எல்லை காப்போம், வாரீர்!

 

“சுவத்துல இருக்குற crack- ஐ (விரிசல்) உடனே சரி பண்ணுங்கன்னு எத்தன தடவ சொல்லுறது?”

“என்னம்மா அவசரம்?”

“ஒரு வீட்டுல ரெண்டு cracks இருக்கக்கூடாது….”

இதை ஒரு வேடிக்கை என்று சிரித்து விட்டாலும், உறவில், நட்பில் விரிசல் என்பது வேதனை தரக்கூடிய ஒன்று. ஆங்கில வார்த்தை ‘crack’ க்கிற்கு இரண்டு அர்த்தங்கள் – மனநிலை சரியில்லாதவன், விரிசல்.

இந்தப் பதிவு ‘விரிசல்’ பற்றித்தான்.

காதலர்களுக்குள் ஊடல் முற்றி சண்டையாகிறது;

காதலித்துக் கைபிடித்தவனை/பிடித்தவளை பிடிக்காமல் போய் விடுகிறது;

பல ஆண்டுகளாக வேர் பிடித்த நட்பு கசந்து போகிறது;

ஒன்றாக தாம்பத்தியம் நடத்தியவர்களிடையே பிரிவினை தலை தூக்குகிறது;

பக்கத்துப் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் முகம் பார்க்க விரும்புவதில்லை;

உடன் பிறந்தவர்களிடையே பேச்சு வார்த்தை இல்லை;

எல்லாவற்றிற்கும் இந்த விரிசல் தான் காரணம்.

விரிசல் தோன்றப் பல காரணங்கள் இருக்கலாம்.

மிக முக்கியமானது ‘எல்லை மீறுதல்’

நம் ஒவ்வொருவருக்கும் ஓர் வசதி வலயம் (Comfort Zone) –சௌகர்ய வட்டம்- என்று ஒன்று உண்டு. புதிய முயற்சிகளுக்கு நம்மில் எத்தனை பேர் உடனடியாகத் தயாராகிறோம்? மாறுதல்களுக்கு எத்தனை தயங்குகிறோம்? இப்போது இருக்குமிடமே வசதியாக இருக்கிறதே, ஏன் புதிய இடத்திற்குச் செல்ல வேண்டும், புதிய இடம் எப்படி இருக்குமோ என்ற கவலை. எந்த வேலை செய்தாலும் நம் வசதி வலயத்துக்குள்  நின்று கொண்டு தான் செய்கிறோம். அதைத் தாண்ட எத்தனை யோசிக்கிறோம்?

அதேபோல நம் எல்லோருக்கும் ‘நான் இப்படித்தான்’ என்ற எண்ணமும் உண்டு. இந்த எண்ணத்தை ‘தான் என்ற அகங்காரம்’, செருக்கு, என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் ஈகோ என்கிறார்கள்.

உறவுகளில் விரிசல் ஏற்பட மற்றவர்களது சௌகரிய வட்டத்தினுள் அத்து மீறி நுழைவதும், ஈகோவைக் காயப் படுத்துவதும் தான்.

காதலிக்கும்போது தங்களது ‘நல்ல’ தன்மைகளை மட்டுமே காட்டும் ஆண்களும் பெண்களும், திருமணம் ஆனபின் அடுத்தவரின் ‘இன்னொரு பக்கத்தை’ – அப்படி ஒன்று உண்டு என்பதை – அறியத் தொடங்குகிறார்கள்.  காதலிக்கும்போது தன்னைப்பற்றி தவறான கருத்து வந்து விடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வு மெல்ல மெல்ல விலகுகிறது.

கணவனை அடக்கி அல்லது திருத்தி (?!!) தன் வழிக்குக் கொண்டுவர நினைக்கிறாள் மனைவி. கணவனோ, மனைவி தனக்கு அடங்கியவள்தானே என்று நினைக்க ஆரம்பிக்கிறான். இருவரும் ஒருவர் விஷயத்தில் ஒருவர் அளவுக்கு மீறி தலையிடத் தொடங்குகின்றனர். அவள் தன்னை அடக்க நினைப்பதாக இவனும், இவன் தன்னை அடக்க நினைப்பதாக அவளும் …..மெல்ல மெல்ல விரிசல் ஏற்படுகிறது.

