வெளிவந்த பிறகே விமரிசனம். மேடை நாடகங்கள்  அரங்கேறும்போதே கைத்தட்டல் அல்லது அழுகின தக்காளிகள் – இரண்டுமே பறக்கும்!

பத்திரிகை வெளிவந்தபின் தான் நம் எழுத்து வெளிவந்திருக்கிறதா என்றே தெரியும். வலைத்தளத்தில் பதிவை வெளியிட்டவுடன் பின்னூட்டம் வந்துவிடும் என்பதே ஒரு மகிழ்ச்சியான விஷயம் இல்லையா?

முகம் தெரியாத பலரின் நட்பு கிடைக்கும். எந்தவித பாசாங்குகளும் இல்லாத, எழுத்துக்களை மட்டுமே அடையாளமாகக் கொண்ட நட்பு! பதிவு நன்றாக இருந்தால் பின்னூட்டம் இடலாம். இல்லையென்றால் சும்மா இருந்துவிடலாம்! எவ்வளவு சௌகரியம்! சிலசமயங்களில் நம் கருத்துக்களையும் நாசூக்காகத் தெரிவிக்கலாம். யாரும் யாருக்கும் எந்தவிதத்திலும் கட்டுப் பட்டவர்கள் இல்லை.

இவை எல்லாவற்றையும் விட, பிறர் எழுதும் எழுத்துக்களிலிருந்து நாம் கற்பது இருக்கிறதே, அதை எதனுடனும் ஒப்பிட முடியாது.

படிப்போம், எழுதுவோம் கற்போம்!

 

 

தொழிற்களத்தில் என் இன்றைய பதிவு:

http://tk.makkalsanthai.com/2012/09/blog-post_7945.html

நாமாக நாம்!

ஆஹா…..பல்பு எரியுது……!

என்ன நண்பர்களே இன்று பதிவு எழுத மூட் வந்துவிட்டதா? நல்லது, நல்லது. வாருங்கள் பதிவுகள் எழுத இன்னும் சில தலைப்புகளைப் பார்க்கலாம்.

சா.வ.பெ. தலைப்புகளில் இன்னொன்றும் முட்டி மோதிக் கொண்டு முன்னால் வரும்: அதுதான் ‘வீட்டு வைத்தியம் அல்லது பாட்டி வைத்தியம் அல்லது கை வைத்தியம் அல்லது இயற்கை வைத்தியம் அல்லது…..அப்பா… மூச்சு முட்டுது… இல்லையா? இதைபோல பல பெயர்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தாலும் அந்த பிரம்மத்தைப் போல இரண்டாவது இல்லாத ஒன்றே ஒன்று இந்தத் தலைப்பு!

‘ஜலதோஷம் வரும்போல இருக்கா? கொதிக்கும் நீரில் சில மிளகுகளைப் போட்டு அந்த தண்ணீரை அடிக்கடி குடிக்கவும். ஜலதோஷம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடும்’ – அல்லது ‘ஜலதோஷம் மட்டுமல்ல மற்ற தோஷங்களும் (தொண்டைக் கட்டு, தொண்டை எரிச்சல்) மறைந்துவிடும்’

இதிலும் மிக முக்கியம் அடைப்புக்குறிக்குள் இருப்பது. நீங்கள் வெறுமனே மற்ற எல்லா தோஷங்களும் மறைந்துவிடும் என்று எழுதினால் ‘சனி தோஷம், செவ்வாய் தோஷம் போகுமா’? என்று உங்களுக்கு ரசிகர் கடிதம் வரும். சில எடக்குமடக்குப் பேர்வழிகள் ‘சந்தோஷம்’? என்று கேட்டு உங்களை மடக்கி விட்டதாக நினைத்து ‘காலரை’ தூக்கி விட்டுக் கொள்ளுவார்கள். எச்சரிக்கை அவசியம்.

இன்னொரு விஷயமும் கவனத்தில் கொள்ள வேண்டும்: வைத்தியக் குறிப்புகள் எழுதும்போது ‘சாதாரண உடல்நலம் உள்ளவர்கள் இவற்றைப் பின்பற்றலாம். கூடுதல் தொந்திரவுகள் – சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் – உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை நாடவும் என்று எழுதுவது ரொம்பவும் அவசியம்.

