அம்மா என்றால்……..

அன்பு, தியாகம் என்று நிறைய சொல்லுவார்கள். ஆனால் நான் சொல்லுவது அம்மா என்றால் ‘உண்மை’.

ஒரு குழந்தை விளையாட வெளியில் போகிறது. அம்மா சொல்லுகிறாள்: “மேக மூட்டமாக இருக்கிறது; மழை வரப் போகிறது; இப்போது வெளியே போகாதே!”

அம்மா சொன்னபடியே, சற்று நேரத்தில் மழை வருகிறது. அம்மா சொன்னது நிஜம் தான் என்று குழந்தைக்கு மனதில் எண்ணம் வருகிறது.

இன்னொரு காட்சி:

அம்மா சொல்லுகிறாள்:  ‘நீ ரொம்ப புத்திசாலி; இந்த முறை நீதான் முதல் ரேங்க்’

அம்மா சொன்னதுபோல குழந்தை முதல் ரேங்க் வாங்குகிறது.

‘அம்மா சொல்லுவது எல்லாம் உண்மை; அம்மா சொல்வது எல்லாம் நடக்கிறது’ என்று தன் தாயை உண்மையாக நம்புகிறது ஒவ்வொரு குழந்தையும். அதனால் தான் அவள் எத்தனை கோவித்துக்கொண்டாலும் அவளிடமே வருகிறது.

‘அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி…..’ என்கிறார் குலசேகர ஆழ்வார் தன் பெருமாள் திருமொழியில்.

குழந்தையின் முதல் ஆசிரியை அம்மாதான்.

அவளிடமிருந்துதான் குழந்தை எல்லாவற்றையும் கற்கிறது. இதனால் எல்லா அம்மாக்களும் குழந்தைகளிடம் நேர்மறையான எண்ணங்களையே சொல்ல வேண்டும்.

‘நீ புத்திசாலி’ என்று தாய் சொன்னபோது அதை உண்மை என நம்பும் குழந்தை ‘உனக்கு ஒன்றும் வராது; நீ எதற்கு லாயக்கில்லை’ என்று அம்மா சொல்லுவதையும் உண்மை என்றே நம்புகிறது!

அதனால் தாய்மார்களே! குழந்தைகளிடத்தில் தயவு செய்து எதிர்மறையாகப் பேசாதீர்கள். உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் குழந்தையும் பிடிக்கவில்லை என்கிறது. நீங்கள் வேண்டாம் என்றால் குழந்தையும் வேண்டாம் என்கிறது. ‘தாயைப்போல சேய்’ என்று நம் பெரியோர்கள் அறிந்துதான் சொல்லியிருக்கிறார்கள்.

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது என் தாய் தினமும் ஸ்நானம் செய்துவிட்டு விஷ்ணு சஹஸ்ரநாமம் சேவித்துக் கொண்டே தான் சமையல் செய்வார். இன்று வரை நானும் அம்மாவைப் பின்பற்றி வருகிறேன். என் மகள் என்னைத் தொடருகிறாள்.

இப்போது இன்னொரு காட்சி:

ஊரிலிருந்து பாட்டி வந்திருக்கிறாள் – அப்பாவின் அம்மா. குழந்தையின் அம்மா மாமியாரை விழுந்து விழுந்து உபசரிக்கிறாள். குழந்தை பார்த்துக்கொண்டே இருக்கிறது. ஒரு வாரம் ஆனபின் பாட்டி ஊருக்கு திரும்புகிறாள்.

அம்மா பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்லுகிறாள்: ‘அப்பாடி! கிழவி இப்பத்தான் கிளம்பி போச்சு! ஒரு வாரம் ‘நச்சு நச்சு’ ன்னு புடுங்கி தின்னுட்டா…! ஏன்தான் அப்பப்ப வந்து கழுத்தறுக்குதோ…..தெரியல……’

பலர் படிக்கும் பதிவு என்பதால் கொஞ்சம் குறைத்தே எழுதுகிறேன். வார்த்தைகளே கூசுமளவிற்கு மாமியாரைத் திட்டும் பெண்களும் இருக்கிறார்கள்.

குழந்தை இதையும் கவனிக்கிறது. குழந்தைக்கு இப்போது ஒரு பெரிய சந்தேகம்: ‘எந்த அம்மா ‘உண்மை’? பாட்டியை விழுந்து விழுந்து உபசாரம் செய்த அம்மாவா? இப்போது பாட்டியைப் பற்றிக் கன்னாபின்னாவென்று பேசும் அம்மாவா?’ குழந்தை குழம்புகிறது.

முதல் முறையாக அம்மாவின் ‘உண்மை’ யை பற்றிக் குழந்தைக்கு நெருடல் உண்டாகிறது. அம்மா ஒரு புதிர் ஆகிறாள்!

அம்மா – பாட்டியினிடையே நடக்கும் இந்த ‘நாடகம்’ குழந்தைக்கு இன்னுமொரு பாடத்தைச் சொல்லித் தருகிறது. சில சமயம் அம்மா ‘உண்மை’ இல்லாமலும் இருப்பாள்.

அம்மா ‘உண்மை’ யாக இருந்தவரை தானும் உண்மையாக இருக்கும் குழந்தை இப்போது இப்படியும் இருக்கலாம் என்று எண்ண ஆரம்பிக்கிறது.

உங்கள் குழந்தையின் மதிப்பில் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ‘இறங்க’ ஆரம்பிக்கிறீர்கள்.

நான் சொல்ல விரும்புவது இதுதான்:

  • குழந்தைகளின் எதிரில் கணவன் மனைவி சண்டை போடக் கூடாது. இது குழந்தைகளின் மனதில் கலவரத்தை உண்டாக்கும்.
  • மற்ற உறவினரை தாழ்த்திப் பேசாதீர்கள்.
  • முக்கியமாக, உங்கள் மாமியாரைப் பற்றி கேவலமாகப் பேசாதீர்கள். உங்களுக்கு மாமியார்; குழந்தைகளுக்கு பாட்டி – இரத்த சம்பந்தப்பட்ட உறவு.
  • நீங்கள் தொலைக்காட்சியில் மூழ்கி இருக்கும்போது குழந்தைகள் படிக்காது.
  • நீங்கள் ‘வெடுக்’ கென்று பேசினால் உங்கள் குழந்தையும் அப்படித்தான் பேசும்.
  • நீங்கள் குழந்தையைப் பார்த்து சத்தம் போட்டால் அதுவும் உங்களைப் பார்த்து சத்தம் போடும்.
  • கைபேசிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்குக் கொடுங்கள்.

மொத்தத்தில் அம்மா என்பவள் முன் உதாரணமாக இல்லாவிட்டாலும், மோசமான உதாரணமாக இருக்கக் கூடாது!

published in Thozhil kalam