பிறர் நம்முடன் பேசும்போதோ பழகும்போதோ அவர்களது சில சொற்கள், செயல்கள் நமது சௌகர்ய வட்டத்தை தாண்டி உள்ள வந்துவிட்டால் நம்மால் தங்க முடிவதில்லை.

அதே போலத்தான். நம் ஈகோவை காயப்படுத்தி விட்டால் காதலில், சகோதரத்துவத்தில், உறவில், நட்பில், தாம்பத்தியத்தில் விரிசல் ஏற்படுகிறது.

வாகா எல்லையைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமிடையேயான எல்லைப் பகுதி. இந்தப் பகுதி கதவு இந்திய எல்லை. கூப்பிடு தூரத்தில் அந்தப் பகுதி கதவு பாகிஸ்தான் எல்லை. இரு நாட்டில் வீரர்களும் இந்த எல்லையை இரவு பகலாகக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். அந்தப் பக்கத்திலிருந்து யாரும் இந்தப் பக்கம் வந்துவிடக்கூடாது; இந்தப் பக்கத்தில் இருந்து யாரும் அந்தப் பக்கம் போய்விடக்கூடாது.

நமக்குள் இருக்கும் வசதி வட்டத்தின் நிலையும் இதைபோல் தான். நாமும் அதிலிருந்து வெளி வர விரும்புவதில்லை; யாரையும் உள்ளே விடவும் அனுமதிப்பதில்லை.

என்னதான் கணவன், மனைவி என்றாலும், அவரவர்களுக்கென்று தனிப்பட்ட மனது இருக்கிறது. அதில் அவர்களுக்கென்று ஒரு வட்டம் இருக்கிறது. இந்த விதி நட்புக்கும், காதலுக்கும், சகோதரத்துவத்திற்கும் பொருந்தும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு personal space தேவைப் படுகிறது. இதை தவறு என்று சொல்லவே முடியாது.

எங்கேயாவது போய் நாலு நாள் நிம்மதியாக இருந்துவிட்டு வரலாம் போல இருக்கு என்று ஒவ்வொரு நினைக்கிறோம் இல்லையா? நமக்கு என்று சற்று யோசிக்க, பிடித்ததைச் செய்ய, பிடிக்காததை செய்யாமலிருக்க நேரம் தேவைப் படுகிறது.

இதனை ‘me time’ என்று சொல்கிறோம். இப்படி நமக்கென்று நேரம் ஒதுக்கிக் கொள்வது பலவிதத்தில் நம் மன நலத்தைக் காக்கும்.

நம் வசதி வட்டம், ஈகோ இவற்றை நாம் காப்பாற்றிக்கொண்டு மற்றவர்களின் வசதி வட்டத்துக்குள் அத்து மீறி நுழையாமல், அவர்களது ஈகோவை காயப் படுத்தாமல் இருப்போம். உறவுகளில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுவோம். அதாவது எல்லை மீறாமல், எல்லை காப்போம்!

எனக்கு மிகவும் பிடித்த அர்த்தம் செறிந்த பாட்டு வரிகள்:

‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?’

‘யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே’

 

இந்தப் பாடல் கேட்க இங்கே 

ஆஹா! ஆஹா! 10,000!

09.08.2012

ஆஹா! ஆஹா! 10,000!

ஒவ்வொரு முறை கணணியை ‘ஆன்’ செய்யும்போதும் முதலில் பார்ப்பது வேர்ட்பிரஸ் தளத்தைத்தான். என்றைக்கு அந்த மாய மந்திர எண்ணிக்கை வரும் என்று காத்திருந்த பொழுதெல்லாம் நேற்று இரவு பலிதமானது. உடனே என் மகனைக் கூப்பிட்டு என் மகிழ்ச்சியை பங்கிட்டுக் கொண்டேன்.

சில சமயங்களில் கணனிக்கு அடிமையாகி விட்டேனோ என்று தோன்றினாலும், அதிக வேலை இருக்கும்போது கணனிக்கு வருவதில்லை; வேலைகளை முடித்துவிட்டுத் தான் எழுத உட்காருகிறேன்  என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்ளுகிறேன்.