‘சூட்டு இருமல் அல்லது வறண்ட இருமலுக்கு ஒரு துண்டு இஞ்சியைத் தட்டிபோட்டு அத்துடன் ஒரு சிறிய எலுமிச்சங்காய் அளவு வெல்லம் சேர்த்து ஒரு தம்ளர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து குடிக்கவும்’ என்று எழுதினால் சர்க்கரை நோய்க்காரர் ‘உங்கள் குறிப்பினால் எனக்கு சர்க்கரை அதிகமாகிப் போய் நேற்று இரவு என்னை எறும்புகள் தூக்கிப் போய்விட்டன…’ என்று நீதிமன்றத்திற்கு இழுத்து விடுவார். ஜாக்கிரதை!

 

பொதுவாக, உங்களுக்கு எந்த விஷயத்தைப்பற்றி நன்கு தெரியுமோ அதைப்பற்றி எழுதுங்கள்.

இயல்பாக எழுதுங்கள். தமிழில் எழுதுகிறேன் என்று பிறருக்குப் புரியாத, அல்லது வழக்கத்தில் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். வட்டார மொழியில் எழுதலாம். பிறருக்குப் புரியுமோ என்ற சந்தேகம் வந்தால் – அடைப்புக்குறிக்குள் பொருளை எழுதிவிடுங்கள்.

நம்முடைய மேதா விலாசத்தைக் காண்பித்துக் கொள்ளாமல், படிக்கிறவரின் நிலைக்கு நம்மை  எளிமைப் படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒரு காரணத்திற்காகவே எனக்கு மறைந்த எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் அவர்களை மிகவும் பிடிக்கும்.

உங்கள் எழுத்துக்கள் பழகியபின் அவர்களை உங்கள் உயரத்திற்கு கூட்டிச் செல்லலாம். மிகவும் வரவேற்பை பெறும் பதிவுகள் இந்த வரிசையைச் சேர்ந்தவையே.

உங்கள் அனுபவங்களிலிருந்து, உங்கள் நோக்கிலிருந்து எழுதுவது நல்லது.

ஒரு பொதுக்கூட்டம். பேச்சாளர் எழுந்தார். ‘பெரியோர்களே! தாய்மார்களே!… அன்று பெரியார் சொன்னார் ‘…………’, நேற்று அண்ணா சொன்னார் ‘………’,

கூட்டத்தில் ஒருவர் எழுந்து நின்றார்:’ அவங்க அன்னைக்கு, நேத்திக்கு  சொன்னதெல்லாம் எங்களுக்குத் தெரியுமுங்கோ….நீங்க இன்னிக்கு என்ன சொல்லவறீங்க, அதை மொதல்ல சொல்லிப் போடுங்க…..கடைசி பேருந்துக்கு நேரமாச்சு!’ என்றாராம்!

பதிவுகளிலும் வாசகர்கள் இதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். உங்கள்  கருத்துக்கள் நீங்கள் என்ன தெரிவிக்க விரும்புகிறீர்கள் என்பது மிக முக்கியம் – சிலசமயம் இதை எழுதலாமோ கூடாதோ என்று நினைத்து எழுதுவது மிகுந்த வரவேற்பைப் பெறும்! மொத்தத்தில் உங்கள் எழுத்துக்களில் இருக்கும் உண்மை மற்றவர்களைக் கவரும்.

சாதாரணமான இயல்பான ஒன்றை பலரும் விரும்பிப் படிப்பார்கள். உங்கள் அனுபவத்திலிருந்து பிறர் கற்றுக் கொள்ளுவார்கள்.

வாசகர்கள் வருவார்கள்; போவார்கள். அதைப்பற்றிக் கவலைப்படாமல் எழுதுங்கள். எல்லோரையும் எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லாரையும் திருப்தி படுத்த முடியாது என்பது பதிவு உலகத்திற்கும் பொருந்தும்.  வாசகர்களைக் கவர என்ற நினைப்பு வந்தால் எழுதுவதை ஒத்திப் போடுங்கள். உங்களுக்காக, உங்கள் மனத் திருப்திக்காக எழுதுங்கள்.

சிலசமயம் மிகுந்த கஷ்டப்பட்டு ஒரு பதிவு எழுதி இருப்போம். ஒரு பின்னூட்டம் கூட வராது. ‘வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்….’ என்று மனதைத் தேற்றிக் கொண்டு அடுத்த பதிவு எழுத ஆரம்பித்து விட வேண்டும்.

மொத்தத்தில் ‘நானே நானா…யாரோ தானா…’ என்றில்லாமல் ‘நாம் நாமாக….’ எழுதினால் வெற்றி நிச்சயம்.

