வெற்றியாளரே வருக!

வெற்றியாளரே வருக!

‘அரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது’ என்றார் ஔவையார். அரிதாய் கிடைத்த இந்த மானிடப் பிறவியில் நாம் எல்லோருமே வெற்றியாளர்கள் தான்; வெற்றி பெறப் பிறந்தவர்கள்தான். வெற்றி என்பது ஒரு சிலரின் சொத்து அல்ல. நம் எல்லோருக்கும் வெற்றி பெறும் உரிமை இருக்கிறது. வாய்ப்பும் இருக்கிறது.

நாம் என்று நான் சொல்லுவது நீங்கள், நான், உங்கள் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் அவருக்கு அடுத்தவர் எல்லோரையும் சேர்த்துத்தான்

‘நான் ஒன்றும் சாதிக்கவே இல்லையே அதற்குள் வெற்றியாளனா? எப்படி?’ என்று புருவம் நெறிப்பவர்களுக்கு: முதல் வரியைப் படியுங்கள். அரிய மானிடப் பிறவி கிடைத்திருக்கிறதே! புழு பூச்சியாக இல்லாமல் மனிதனாகப் பிறந்திருக்கிறோமே! வெற்றியின் முதல் படி அல்லவா?

எழுதப் படிக்கத் தெரியுமா? – வெற்றியாளர்தான்!

பாசமான தாயும் பண்பான தந்தையும் இருக்கிறார்களா? வெற்றியாளர்தான்!

உண்ண உணவும் உடுக்க உடையும், படுக்க இடமும், தலைக்குத் தலையணையும் இருக்கின்றனவா? – நிச்சயம் வெற்றியாளர்தான்!

இவை எதுவுமே இல்லாமல் இருப்பவர்கள் நம் நாட்டில் ஏராளம், ஏராளம்! அவர்களைப் பார்க்கும்போது நாமெல்லோரும் வெற்றியாளர்கள்தானே?

உங்கள் இலக்கு இன்னும் வெகு தூரம் இருக்கலாம்; ஆனால் நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி  வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கி உங்களை அழைத்துச் செல்லுகிறது

இத்தனைக்குப் பிறகும் நான் வெற்றியாளனா என்று சந்தேகப்படுபவர்களுக்கு ஒரு சின்னக் கதை:

கோவிலில் யானையைப் பார்த்த சிறுவன் மிகுந்த வியப்புடன் அம்மாவைக் கேட்டான்:

“இத்தனை பெரிய பலசாலியான மிருகத்தை  ஒரு சின்னச் சங்கிலியால் கட்டி இருக்கிறார்களே, அறுத்துக்கொண்டு ஓடதா?”

“ஓடாது………”

“எப்படி அம்மா, அத்தனை உறுதியாகச் சொல்லுகிறாய்?”

“அன்புக் குழந்தையே! யானையை காட்டில் பிடித்தவுடன் ஒரு பெரிய சங்கிலியால் கட்டிப்போட்டு விடுவார்கள். பிடிபட்ட  யானை  அந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடப் பார்க்கும். சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடவே முடியாது என்ற நிலை வரும் வரை இந்த முயற்சி நடக்கும். சில நாட்களில் யானை தன் முயற்சியை கைவிட்டுவிடும். ‘தன்னால் இயலாது’ என்ற தோல்வி மனப்பான்மை அதன் மன ஆழத்தில் பதிந்து விடும். தனது பயிற்சியாளர் சொல்படி கேட்க ஆரம்பித்து விடும். அதன்பிறகு அதை பெரிய சங்கிலியால் கட்ட மாட்டார்கள். ‘இயலாமை’ மனதில் குடிகொண்டு விட்டதால்  சின்னச் சங்கிலியாக இருந்தாலும் யானை ஓட முயற்சிக்காது. சங்கிலி கட்டாமல் இருந்தாலும் ஓடாது.”

சிறுவன் மௌனமாக இருந்தான். சற்று நேரம் கழித்து, “பாவம் அம்மா, இந்த யானை!”

இந்தக் கதையில் வரும் யானையைப் போலத்தான் நாமும். ஆற்றல் மிக்க நம் மனதை எதிர்மறை எண்ணங்களால் வரும்  இயலாமை என்னும் சங்கிலியால் பிணைத்து முடக்கி விடுகிறோம்.

வெற்றி பெற்றவர்கள் எல்லோருமே சாதாரண மனிதர்கள்தான் – நம்மைப்போல் இரண்டு கைகள், இரண்டு கால்கள் உள்ளவர்கள்தான். அவர்களது வெற்றிக்குப் பின்னால் அசாதரணமான உறுதிப்பாடு, ஈடுபாடு, அர்ப்பணிப்பு இருக்கிறது.

வெற்றியாளர்கள் எடுத்த காரியத்தில் முழுமையாக ஈடுபட்டு கவனம் சிதறாமல் வெற்றியை நோக்கிப் பயணிக்கிறார்கள். எதிர்மறை எண்ணங்களுக்கு அங்கு இடமில்லை. வெற்றியை சந்திக்கச் செல்பவன் தோல்வியைப் பற்றி நினைப்பதில்லை. வெற்றியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறான். இயலாமை என்ற மனத்தடையோ மன நோயோ அவனை பாதிப்பதில்லை.

லோக்பால் மசோதாவுக்காக உண்ணாவிரதம் இருக்கிறாரே திரு அன்னா, அவருக்கு இருக்கும் உறுதிப்பாடு, அர்பணிப்பு, ஈடுபாடு எல்லாமே அவரது மனோபலத்தால் வந்ததுதானே?

யானை தன் உடல் பலத்தை நம்பிற்று; திரு. அன்னா தன் மனோபலத்தை நம்புகிறார்!

நமது மனதின்  சக்தியை நாம் யாருமே உணரவில்லை. மனோபலத்தை விடப் பெரிய பலம் வேறெதுவும் இல்லை.

மனோபலத்தை வளர்த்துக் கொள்ளுவதை விடுத்து, ‘என்னால் முடியாது’ என்ற இயலாமைச்  சங்கிலியால் நம்மை நாமே பிணைத்துக் கொள்ளுகிறோம். நம்மால் என்ன முடியும் என்பதை சிந்திக்கவும் மறந்து இந்த யானையைப் போல கட்டுண்டு கிடக்கிறோம். இயலாமை சங்கிலியை உடைத்து எறிந்தால் சாதிக்கலாம்.

‘இயலாமை’ என்பது மனத் தடை. ‘இயலாமை’ என்பது ஒரு மனநோய்.

நமது மனமானது மிகுந்த வலிமை உடையது. அதனால்தான் அதை அடக்குவதும் சிரமமாக இருக்கிறது. ஏன் மனதை அடக்கவேண்டும்? அடக்கு முறை எப்போதுமே நல்ல பலனைக் கொடுக்காது. பிறகு எப்படி மனத் தடைகளை விலக்கி, இயலாமை என்ற மன நோயிலிருந்து வெளியே வருவது?

மனச் சாளரத்தைத் திறப்போம்; நல்ல காற்று உள்ளே வரட்டும்; எப்படி என்கிறீர்களா? நாளை………

posted in தொழிற்களம்.com