Health and exercise · Life

60 வயதினிலும் வாழ்க்கை இனிக்க……


ஆரோக்கியக் குறைவாலும், மன அமைதி இல்லாமையாலும் நம்மில் பலருக்கு 60 வயதுக்கு மேல் வாழ்க்கை என்பது இறக்கி வைக்க முடியாத ஒரு பெரும் பாரமாக தோன்றும். என்ன வாழ்க்கை என்ற அலுப்பு தலை காட்டும்.

 

இழந்துபோன முக்கியத்துவத்தை நினைத்து சிலர் வருத்தப்படுவார்கள். பெண்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி தாங்களாகவே முடிவு எடுக்கும் சூழ்நிலைக்கு வந்திருப்பார்கள். இதைச் சில அப்பாக்களால் தாங்க முடியாது. அம்மாக்களுக்கோ மாட்டுப்பெண் வந்து பொறுப்பு எடுத்துக்கொண்டு தன் பதவியை பறித்துக்கொண்டு விட்டதாக கோவம் இருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்க்கை எப்படி இனிக்கும் என்கிறீர்களா? கட்டாயம் இனிக்கும் சில விஷயங்களில் கவனம் செலுத்தினால்.

முதலில் ஒரு விஷயம் நினைவில் இருக்க வேண்டும். வயதாவதைத் தடுக்க முடியாது. அதனால் வரும் சில சில உபத்திரவங்களையும் தடுக்க முடியாது. இவற்றால் நம் மனது பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்; இது நம்மால் நிச்சயம் முடியும்.

நம் மனதை எது பாதிக்கும்? எதிர்பார்ப்பு: எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். இந்த எதிர்பார்ப்பு உங்களுக்கு துக்கத்தை கொடுக்கும். தூக்கத்தை கெடுக்கும்.

பிறரது குற்றங்களை மறக்கவும், மன்னிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் யாரையாவது, எதற்காகவாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பது பிறரை உங்களிடமிருந்து தூர விரட்டும். தப்பு செய்யாதவர்கள் யார்?

‘சும்மா’ இருக்காதீர்கள்: எப்போதும் மனதையும் உடலையும் எதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்துங்கள். சும்மா இருக்கும் மனமும் உடலும் சைத்தானின் கூடாரம் என்பது நினைவிருக்கட்டும். சிறு வயதுப்  பொழுதுபோக்கை இப்போது தொடரலாம். பாட்டுப் பாடுவது, தையல், கை வேலை என்று ஏதாவது செய்து கொண்டே இருங்கள். இதெல்லாம் பெண்கள் வேலை. ஆண்கள் என்ன செய்ய?

ஆடவர்களுக்கு மிக அருமையான பொழுபோக்கு இருக்கிறது. ஆங்கில செய்தித்தாள் அல்லது தமிழ் தினப் பத்திரிகையை ஒரு வரி விடாமல் படிக்கிறீர்கள், இல்லையா? ஆசிரியருக்கு கடிதம் எழுதலாம்;

எல்லா ஆங்கிலப் பத்திரிகையிலும் தலையங்கம் வெளியாகும் பக்கத்தில் ‘மிடில்’ (middle) என்று அரைப் பக்கத்திற்கு ஓர் சிறிய பதிவு வரும். மிகச் சிறப்பாக இருக்கும். அதற்கு உங்களின் அனுபவம், பிறரது அநுபவத்தில் நீங்கள் கற்ற பாடம், நகைச்சுவை நிகழ்ச்சிகள், மனதை உருக்கும் செய்திகள் என்ற பலவற்றையும் எழுதலாம்.

கொஞ்சம் கணணி அறிவு இருந்தால் போதும்; வலைப்பதிவு தொடங்கலாம். உங்கள் எழுத்துக்களை படிக்க உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். நான் எதோ விளையாட்டுக்கு சொல்லுகிறேன் என்று நினைக்காதீர்கள். எழுதத் துவங்குங்கள்; அப்புறம் நீங்களே அசந்து போகும் அளவு ‘விசிறிகள்’, நண்பர்கள் கிடைத்து விடுவார்கள்.

பெண்மணிகளும் எழுதலாம். சமையல் குறிப்பிலிருந்து, சிறுகதை வரை, கோலத்தில் இருந்து பண்டிகைகளை கோலாகலமாகக் கொண்டாடுவது வரை எழுதித் தள்ளலாம்.

