Health and exercise · Life

வயதானவர்களுக்கு உடற்பயிற்சி

வலி என்பது இரண்டு வகை: ‘நல்ல வலி’, ‘கெட்ட வலி’

என்ன வலியில் கூட நல்ல, கெட்ட உண்டா என்கிறீர்களா? நிச்சயம் உண்டு.

“உடற்பயிற்சி செய்துட்டு வந்தா கால்கை எல்லாம் வலி”

“ஒண்ணும் செய்யாமலே எனக்கு உடம்பு வலி…..!”

முதல் வகை வலி ‘நல்ல வலி’. ஏனென்றால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது ஏற்படும் வலி பழகப்பழக சரியாகிவிடும். அத்துடன் உடலை வலுவடையச் செய்யும்.

‘சும்மா’ இருப்பதால் வரும் வலி இன்னும் உங்களை நலிவடையச் செய்யும். அதனால் அது கெட்ட வலி.

பொதுவாகவே ‘குண்டாக இருப்பவர்கள் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்; அல்லது ஏதாவது நோய் வந்த பிறகு (உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி) மருத்துவர் சொன்னால் உடற்பயிற்சி செய்யலாம்’ என்று பலர் நினைக்கிறார்கள்.

அதேபோல இளைஞர்கள், சின்ன வயதுக்காரர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்; வயதானவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்லை – மேற்கூறிய ஏதாவது நோய் இருந்தாலொழிய என்று பலர் நினைக்கிறார்கள்.

இல்ல அண்ணாச்சி…அப்படி இல்ல…

சின்ன வயதிலிருந்தே உடற்பயிற்சி செய்பவர்கள் பொதுவாக நோய் நொடிக்கு அவ்வளவாக ஆளாவதில்லை. ஆளானாலும் வெகு சீக்கிரம் குணமடைந்து பழைய நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன் என் உறவுக்கார இளைஞன் திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட பதறி விட்டோம் எல்லோரும்; மிகவும் சின்ன வயது; அவன் தவறாமல் ‘ஜிம்’ போவது வழக்கம் ஆதலால், மருத்துவர்கள்  எதிர்பார்த்ததைவிட வெகு விரைவில் பழைய நிலைக்குத் திரும்பி விட்டான். எப்படி நாம் சின்ன வயதில் படித்த ‘ரைம்ஸ்’ (திருப்பித்திருப்பி சொல்லுவதால்) நமக்கு மறப்பதில்லையோ, நாம் ஏற்கனவே செய்துவந்த வேலைகளையும் நம் உடல் நினைவில் வைத்துக் கொள்ளும். நம் உடலின் இந்த அற்புதமான சக்தியை நாம் மறந்து விடுகிறோம். அதே போல இன்னொன்று: உடல் உறுப்புக்களை பயன்படுத்தப் பயன்படுத்த அவை நமக்கு நல்லதைச் செய்யும். ‘Use it or lose it’ இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தான் நம் உடல் வேலை செய்கிறது.

வயதாக ஆக உடலுழைப்பு நமது அயர்ச்சியைப் போக்கும்; வலிகளை குறைக்கும்; நமது வாழ்க்கைத் தரம் உயரும் அதாவது ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

வயதானவர்களுக்கு கடுமையான நோய்களின்பாதிப்பால் வலிகள், தள்ளாமை, சில உறுப்புகள் சரியாக வேலை செய்யாமல் போவது போன்றவை வழக்கமாக ஏற்படுவதுதான். இதனால் சுதந்திரமாக நடமாட முடியாமல் வாழ்க்கை முடங்கிப் போகும். இவற்றிலிருந்து விடுபட அல்லது இவற்றின் தீவிரத்தைக் குறைக்க உடல் செயல்பாடு மிக மிக அவசியம்.

