லண்டன் – 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் துவங்கின!

லண்டன் – 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் துவங்கின!

பிரிட்டிஷ்காரர்களுக்கே உரித்தான பாணியில் லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நேற்று துவங்கின.

இங்கிலாந்து நாட்டின் அரசியார், தனது  கணவர் இளவரசர் ஃபிலிப்புடன் வருகை தந்து இந்த விளையாட்டுக்களைத் துவங்கி வைத்தார்.

இந்த ஆரம்ப விழாவின் தனித்துவம் என்னவென்றால் இங்கிலாந்து அரசி அந்த நாட்டின் புகழ்பெற்ற துப்பறியும் நிபுணர் ஜேம்ஸ்பாண்ட் 007 உடன் பாராசூட்டில் வந்து மைதானத்தில் இறங்குவது போல காண்பித்து இருந்ததுதான்.

இதற்கு முன்னால் ஜேம்ஸ்பாண்ட் 007 ஒரு கறுப்பு நிற லண்டன் வாடகை வண்டியில் பக்கிங்ஹாம் மாளிகைக்கு வந்து  ராணியாரின் அன்பு நாய்கள் மான்டி, வில்லோ, ஹாலி தொடர ராணியை சந்திக்கிறார். அவர்கள் ஒரு ஹெலிகாப்டரில் லண்டன் வான்வெளியில் அந்நகரின் மிக முக்கியமான இடங்களைக் கடந்து வருகிறார்கள். ராணிக்கு தலை அசைத்து வணக்கம் சொல்லுகிறது வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலை!

மைதானத்தின் மேலிருந்து ராணியும் ஜேம்ஸ்பாண்டும் பாராசூட்டில் குதிக்கிறார்கள். அதே சமயம் வான்வெளியில் உண்மையான ஸ்கைடைவர்கள் தோன்றுகிறார்கள். மெல்ல மெல்ல மிதந்து மைதானத்தில் இறங்குகிறார்கள்; பின்னணியில் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் இசை முழங்குகிறது. ராணியும் மைதானத்திற்குள் வருகிறார்.

குழந்தைகள் இசைக்குழு ‘God save the Queen’ என்று பாட யூனியன் ஜாக் கொடி ஏற்றப்படுகிறது.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள்  இந்த சிறிய படத்தில் நடிக்க ராணியார் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார்; இதுவே அவர் முதல் முதலில் நடித்த படம் என்றும் கூறுகிறார்கள்.

இங்கிலாந்து நாட்டின் இசை வரலாறு, சினிமா துணுக்குகள், கிரிக்கெட் விளையாட்டு, லண்டன் நகர ட்யூப் ரெயில், லண்டன் மாநகரை சுற்றி ஒரு மாலை போல ஓடும தேம்ஸ் நதி, இங்கிலாந்து நாட்டைச் சுற்றியுள்ள கடல்கள் என்று இங்கிலாந்து நாட்டின் சிறப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தனர்.

இங்கிலாந்து நாட்டின் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் காட்டப்பட்டன. தொழிற்புரட்சி, யுத்தம் காட்டப்பட்டபோது ஒரு சில நொடிகள் எல்லோரும் போரில் உயிர் துறந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தினர்.

மிஸ்டர் பீன் தொடரின் கதாநாயகன் திரு. ரோவன் அட்கின்சன் இசைக்குழுவின் இடையில் தோன்றி நிகழ்ச்சிக்கு கலகலப்பு மூட்டினார்.

இங்கிலாந்து நாட்டின் குழந்தைகளுக்கான கதைகளிலிருந்து சில சில கதாபாத்திரங்கள் மேடையில் தோன்றினர்.

அடுத்தாற்போல் 204 நாடுகளைச் சேர்ந்த  சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் தங்களது நாட்டின் கொடிகளைச் சுமந்து நடந்து வந்தனர். கிரீஸ் நாடு முதலிலும் – அங்குதான் இப்போட்டிகள் ஆரம்பமாயின என்பதால் – இங்கிலாந்து நாடு புரவலன் (Host) என்பதால் கடைசியிலும் வந்தன.

பெண்களுக்கான ஒலிம்பிக் வருடம் இது என்பதால் பெஹ்ரைன், ப்ருனேய் நாடுகளின் பெண் வீராங்கனைகள் கொடி ஏந்தி வந்தனர்.

“பீஜிங் அளவு பிரம்மாண்டமான விழா இல்லையென்றாலும், ‘ஓகே! கிரேட்! பரவாயில்லை!’ என்று சொல்லும்படியாக இதனை வடிவமைத்து இருக்கிறோம்” என்று நிகழ்ச்சி வடிவமைப்பாளர் திரு. டேனி பாயல் கூறினார்.

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s