மன அழுத்தத்தைக் குறைக்க மின்சார பட்டை!

 

மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஒரு மின்சார பட்டையை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்கள். இதனை இரவில் நெற்றியில் அணிவதால் மன அழுத்தம் குறைகிறது என்று நோயாளிகள் கூறுகிறார்கள்.

 

லாசெஞ்ஜலஸ், கலிபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பட்டையை நெற்றியில் அணியும்போது இதன் மூலம் வெளியாகும் நுண்ணிய மின்சார துடிப்புகள் முப்பெரும் நரம்புகளைத் (trigeminal) தூண்டுகிறது. நெற்றியின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள, நமது ‘மூட்’ க்குக் காரணமான பகுதிவரை பரவியிருக்கும் இந்த நரம்புகள் நமது மூளையின் ‘USB port’ என்று அழைக்கப் படுகின்றன.

 

மின் முனைகளுடன் இருக்கும் இந்தக் கருவி இரண்டு மின்கம்பிகளால் ஒரு கைபேசி அளவுள்ள ஜெனேரேட்டர் உடன் இணைக்கப்பட்டள்ளது. இதனை இடுப்பில் அணிந்து கொள்ளலாம்.

 

பரிசோதனை முயற்சியாக மனஅழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு சிறு குழுவினருக்கு 8 வாரங்களுக்கு தினமும் இரவு 8 மணிநேரம் அவர்கள் தூங்கும்போது இந்தப் பட்டை அணிவிக்கப்பட்டது. இந்தக் குழுவினர் சுமார் 4 மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்கள்; மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் இவர்களுக்கு எந்தவித ஆறுதலையும் கொடுக்கவில்லை. புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்ட இந்த ‘feel good patch’ ஐஅணிந்த இரண்டு வாரத்திலேயே தங்களது மன அழுத்தம் 50% குறைந்ததாக இந்தக் குழுவினர் கூறுகிறார்கள்.

 

‘ந்யுரோசிக்மா’ என்ற பெயர் கொண்ட இந்தக் கருவியை வலிப்பு நோயாளிகளின் சிகிச்சைக்காக கண்டுபிடித்த டாக்டர் கிறிஸ்டோபார் டி ஜியார்ஜியோ கூறுகிறார்: “ என்னுடைய வலிப்பு நோயாளி ஒருவருக்கு இந்தக் கருவியை பயன்படுத்தியதில் அவரது வலிப்புத் தாக்குதலில் எந்தவித முன்னேற்றமும் இல்லை; ஆனால் நோயாளியின் மனைவியின் கூற்றுப்படி அவர் வழக்கத்தை விட கவனமாகவும், நிறையப் பேசியதாகவும் தெரிகிறது”.

 

இந்த நோயாளிக்கு மன அழுத்தம் இல்லாதபோதும், அதிகத் தூக்கம், மனநிலையில் ஏற்றத்தாழ்வு ஆகியவை இருந்தன. இது வலிப்பு நோயாளிகளிடையே சகஜம்.

 

இதற்குப் பிறகு மேற்கண்ட ஆராய்ச்சிக் குழு, மூளையில் ஏற்படும் இரத்த ஓட்டத்தை (PET) positron emission tomography ஸ்கேன் எடுத்தபோது முப்பெரும் நரம்புகளைத் தூண்டுவது, மூளையில் இருக்கும் வலிப்பு நோய், மனநிலை தடுமாற்றம், கவனம் ஆகியவற்றிற்குக் காரணமான பகுதிகளில் அதிக இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிய வந்தது.

 

மின்சாரத் தூண்டுதல் இரத்த ஒட்டத்தை எப்படி அதிகரிக்கக்கூடும் என்பதற்கான காரணம் அத்தனை தெளிவாக இல்லை என்றாலும், இந்தத் தூண்டுதல்கள் மூளைக்கு ‘இந்தப் பகுதிகள் இப்போது உபயோகத்தில் இருக்கின்றன; அதனால் அதிக இரத்தம் வேண்டும்’ என்ற செய்தியை சொல்லக் கூடும்.

 

மன அழுத்தத்திற்கான மாத்திரைகள் பயனளிக்காது போகும் போது இந்தக் கருவி உபயோகப்படும் என்று ஆராய்ச்சிக் குழுவினர் கூறுகிறார்கள்,