பின் குறிப்பு:

பதிவர் திருவிழாவில் ‘வெறும் வாசகியாக இருந்தது போதும். வலைபதிவு ஆரம்பித்துவிடு’ என்று என்று எல்லா பதிவர்களாலும் அறிவுறுத்தப்பட்டு, இப்போது ‘நதிக்கரையில்’ என்ற வலைத்தளம் ஆரம்பித்துள்ள சமீராவிற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

 

தொழிற் களம் இணையத்தில் வெளியான என் பதிவு இது:

http://tk.makkalsanthai.com/2012/09/blog-post_5772.html

 

 

பதிவு எழுத மூடு வேண்டுமா?

மூடு இல்லை…….!

வேண்டும் – வேண்டாம் இரண்டு பதில்களையும் சொல்லலாம். சில நாட்கள் மிகவும் சுலபமாக எழுத்துக்கள் தாமாகவே வரும்; வளரும்; வடிவு பெறும். சில நாட்கள் என்ன செய்தாலும்……..ஊஹூம்!

அப்போது என்ன செய்வது? அதையே ஒரு பதிவாகப் போட்டுவிடலாம். ‘என்ன எழுதுவது? எதை எழுதுவது?’ என்ற தலைப்பில்! அல்லது இதேபோல வேறு ஒரு சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எழுதுங்கள்.

சிலருக்கு ஓட்டலில் ரூம் போட்டு எழுதினால் தான் வரும்; சிலருக்கு பூங்காவில் போய் உட்கார்ந்தால்தான்  கற்பனைச் சிறகடிக்கும்; இல்லையானால் சிறகு முறிந்துவிடும். இதைபோல நீங்கள் கேட்டது, படித்தது இதையெல்லாம் வைத்து ஒரு பதிவு தேற்றலாம். கொஞ்சம் கற்பனை சேர்த்தால் நகைச்சுவை பதிவு எழுதலாம்.

பதிவு எழுத மூடு இல்லாதபோது நீங்கள் முன்பு (மூடு இல்லாத போது) எழுதிய, பாதியில் நிற்கும் பதிவுகளை பூர்த்தி செய்யலாம்.

எப்போதுமே ஒரே ரீதியில் எழுதிக் கொண்டே இருக்க முடியாது என்பது மிகவும் உண்மை. மலை ஏறுபவன் எத்தனை  நேரம் ஏறுவான்? சம பூமிக்கு வரத்தான் வேண்டும் இல்லையா? அதேபோலத்தான் எழுதுவதும்.

தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் அடுத்த நாள் எழுதப் போவதற்கு இன்றே முன்னுரை எழுதி வைத்துக் கொள்ளலாம். சிறுசிறு குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டால் அடுத்து அடுத்து எழுத உதவியாயிருக்கும்.

ஆனால் எழுத வேண்டும் என்ற அக்கினி குஞ்சு ஆறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எழுத வேண்டும் என்கிற உந்துதல் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

எப்போதோ நீங்கள் கேள்விப்பட்ட செய்தி, தினசரி செய்தித்தாளில் படித்த செய்தி மனதில் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டு இருக்கும். அதை தட்டி எழுப்பி வார்த்தைகளில் கொட்டி விடலாம்.

சில தலைப்புகள் சாகா வரம் பெற்றவை. சா.வ.பெ. வரிசையில் முதல் இடம் அழகுக் குறிப்பு, சமையல் குறிப்பு இவைகள் தான்.

சமையல் அறை அரசிகளான நமக்கு சமையலறைப் பொருட்களை வைத்துக்கொண்டு சமையலும் செய்ய வரும். அழகுக் குறிப்பும் சொல்ல வரும், இல்லையா?

உதாரணமாக, என் யோகா தோழி ஜ்யோதி ஒருநாள் வகுப்பில் சொன்னாள்: “இன்னிக்கிக் காலையில் ஓட்ஸ் இட்லி செய்தேன்……” எல்லோருக்கும் வியப்பு. ஓட்ஸ் இட்லியா, எப்படி செய்வது?

“ஓட்ஸ் கொஞ்சம் எடுத்து நீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இட்லி மாவைச் சேர்த்து நன்றாக கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி விடுங்கள். ஓட்ஸ் இட்லி தயார்!”

