நம்மை கொண்டாடலாம் வாருங்கள்!

நம்மை கொண்டாடலாம் வாருங்கள்! 

நேற்றைய பதிவில் நம்மைப் படைத்தவனைக் கொண்டாடினோம்.  இன்று படைத்தவனின் படைப்பைப் கொண்டாடலாமா? இந்த பூவுலகம் முழுதும்  அவன் படைப்புத்தானே, எதை இன்று கொண்டாடப் போகிறோம்?

கடவுளின் ‘மிகச்சிறந்த’ என்று சொல்லக்கூடிய படைப்பான, ஆறறிவுள்ள  மனிதனைத்தான் இன்று கொண்டாடப் போகிறோம்.

அதாவது நம்மைத் தான் கொண்டாடிக் கொள்ளப் போகிறோம். நம்மில் எத்தனை பேருக்கு நம் மதிப்பு தெரியும்? அவரவர்களின் மதிப்பு அவரவர்களுக்குத் தெரியாது! அடுத்தவன் உயரத்தில் இருக்கிறான், நான்  மிகவும்  தாழ்ந்தவன் என்று நாம் ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்ளுகிறோம்.

‘நான் எதற்கும் லாயக்கில்லை’ என்ற தாழ்வுமனப்பான்மை நம்மில் எத்தனையோ பேருக்கு இருக்கிறது, உண்மைதானே? அது தவறு. கடவுளின் படைப்பில் உதவாதது என்று எதுவுமே கிடையாது. மரம், செடிகொடிகளுக்கோ, மிருகங்களுக்கோ இந்த தாழ்வுமனப்பான்மை கிடையாது. இது மனிதனின் தனிச் சொத்து. இந்தச் சொத்து இருப்பவர்கள் முகத்தில் எப்போதும் ஒரு சுருக்கம் இருக்கும். அவர்களது மனச்சுருக்கம் முகத்திலே தெரியும். ‘அகத்தின் அழகு முகத்திலே’, அல்லவா?

அதாவது  நம்மைப் பற்றி நமக்கு நல்ல கருத்து இருப்பதில்லை. நம்மை பற்றி முதலில் நமக்கு நல்ல அபிப்பிராயம் இருக்க வேண்டும். நம்மை நாம் மதிக்க வேண்டும். அப்போதுதான் நம் எதிரிலிருப்பவர் நம்மை மதிப்பார். முதலில் நம்மை நாம் நேசிப்போம். அப்போதுதான் அடுத்தவர் நம்மை நேசிப்பார்.

 

“ச்சே! என்னக் கண்டாலே எனக்குப் பிடிக்கல…”

“ஏன்தான் இப்படி ஒண்ணுக்கும் உதவாத இருக்கேனோ தெரியல….”

பல சமயங்களில் பலருக்கும் இந்த எண்ணங்கள் மனதில் தோன்றும்.

உண்மையில் நம் மதிப்பு என்ன?

பேச்சாளர் ஒருவர் தன் முன்னே அமர்ந்திருக்கும் கூட்டத்தினரிடம் தன் கையிலிருக்கும் புத்தம் புதிய 1000 ரூபாய் நோட்டைக் காண்பித்துக் கேட்டார்:

“யாருக்கு இந்த 1000 ரூபாய் வேண்டும்?”

எல்லோரும் கையைத் தூக்கினார்கள். “உங்களில் யாரோ ஒருவருக்கு இந்த நோட்டைக் கொடுக்கப் போகிறேன், நிச்சயமாக…. அதற்கு முன்…..” சொல்லிவிட்டு ரூபாய் நோட்டை இரண்டு கைகளாலும் கசக்கினார். ‘இப்போது யாருக்கு வேண்டும்?”

இப்போதும் கைகள் உயர்ந்தன.

“ ஓர் நிமிடம்……..” என்று கூறிவிட்டு ரூபாய் நோட்டைக் கீழே போட்டார். ஷூ அணிந்த தன் கால்களால் அதை மிதித்தார்; துவைத்தார்; குனிந்து எடுத்தார்.