இன்னொரு இணைய தளத்திலும் எழுத அழைத்து இருக்கிறார்கள். அதற்கும் எழுதிக் கொண்டிருக்கிறேன். நிறையப் படிக்கிறேன்; எழுதுகிறேன்;

வாழ்க்கை அலுக்காமல் போய்க் கொண்டிருக்கிறது. வேறு என்ன வேண்டும்?

ஜூன் 16 ஆம் தேதி ……...3,000!

ஜூலை 9 ஆம் தேதி 5000..

நேற்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி 10,000 – ஒரே மாதத்தில் 5,000 வருகையாளர்கள். என் சந்தோஷத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

இன்ட்லி – யிலும், indiblogger-இலும் பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளுகிறேன். அதன் விளைவு தான் இத்தனை வருகையாளருக்குக் காரணம். இந்த இரண்டு இணையதளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

ஆங்கிலத்தில் பதிவு எழுதுபவர்களுக்கு நிறைய விருதுகள்! (அவரவர்களுக்குள்ளேயே) கொடுத்துக் கொள்ளுகிறார்கள். நிறையப் போட்டிகள் நடக்கின்றன.

அதைப்போல தமிழில் எழுதுபவர்களுக்கும் உற்சாகம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

வருகை தரும் எல்லா அன்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி!

கிரெடிட் கார்ட் பயனர்களின் கவனத்திற்கு:

 

 

கிட்டத்தட்ட எல்லா மத்தியதரக் குடும்பங்களிலும் குளிர் சாதனப் பெட்டி, பெரிய அளவுள்ள தொலைக்காட்சி பெட்டி, துவைக்கும் இயந்திரம் இருக்கிறது.

எல்லோரிடமும் இரு சக்கர வாகனமோ, காரோ ஏதோ ஓர் வாகனம் இருக்கிறது. மக்களின் வாங்கும் ஆற்றல் அதிகரித்துள்ளது என்று  பல செய்திகள் வருகின்றன. உண்மையில் மக்களில் முக்கால்வாசிப்பேர்கள் கடனில் மூழ்கி இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்! கிரெடிட் கார்டுகள் பண்ணும் புண்ணிய காரியம் இது!

இப்போது கிரெடிட் கார்டுகளை திருடும் திருடர்களும் புதுப்புது வழிகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

காட்சி 1:

வழக்கமாக ஜிம் செல்லும் இளைஞர் ஒருவர் தினமும் செய்வதுபோல அன்றும் தனது உடைமைகளை (பர்ஸ் உள்பட) அங்கிருக்கும் லாக்கரில் வைத்து விட்டு உடற்பயிற்சி செய்யச் செல்லுகிறார். திரும்பி வந்து பார்க்கும்போது லாக்கர் திறந்து இருக்கிறது. ‘பூட்டி விட்டுத்தானே போனேன்…..’ என்ற யோசனையுடன் தனது பர்ஸை திறந்து பார்க்கிறார். எல்லாம் சரியாக இருக்கிறது.

சில வாரங்கள் கழித்து அவருக்கு கிரெடிட் கார்ட்  அலுவகத்திலிருந்து கார்ட் கணக்கிலிருந்து பல லட்சம் ரூபாய்கள் செலவழித்து இருப்பதாகவும், பணத்தை உடனடியாகக் கட்டுபடியும் தகவல் வருகிறது. பயங்கர கோபத்துடன் கன்னா பின்னாவென்று சத்தம் போடுகிறார், தான் அவ்வளவு பெரிய தொகைக்கு எதுவுமே வாங்கவில்லை என்று.

பயனாளர் பொறுப்பதிகாரி ஒன்றுக்கு இரண்டுமுறை சரி பார்த்துவிட்டு ‘உங்கள் கார்ட் தொலைந்து போய்விட்டதா என்று கேட்கிறார். ‘இல்லை’ என்று முதலில் சொன்ன இளைஞர், சட்டென்று நினைவுக்கு வர, தனது பர்ஸை திறந்து பார்க்கிறார். அவரது கார்ட் போலவே, காலாவதியான வேறு ஒரு கார்ட் இருக்கிறது அவரது பர்ஸில்!

கார்ட் தொலைந்துபோன விஷயத்தை அவர் முதலிலேயே தெரிவிக்காததால் தன் கையைவிட்டு தான் வாங்காத பொருட்களுக்கு அத்தனை பெரிய தொகையைக் கட்டவேண்டிய நிர்பந்தம் அவருக்கு.

