Health and exercise

குட்டித்தூக்கம் நல்லது!

 

“நேற்று என்ன பண்ணினீங்க?”

“ஓ! அதை ஏன் கேட்கறீங்க? தூக்கமோ தூக்கம்! மத்தியானம் நல்லா தூங்கினேன்; மறுபடி ராத்திரியும் நல்ல தூக்கம்! Sleepy Sunday!……”  என்று சொல்லிவிட்டு சிரித்தேன்.

“ஸ்லீப் டெட் (Sleep Debt) நிறைய சேர்த்து வைத்து இருப்பீங்க….. அதான் அவ்வளவு தூக்கம்” என்று சிரித்தார் என்னுடன் வேலை செய்யும் அர்ச்சனா.

“அதென்ன ஸ்லீப் டெட்? புதுசா இருக்கு?”

“ரொம்ப நாளா சரியா தூங்கலன்னா, அல்லது தூக்கம் வரும்போது தூங்காம தள்ளி போட்டீங்கன்னா நீங்க தூங்கவேண்டிய தூக்கம் சேர்ந்து சேர்ந்து ‘ஸ்லீப் டெட்’ ஆயிடும்….. கொஞ்ச நாள் கழித்து உங்கள் உடல் அந்தக் கடனை தூங்கித் தூங்கி சரி பண்ணிக்கும்…”

தமாஷ் செய்கிறாரோ என்று பார்த்தால் “நிஜம் மேடம், நம்புங்க..” என்றார்.

அன்றிலிருந்து எப்போது அதிகப்படியாக தூங்கினாலும் ‘சரி தூக்கக்கடனை அடைக்கிறேன்’ என்று நினைத்து என் குற்ற உணர்ச்சியை குறைத்துக் கொள்ளுவேன்.

எனக்கு நேர் எதிர் என் கணவர். இரவு மிகக்குறைந்த அளவே தூங்குவார். நடுவில் எழுந்து விடுவார். ‘ரெண்டு மணிக்கு எழுந்துட்டேன்; திருப்பி மூன்று மணிக்குத்தான் தூங்கினேன்’ என்பார். தினமும் இப்படித்தான். என்ன இவர் ‘இரவு எல்லோரும் தூங்கும் சமயத்தில் தூக்கம் வரவில்லை என்கிறாரே?’ என்று நினைத்துக் கொள்ளுவேன்.

இன்று ஒரு கட்டுரை படித்தேன். அதில் மேற்கண்ட என் கேள்விக்கு விடை கிடைத்தது. இதோ உங்களுக்கும் சில செய்திகள்:

குட்டிக்குட்டியாகத் தூங்குவது நல்லது. தினமும் இரவு 8 மணி நேரத் தூக்கம் என்பது கட்டுக்கதை. கொஞ்சநேரம் தூங்கிவிட்டு எழுந்து கொண்டு பிறகு மறுபடி தூங்குவது இயல்பான ஒன்று.

பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது தொழில்மயமாக்கலுக்கு முன் தூங்கும் நேரம் என்பது ஒருமுறை தூங்கி பின் சிறிது நேரம் விழித்துக் கொண்டு மறுபடியும் தூங்க செல்லுவது என்பது தான். அதாவது ஒரேயடியாகத் தூங்காமல் முதல் முறை இரண்டாம் முறை என்று ‘பிரித்துத் தூங்குவது’ (Segmented Sleep).

“முதல், இரண்டாம் தூக்கம் என்பது ஹோமர், விர்ஜில் ஆகியோரின் புத்தகங்களிலும் இடைக்கால கிறிஸ்தவ இலக்கியங்களிலும் விளக்கப்பட்டுள்ளது” என்று தனது ‘ஈவினிங் எம்பயர்: எ ஹிஸ்டரி ஆப் த நைட் இன் யர்லி மாடர்ன் யூரோப்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் திரு கொச்லோப்ச்கி.