வீட்டுக்கு வந்தவுடன் தோசை மாவுதான் இருந்தது. ஊற வைத்த ஓட்ஸ் கலந்து தோசையாக வார்த்தேன். நன்றாகவே இருந்தது. நாளை வகுப்பில் சொல்லி விட வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டே போனேன்.  அத்துடன் ஓட்ஸ் வைத்துச் செய்துகொள்ளும் ஒரு அழகுக் குறிப்பும் நினைவுக்கு வந்தது.

அடுப்படியில் நின்று கொண்டே ஓட்ஸ் தோசை செய்து மங்கிப் போன முகத்திற்கு ஊற வைத்த ஓட்சை தேய்த்துக் கொண்டால் (scrubber போல) இறந்துபோன செல்கள் உதிர்ந்து முகம் பொலிவுறும் என்பதுதான் அது.

இரண்டையும் சொன்னேன். அன்றைக்கு வகுப்பில் நான்தான் கதாநாயகி!

இதைப்போல நீங்களும் நிறைய எழுதலாம். ஒரு எச்சரிக்கை: ஓட்ஸ்ஸுக்குப் பதிலாக சீரகம் மிளகு என்று எழுதிவிடாதீர்கள் அழகுக் குறிப்பில்!

மீண்டும் நாளை…..!

 

தொழிற் களத்தில் வெளியான என் இடுகை இது: http://tk.makkalsanthai.com/2012/09/blog-post_1821.html

காதுகேளாமைக்கு தண்டுயிர்மி சிகிச்சை

‘எண் சாண் உடம்பிற்கு தலையே பிரதானம்’ என்றாலும், ஐம்புலன்களில் எந்தப் புலன் வேலைசெய்யவில்லை என்றாலும் வாழ்க்கை நடத்துவது கடினம் தான். காது கேளாமை என்பது ஒரே ஒரு குறைபாடல்ல. காது கேளாமையால் பேச்சுத்திறனும் பாதிக்கப்படும்.
http://www.newscience.in/recent-news/katukelamaikku-tantuyirmi-cikiccai

மூலிகை விட முறிப்பான்

நமது இந்தியாவில் காணப்படும் விஷப்பாம்புகளில் விரியன் வகையைச் சேர்ந்த கட்டுவிரியனும் ஒன்று. இதில் எண்ணெய் விரியன், பனை விரியன், எட்டடி விரியன் என்று பல வகை உண்டு. இதன் விஷம் மிகவும் கொடியது. இந்தப் பாம்புகள் வயல்களிலும், எலிவளை, கரையான் புற்று, கற்குவியல் போன்ற இடங்களிலும், நீர்நிலைகள் அருகிலும் வாழ்கின்றன.

 

 

http://www.newscience.in/articles/kattuviriyan-vitattirku-mulikai-vita-murippan

என் சொந்தப் படைப்புகளே என் வலைப்பதிவில்!

25.9.2012 இதழ் ‘அவள்’ விகடனில் என்னுடைய வலைப்பதிவு பற்றி ‘வலைப்பூவரசி !’ என்ற தலைப்பில் வந்திருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான தகவலை வெளியிடும் அதே நேரத்தில், அந்தச் செய்தியில்  ‘பத்திரிகைகளில் வந்த தன்னுடைய படைப்புகளை பகிர்ந்து இருக்கிறார். குறிப்பாக பிற வலைதளங்களில் இடம் பெற்றுள்ள முக்கியமான பதிவுகளை சுட்டிக் காட்டுகிறார்’ என்று குறிப்பிட்டு இருப்பது வேறு விதமான அர்த்தத்தைக் கொடுக்கிறது என்று தோன்றுகிறது.

வேறு யாருடைய பதிவுகளையோ நான் என் பதிவில் போட்டிருப்பது போல!

முதல்முதலில் நான் வலைபதிவு ஆரம்பிக்கும் முன்பே Instamedia.com, a2ztamilnadunews.com ஆகியவற்றில் ஆங்கிலத்தில் எழுதி வந்தேன்.  சில மாதங்கள் கழித்து a2ztamilnadunews.com – இல் தமிழில் எழுதுங்கள் என்றார்கள். சுமார் அறுபது கட்டுரைகள் எழுதி இருந்தேன்.

அந்தக் கட்டுரைகளை போன டிசெம்பர் மாதம் வலைப்பதிவு ஆரம்பித்து பதிய ஆரம்பித்தேன். அவற்றில் சிலவற்றை எங்கள் மின்னிதழில் போட விரும்புகிறோம் என்று ooooor.com -இலிருந்து மின்னஞ்சல் வந்தது. ஏற்கனவே அவை வெளியிடப்பட்டு விட்டன என்று சொன்னதற்கு, எங்களுக்கும் எழுதுங்கள் என்றார்கள். வேறு வேறு கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். அவைகளையும் என் வலைப்பதிவில் போட்டேன்.

