பெண் குழந்தைகளின் உடல் நலம்

“என் பெண்ணுக்கு 10 வயது என்றால் யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள்….14,  15 வயதுப் பெண் போல இருக்கிறாள் என்று எல்லோரும் சொல்கிறார்கள்………”

8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி போல வளர்த்தியாக இருப்பதும், 10 வயதிலேயே ‘பெரியவள்’ ஆகிவிடுவதும் இப்போது சர்வ சகஜம் ஆகி விட்டது.

சிறுமிகள் வயதுக்கு மீறி வளர்வது மட்டுமல்ல, வயதுக்கும், உயரத்துக்கும் பொருந்தாத அதிகமான உடற்பருமனுடன் இருப்பதும் கவலைக்குரிய விஷயம்.

சிறு வயதில் ஏற்படும் உடற்பருமனுக்குக் காரணம் அதிகமான கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவதும், போதுமான உடற்பயிற்சி இல்லாததும் தான். உடலுழைப்பு தேவையில்லாத வாழ்க்கைமுறை, போஷாக்கு இல்லாத ‘ஜங்க்’ உணவுகள் இவர்களை ‘couch potato’ ஆக்குகின்றன. இதனால் இவர்கள் பலவித நோய்களுக்கு ஆளாகி மிகக் குறைந்த வயதிலேயே இறக்கும் அபாயம் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கவலையுடன் சொல்லுகிறார்கள்.

ந்யுகேஸில் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் 8 வயது முதல் 10 வயது வரை உள்ள 508 பள்ளிச்சிறார்களை கண்காணித்ததில், ஒரு நாளில் அவர்கள் விழித்திருக்கும் நேரத்தில் 4% நேரம் மட்டுமே உடலளவில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. அதிலும் சிறுமிகள் சிறுவர்களை விட குறைந்த நேரம் சுறுசுறுப்பாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.

சிறுமிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிறுவர்கள் பரவாயில்லையாம். சிறுமிகள் ஒரு நாளைக்கு 17 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதாகவும் சிறுவர்கள் 24 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதாகவும் தெரிகிறது. உண்மையில் இவர்கள் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்.

நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலளவில் சுறுசுறுப்பாக இருப்பது மிக முக்கியம். குழந்தைகளை சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி செய்ய வைக்கவேண்டும்.

சிறுமிகளுக்கு 8 வயது ஆகும்போதே அவர்களது சுறுசுறுப்பு குறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் போக்கை மாற்ற, சிறுமிகளை பெண் விளையாட்டு வீராங்கனைகளை தொலைக்காட்சியில் பார்க்கவும் அவர்களை இவர்களின் ‘மாதிரிப் பெண்மணி’களாகக்  கொள்ளவும் உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் பள்ளிகளிலும் உடலுழைப்பு அதிகமுள்ள விளையாட்டுக்களை அறிமுகப் படுத்த வேண்டும்.

இந்த ஆய்வின் மூலம் சற்று வயதான தந்தை இருக்கும் குழந்தைகள் உடல் செயல்பாட்டில் அத்தனை விருப்பம் காட்டுவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. இந்தத் தந்தைமார்கள் பெரிய பதவியில் இருப்பதும், குழந்தைகளுடன் விளையாட அவர்களுக்குப் போதுமான அவகாசம் கிடைக்காததும் இந்தப் போக்குக்கு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதுவுமன்றி குழந்தை வளர்ப்பு பற்றிய அவர்களது கண்ணோட்டம் வேறு விதமாக இருப்பதுடன், அவர்களே சுறுசுறுப்பு குறைந்தவர்களாக இருப்பதும் காரணம்.

பல குழந்தைகளுக்கு ஓய்வு நேரத்தில் உடற்பயிற்சி செய்ய போதுமான உற்சாகம் இருப்பதில்லை. பள்ளிகள் உடற்பயிற்சிக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.  உடற்பருமன் குறையவும் , ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் உடலுழைப்பு மிக முக்கியம். உடற்பயிற்சி செய்வது வகுப்பறையில் அவர்களது கவனத்தை அதிகரிக்கும். அவர்களது நடவடிக்கைகளும் மேம்பாடு அடையும்.

5 வயதிலிருந்து  18 வயது உள்ள சிறார்கள் குறைந்த பட்சம் ஓர் மணி நேரம் மிதமான அல்லது தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. விளையாட்டு, சைக்ளிங், நடனம், விறுவிறுப்பான நடை, ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அவர்கள் தினமும் செய்ய வேண்டும்.

தசைகளையும், எலும்புகளையும் சுறுசுறுப்பாக்கும் உடற்பயிற்சிகளான ஸ்கிப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ், சிட்-அப்ஸ் முதலியவற்றை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்..

பெற்றோர்கள் அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் விளையாட நேரம் ஒதுக்க வேண்டும்.

கணணி முன் நீண்ட நேரம் உட்கார்ந்து கொள்ளுவது, அல்லது வீடியோ கேம்ஸ் மணிக் கணக்கில் ஆடுவது  போன்றவற்றையும் குறைக்க வேண்டும்.

இவற்றிற்கு பதிலாக வீட்டிற்கு வெளியே விளையாடும் விளையாட்டுக்கள் எதிலாவது பயிற்சி பெற வகுப்புகளில் சேர்க்கலாம்.

அதிக கொழுப்புள்ள ஆகாரங்களை தவிர்க்க குழந்தைகளுக்கு உதவலாம். வாரம் ஒரு முறை மட்டும் ‘ஜங்க்’ உணவுகள் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வரலாம்.

அவர்களைக் கேலி செய்யாமல், அதிக எடையினால் வரும் தீமைகளை நிதானமாக எடுத்துச் சொல்லி உடற்பயிற்சி செய்ய ஊக்கம் கொடுக்க வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது அவர்களுக்கு உற்சாகத்தையும், ஈடுபாட்டையும் ஏற்படுத்தும். நீச்சல் பயிற்சி பெரியவர்கள், குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து செய்யும்போது நல்ல பலனளிக்கும்.

அதிக எடை உள்ளவர்கள்தான் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்றில்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி என்ற உணர்வை பெண் குழந்தைகளிடம் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.

அதிக எடையினால் பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு தொந்திரவுகள் வரும். திருமணம் ஆனபின் குழந்தை பிறப்பதிலும் பல சிக்கல்கள் தோன்றும்.

பெண் குழந்தைகளை பேணிக்காப்பது நம் தலையாய கடமை