நயாகரா நீர்வீழ்ச்சியின் குறுக்கே….

நம்மூரில் முன்பெல்லாம் கழைக் கூத்தாடி என்று வருவார்கள். இரண்டு பக்கமும் கம்பு நட்டு நடுவில் ஒரு கயிறு கட்டி அதன் மேல் ஒருவர் நடந்து வருவார். கையில் ஒரு பெரிய கம்பு; அதுதான் அவருக்கு நிலை தவறி விழாமல் நடக்க உதவும் துணை. அவர் ஒவ்வொரு அடியாக கயிற்றில் நடக்க நடக்க நம் இதயம் நின்று நின்று துடிக்கும். அவர் இறங்கியவுடன் தான் நமக்கு நின்று போன சுவாசம் சீராகும்.

அதே வித்தையை 33 வயது நிக் வாலாண்டா நயாகரா நீர்விழ்ச்சியின் மேல் செய்து காட்டி ஒரு உலக சாதனை படைத்து இருக்கிறார். முதல் முறையாக இந்த சாதனையை செய்தவர் என்ற பெருமையும் இவருக்கே. இவர் கடந்த தூரம் 1800 அடிகள் எடுத்துக் கொண்ட நேரம் 25 நிமிடங்கள்.

அமெரிக்க நாட்டிலிருந்து  கனடாவிற்கு அரை கிலோமீட்டர் தூரம் 5 சென்டிமீட்டர் அகல முள்ள கம்பிமேல் நயாகர நீர்வீழ்ச்சியின் குறுக்கே இவர் நடந்து வருவதை நேரலையாக ஒளிபரப்பியது ABC தொலைக்காட்சி நிலையம்.

நிதானமாக அதேசமயம் அழுத்தமான அடிகளை எடுத்து வைத்து நடந்த இவர் தனது அனுபவம் பற்றிக் கூறும்போது “ நம்பமுடியாத காட்சி” என்று நயாகர நீர்வீழ்ச்சியை வர்ணித்தார்.

ABC தொலைக்காட்சி அவர் நடந்து வரும்போது அவ்வப்போது அவரை பேட்டி கண்டார்கள். பனிமூட்டம் அடர்த்தியாக இருப்பதால் சிலசமயம் பார்ப்பதே கஷ்டமாக இருப்பதாகக் கூறினார். ஒரு பக்கம் சுழன்று அடிக்கும் காற்று; இன்னொரு பக்கம் பனிமூட்டம். சிலசமயம் அசௌகரியமாக இருந்தது என்றார்.

சாதனையை முடித்த உடன் தனது பாட்டியை தொலைபேசி மூலம் அழைத்து தனது வெற்றியைக் கூறினார் இந்த துணிச்சல்காரர்.

அவரது பாதுகாப்பிற்காக அவரையும் கம்பியையும் இணைத்து ஒரு பாதுகாப்பு பட்டை கட்டப்பட்டது. இதனால் ஒருவேளை ஏதாவது ஆனால் நிக் கம்பிமேல் உட்கார்ந்து விடுவார்.

இந்த சாதனை செய்ய அமெரிக்க, கனடிய அதிகாரிகளை சம்மதிக்க வைக்க 2 வருடங்கள் பிடித்தன என்கிறார் நிக்.

தனது அடுத்த சாதனையாக அரிசோனாவில் இருக்கும் கிராண்ட் கன்யான் குறுக்கே நடக்க அனுமதி வாங்கி விட்டதாகக் கூறுகிறார் நிக். இவர் கடக்க இருக்கும் தூரம் நயாகராவில் நடந்ததை விட 3 மடங்கு அதிகம்.

இப்போதே நம் வாழ்த்துகளை இந்த அஞ்சா நெஞ்சருக்கு! சொல்லிவிடலாம். Best Wishes, Nik!

இவர் நடந்து வந்ததை கீழ்காணும் லிங்க் மூலம் கண்டு களிக்கலாம்.

http://www.abc.net.au/news/2012-06-16/us-man-first-to-walk-cable-stretched-across-niagara-falls/4074652