பற்றுக பற்று விடல்!

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த திருக்குறளில் எனக்கு மிகவும் பிடித்த குறளின் ஈற்று அடி இது.

இதைப் பற்றிப் பேசுமுன் ஒரு சிறிய கதை.

ஒரு ஊரில் மலையேறுபவன் ஒருவன் இருந்தான். அவன் கடவுள் நம்பிக்கை அற்றவன். சிறுசிறு குன்றுகளில் ஏறிக் கொண்டிருந்தவன், ஒரு சமயம் மிக உயரமான மலை உச்சியில் ஏறத் தீர்மானம் செய்தான். அவனது நண்பர்கள் “உலக சாதனை செய்யப் புறப்பட்டு இருக்கிறாய். கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு தொடங்கு. அவர் உன்னை எந்தவித ஆபத்தும் அண்டாமல் காப்பாற்றுவார்” என்றார்கள்.

மலையேறுபவன் “எனக்கு என்னை காப்பாற்றிக் கொள்ளத் தெரியும். கடவுளின் உதவி தேவையில்லை”, என்று சொல்லிவிட்டு மலையேறத் தொடங்கினான்.

பல மணிநேரம் மலைமேல் ஏறிக் கொண்டேயிருந்தான். ஒரு இடத்தில் சட்டென்று கால் இடற, கீழே விழ ஆரம்பித்தான். நல்ல வேளையாக அவன் பற்றி ஏறிக் கொண்டிருந்த கயிறு பாறைகளின் நடுவே முளைத்திருந்த ஒரு மரக் கிளையில் சிக்கிக்கொண்டது. அவன் கீழேவில்லை. மரக் கிளை காப்பாற்றியது. கயிற்றை கெட்டியாக பற்றிக் கொண்டு சிந்தனை வயப் பட்டான். அவனுக்கு கீழே பார்க்க தைரியம் வரவில்லை. கீழே செங்குத்தான பள்ளத்தாக்கு; அதில் கரைபுரண்டோடும் நதி.

எப்படியோ கீழே விழாமல் தப்பித்துவிட்டான். மேலே ஏறுவது எப்படி? பலத்த நீண்ட யோசனைக்குப்பின் கடவுளைக் கூப்பிடத் தீர்மானித்தான். “இறைவா! இதுவரை நான் நாத்திகனாக இருந்தேன். ஆனால் இப்போது உன் உதவி தேவை. நான் சொல்லுவது கேட்கிறதா?”

கடவுளின் குரல் கேட்டது: “உன்னிடம் இருக்கும் கத்தியை எடுத்து நீ பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறாயே, அந்தக் கயிற்றை துண்டித்து விடு”

இந்த பதில் அவனை மிகவும் வருத்தியது. “கடவுளே, நான் முதல்முறையாக உன்னிடம் உதவி கேட்கிறேன். என்னுடைய பற்றுக்கோல் இந்தக் கயிறு ஒன்றுதான். அதன் உதவியுடன்தான் இப்போது கீழே விழாமல் தொங்கிக் கொண்டிருக்கிறேன். அதை துண்டித்து விடச்சொல்லி சொல்லுகிறாயே, நான் என்ன செய்ய?”

இந்த உரையாடல் நீண்ட நேரம் தொடர்ந்தது. கீழே பார்க்கவே அவன் துணியவில்லை. கடைசியில் கயிற்றைத் துண்டிக்க மறுத்து விட்டான். கடவுளும் மௌனமானார்.

அடுத்தநாள் அவனை மீட்க வந்த ஆட்கள், கயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இரவின் பனியும் குளிரும் தாங்காமல் விறைத்துப் போயிருந்த அவனது உடலைக் கண்டார்கள். அவன் தொங்கிக் கொண்டிருந்த மரக் கிளை நிலத்திலிருந்து 5 அடி உயரத்தில் இருந்தது!

நாம் எல்லோருமே இந்த மலையேறுபவன் போலத்தான். கயிறு என்பது நாம் நமக்குப் பாதுகாப்பு என்று நினைத்து கெட்டியாக விடாமல் ‘பற்றி’க் கொண்டிருக்கும் பல விஷயங்கள்.

கணவன், மனைவி, பிள்ளைகள், பெண்கள் என்று மனிதர்களில் தொடங்கி உயிரில்லாத அஃறிணைப் (இந்த பட்டியல் கைபேசியில் ஆரம்பித்து கைக்குட்டை வரை நீளுகிறது!) பொருட்கள் என்று எத்தனையெத்தனை ‘பற்றுக்கள்’ நமக்கு!

நமக்கு எது நல்லது என்பதை கடவுள் அறிவார். நமது கடந்தகாலம், நிகழ் காலம், எதிர்காலம் எல்லாவற்றையும் அவர் அறிவார்; நமக்கோ கடந்த வந்த பாதை தெரியும். இப்போது நடப்பது தெரியும்; நாளை என்பது பெரிய கேள்விக்குறி தான். இப்படி இருக்கையில் எல்லாம் அறிந்த கடவுளைப் பற்றாமல் எதையெதையோ பற்றுகிறோம் மலையேறுபவனைபோல!

நிலவுலகில் நாம் பற்றியிருப்பவை நம்மைக் கைவிடலாம்; நமது வாழ்க்கையை முழுவதும் அறிந்த கடவுள் நம்மைக் கைவிடமாட்டார்.கடவுள் தான் நம் பலம். கடவுள் தான் நம் கவசம். அவரிடம் பற்று வைப்பதுதான் புத்திசாலித்தனம்.

அவரிடம் எதற்காகப் பற்று வைப்பது? இதைத்தான் மிக அழகாகச் சொல்லுகிறது இந்தக் குறள்

 

பற்றுக பற்றற்றான் பற்றினை – அப்பற்றை

பற்றுக பற்று விடல்.

 

பற்றுக = பிடித்துக் கொள்ளுங்கள் (எதை?)

பற்றற்றான் பற்றினை = பற்றில்லாத கடவுளின் திருவடிகளை

(கடவுள் பற்றில்லாதவரா? – நம்மைப்போல் ‘பற்று’ இல்லாதவர்)

அப்பற்றினை = அந்தத் திருவடிகளை

பற்றுக = கெட்டியாகப் பற்றுங்கள் (எதற்கு?)

பற்று விடல் = தேவை இல்லாத ‘பற்று’க்களை விடுவதற்காக

கடவுள் விடச்சொல்லும் எந்தெந்தப் பற்றுக்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சிந்திப்போமா?