அடுத்தது உங்கள் ஆரோக்கியத்திற்கு போதுமான கவனம் கொடுங்கள். எல்லோருக்குமே ஆரோக்கியம் மிக மிக அவசியம். வேலையில் இருக்கும்போதே ஆரோக்கியக் காப்பிடுகளில் முதலீடு செய்வது இன்றியமையாதது. வேளாவேளைக்கு மருந்து சாப்பிடத் தவற வேண்டாம். வருடத்துகொரு முறையோ அல்லது சரியான இடைவெளியில் பரிசோதனைகள் செய்து கொள்ளவும். மருந்துகள் சாப்பிடுவதோ எத்தனை முக்கியமோ இப்பரிசோதனைகளும் அவ்வளவே முக்கியம்.

வயதானவர்களுக்கும் உடற்பயிற்சி மிக அவசியம். காலை மாலை இரண்டு வேளையும் ‘விறுவிறு’ நடை கட்டாயத் தேவை. கணவன், மனைவி இரண்டு பேரும் சேர்ந்து போவது நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும். ஒருவருக்கு ஒருவர் துணையாகவும் இருக்கும்.

உடற்பயிற்சியைப் போலவே உணவுக் கட்டுப்பாடும் வேண்டும். வீட்டுச் சாப்பாடு நல்லது. எப்போதாவது ஒருமுறை வெளியில் போய் சாப்பிடுவது தப்பில்லை.

சேமிப்பு மிக அவசியம்: ஓய்வு பெற்றபின் கிடைத்த பணத்தை நல்ல முறையில் முதலீடு செய்யுங்கள். அநாவசியச் செலவுகளைக் குறையுங்கள். அதே சமயம் கருமித்தனம் வேண்டாம்.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் கோவில்களுக்கு யாத்திரை போகலாம். ஒரு குழுவுடன் போவது மாறுதலாகவும், பல புதிய நண்பர்களையும் ஏற்படுத்தும். இல்லையானால் வருடத்திற்கு ஒருமுறைநண்பர்களுடன் சுற்றுலாத்தலங்களுக்குப் போகலாம். இங்கு அவசியம் நினைவில் கொள்ள வேண்டியது: கைபேசியை எடுத்துச் செல்லுங்கள். தினமும் ஒருமுறை நீங்கள் இருக்குமிடம், உங்கள் ஆரோக்கியம் பற்றி உங்கள் பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ தெரிவியுங்கள்.

 

மனத் திருப்தியுடன் வாழுங்கள். பழையவற்றை, நடந்துபோன கசப்பான விஷயங்களை திரும்பத் திரும்ப பேசி ஆறிப்போன புண்களை கீறி விட்டுக் கொள்ளாதீர்கள். இது உங்கள் மனதை நஞ்சாக்கும். உடலையும் வருத்தும். உடல் நலத்துடன் இருக்க மன நலம் மிகவும் முக்கியம்.

 

‘வயதாகிவிட்டது’ என்று சொல்லிக் கொள்ளாதீர்கள். வயது என்பது ஒரு எண்ணிக்கை தான். நமக்கு chronological, biological, psychological என்று 3  வயதுகள் உண்டு. முதலாவது நாம் பிறந்த தேதி வருடம் இவற்றை வைத்துச் சொல்லுவது. இரண்டாவது நம் ஆரோக்கியத்தை வைத்து தீர்மானம் செய்வது. மூன்றாவது நமக்கு எத்தனை வயது என்று நாம் உணருவது.

 

முதல் வகை வயதை மாற்ற முடியாது. இரண்டாவது வயதை தேவையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் நம் கைக்குள் அடக்கலாம். மூன்றாவது வயதினை நேர்மறையான எண்ணங்கள், நம்பிக்கை நிறைந்த யோசனைகள், செயல்கள் மூலம் குறைக்க முடியும்.

 

முடிவாக நீங்கள் ஏற்கனவே ஒரு ‘இன்னிங்ஸ்’ ஆடி முடித்தாகி விட்டது. நாமெல்லோரும் சச்சின் டெண்டுல்கர் அல்ல; ஆடிக் கொண்டே இருப்பேன் என்று சொல்வதற்கு.

 

மாற்றங்களை சரியான கோணத்தில் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

 

60 அல்ல 90 வயதில் கூட வாழ்க்கை இனிக்கும்.

