திரு ரா. கி. ரங்கராஜன்

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். இவரது கதைகள் நிறையப் படித்திருக்கிறேன். இவர் 18 ஆம் தேதி ஆசார்யன் திருவடி அடைந்தார் என்ற செய்தி கிடைத்து துக்கத்தில் ஆழ்ந்து இருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் வாசகர்களில் நானும் ஒருவள்.

பல ஆங்கில நாவல்களை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார். ‘பாப்பிலான்’ புத்தகத்தை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். அதன் பிறகு நீண்ட நாட்கள் கழித்து ரா. கி. அவர்கள் அதை தமிழில் எழுதினர். பொதுவாக மூலம் நன்றாக இருந்தால் மொழிபெயர்ப்பு நம்மை ஈர்க்காது.  ‘பட்டாம்பூச்சி’ என்ற இவரது புத்தகம் மூலக் கதையில் இருந்த  அதே விறுவிறுப்புடன் அமைந்திருந்தது.

திரு கல்கி போலவே பல்திறமை உள்ளவர். பலபல புனைப்பெயரில் பலவிதமான கதைகளை எழுதுவதில் வல்லவர். சூர்யா என்ற பெயரில் நல்ல நல்ல சிறுகதைகளையும், கிருஷ்ணகுமார் என்ற பெயரில் திகில் கதைகளும் எழுதி இருக்கிறார். அவிட்டம் என்ற பெயரில் நையாண்டிக் கவிதைகள் எழுதுவார். டி. துரைசுவாமி என்ற பெயரில் துப்பறியும் கதை, மாலதி என்ற பெயரிலும் கதைகள் எழுதுவார். மழலைகளுக்காக ‘முள்ரி’ யாக மாறியவர்.

‘லைட்ஸ் ஆன்’ என்ற தலைப்பில் சினிமா பற்றிய செய்திகளை வினோத் என்ற புனைப்பெயரில் எழுதி வந்தார். எங்கள் வீட்டில் எல்லோருக்குமே ‘லைட்ஸ் ஆன்’ பகுதி பிடிக்கும். ஒவ்வொரு செய்தி முடிந்த பின்னும் ஆங்கிலத்தில் வெகு அருமையாக அந்த செய்திக்கு ஒரு முத்தாய்ப்பு வைப்பது போல ஒரு வாக்கியம் போடுவார். எனக்கு நினைவு இருக்கும் ஒரு வாக்கியம்:– “தளபதி படத்தின் பிரிவியு அன்று வந்த கூட்டத்தில் மணிரத்தினத்தை எங்கேயும் காணோம். அவருக்கு  Two is company, three is crowd”. என்று எழுதியிருந்தார்.

அவர் அதைபோல எழுதும் வாக்கியங்களை ரசிப்பதுடன் நிற்காமல் எனது நாட்குறிப்புப் புத்தகத்திலும் எழுதி வைத்துக் கொள்ளுவேன். ஒருமுறை ‘வினோத்’ என்ற பெயரில் நீங்கள் எழுதுவது எனக்கும் என் பெண்ணிற்கும்  மிகவும் பிடித்திருக்கிறது என்று அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து பதிலை நான் எதிர்பார்க்கவேயில்லை.

‘கண்ணில் காடராக்ட் ஆபரேஷன் செய்து கொண்டிருந்ததால் உடனே பதில் எழுத முடியவில்லை, தவறாக என்ன வேண்டாம்’  என்று எழுதியிருந்தார்.

அவர் வெற்றி பெற்ற மாபெரும் எழுத்தாளர் ஆக இருப்பதன் ரகசியம் இந்த வரிகளில் எனக்குப் புரிந்தது.

இதோ அவரது வார்த்தைகளை அவரது கடிதத்தில் இருந்து அப்படியே கொடுக்கிறேன்.

‘முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பு காஸா சுப்ப ராவ் என்ற பிரபலமான பத்திரிக்கையாளர் இருந்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகள் எழுதுவார். (ஆசிரியராகவும் இருந்ததாக நினைவு) ராஜாஜி நடத்திய ‘ஸ்வராஜ்யா’ பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். அதில் SOTTO VOCE என்கிற பகுதியில், சின்னச்சின்ன அரசியல் விமரிசனங்கள் எழுதி வந்தார். அதை எழுதியவரின் பெயரை ‘சாகா’ என்று போட்டுக் கொண்டார்.  SOTTO VOCE  கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்தது. அதன் அட்டையில் ராஜாஜியின் வாசகத்தை வெளியிட்டிருந்தார்கள். அதாவது, ‘Kasa  is at his best when he writes as saka’ என்று ராஜாஜி குறிப்பிட்டு இருந்தார். காஸா சுப்ப ராவுக்கு அந்தப் பாராட்டு எப்படி இருந்திருக்குமோ தெரியாது. ஆனால் ரா.கி. ரங்கராஜன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கதைகள் எழுதி இருந்தாலும், ‘வினோத்’ என்கிற கட்டுரையாளன் தான் அதிகப் பெயரை  தட்டிக் கொண்டு போகிறான் என்பதை நினைக்க வேடிக்கையாக இருக்கிறது’.

‘நீங்களும் உங்கள் பெண்ணும் என்னை மனதார – அளவுக்கு மீறிக் கூடப் -பாராட்டி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. நன்றி’. ஆசிகளுடன் ரா .கி. ரங்கராஜன்’ என்று கடிதத்தை முடித்திருந்தார்.

குமுதத்தில் வரும் ‘அரசு’ பதிலில் நடுவில் இருக்கும் ‘ர’ இவர் தான் என்று சொல்லுவார்கள்.  குமுதத்தில் எ.க.எ. (எப்படிக் கதை எழுதுவது) என்று பல வாரங்களுக்கு எழுதி வந்தார். அவரது ஆசியும், அவரது எ.க.எ. வும் தான்  என்எழுத்தின் பின்புலத்தில் இருக்கிறது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் நினைத்துக் கொள்ளுகிறேன்.

இந்தப் பதிவின் மூலம் ரா.கி. ரங்கராஜன் என்ற எழுத்தாளருக்கு, எழுதுவதில் சகலகலாவல்லவருக்கு, ஒரு மிகச்சிறந்த மனிதருக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன்.