இந்த சம்பவத்திற்குப்பின் எல்லாக் கட்டுரைகளின் கீழும் published in….என்று குறிப்பிட ஆரம்பித்தேன்.  அப்போது எனக்கு இணைப்புக் கொடுக்க தெரிந்து இருக்கவில்லை. இதைத்தான் அந்தச் செய்தியாளர் ‘பிற வலைத்தளங்களில்….’ என்று எழுதிவிட்டாரோ என்று தோன்றுகிறது!

இப்போது எந்த இணையதளத்தில் என் கட்டுரை வருகிறதோ அதன் இணைப்பையும் கொடுத்து வருகிறேன்.

சில நாட்களுக்கு முன் திருமதி காமாட்சி அம்மாவைப் பற்றி திரு சைபர்சிம்மன் அவரது வலைதளத்தில் எழுதி இருந்தார். திருமதி காமாட்சி அம்மா நான் பெரிதும் மதிக்கும் வலைபதிவர். அதனால் என் தளத்தில் அந்தக் கட்டுரைக்கு இணைப்புக் கொடுத்திருந்தேன் – அதுவும் ஒரு சிறிய முன்னுரையுடன்.

இரண்டு நாட்களுக்கு முன் ‘Six lessons I learnt from my great grand mother’ என்று ஆங்கிலக் கட்டுரை படித்தேன். என் பாட்டியை நினைவு படுத்தும் இந்த பதிவுக்கும் இணைப்பு கொடுத்திருந்தேன்.

இவை இரண்டு தவிர மீதி 209 பதிவுகள் என் சொந்தப் படைப்புகளே!

‘அவள்’ விகடனுக்கும் இதைப் பற்றி மின்னஞ்சல் செய்திருக்கிறேன்.  அடுத்த இதழில் என் கடிதம் வரும் என்ற நம்பிக்கை!

 

 

 

 

பதிவில் உங்கள் அனுபவ முத்திரை!

போன பதிவில் வலைபதிவர்கள் நிறைய படிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன். திரு திண்டுக்கல் தனபாலன் எனது வலைப்பதிவில் ஒரு கருத்தைத் தெரிவித்து இருக்கிறார். அவரது வார்த்தைகளிலேயே அதைக் கொடுக்கிறேன்:

// “ஒரு பதிவு எழுதுவதற்கு முன், அந்தப் பதிவை மேலும் மெருகூட்ட, அந்தப் பதிவிற்கான புத்தகங்கள் தேட வேண்டும்… படிக்க வேண்டும்…” என்று எழுத நினைத்தேன்…

அப்படிச் செய்தால் பல புத்தகங்கள் படித்தது போலவும் ஆகும்… நாமும் நிறைய தெரிந்து கொள்ளலாம்… மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்… (அதை விட மகிழ்ச்சி ஏது ?)

தெய்வம் இருப்பது எங்கே ? என்னும் பதிவை எழுதுவதற்கு பல புத்தகங்களை படிக்க வேண்டி இருந்தது… அத்தனையும் எழுதி விட்டேன்… பார்த்தால் அனுமார் வால் போல், பதிவு ரொம்ப நீ…ள…ம்… பிறகு மாற்றி உரையாடல் போல் எழுதி முடித்தது ஒரு தனிக்கதை… (அதுவும் உரையாடல் போல் எழுதுவது சிறிது சிரமம் தான்)//

வலைபதிவர்கள் படிக்க வேண்டும்; குறிப்பாக ஒரு வலைபதிவை எழுதப் போகும் முன் சற்று ‘வீட்டுப்பாடம்’ செய்ய வேண்டும்! மிக அருமையான கருத்து திரு தனபாலன்! நன்றி!

இவரது வலைப்பதிவுகள் தனித்துவம் பெற்று இருப்பதற்கு இதுதான் காரணம்.

படித்ததை அப்படியே எழுதி விடலாமா? கூடாது. எழுதும் விஷயத்தில் சிறிது அனுபவம் கலந்து கொடுத்தால் சுவாரஸ்யமான பதிவு கிடைக்கும். உங்களது, உங்கள் நண்பர்களது அனுபவம் நீங்கள் எழுதப் போகும் விஷயத்திற்கு சம்மந்தப்பட்டிருந்தால் அதையும் சேர்த்து எழுதுங்கள்.