“இப்போது…….. யார் இதைப் பெற்றுக் கொள்ளத் தயார்?”  நோட்டு பரிதாபமான நிலையில் இருந்தது – அழுக்குப் படிந்து, கசங்கி – இனிமேல் அதை பாழ் செய்யவே முடியாது!

இந்தநிலையிலும் அதைப் பெற்றுக் கொள்ள எல்லோரும் தயாராக இருந்தனர்.

“நண்பர்களே! இன்று நீங்கள் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொண்டீர்கள். ரூபாய் நோட்டை நான் என்ன செய்தாலும் – கசக்கினாலும், அழுக்கில் பிரட்டினாலும் – உங்களுக்கு அது தேவையாக இருந்தது. ஏனெனில் என்ன செய்தாலும் அதன் மதிப்பு 1000 ரூபாய்! சுருக்கமோ, கசங்கலோ, அழுக்கோ ரூபாய் நோட்டின்  மதிப்பைக் குறைக்கவில்லை – குறைக்க முடியாது!” என்று தன் பேச்சை முடித்தார்.

இதே போலத்தான் நாமும்! நமது வாழ்க்கையில் பல தடவைகள்  கீழே விழுகிறோம் – நம் தப்பான முடிவுகளால். மறுபடியும் எழுந்து நடக்கிறோம். வாழ்க்கையின் கரடு முரடான பாதை நம் கால்களை பதம் பார்க்கின்றன. சிலசமயம் சுருண்டு விடுகிறோம்; சிலசமயம் முடங்கி விடுகிறோம்; ஆனால் ஒவ்வொரு முறையும் திரும்பத்திரும்ப உயிர்ப்பித்துக் கொள்ளுகிறோம். பயனற்றவன் என்று சிலசமயம் தோன்றினாலும், நமது மதிப்பு குறைவதில்லை இந்த ரூபாய் நோட்டைப் போல!

புரிந்து கொள்ளுங்கள், நாம் ஒவ்வொருவரும் விலை மதிப்பற்றவர்கள் நம் மேல் அன்பு செலுத்துபவர்களுக்கு. நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். இதை எந்த நிலையிலும் மறக்க வேண்டாம்.

பிரச்சினைகள் வருவதால் நாம் குறைந்து போவதில்லை; மாறாக ஒவ்வொரு பிரச்சினையும் நம்மைப் புடம் போட்டு நம்மை மேலும் மதிப்பு உள்ளவர்களாக்குகிறது.

தாழ்வு மனப்பான்மை நம்மை சிறுகச்சிறுக அழித்துவிடும். வயது முதிர்ச்சியால் முகத்தில் சுருக்கம் விழலாம்; தாழ்வுமனப்பான்மையினால் முகம் சுருங்க வேண்டாம்!

“கடல் அலைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்; அவை மேலே எழுந்து கீழே விழுவதால் மட்டுமல்ல; ஒவ்வொரு முறை கீழே விழும்போதும் மறுபடி மேலே எழுவதால்…” என்று ஒரு அறிஞர் கூறினார்.

எத்தனை பெரிய உண்மை! நாமும் அப்படித்தானே? வாழ்க்கை என்னும் கடல் அலையில் எத்தனை முறை விழுகிறோம், எழுகிறோம்?

ஏற்றத்தாழ்வு இல்லாத வாழ்க்கை என்பது கிடையவே கிடையாது. விழும்போதெல்லாம் எழுகிறோமே, அதில்தான் நம் மதிப்பு கூடுகிறது.

 

நாம் விலைமதிப்பற்றவர்கள் என்பதை உணருவோம்; நம் குழந்தைகளுக்கும்  உணர்த்துவோம்!

நாளை மீண்டும்……!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://tk.makkalsanthai.com/2012/08/blog-post_3231.html