திறமையை வளர்ப்போம்:

 

ஒரு நாள் ஒரு குட்டி ஒட்டகம், தாய்  ஒட்டகத்திடம் கேட்டது:

“அம்மா, நா உங்கிட்ட சில கேள்விகள கேக்கலாமா?”

“ம்ம்ம்…. கேளேன்….!”

“நமக்கு மட்டும் ஏம்மா இவ்வளவு நீளமான கால்கள்?”

“நாம பாலைவனத்துல பிறந்து இருக்கோம்ல…. பாலைவனத்த கடக்க மனிதர்கள் நம்மைப்  பயன்படுத்தறாங்க. பாலைவன மணல்ல நடக்கும்போது காலு ரொம்ப உள்ள போயிடும். நீளமான காலு இருந்தால் சுலபமா அடுத்த அடுத்த அடி வைக்கலாம்……”

கொஞ்ச நேரம் யோசித்த குட்டி அடுத்த கேள்வி கேட்டது:

“அப்பிடியா? நமக்கு ஏன் முதுகுல ஓர் மேடு இருக்கு?”

“அது மேடு இல்லை கண்ணு, அதுக்கு பெரு திமில். நாம பாலைவனத்தில பிரயாணம் செய்யும்போது பல நாட்கள் உணவு, நீர் கிடைக்காமல் போகலாம். இந்த திமிலில் நிறைய கொழுப்பு இருக்கும். உணவு நீர் கிடைக்காத போது, இந்த கொழுப்பு நம் பசி தாகத்தைத் தீர்க்கும்”.

இப்போது சற்று அதிக நேரம் சிந்தித்தது குட்டி.

“அம்மா, நமக்கு எதுக்கு கண்கள்ல நீண்ட ரப்பைகள் இருக்கு?”

“பாலைவனத்துல திடீர்னு காத்து அடிக்கும்; காத்து கூடவே, பாலைவனத்துல இருக்கற மண்ணும் மேல கிளம்பும். பாலைவனத்துல பிரயாணம் செய்யற நாம நம்ம கண்ணை பாதுகாக்கத் தான் இப்படி பெரிய ரப்பையை ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கிறார்….”

“அப்படின்னா, நாம ஏம்மா இந்த ‘மிருகக் காட்சி சாலைல’  இருக்கோம்?”

நம்மில் பல பேர் இப்படித்தான்! நம் திறமை வேறு, நாம் செய்யும் வேலை வேறு என்று அல்லாடிக் கொண்டிருக்கிறோம்.

நம் திறமைக்கு ஏற்ற வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம செய்யும் வேளையில் நம் திறமையைக் காண்பிப்போம்.

எனக்குத் திறமையே இல்லையே என்று யாருமே சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். கட்டாயம் ஒவ்வொருவரும் திறமைசாலிகள்தான்! திறமை வேறு படலாம். ஆனால் திறமை இருப்பதை மறுக்க முடியாது.

கடும் உழைப்பால் மிகப் பெரிய திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். ஜீனியஸ் என்பதே 99% வியர்வை சிந்த உழைப்பதுதான்.  இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் ‘மலையும் அணிலும்’ என்ற தலைப்பில் அமெரிக்க இலக்கிய மேதை எமர்சன் எழுதிய கவிதையில் வரும் கதை இதோ:

ஒரு பெரிய மலைக்கும் ஒரு குட்டி அணிலுக்கும் வாக்குவாதம் நடந்தது. மலை மிகக் கர்வமாக அணிலைப் பார்த்து ‘பொடிப் பயல் நீ’ என்றது.

அணில் மிகவும் அடக்கமாக சொன்னது: ‘உண்மைதான். நீங்கள் ரொம்ப பெரிய ஆள்தான். ஆனால் ஒரு வருடம் என்பது மாதங்கள், நாட்கள், மணித் துளிகள் சேர்ந்து உருவானதாக இருந்தாலும், அதனுள் சின்னச்சின்ன வினாடிகளும் உண்டு. நீங்கள் பெரியவன் என்று கர்வப்படுகிறீர்கள். நான் சின்னவனாக இருப்பதில் பெருமை கொள்ளுகிறேன். ஆட்டுக்கு வால் அளந்து வைத்த கடவுளால் எல்லாமே மிகச் சரியாக  அளவிடப்பட்டு படைக்கப்

பட்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை. உங்களைப்போல் ஒரு  காட்டையே என்னால் முதுகில் சுமக்க முடியாது. ஆனால் உங்களால் என்னைப்போல் ஓர் சிறு பட்டாணியை உடைக்க முடியுமா?’

இதே கருத்தைச் சொல்லும் நம் ஔவைப்பாட்டியின் இந்தப் பாட்டைப் பாருங்கள்:

 

வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்

தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம் பெரிதும்

வல்லோமே என்று வலிமை சொல வேண்டாங் காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

வான்குருவி கூடு போல நம்மால் கட்ட இயலாது; கரையான் புற்று, தேனீக்களின் தேன் கூடு இவையெல்லாம் மனிதனால் செய்ய இயலாது. ஆனால் மனிதனைப்போல இவற்றிற்கு திறமை இல்லை.

அதனால் நானே பெரியவன் என்று யாரும் மார்தட்டிக் கொள்ள வேண்டாம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று சுலபமாகச் செய்ய வரும்.

எனக்கு மற்றவரைப் போலத்  திறமை இல்லை என்று வாடுவதை விட என்ன திறமை இருக்கிறதோ அதை வளர்த்துக் கொள்ளுவதில் அக்கறை செலுத்தலாம், வாருங்கள்!