ஒரு சின்ன உதாரணம்:

ஒரு நாள் காலை டெக்கான் ஹெரால்ட் தினசரியில் ‘Spoonerism’ என்று ஒரு சிறிய கட்டுரை வந்திருந்தது. அதாவது ஆங்கிலத்தில் பேசும்போது வேடிக்கைக்காக இரண்டு வார்த்தைகளின் முதல் எழுத்தை மாற்றி பேசுவது:

‘Mixed Words’ என்பதை ‘Wixed Mords’ என்று சொல்லுவது. சில உதாரணங்கள்:

When I was young I loved tairy fales.

My favorites are “Beeping sleauty” and “Back and the Jean stalk.”

I often wumble with my fords!

டாக்டர் வில்லியம் ஆர்ச்பால்ட் ஸ்பூனர் (Reverand Dr. William Archebald Spooner) என்பவரது பெயரால் இந்த ஸ்பூனரிஸம் வழங்கப்படுகிறது.

இவர் சொன்ன மிகப் பிரபலமான ஸ்பூனரிஸம் ஒன்று:

I received a crushing blow என்பதற்கு பதில் I received a blushing crow! என்று சொன்னாராம்.

இதைப்படித்த உடன் எனக்கு நாங்கள் சின்னவர்களாக இருந்த போது என் அம்மா பேசும் ‘க’நா பாஷை நினைவுக்கு வந்தது! இதை இரண்டையும் சேர்த்து ஒரு பதிவு (“க” நா பாஷை தெரியுமா?) என்று எழுதினேன்.

அதில் நான் சொல்ல மறந்த விஷயத்தை இங்கு சொல்லுகிறேன்: ‘சந்திரலேகா’ என்று அந்தக் காலத்தியப் படம் (பார்த்திருக்கவில்லை என்றாலும் இந்தத் தலைமுறையினர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்) அதில் என்.எஸ். கலைவாணர் அரச மாளிகையில் அடைபட்டு இருக்கும் சந்திரலேகாவைப் பார்க்க மாளிகை வாசலுக்கு வருவார். இங்கிருக்கும் காவலாளிகளிடம் தான் வெளியூர் என்று சொல்லி உள்ளே நுழைய முயலுவார். உள்ளே போக முடியாது. கூட இருக்கும் டி.ஏ. மதுரத்திடம் இங்கேயே உட்காரலாம் என்பதை ‘உரையிலே தக்காரு’ (தரையிலே உக்காரு) என்பார். அந்தக் காலத்திலேயே ஸ்பூனரிஸம் பயன்படுத்திய மேதை அவர்.

இன்னொருமுறை அடுத்த மாதம் ‘புதுமைச் சிறப்பிதழ்’வாசகிகளின் கதை கட்டுரை வரவேற்கப்படுகின்றன என்று ‘மங்கையர் மலர்’ புத்தகத்தில் போட்டிருந்தார்கள்.

என்ன எழுதுவது? அப்போதெல்லாம் சன் தொலைக்காட்சியில் ‘……….வாரம்’ என்ற பெயரில் திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். இப்போதும்தான்!

உடனே எனக்குள் ஒரு ‘பல்ப்’! ‘பழையது வாரம்’ என்ற தலைப்பில் ஒரு நாடகம் எழுதினேன். ஒரு வாரம் முழுவதும் பழைய படங்களைப் போடுகிறார்கள். ஊரிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் பேரன் பேத்திகளுக்குப் பழைய படம் என்றாலே மிகவும் இளப்பம். தினமும் தாத்தா பாட்டியை திரைப்படங்கள் பார்க்க விடாமல் ரகளை செய்கிறார்கள். கடைசி நாளன்று இந்த’சந்திரலேகா’ படத்தை பார்த்து வியந்து போவது போலவும் ‘பழமையிலும் ஒரு புதுமை இருக்கும்’ என்று குழந்தைகள் சொல்வது போலவும் முடித்திருந்தேன்.

அம்மாவின் கைசாப்பாடு எப்பவுமே ருசிக்கும். ஏன்? அறுசுவையுடன் அன்பு என்னும் ஏழாவது சுவையையும் கலந்து கொடுக்கிறார்.

அதேபோல நீங்களும் படித்ததையும் உங்கள் அனுபவத்தையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்தால் உங்கள் வலைப்பதிவு எல்லோரையும் கவரும்.

http://tk.makkalsanthai.com/2012/09/blog-post_7845.html