கிரெடிட் கார்ட் நிறுவனங்களும் சிறிய தொகைப் பற்றி அவ்வளவு கவலைப் படுவதில்லை. பெரிய தொகையாக இருந்தால் உஷாராகிவிடுகிரார்கள்.

காட்சி 2:

ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பில் செலுத்த தன் கார்டை கொடுக்கிறார் ஒருவர். அங்கிருக்கும் பணியாளர் அதை வாங்கிக் கொண்டு போய் பில் செலுத்திவிட்டு திரும்பக் கொண்டு வருகிறார். கார்டின் சொந்தக்காரர் தன்னிடம் திருப்பிக் கொடுக்கப்பட்ட கார்டைப் பார்க்கிறார். காலாவதியான வேறு கார்ட் அது. அதைப்பற்றி கேட்டவுடனே அந்தப் பணியாளர் மறுபடி பணம் செல்லுத்துமிடத்திற்குச் சென்று சரியான கார்டை எடுத்து வருகிறார்! பணியாளர் பணம் செலுத்தும் இடத்திற்குச் செல்லும்போதே அங்கிருப்பவரிடம் தவறான கார்டை தூக்கிக் காண்பிக்கிறார். அவர் உடனே மேசையைத் திறந்து சரியான கார்டைக் கொடுக்கிறார். இதெல்லாமே திறமையான நாடகம்!

எப்போது நீங்கள் கார்டை பயன்படுத்தினாலும் ஒன்றுக்கு பத்து தடவை திரும்பி வருவது உங்கள் கார்டா என்று சரி பாருங்கள்.

காட்சி: 3

ஒருவர் பீட்ஸா விற்கும் கடைக்குப் போய் பிட்ஸா வாங்கி பணம் செலுத்த தனது கார்டை கொடுக்கிறார். கவுண்டரில் இருக்கும் இளைஞன் கார்டை பயன்படுத்தி விட்டு இவரிடம் கொடுக்காமல் கவுண்டர் மேசைமேல் வைத்து விட்டு தனது கைபேசியை எடுக்கிறான். கார்ட் கொடுத்தவரிடமும் அந்த இளைஞனிடம் இருப்பதுபோல கைபேசி இருக்கிறது. அதனால் அவர் இவன் என்ன செய்கிறான் என்று பார்க்கிறார். அவன் தனது கைபேசியில் ஏதோ எண்களை அழுத்துவதுபோலச் செய்கிறான். அவனது கைபேசி அந்தக் கார்டை புகைப்படம் எடுக்கும் சத்தம் இவருக்குக் கேட்கிறது. இவரிடமும் அதேபோல கைபேசி இருந்ததனால் அவன் என்ன செய்கிறான் என்று இவருக்குப் புரிந்தது.

ஆகவே உங்கள் கிரெடிட் கார்டை எங்கே எப்போது பயன்படுத்தினாலும் உங்களைச்சுற்றி இருப்பவர்களைக் கவனியுங்கள்; திருப்பிக்கொடுக்கப் படுவது உங்களுடையதா என்று ஒரு தடவைக்குப் பல தடவை சரி பாருங்கள்.

கவனமாக இருங்கள். நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் யாருடைய உல்லாசத்திற்கோ பயன் படக்கூடாது! ஜாக்கிரதை!

இப்போது கிரெடிட் கார்ட் வழங்கும் வங்கிகள், எந்த வங்கியிலிருந்து கார்ட் பெறுகிறீர்களோ  அந்த வங்கியிலேயே இணையம் மூலம் நமது கார்டை பதிவு செய்ய வழி செய்கின்றன. இதனால் நீங்கள் கார்டைப் பயன்படுத்திய அடுத்த நொடி உங்களுக்கு SMS மூலம் தகவல் தெரிவிக்கப் படுகின்றது.

இந்த வசதியினால் உங்கள் கார்ட் உங்களிடம் இருக்கிறதா, நீங்கள்தான் பயன்படுத்தியதா என்று உடனடியாகத் தெரிய வரும்.

கிரெடிட் கார்ட் இல்லாமல் இருப்பது உத்தமம். தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்துகிறேன் என்று சொல்பவர்கள் ஜாக்கிரதையாக இருப்பது அதி முக்கியம்.