Advertisements

13 thoughts on “60 வயதினிலும் வாழ்க்கை இனிக்க……

 1. அருமையான அறிவுரை….நீங்கள் கூறியுள்ள அத்தனையும் நூறு சதவீதம் உண்மை ரஞ்சனி….இப்படி வாழ்ந்தால் நம் இளமை மனதில் மட்டுமல்ல…உருவத்திலும் இருக்கும்; வாழ்க்கையும் தேனாக இனிக்கும்!

  1. அதனால் தான் உங்கள் சஷ்டி அப்த பூர்த்தி புகைப்படங்களில் நீங்கள் இளமையாக இருக்கிறீர்களா?
   இது நான் எனக்கே எழுதிக்கொண்ட அறிவுரைகள். வயதானவர்களுக்கு வரும் அலுப்பும் மன அமைதியின்மையும் எனக்கு வரக்கூடாது என்பதற்காக எழுதியது.
   நன்றி ராதா

 2. //முதல் வகை வயதை மாற்ற முடியாது. இரண்டாவது வயதை தேவையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் நம் கைக்குள் அடக்கலாம். மூன்றாவது வயதினை நேர்மறையான எண்ணங்கள், நம்பிக்கை நிறைந்த யோசனைகள், செயல்கள் மூலம் குறைக்க முடியும்.//

  மிகவும் அழகான அருமையான என்றும் இளமைதரும் கட்டுரை. மனமார்ந்த பாராட்டுக்கள். அன்புடன் VGK

  1. நன்றி VGK ஸார். உங்கள் சுறுசுறுப்பு அசத்துகிறது. இவ்வளவு விரைவில் பின்னூட்டம் நான் எதிர்பார்க்கவேயில்லை. இதுவும் உங்கள் வெற்றியின் ரகசியங்களில் ஒன்றோ?

 3. இந்தக்கட்டுரை படித்து முடித்ததும் எனக்காகவே எழுதப்படுள்ளது போல உணர்ந்தேன். மீண்டும் ஒரு முறை படித்து ம்கிழ்ந்தேன்.

  இவற்றில் பலவற்றை நானும் கடைபிடித்தே வருகிறேன்.

  குறிப்பாக

  பிறரிடம் எதையும் எதிர்பார்க்கவே கூடாது. எதிர்பார்த்தால் பெரிய ஏமாற்றமே நடக்கும் என்பதை எப்போதோ தெரிந்து கொண்டுள்ளேன்.

  சேமிப்பை வளர்ப்பது, சிக்கனமாக வாழ முடியாவிட்டாலும், வரவுக்குள் செலவை அடக்கி கடன் இல்லாமல் வாழ்வது.

  பொழுதுபோக்கிற்காக படித்தல், எழுதுதல், ஓவியம் வரைதல் போன்ற மனதுக்கு மகிழ்வூட்டும் செயல்களில் ஈடுபடுவது.

  ஆகியவற்றை நானும் சேய்து வருகிறேன். .

  கட்டுரைக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்>

  அன்புடன்
  vgk

  1. அடுத்த வருடம் 60 வயது முடிகிறது எனக்கு. இந்த வயதில் இருப்பவர்கள் பலரையும் பார்த்துவிட்டு இப்படி இருக்கக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு எழுதிய கட்டுரை இது. உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி. நன்றி.

   1. அடுத்த ஆண்டு 60 முடியும் தங்களுக்கு என் அன்பான அட்வான்ஸ் வாழ்த்துக்ள்.

    எனக்கு 08.12.2009 அன்று 60 முடிந்து விட்டது [DOB 08.12.1949].

    எனது சஷ்டியப்தபூர்த்தி விழாவைக்கூட, புத்தக வெளியீட்டு விழாவுடன் சேர்த்து ஓர் பதிவாக வெளியிட்டிருந்தேன்.

    அது 2011 ஜூலை மாதம் முதல் வெளியீடாக [மலரும் நினைவுகள் 1 நல்லதொரு குடும்பம் என்ற தலைப்பில்] நிறைய படங்களுடன் இருக்கும். LINK: http://gopu1949.blogspot.in/2011/07/1.html

    அன்புடன் vgk

 4. 60 முடிந்து மேலும் சதாபிஷேகம் பண்ணிக் கொண்டு அதையும் புத்தகமாக வெளியிட்டு எல்லோரையும் அசத்த, உடல் நலம் அருள இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s