உடற்பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் செய்யும் நன்மைகள்:

  • பலவிதமான புற்றுநோய்கள் வராமல் காக்கிறது. இருதய நோய், சர்க்கரை நோய், அளவுக்கு அதிகமான உடற்பருமன் ஆகியவற்றிலிருந்து காக்கிறது.
  • பசியைத் தூண்டி, நல்ல உறக்கத்தைக் கொடுக்கிறது.
  • உடற்பயிற்சி செய்வதால் என்டார்பின் (endorphin) என்ற  ‘feel good’ ஹார்மோன் சுரப்பது நன்கு தூண்டப்படுவதால் நாள் முழுவதும் உங்கள் மனநிலை நல்ல நிலையில் இருக்கிறது. இதுவே உங்களை நோய்கள் அண்டாமல் காக்கும் அருமருந்து.
  • தசைகளும் எலும்புகளும் பலவீனமடைவதைத் தடுக்கிறது.
  • உடல் வலுவடைந்து இளமைத் தோற்றத்துடன் இருக்கிறது. இதுவே உங்களுக்கு தன்னம்பிக்கையையும், மனதில் உற்சாகத்தையும் கொடுக்கும்.
  • எலும்பு மெலிவு அல்லது இழப்பு ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. தொடர்ந்த உடற்பயிற்சியும், கால்சியம் மாத்திரைகளும் உங்கள் எலும்புகளை பாதுகாக்கும்.
  • ‘வயதாகிவிட்டது, கீழே உட்கார முடிவதில்லை; கால் கைகளை மடக்கி நீட்ட முடிவதில்லை’ என்று பல வயதானவர்கள் சொல்லுவார்கள். இதற்குக் காரணம் தசைகள் நெகிழ்வுத்தன்மையை இழந்து விடுவதுதான். வயதாக ஆக இதெல்லாம் சகஜம் என்றாலும், இந்த நிலைமையை உடற்பயிற்சி மூலம் ஒத்திப்போடலாம்.

உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை, தவறான உணவுப் பழக்கங்கள் இவற்றால் தசைநார்கள் வெகு விரைவில் வலுவிழந்து போகின்றன. இதனால் தசைப்பிடிப்பு, அழற்சி, கீழே விழுதல் ஆகியவற்றுடன் எதிர்பாராத காயங்களும் ஏற்படுகின்றன.

உடற்பயிற்சி உங்கள்  உடலை பலமாக்குவதுடன் நடமாட்டத்தையும் சீர் செய்கிறது.

விளையாடும்போது மட்டையைப் பிடித்து பந்தை அடித்தல், எட்டிப் பிடித்தல், பௌல் செய்தல் ஆகிய செய்கைகளுக்கு நரம்பு-தசை ஒருங்கிணைப்பு (neuromuscular co-ordination) மிக மிக அவசியம். வயது ஏற ஏற இது  குறைகிறது. சரியான உடற்பயிற்சி மூலம் இதனை சரி செய்யலாம்.

25 வயது முதல் 50 வயது வரை நம் எடை அதிகரிக்கும். இதனால் தசைகளின் நிறையும் அதிகரிக்கும். ஆனால், வயது ஆக ஆக, உடலமைப்பு மாறுகிறது. தசைகள் அடர்த்தி குறைந்து கொழுப்பு சேர்கிறது. இது நமது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.

50 வயது ஆனவர்கள் எல்லோரும்  அவரவர்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தினமும் செய்வது அவசியம். இதனால் நேர்மறையான எண்ணங்கள் அதிகரித்து, வயதானால் தோன்றும் அலுப்பு, ஆர்வமின்மை முதலிய எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

கடைசியாக – மிக முக்கியமான ஒன்று:

நம் எல்லோருக்குமே ‘கடைசிக் காலத்துல படுக்கையில் விழாமல், இருக்கும்வரை நம் கை கால்களுடன், பிறர் கையை எதிர்பார்க்காமல் இறைவனடி சேர வேண்டும்’ என எண்ணுகிறோம். இல்லையா?

நாம் செய்யும் உடற்பயிற்சி நம் எண்ணத்தை கட்டாயம் நிறைவேற்றும்.

என்னங்க, உடற்பயிற்சி செய்யக் கிளம்பிட்டீங்களா? மிக மிக நன்று! குட்லக்!

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s