செயற்கை விளக்குகள் வருவதற்கு முன் இரவில் விழித்துக் கொள்வது இயல்பான ஒன்றாக இருந்தது. செயற்கை விளக்குகளைத் தொடர்ந்து காப்பி முதலிய பானங்கள் குடிக்கும் வழக்கம் ஏற்பட்டது. அதனால் மாலைவேளை என்பது காபி குடித்துக்கொண்டு அரட்டை அடிக்கும் நேரமாக மாறிப்போனது. தூங்கும் நேரமும் ஒத்திப்போடப் பட்டது. 8 மணிநேரத் தூக்கம் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

1800 ஆண்டு வரை மேற்கத்திய ஐரோப்பியர்கள் இரண்டு பிரதான தூக்க நிலையை – நடுவில் ஒரு மணிநேரம் அல்லது சற்று அதிகப்படியான நேரம் விழிப்பு நிலை – அனுபவித்து வந்தனர். இந்த இடைவெளியை ‘watch’ அல்லது ‘watching’ என்று குறிப்பிட்டனர்.

அப்படியானால் இரண்டு நிலையில் தூங்குவதுதான் சரியா? பரிணாம வளர்ச்சி நமக்கு இரண்டு தூக்கத்தை 4 – 4 மணிநேரம் என்றுதான் வடிவமைத்ததா? எது சரி? நீண்ட நேரத் தூக்கம் என்பது கிடையாதா?

“இது ஒரு நியாயமான கேட்கப்படவேண்டிய கேள்வி” என்கிறார் தூக்கமும், மனிதனின் செயல்பாடுகளும் என்ற மையத்தின் மருத்துவ இயக்குனர் திரு சார்லஸ் சாமுவேல்.

1990 களில் உளவியலாளர் திரு தாமஸ் வேர் ஒரு ஆய்வு நடத்தினார். பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட நபர்கள் ஒரு மாதத்திற்கு ஒவ்வொரு இரவும் 14 மணிநேரம் ஆழ்ந்த இருட்டில் வைக்கப்பட்டனர். நாளடைவில் அவர்கள் ‘பிரிக்கப்பட்ட தூக்கத்திற்கு’ ஆளானார்கள்.

“ஆனால் இப்போது 2012 ஆண்டில் இது சாத்தியமா? உலகம் அப்போதுபோல இப்போது இயங்கவில்லை. அப்போது அவர்கள் அப்படித் தூங்கினார்கள் என்று நாமும் அதேபோல் செய்யமுடியுமா? காலையில் வேலைக்குப் போவது, மாலையில் வீடு திரும்புவது என்று வாழ்க்கை அமைந்திருக்கும் போது நமக்கு வேறு வழிகள் இல்லை – இரவு முழுக்கத் தூங்குவதை தவிர” என்கிறார் திரு சாமுவேல்.

முதலில் தூங்கிவிட்டு நடுவில் விழித்துக்கொண்டு மறுபடி தூக்கம் வராமல் தவிப்பவர்கள் என்ன செய்ய? பிரித்துத் தூங்கலாமா? முதலில் 4 மணிநேரம் தூங்கிவிட்டு சிறிது நேரம் கழித்து மறுபடி தூக்கம் வரும்போது ‘இரண்டாம் முறை’ தூக்கம் போடலாமா?

இப்படித் தூங்குவதில் தவறில்லை; முன்னொரு காலத்தில் இப்படித்தான் என் கொள்ளு தாத்தா, எள்ளு தாத்தா குட்டித்தூக்கம் போடுவாராம் என்று நினைத்துக்கொண்டு நிம்மதிப்பெருமூச்சு சாரி, சாரி,  நிம்மதித் தூக்கம் போடலாம் இல்லையா?

இப்போது இன்னொரு வகைத் தூக்கம் பற்றியும் சொல்லுகிறார்கள் – அதாவது ‘Power Nap’ என்று. இதை ‘கோழித் தூக்கம்’ என்றும் சொல்லுவார்கள். ஒரு ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ – தூக்கம் கண்ணை சுற்றும்போது தூங்கி விடுவது. அசந்திருக்கும் உடல் சட்டென்று ஒரு புத்துணர்ச்சி பெறும். பேருந்தில் பயணம் செய்யும்போது பலதடவை இதை நான் அனுபவித்திருக்கிறேன்.

தூக்கத்தைப் பற்றி எழுதி நல்லா தூக்கம் வந்துவிட்டது, ஆ……….வ்…….!

Advertisements

One thought on “குட்டித்தூக்கம் நல்லது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s