அதிக தேநீர் குடிப்பது ஆபத்து!

காபியை விட தேநீர் நல்லது என்று பலரும் சொல்லுகிறார்கள். இதன் காரணமாக நீங்கள் தேநீருக்கு அடிமையாகிவிட்டீர்கள்; ஒரு நாளைக்கு 7 கோப்பை தேநீர் குடிக்கத் தொடங்கி விட்டீர்கள் என்றால் – அதுவும் ஆண்களாக இருந்தால் ரொம்ப ரொம்ப யோசிக்க வேண்டியது அவசியம்.

கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் இருந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது. சுமார் 40 வருடங்கள் 6,000 ஆண்களை தொடர்ந்து கவனித்து வந்ததில் ஒரு நாளைக்கு 7 கோப்பைக்கு மேல் தேநீர் அருந்துபவர்கள் ப்ரோச்டேட் (Prostate) அதாவது விரைப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.

1970 ஆண்டு தொடங்கிய இந்த ஆய்வில் 21 வயதிலிருந்து 75 வயதுள்ள 6,000 ஆண்கள் பங்கேற்றனர். அவர்களிடம் அவர்களது தினசரி தேநீர், காபி, மது அருந்தும் பழக்கங்கள், மற்றும் புகை பிடிக்கும் பழக்கம், இவைதவிர பொதுவான அவர்களது ஆரோக்கியம் சம்பந்தமான கேள்விப் பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டது.

இவர்களில் கால் பங்கு ஆண்கள் அதிகம் தேனீர் அருந்தும் பழக்க முள்ளவர்கள். அதில் 6.4% ஆண்கள் ஆய்வு நடந்த 37 வருடங்களில் விரைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இன்னொரு விஷயம் இவர்கள் வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள்.

தேநீர் அருந்துவது மட்டுமே இப்புற்றுநோய் வரக் காரணமா என்று தெரியவில்லை. ஏனெனில் பொதுவாக தேநீர் அருந்துபவர்கள் ஆரோக்கிய மானவர்களாகவும், முதுமை பருவம் வரும்வரையிலும் வாழுகிறார்கள். விரைப் புற்றுநோய் முதியவர்களையே பாதிக்கும்.

மேலும், தேநீர் அருந்துபவர்கள் மது அருந்துவது இல்லை. அத்துடன் அவர்கள் பருமனாக இருப்பது இல்லை. கொலஸ்ட்ரால் அளவும் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கிறது.

“இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, அலசி ஆராய்ந்து பார்க்கும்போதும், தினசரி அதிகத் தேநீர் குடிக்கும் ஆண்கள் விரை புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள் என்பதே எங்கள் ஆராய்ச்சியின் முடிவு” என்கிறார் இந்த ஆராய்ச்சியின் தலைமை பொறுப்பாளர் திரு. கஷிஃப் ஷஃபிக்

 இதையும் படிக்கலாமே! “ஹை!…..டீ!”     High Tea