உருளைக்கிழங்கு ஜூஸ் வயிற்றுப் புண்ணை ஆற்றும்!

மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உருளைக்கிழங்கில் இருக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்த கிருமி எதிர்ப்பு மூலக்கூறு வயிற்றுப்புண்களை ஆற்றும் வல்லமை படைத்தது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

உருளைக்கிழங்கில் இருக்கும் இந்த மூலக்கூறை ஜூஸ் வடிவில் தயாரித்து தினமும் உணவுடன் கூட எடுத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.

இப்படி ஒரு யோசனை வந்ததே ஓரு வேடிக்கையான நிகழ்ச்சி மூலம் தான். ஒரு ஞாயிறு அன்று, விஞ்ஞானி ஒருவர் தனது மதிய உணவிற்கு தனது ஆண் நண்பருடன் உருளைக்கிழங்கை ருசித்துக் கொண்டிருந்த போது ஆண் நண்பரின் பாட்டி வயிற்றுப்புண்களை சரி செய்ய அவர்கள் காலத்தில் உருளைக்கிழங்கை பயன்படுத்தியதாகக் கூறினாராம்.

அந்த விஞ்ஞானி உடனடியாக சந்தைக்குச் சென்று உருளைக்கிழங்கை வாங்கி வந்து ஆராயத் தொடங்கிவிட்டார்.

இந்த ஆராய்ச்சியில் இணைத்து பணியாற்றும் அயன் ராபர்ட்ஸ் கூறுகிறார்:

“முதல் முதலில் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், எனக்கு சிறிது ஐயம் இருந்தது. ஆனால் நமக்குத் தெரியாத பல சேர்மங்கள் காய்கறிகளில் இருக்கின்றன. இந்த ‘உருளைக்கிழங்கு ஜூஸ்’ வயிற்றுப்புண் வராமல் தவிர்க்கவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் உதவும்”

“மக்களுக்கு பயன்படும் வகையில் எங்கள் புதிய கண்டுபிடிப்புகள் அமைவது எங்களுக்கு நிரம்ப உற்சாகத்தைக் கொடுக்கிறது. எங்களது பல வருட ஆராய்ச்சிகள் பலன் அளிக்க ஆரம்பித்து இருப்பது மகிழ்ச்சியான விஷயம்” என்று வர்த்தக நிர்வாகி டாக்டர்  சுநீதா ஜோன்ஸ் கூறுகிறார்.

உருளைக்கிழங்கு ஜூஸ் வடிவில் வர கொஞ்ச நாட்கள் அல்லது வருடங்கள் ஆகலாம். அதுவரை……

பெரியோர்களே! தாய்மார்களே! உருளைக்கிழங்கை வேகவைத்துச் சாப்பிடவும். ரோஸ்ட், சிப்ஸ் என்று எண்ணையில் பொறித்து எடுத்து, அதன் இயற்கையான சத்துக்கள் அழியும்படி செய்து சாப்பிடாதீர்கள்!